தீ….தீ….தித்திக்கும் தீ….. (கருவறை களவுகள்) அத்தியாயம் - 1
தீ….தீ….தித்திக்கும் தீ…..
(கருவறை களவுகள்)
அத்தியாயம் - 1
“ஹாய் செல்லம்ஸ்! எப்படி இருக்கீங்க மச்சான்ஸ்? இது என்னோட புது ட்ரெண்டி நைட் கவுன் எப்படி இருக்குன்னு கமெண்ட் பண்ணுங்க! அப்படியே இந்த ட்ரெஸ்ல நான் எப்படி இருக்கேன்னு ரெண்டு மூணு வார்த்தை மறக்காம சொல்லுங்க! நைட் முடிஞ்சா லைவ்-ல வர்றேன்…. செம ஹாட்டா பேசிக்கலாம். என்னோட பர்சனல் வீடியோ லிங்க்-கை கண்டிப்பா சப்ஸ்கிரைப் பண்ணிடுங்க அப்பத்தான் என்னோட பர்சனல் லைவ் ஸ்ட்ரீமிங் நீங்க பார்க்க முடியும்…. பை! செல்லம்ஸ்….”
‘ஹஸ்கி வாய்ஸில் விஸ்கி லுக்கில், வீடியோவை பதிவு செய்து எடிட்டிங் செய்யத் தொடங்கிய பெண்ணுக்கு 28 வயது இருக்கக் கூடும். சமூக வலைத்தள மோகத்தில் மூழ்கி அதில் உச்சம் தொடவேண்டும் என்ற பேரார்வம், அவளுக்குள் ஆர்ப்பரித்து பொங்கி பிரவாகித்ததை, அவள் பதிவு செய்த வீடியோ அப்பட்டமாக வெளிப்படுத்தியது’.
‘வீடியோவை பதிவேற்றம் செய்தவள் முகத்தில் உச்சபட்ச திருப்தி தென்பட்டது. அவள் பதிவேற்றம் செய்த வீடியோவை, அடுத்த நொடியில் இருந்தே ஆயிரக்கணக்காண பாலோயர்ஸ் காணத் தொடங்கியிருந்தார்கள்’.
அதே நேரம்…..
விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் ஒதுக்குபுறமாக இருந்த ஒரு சரக்கு கிடங்கில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. சுற்றி இருந்த பகுதிகளில் அந்த சத்தம் எதிரொலித்த போதும், அங்கே நிகழ்வதைக் குறித்து யாரும் கவலை கொண்டதாகவும் தெரியவில்லை. குடவுனுக்குள் டிப்டாப்பாக- உடையணிந்திருந்த ஒருவன் வலது தோளில் குண்டடிபட்டு கீழே கிடந்தான். கொப்பளித்துக் கொண்டு வெளியேறிய குருதியை இடது கையால் அழுத்திப் பிடித்துக் கொண்டவன் ஏளனம் கலந்து கையில் துப்பாக்கியுடன் எதிரில் நின்ற தன் எதிரியை பார்த்து பேசத் தொடங்கினான்.
“கவின் ! என்னைய கொன்னுட்டா… இந்த உலகத்துல நடக்குற விஷயங்கள் எல்லாம் அப்படியே நின்னுடும்ன்னு, உன்கிட்ட தப்பா சொல்லிக் கொடுத்தவன் யாருடா? உனக்கே தெரிய வேண்டாமா? நான் இல்லன்னு சொன்னா! எனக்கு பதிலா வேற ஒருத்தன் இந்த வேலையைசெய்ய முளைப்பான்னு, உங்க ஆபீசர்களுக்கு ஏன் தெரியாம போச்சு? ம்ச்ச்…. பாவம் நீ! என்ன கொல்லறதுனால உனக்கு அஞ்சு ரூபா கூட கூடுதலா கிடைக்காது” சொல்லிவிட்டு கர்ண கொடூரமாக சிரித்தவனுக்கு, 27 வயது இருக்கலாம். நாகரீகத்திலும், பணத்திலும் ஊறிக் கொண்டிருப்பவன் என்பதை, அவன் உடையும், தோற்றமும் தெளிவாகவே வெளிப்படுத்தின.
“ரோகித் உன்னோட சாப்டர் முடிய போகுது. இதுவரைக்கும் நீ நடத்திட்டு இருந்த நாடகத்தை முடிச்சு வைக்கற பாக்கியம் எனக்கு கெடச்சதுல ரொம்பவே மனசு சந்தோஷப் படுது” என்று கூறி கண் சிமிட்டினான் கவின் சாகித்தியன். கீழே கிடந்த ரோகித் இப்பொது அந்த இடமே அதிரும்படி சிரித்தான். அவனது சிரிப்பை சில நொடிகள் அமைதியாக பார்த்தபடியே நின்றான் கவின் .
“கவின்! முடிய போறது என்னோட அத்தியாயம் தான் நான் அத மறுக்கல. ஆனா இது முடிவே இல்லாத போராட்டம். இங்க இருந்து தான் புது கதையே தொடங்குது. முடிஞ்சா அத தடுக்க பாரு” என்று ‘பேசியவன் நெற்றியையும், அடிநெஞ்சையும் கவினின் துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட இரு புல்லட்டுகள் ஊடுருவிச் செல்ல, அவன் கண்களில் இப்போது வலிக்கு பதில் இளக்காரம் வழிந்தோடியது. உயிரை இறுக்கிப் பிடித்துக் கொண்டவாறே…..’
“தீ…… தித்திக்கும் தீ” என்று ‘ஈனசுரத்தில் அனத்திக் கொண்டே உயிரை விட்டான் ரோஹித். அவனை அசட்டையாக பார்த்தபடியே தன் கூலர் கண்ணாடியை எடுத்து முகத்தில் பொருத்திக் கொண்ட கவின், சவாகாசமாக நடை போட்டு குடவுனில் இருந்து வெளியே வந்தான். கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ரோஹித்தை தேடி அலைந்த பயணம் முடிவுக்கு வந்ததில் அவனுக்கு உள்ளத்தில் பெரிய மகிழ்ச்சி’.
ஆட்களை கடத்தி வெளிநாடுகளில் விற்கும் ஒரு சர்வதேச ஏஜென்ட் தான் இந்த ரோஹித். பல தரப்பட்ட நபர்களை குறிப்பிட்ட சில காரியங்களுக்கு என்றே கடத்தி, வெளிநாடுகளுக்கு பார்சல் செய்யும் நெட்வொர்க்கின் முக்கிய தளபதியான ரோஹித்தை ஸ்கெட்ச் போட்டு தூக்க மேலிடம் கொடுத்த அசைன்மென்ட்டை முடித்திருந்த கவின் தன் காரில் ஏறி அமர்ந்ததும், அருணுக்கு போன் செய்தான்.
“அருண்! ஆப்பரேஷன் ஓவர். ஹெட்க்கு சொல்லிடு. அதோட உடனே டெல்லிக்கு எனக்கு பிளைட் டிக்கெட் போடு. நான் இன்னும் ரெண்டு மணி நேரத்துல கிளம்பியாகணும். இதுக்கு மேல பாடி தாங்காது! டிக்கெட் போட்டுட்டு எனக்கு உடனே கூப்பிடு” சொல்லிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் கால் கட்செய்த கவின் , காரை ஸ்டார்ட் செய்து வேகமாக தன் ஓட்டல் அறை நோக்கி செலுத்த ஆரம்பித்தான்.
கார் கடற்கரை சாலையில் வேகமெடுத்து நகரை நோக்கி நகர…. கவின் குமார் நினைவுகள் பிரீத்தி விடம் செல்லத் தொடங்கியது. ‘ஆயிரம் தடைகள்! எண்ணிலங்கா வலிகள்! தவிர்க்கவே முடியாத பலிகளை கொடுத்து, தான் நேசித்தவளை கரம் பிடித்து, அவளோடு காதலுடன் கலந்து, காமத்தில் நிறைந்து வாழ்ந்த இந்த மூன்றாண்டு வாழ்க்கை, அவனுக்குள் நிறைய மாற்றத்தை கொண்டு வந்திருந்தது’.
‘பொறுக்கி! சாடிஸ்ட்!சைக்கோ என்று போராட்ட நேரத்தில் அவள் கோபத்துடன் உச்சரித்த வார்த்தைகள் இன்று, காதலோடு கலந்து உச்சரிக்கப்படுவதை நினைத்து தன்னையும் அறியாமல் கவின் முகம் மகிழ்ச்சியால் நிறைந்ததை காண முடிந்தது. அன்பின் உச்சத்தில் இருவரும் கலந்ததன் விளைவாக, இன்று பிரீத்தி என்ற முழுநிலா அழகிய பிறை நிலவை ஈன்று கொடுத்த வள்ளல் உள்ளத்தை எண்ணி அவனுக்குள் காதல் ததும்பி நிறைந்தது. பிரீத்தி தனக்கு உயிர் என்பதில் அவனுக்கு எள்ளளவும் சந்தேகம் இருந்ததே இல்லை. ஆனால் இப்போதெல்லாம், அவளுக்கு சரியான போட்டியாக வந்து நிற்பவள் செல்ல மகள் விஷாகா தான்’.
‘பிஞ்சு கைகளை நீட்டி அவள் செய்யும் சேட்டைகளும், அம்மாவை அதட்டி ஓடவிடும் ஆளுமை குணமும் பார்த்து அவனுக்கு மகிழ்ச்சி தாண்டவமாடும். பிரீத்தி - குழந்தை பருவத்தில் எப்படி இருந்திருப்பாள் என்பதை இந்த வாண்டு அழகாக அவனுக்கு வாழ்ந்து காட்டியதுடன், தன் தாயை இன்று உருகி உருகி கரைய வைக்கும் சூட்சுமத்தை கொண்டிருப்பதை பார்த்து, கவின் நிறையவே மகிழ்ச்சி கொள்வான். பிரீத்தி காட்டும் பெரும் காதலும், விஷாகா செய்யும் மழலை குறும்பும் அவனுக்கு பேரானந்தம் தரும் போதையாகி போயிருந்தது’
மனைவி மற்றும் மகள் குறித்த மகிழ்வான நினைவுகளோடு ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தவன், அடுத்த சில மணி நேரங்களில் அவர்களை பார்க்கப் போகும் உற்சாகத்துடன் டெல்லிக்கு புறப்படத் தொடங்கினான். அதற்குள் அருண் அழைக்க, இணைப்பை ஏற்றவன்….
“சொல்லு அருண்! டிக்கெட் போட்டாச்சா?” என்று கேட்டான்.
“சார்! டிக்கெட் கன்பார்ம் ஆகிடுச்சு. ஆனா வழக்கம் போலத்தான், நம்ம சீப் கோபமா இருக்கார். டெல்லி போனதும் உடனே அவரைப் போய் நீங்க பார்க்கணுமாம். ஸ்ட்ரிக்ட்டா சொல்லச் சொன்னார்” என்றபடியே அருண் தயங்கி பேசி முடிக்க….
“ஆங்! அதெல்லாம் அப்படித்தான். புல்லட்க்கு கணக்கு கேட்பார். நான் சொல்லிக்கறேன். இன்னும் எத்தனை மணி நேரம் இருக்கு பிளைட்-க்கு?” என்று பேச்சை மாற்றினான்.
“சார்! 1.30 க்கு உங்களுக்கு பிளைட். நீங்க சரியா 10.30க்கு எல்லாம்” என்று அருண் கூறி முடிக்கும் முன்….
“சரி சரி…. நான் உன்ன டெல்லில மீட் பண்ணறேன். பை” என்று இணைப்பை துண்டித்தான் கவின் சாகித்யன்.
கவின் குமார் டெல்லிக்கு கிளப்ப ஆயத்தமான நேரத்தில், இன்ஸ்ட்டாகிராமில் வீடியோ பதிவிட்ட பெண், குளித்து முடித்துவிட்டு வந்து பாத்ரோபுடன் கண்ணாடி முன் நின்று, தன் அழகை ரசிக்க தொடங்கிய வேளையில் அவளது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் இருந்து நோட்டிபிகேஷன் டோன் வரவே அவள் கைகள் மொபைலை எடுத்து மெசேஜை திறக்க அதில் குறிப்பிட்ட ஐடி-யிலிருந்து வந்திருந்த செய்தி கண்டு அவள் முகம் மலர்ந்தது.
‘ஹாய் பேபி! தீ….. தித்திக்கும் தீ’ என்று போடப்பட்டிருந்த மெசஜை பார்த்து புன்னகை செய்தவள், அடுத்த நொடியே ஹார்டின் சிம்பள் போட்டு கமெண்ட்க்கு ரிப்ளை செய்த பின், உடை மாற்றத் தொடங்கினாள். அவளையும் அறியாமல் அவள் உதடுகள்….’
“தீ… தித்திக்கும் தீ…. தீண்ட தீண்ட இனிக்கும்” என்ற பாடலை உச்சரிக்கத் தொடங்கியது. அப்போது அவள் அலைபேசி ஒலிக்க டிஸ்பிளேயில் தெரிந்த பெயரை பார்த்து, கொஞ்சம் எரிச்சல் ஆனவள் வேண்டா வெறுப்பாக அழைப்பை ஏற்றாள்.
“ஹே! என்னடி இன்னைக்கு நீ போட்ட போஸ்டுக்கு லைக்ஸ் அள்ளிக்கிட்டு போகுது. உன் காட்டுல மழைதான் போலயே” என்றவள், மற்றுமொரு இன்ஸ்ட்டாகிராம் ரீல் கிரியேட்டர். அவளை மனதுக்குள் திட்டியபடியே, பேசத் தொடங்கிய முதலாம் பெண்…
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல அக்கா! உங்கள மாதிரி வருமா? நீங்க கடல் நான் சும்மா செம்புல இருக்கற தண்ணி மாதிரி. நீங்க முந்தாநாள் போட்ட ரீல்-சை விட நான் என்னக்கா பெருசா பண்ணிட்டேன்” என்று தன்னடக்கம் கொண்டவள் போல பேசி வைக்க, மறுமுனையில் இருந்தவள் குரலில் இப்போது பொறாமை தீ கொழுந்துவிட்டு எரிவது அப்பட்டமாகவே தெரிந்தது.
“அட சும்மா நடிக்காதடி! தன்னடக்கம் காட்டரியாக்கும் நீ! உண்மையாவே இன்னைக்கு நீ போட்ட ரீல்ஸ் என்னையேவே உன் மேல மோகம் வர வைக்கற மாதிரி சூப்பரா இருந்ததுடி. பெஸ்ட் ஆப் லக்! நல்லா பண்ணு. ஆமா பெர்சனல் வீடியோ லிங்க் வருமானம் எல்லாம் எப்படி போகுது?” என அடுத்த கொக்கியை வீச, ‘அதானே பார்த்தேன்! இன்னும் விஷயத்துக்கு வராம இருக்காளேன்னு நெனச்சேன்! இதோ வந்துட்டா இல்ல’ என்று எண்ணிக் கொண்டே பதில் கொடுத்தாள் முதலாமானவள்.
“எங்க அக்கா! நானூறு பேர் சப்ஸ்கிரைப் பண்ணி வெச்சு இருக்கான். எலைட் லிஸ்ட்ல இருபது பேர் கூட பே பண்ணி வர மாட்டேங்கறான். ரொம்ப வறட்சியா போகுதுக்கா!”
குரலில் வேதனை கலந்து பேசியவள் சொன்ன பொய்யை எதிர் முனையில் இருந்தவள் கேட்டு உள்ளுக்குள் இலேசாக மகிழ்ச்சி கொண்டவளாக….
“அப்படிதாண்டி இருக்கும்! நீ வேணா பாரேன். இந்த வீடியோக்கு அப்புறமா உனக்கு ஏகப்பட்ட பேர் எலைட் லிஸ்ட்-ல பே பண்ண வருவானுங்க. ஆனாலும் கொஞ்சம் அலர்ட்-ஆவே நடந்துக்க. சாப்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாத்தான் பரிமாறனும். இல்லன்னா உனக்கு மார்க்கெட் போயிடும். பார்த்துக்கம்மா. சொல்லறதை சொல்லிட்டேன்” என்றவள் உள்ளுக்குள் கொஞ்சம் பொருமிக் கொள்ளத் தொடங்கினாள்.
“உங்க கைட்லைன்ஸ்-க்கு ரொம்ம நன்றிக்கா! நீங்க சொல்லற மாதிரியே நடந்துக்கறேன். எனக்கு கிளம்பனும் நான் அப்புறம் கூப்பிடறேன். ஓகே வா” என்று கூறிவிட்டு ‘இணைப்பைத் துண்டித்தாள். துண்டித்தபின் போனை மெத்தை மீது வீசிவிட்டு, “இவகிட்ட நான் அட்வைஸ் கேட்டனா என்ன? வந்துட்டா பொறாமை பிடிச்சவ” என்று வாய்விட்டு திட்டிக் கொண்டே உடைமாற்றத் தொடங்கினாள்’.
இங்கே இன்ஸ்ட்டாகிராம் பொறாமை போர் நடந்து கொண்டிக்கும் நேரத்தில், இருட்டு அறை ஒன்றில் அமர்ந்திருந்த உருவத்தின் முன் இருந்த பெரிய மானிட்டரில், அவள் போட்ட ரீல் வீடியோ ரிப்பீட் மோடில் ஓடிக் கொண்டிருந்தது. அப்போது மெசேஜில் அவள் பெயர் வரவே…. வேகமாக அந்த உருவத்தின் கைகள் அந்த செய்தியை ஓப்பன் செய்ய ஓடியது. அதில் ‘தீ…. தித்திக்கும் தீ’ என்ற மெசேஜ்-க்கு கீழே அவள் போட்டிருந்த ஹார்டின் சிம்பளைக் கண்ட நிமிடத்தில், அந்த உருவத்தின் கண்களில் கனல் தெறிக்கத் தொடங்கியது.
“ஹாஆஆஆ …… என்று ஆக்ரோஷமாக கத்திய அந்த உருவம், இன்ஸ்டாகிராமில் இருந்த அவள் ப்ரொபைல் பிச்சரை பெரிதாக்கி பார்த்து…..’
“கவுண்ட் யுவர் டேஸ் டேமிட்” என்று வெறியோடு கூறியபடியே மேஜையை ஓங்கிக் குத்தியது. அந்த அறைக்குள் எதிரொலித்த வாசகங்களை மூளைக்குள் கடத்திக் கொண்டே, வேகமாக எழுந்த அந்த உருவம்… வாசலைத் திறந்து கொண்டு அறையை விட்டு வெளியேறத் தொடங்கியது.
தொடரும் ........
Comments
Post a Comment