ஆண்களே ரிலாக்ஸ் பிளீஸ்! உளவியல் கட்டுரை எபிசோட் 1
பெண்களுக்கு மட்டும் ஈஸ்ட்ரோஜென் குறித்த பிரச்சனைகள் இல்லை. ஆண்களுக்கும் அது இருக்கிறது
“நான் வாழ்வதற்கு போதுமான தகுதியை உடையவன் அல்ல”
ஆண்களுக்கும் உளவியல், மருந்தியல், உளவியல் சார்ந்த எண்ணற்ற விஷயங்களில் பிரச்சனைகள் இருக்கிறது.
ஒரு ஆணின் விண்ணப்பத்தை எப்படி கார்ப்பரேட் நிறுவனத்தின் மனிதவள அதிகாரி தேர்வு செய்கிறார் தெரியுமா?
ஆண்களே ரிலாக்ஸ் பிளீஸ்!
எரிமலைதான் இந்த வாழ்க்கை
நவீன உலகத்தில் வாழ்வது அத்தனை சுலபமான காரியம் ஒன்றுமில்லை. அதிலும் நெருக்கடிகள், பொறுப்புகள், எதிர்கால கடமைகள் என்று பலதையும் கையாண்டு வெற்றி காண்பது என்பது எளிமையானதும் இல்லை. அதை அடைய சுற்றி இருப்பவர்கள் அனுமதிப்பதும் இல்லை. நடைமுறைச் சிக்கல்கள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நவீன வாழ்க்கை முறையில், பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம் என்றால்…. ஆண்கள் சந்திக்கும் சிக்கல்கள் பத்மவியூகத்துக்கு ஒப்பானது என்று உளவியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இது உண்மைதானா? பெண்களை விட ஆண்கள் அதிகம் சிக்கல்களை வாழ்க்கையில் சந்திக்கிறார்களா? ‘அப்படி ஒன்றும் எங்களுக்குத் தெரியலையே ப்ரோ!’ என்று, பெண்கள் அப்பாவிகளாக கேட்டால் விடை…. ‘ஆம்’ என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.
‘பெண்களுக்கு மட்டும் ஈஸ்ட்ரோஜென் குறித்த பிரச்சனைகள் இல்லை. ஆண்களுக்கும் அது இருக்கிறது’ என்று சொன்னால் நம்புவீர்களா?.... எனில் நம்பித்தான் ஆகவேண்டும். வேறு வழியே இல்லை. அதுதான் உண்மையும் கூட.
‘எதுக்குடா அழற? நீ ஆம்பிளை தானே? இதுக்கு எல்லாம் அழுவங்களா?” என்று சொல்லியே ஆண் பிள்ளைகளை வளர்க்கிறோம்’. “இது எப்படிப்பா தப்பாகும்?” என்றுதானே கேட்கிறீர்கள். இது தவறு இல்லை. ஆனால் உளவியல் ரீதியாக ஆணுக்கு அது நெருக்கடி ஏற்படுத்தும் அழுத்தமாக மாறி, அவன் தன் இயலாமையை வெளிகாட்டிக் கொள்ள இயலாத நிலையில், அதை தன்னை விட பலவீனமானவனிடம் அதை வெளிப்படுத்தி விபரீதங்களை சந்திக்கிறான். இது முந்தையதை காட்டிலும் தவறானது.
டிஜிட்டல் உலகம் இன்று உருவாக்கும் எதிர்மறை எண்ணங்கள் பிரச்சனைகளை மேலும் தீவிரமாக்கியுள்ளது. சமூக ஊடகங்களில் தினம்தோறும் பதிவேற்றம் செய்யப்படும்… வெற்றி, செல்வம், வாழ்க்கைமுறை சார்ந்த அனைத்து பதிவுகளும் வியாபார நோக்கத்தோடு ஆணுக்குள் ஒப்பீட்டை உருவாக்கி வைக்கிறது.
“நான் வாழ்வதற்கு போதுமான தகுதியை உடையவன் அல்ல” என்ற எண்ணம்…. இல்லை! இல்லை! பிம்பம் ஆண்களின் மனதில் செயற்கையாக உருவாக்கப்படுகிறது. அதை பெண்கள் விரும்பி பார்ப்பதும், அதற்கு ஆதரவு தருவதும் இந்த சூழல்களை மேலும் தீவிரமாக்கிக் கொண்டு செல்கிறது என்பதை எப்போது இந்த உலகம் உணரப் போகிறது என்பதே மில்லியன் டாலர் கேள்வி.
இது போன்ற மௌனமான போராட்டங்கள், ஆண்களை தனிமைக்கும், மன அழுத்தத்திற்கும் வழிநடத்திச் செல்கிறது. இது ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளுக்கும், ஆளுமை சார்ந்த உள்ளுணர்வுகளுக்கும் எதிரியாக மாறி… அவர்களின் வாழ்க்கையை சீக்கிரமே முடிவுக்கு கொண்டு செல்ல காரணமாக மாறிப் போகிறது.
ஆண்களே ரிலாக்ஸ் பிளீஸ் என்ற இந்த கட்டுரை ஆண்களை பெருமைப்படுத்தி பேச எழுதப்பட்டது கிடையாது. ஆண்களுக்கும் உளவியல், மருந்தியல், உளவியல் சார்ந்த எண்ணற்ற விஷயங்களில் பிரச்சனைகள் இருக்கிறது என்பதை, பெண்களும், மற்றவர்களும் புரிந்து கொண்டு துணை செய்ய உதவும் கையேடு தான் இந்த கட்டுரை.
கட்டுரையை முழுமையாக படியுங்கள். பிடித்து இருந்தால் மற்றவர்களுக்கும் பகிருங்கள். கொஞ்சம் சமூக ஊடகங்கள் நம் மூளைக்குள் பதிவேற்ற முயலும் எதிர்மறை கருத்துக்களை உண்மையென நம்புவதை நிறுத்திவிட்டு, நியாயமான உணர்வுகளை புரிந்து கொள்ள முயலுங்கள். அதுவே இந்த கட்டுரையின் உண்மையான நோக்கம்.
1.இன்றைய ஆண்கள் உள்ளுக்குள் உடைந்து கொண்டிருக்கிறார்களா? ஏன்?
தற்போதைய நாகரீக வாழ்க்கைமுறையில் உலகத்தின் நவீனமயமாக்கல் பல்வேறு வளர்ச்சி படிக்கட்டுகளை ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறது. இதை வளமான வளர்ச்சி என்று நாம் கருதினாலும், மறைமுகமாக அது பல்வேறு கேடுகளுக்கும் இன்றைய தலைமுறையை இழுத்துச் செல்கிறது என்பதே உண்மை.
அன்றாட வாழ்க்கை முறையில் ஆண்கள் இன்று பல்வேறு மனநல நெருக்கடிகளை சந்திக்கிறார்கள். அவர்கள் சந்திக்கும் நெருக்கடிகள் வெளிப்படையாக தெரிவதில்லை. அதற்கு எந்த அறிகுறியும் இருப்பதுமில்லை. பெண்கள் சந்திக்கும் உணர்வுப் போராட்டங்கள், நெருக்கடிகளை வெளிப்படுத்த அவர்களால் இயலும்.
கோபம், குமுறல், அழுகை என பல விதமான வெளிப்படுத்துதல் முறைகள் இயற்கையாகவே பெண்களுக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் ஆண்கள் நிலையை அன்று முதல் இன்று வரை சமுதாயம் வேறுவிதமாகவே வரையறுத்து இருக்கிறது. அவர்கள் தினசரி வாழ்க்கையை நடத்திக்கொண்டே உள்ளுக்குள் மிகப்பெரிய உளவியல் போராட்டத்தை எதிர்கொள்கிறார்கள்.
வேலை, குடும்பம் நலன், குழந்தைகள் குறித்த பொறுப்பு, சமுதாய கட்டமைப்பில் ஆணுக்கான அங்கீகாரம் என பல அழுத்தங்களையும் அவர்கள் சுமந்தே ஆக வேண்டும். இது சமுதாயம் கொடுத்திருக்கும் நிரந்தரமான பொறுப்புணர்ச்சி. இதில் எதையும் ஆண்கள் தவிர்க்கவே இயலாது. இதிலிருந்து விலகும் ஆணை சமுதாயம் பொறுப்புள்ள நபராக கருதுவதும் கிடையாது.
சில இடங்களில் ஆண்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினால் அதை ஏற்றுக் கொள்ள இந்த சமுதாயம் தயாராகவும் இல்லை. அவனை கோபக்காரனாகவும், உணர்ச்சி வயப்படும் நபராகவும், பொறுப்பற்ற முறையில் பிரச்சனைகளை எதிர்கொள்ள தெரியாத நபராகவுமே இந்த சமுதாயம் முத்திரை குத்துகிறது. இந்த ஒடுக்கப்பட்ட உணர்வுகள், காலப்போக்கில் மனஅழுத்தமாகவும், கோபமாகவும், தன்னம்பிக்கை இழந்த நிலையையும் வெளிப்படுகிறது.
நவீன உலகத்தின் வேகமான வளர்ச்சி, அசுர பலத்துடன் முன்னேறுதல் போன்ற கோட்டபாடுகள் பல்வேறு விதமான எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
வேகமாக சம்பாதித்து குடும்ப பொறுப்பை ஏற்க வேண்டும்.
குடும்பம் சார்ந்த கடமைகளை நிறைவேற்ற ஆவண செய்ய வேண்டும்.
திருமணம் சார்ந்த பொறுப்புகள்.
வாழ்க்கைத் துணையின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுதல், தனக்கென உருவாக்கும் குடும்பத்தின் தேவைக்கென உழைப்பது.
சேமிப்பு, கனவுகள், மனைவி, குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றுதல், குழந்தைகளின் கல்வி
என பெருகிக் கொண்டே செல்லும் தேவைகளை ஆண் நிறைவேற்ற உழைத்தே ஆகவேண்டும். இது அவனுக்கென கொடுக்கப்பட்ட பொறுப்பாக இருக்கிறது. இதனைத் தான் இன்றைய நிறுவனங்கள், வேலை வழங்கும் அமைப்புகள் சாதகமாக மாற்றிக் கொள்கின்றன.
ஒரு மனிதனின் நிலைமையை கருத்தில் கொண்டே அவனுக்கென்ற வேலை தீர்மானிக்கப்படுகிறது. எப்படி என்கிறீர்களா? ஒரு ஆணின் விண்ணப்பத்தை எப்படி கார்ப்பரேட் நிறுவனத்தின் மனிதவள அதிகாரி தேர்வு செய்கிறார் தெரியுமா?
விண்ணப்பித்தவரின் குடும்ப பின்னணி என்ன?
அவருக்கு திருமணமாகி விட்டதா? எத்தனை குழந்தைகள்?
மனைவி வேலைக்குச் செல்கிறாரா? இல்லையா? வேலைக்குச் செல்கிறார் என்றால் அவரது வருமானம் என்ன?
விண்ணப்பதாரர் இருசக்கர வாகனம், கார் வைத்து இருக்கிறாரா?
நகரின் எந்தப் பகுதியில் வசிக்கிறார்? சொந்த வீடா? வாடகை வீடா?
சொந்த வீடென்றால் அவரது கடன் குறித்த கேள்விகள். வாடகை வீடென்றால் தற்போதைய வாடகை.
பிள்ளைகள் எங்கே படிக்கிறார்கள்? எந்த வகுப்பில் படிக்கிறார்கள்?
இந்த நிறுவனத்தில் எதிர்பார்க்கும் சம்பளம் என்ன?
கடந்த நிறுவனத்திலிருந்து வெளியேறிய காரணம்?
இந்த நிறுவனத்தில் எத்தனை ஆண்டுகள் பணியாற்ற இயலும்?
இந்த கேள்விகள் சாதாரணமானது ஒன்றும் கிடையாது. இதற்கு சொல்லப்படும் பதில்தான் அந்த ஆணுக்கு வேலை கிடப்பதை முடிவு செய்கிறது. உதாரணத்துக்கு விண்ணப்பதாரர் குடும்பத்துடன் சென்னை அண்ணா நகரில் வாடகை வீட்டில் அல்லது அபார்ட்மெண்டில் வசிக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்களேன். அவருக்கு இரண்டு பள்ளி செல்லும் குழந்தைகள். மனைவி மற்றுமொரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் செல்கிறார். இருவரிடமும் இருசக்கர வாகனங்கள் இருக்கிறது.
இப்போது அவருக்கு இருக்கும் பொறுப்புகளை அவர் வெளிப்படுத்தும் முன்பாகவே மனிதவள அதிகாரி முடிவு செய்து விடுவார். ஆம்…. இந்த நபரை வேலைக்கு வைத்து, இலக்குகளை நிர்ணயித்தால்…. இவன் சம்பள தேவை பொருட்டு உடனே வேலையை விட்டு சென்றுவிட மாட்டான். இவனால் சம்பளமின்றி வாழ இயலாது. இவன் தான் நாம் தேடிய அடிமை. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இவனது இரத்தத்தை தேவைக்கு உறிஞ்சி இலக்குகளை அடைந்து கொள்ளலாம்.
வேலை உடனே கிடைக்கும். ஆனால் இதே படித்துவிட்டு இப்போதுதான் வேலை தேடி அலையும் நபர் என்று வையுங்களேன். வேலை உடனே கிடைக்காது. அலைய வேண்டியது இருக்கும். ஆக நவீன கலாச்சாரமும், நிர்வாக முடிவுகளும் இன்று ஆணின் பொறுப்புகளை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. அங்கிருந்து பணிசார்ந்த அழுத்தங்களை அவன் எதிர்கொண்டே ஆகவேண்டும். வேறு வழியே கிடையாது.
பணியில் கவனம் செலுத்தாமல் தவிர்க்க முடியாது. குடும்ப தேவைகளை புறக்கணிக்க முடியாது. மனைவியின் எதிர்பார்ப்புகளை ஈடுசெய்ய வேலையும், வேலை நிமித்தமான காலமும் அனுமதிக்காது. வேலையையும் காலத்தையும் காரணமாக சொல்வதை மனைவியின் எதிர்ப்பார்ப்புகள் ஒப்புக் கொள்ளாது. இவை அனைத்தையும் தாண்டி பிள்ளைகள் எதிர்பார்க்கும் அத்தனையையும் ஒரு ஆணால் செய்துவிடவும் முடியாது.
அழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க ஆண், கோபம், ஆற்றாமை, இயலாமை, வேதனை என பல உள்ளுணர்வுகளையும் தனக்குள் சேமிக்கத் தொடங்குகிறான். வெளியே சொல்ல முடியாது. சொன்னால் அதுவும் ஏற்கப்படாது. அவனது உணர்வுகளை நசுக்கி வீசிவிட்டு, போய் வேலையைப் பார் என்றுதான் மற்றவர்கள் சொல்வார்கள். ஏன் சொந்த மனைவியே அதைத்தான் சொல்வாள்.
இங்கிருந்து தொடங்கும் எதிர்மறை உணர்வுகளை, சமூக ஊடகங்கள் சாதகமாகிக் கொண்டு வேறுவிதமான பாதைக்கு ஆணை நடத்துகின்றன. Anxity என்ற வார்த்தையை இன்று சமூக வலைத்தளங்களில் தேடுங்களேன். இலட்சம் வீடியோக்கள், கட்டுரைகள், கதைகளை நீங்கள் பார்க்கலாம். அத்தனையும் குப்பைகள். மனிதனின் உணர்வுகளை சீண்டிவிட்டு, அவனது இதயத்தில் இருக்கும் வலிக்கு மருந்து போடுகிறேன் என்ற பெயரில் அவனை வேறு விதமான மனநிலைக்கு அழைத்துச் செல்லும் விஷ மாத்திரைகள்.
விளைவு முகம் முழுதும் வாட்டம், பொலிவிழந்த தோற்றம், உறக்கம் பிடிக்காத விழிகள், அழுத்தங்களின் மொத்த சுமையையும் தோளில் சுமப்பதால் உருவாகும் செயற்கை கூன் விழுந்த முதுகு என்று ஆண்கள் இன்று வாழ்கிறார்கள். இதில் கடன் என்ற செயற்கை சீரழிவு இருக்கிறதே அது வேறுவிதம். ஆனால் ஆண் அழவும் கூடாது, வலிக்கிறது என்று சொல்லவும் கூடாது, கோபப்படவும் கூடாது, சோகமாக இருக்கவும் கூடாது, அவனுக்கென்று எந்த தன்னல உணர்வும் இருக்கவும் கூடாது.
இதையெல்லாம் அன்றாட வாழ்வில் அனுபவிக்கும் ஆண், ஒருகட்டத்தில் வெடிக்கிறான். அந்த வெடிப்பும் அவனை பழிச் சொல்லுக்குத்தான் ஆளாக்குகிறதே அன்றி, அவன் வாழ்வியலை திருத்தி மீண்டும் எழுத உதவுவதில்லை.
2. ஆண்- உளவியல் அழுத்தத்தின் இயந்திரம்
ஆண்களின் மனஅழுத்தத்தை புரிந்து கொள்ள, அவர்கள் எப்படி உணர்வுகளை செயலாக்குகிறார்கள் என்பதை முதலில் அறிய வேண்டும். ஒரு ஆண் அழுத்தத்தை சந்திக்கும்போது, அவரது மூளை “fight or flight” என்ற நிலைக்கு செல்கிறது.
ஆனால், இன்றைய பிரச்சனைகள் உடனடி தீர்வு இல்லாதவை! முடிவுகளை எடுக்க வாய்ப்புகளை வழங்காதவை! வேலை அழுத்தம், உறவு பிரச்சினைகள் போன்றவை இந்த விஷயத்தில் நீண்ட காலமாக இடர்களை உருவாக்கி தெளிவற்ற உணர்வுகளை உருவாக்குகிறது.
ஆண்கள் பெரும்பாலும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் உள்ளுக்குள் வைத்துக் கொள்கிறார்கள் என்று சொன்னேன். சோகம், பயம் போன்ற உணர்வுகள் நேரடியாக வெளிப்படாமல், கோபமாகவும், விருப்பமின்மையாகவும் மாறுகிறது. இது அவனைப் பொறுத்தவரை ஒரு பாதுகாப்பு முறை. ஆனால் இது ஆணுக்கும் அவன் மனநலத்திற்கும், குடும்ப உறவுகளுக்கும் இடையே தீங்கை விளைவிக்கிறது.
கண்ணதாசன் சொன்னது போல… “மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” என்பதே இன்றைய நவீன வாழ்வியலில் இருக்கும் உண்மை. இன்றைய நவீன தலைமுறை அடுத்தவர் உணர்வுகளில் இருக்கும் உண்மையை புரிந்து கொள்ள தயாராகவே இல்லை.
தன்னுடைய கணவன் தன்னுடன் நேரம் செலவிடுவதில்லை.
தன்னை ஆராதிப்பதில்லை.
தனக்கென்று அக்கறை காட்டுவதில்லை.
தன்னை குறித்து அவனுக்கு பொறுப்புகளே இருப்பதில்லை.
தன்னை அவன் சுமையாக கருதுகிறான்.
தனக்கு முக்கியத்தும் தராமல், வேலையையே கட்டிக் கொண்டு அழுகிறான்.
காலதாமதமாக வீட்டுக்கு வருவது, நண்பர்களுடன் நேரம் செலவிட செல்வது என்று என்னை புறக்கணிக்கிறான்.
இப்படியெல்லாம் பெண்கள் பேசுவதை, ஆதங்கப்பட்டு வேதனையுடன் கண்ணீர் வடிப்பதை, இதனால் ஏற்பட்ட புரிதலற்ற உணர்வில் தற்கொலைக்கு முயல்வதை, விவாகரத்து கோரி நீதிமன்றத்துக்கு செல்வதை இன்று நிறைய கண்கூடாக பார்க்கலாம்.
இதில் ஆணின் மீது தவறு என்று சொல்லிவிடுவது மிகவும் எளிது.
ஆணின் முட்டாள்தனம்.
அவனது இயலாமை.
பொறுப்பற்றதனம். அனுபவ அறிவே கிடையாது.
என்றெல்லாம் நாம் எளிதாக சொல்லிவிடுவோம். அப்படித்தான் சம்பந்தப்பட்ட பெண்ணும் சொல்வார். இதைத்தான் சமுதாயமும் ஏற்கும். ஆனால் உண்மை என்ன? ஆணுக்கு இதில் பொறுப்பை விட பொறுமை இருக்க வேண்டும் என்றும், மன்னித்து எதையும் தாங்கி வாழவேண்டும் என்றும் சொல்லும் உளவியலாளர்கள் இதை பெண்ணுக்கும் சொல்லலாமே. அதை சமுதாயமும் சொல்லிக் கொடுத்தால் பிரச்சனை தீர்ந்துவிடும்.
ஆனால் சொல்லிக் கொடுக்காவே, இதை மாற்றவோ இந்த உலகம் விடுவதில்லை. இதன் பின் இருக்கும் பரந்த வியாபார யுக்தியும், ஆதாயம் பார்க்கும் போக்கும் தான் இன்று ஊடகங்களில் பகிரப்படும், காட்டப்படும் எதிர்மறை கருத்துகள். இவை சுயநலமான அப்பட்டமான பொய் பிம்பங்கள். இதை சொல்லிக் கொண்டு பதிவிடும் யாரும் அதை கடைபிடிப்பார்களா என்றால் கிடையாது. ஆனால் அதைத்தான் நாம் கொண்டாடிக் கொண்டும், உண்மை என்று நம்பிக் கொண்டும் நம் வாழ்க்கையை சிதைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆணை பழி சொல்வது பலவகைகளில் எளிது. அதற்கு அவனது படைப்பு அப்படி எளிமையாக வாய்ப்பளிக்கிறது. அதை பயன்படுத்திக் கொள்ளும் சமுதாயம் அவனை சுலபமாக குறை சொல்லி மேலும் அழுத்தம் கொடுக்கிறது. தன்னை ஆண் புகழ வேண்டும் என்பதற்காகவே இன்று சமூக ஊடகங்களில் ஆபாச பதிவுகளை போடும் பெண்கள் இல்லையா? அதை திட்டிக் கொண்டே குறை சொல்லும் பெண்கள், அடுத்த நாளே அவர்களும் இது போல பதிவிட முயற்சிக்காமல் விட்டுவிட்டார்களா?
இந்த நவீன தொழில்நுட்பம் வளர்த்து விட்டிருக்கும் எதிர்மறைகளில், விட்டில் பூச்சிகளாக சிக்கிக் கொள்ளும் பெண்கள்… முதலில் அதிலிருந்து வெளியே வாருங்கள். ஆண்களை கொஞ்சம் எதிர்மறைகள் துறந்து சகா மனிதனாக பாருங்கள் பார்க்கலாம். முடிவுகள் பலதும் நேர்மறைக்கு தானாகவே செல்லும்.
ஆணை சுமைதாங்கும் இயந்திரமாக உபயோகிக்கும் போக்கை கைவிடுங்கள் என்று சொல்வதை விட, அந்த உயிரை நேசிக்க இதயம் கொடுங்கள் என்று சொல்லவே விரும்புகிறேன். அழுத்தம் வரும் போது பெண்ணுக்கு தேவைப்படும் ஆணின் உடனிருப்பும், அன்பும், அக்கறை காட்டும் உணர்வும் ஆணுக்கும் இருக்காதா இல்லை இருக்கவே கூடாதா? இதில் மட்டும் ஆணை ஒருவிதமாகவும் பெண்ணை ஒருவிதமாகவும் நாம் எடை போட்டு தீர்ப்பெழுதுவது எப்படி சரியாக இருக்கும்?
ஆண்கள் மொத்தமும் சரியென சொல்லவே நான் இங்கே முயற்சிக்கவில்லை. உண்மையாக எத்தனையோ ஆண்கள் குடும்பம், மனைவி, பிள்ளைகள், அவர்கள் நலன் சார்ந்து சொந்த விருப்பங்களை, தேவைகளைக் கூட கவனிக்காமல் இருக்கிறார்கள். ஆனால் துரதிஷ்டம் என்ன தெரியுமா? அப்படிப்பட்ட ஆண்களை சார்ந்து இருக்கும் பெண்கள் நவீனத்தின் நாசகேடுகளுக்கு பழக்கப்பட்டு, ஆண்களை அவர்கள் தேவைகளுக்கு ஏற்ப வாழ வற்புறுத்தும் அவலத்தை மாற்றிக் கொள்ளவே வேண்டுகோள் வைக்கிறேன்.
சில குடும்பங்களில் மனைவிகளை விட பிள்ளைகள், பிழைகளாக இருந்து கொண்டு அவர்கள் தவறை ஈடுகட்ட தகப்பனை தறிகெட்ட அளவுக்கு விமர்சனம் செய்வது மிகப் பெரிய கொடுமை. ஆனால் சமுதாயமும், உளவியல் உளறல்களை நாள்தோறும் சமூக ஊடகங்களில் உமிழும் சுயநல சாத்தான்களும் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?
நவீன இளைஞர்கள், இளம் பெண்களை அவர்கள் போக்கிற்கே விட்டுவிட வேண்டும். அவர்கள் தேவைகளை மட்டுமே எதிர்பார்ப்பார்கள். அதை மட்டும் கொடுத்துவிட்டு… அவர்கள் எதை சொன்னாலும் ஆண் மௌன சாமியாராக மட்டுமே இருந்து விட வேண்டுமாம். கண்டிப்பதும், கேள்வி கேட்பதும் ஆணின் வேலை இல்லையாம்.
இவை எல்லாம் ஆணுக்கு அழுத்தமாகவோ, வலியாகவோ இருக்கக் கூடாது. அதற்காக அவன் வருத்தம் கொண்டு பொருமி கொள்ளவும் கூடாது. இதைத் தான் இன்றைய சமுதாய சிற்பிகளும், உளவியல் பேசும் உருப்படாத முட்டாள்களும் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அதை பார்த்து நவீனம் ஏற்றுக் கொண்ட குடும்பத்தாரும் இதையே செய்யச் சொல்லி ஆணை வலியுறுத்துவது ஆணுக்கு உளவியல் வலிகளை கொடுக்கக் கூடாது. அதையும் அவன் சிரித்துக் கொண்டே ஏற்க வேண்டும் என்றால்…..
இதில் யார் தவறு பெரிது? பல ஆண்கள் இன்று இப்படியான வலிகளுடன் விழிகளை நிறைத்துக் கொண்டு தலையணைகளை நனைத்துக் கொண்டு, வெளியே அழுத்தமான முகங்களுடன் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இதன் காரணமாகவே பல ஆண்கள் தனிமைக்குள்ளாகி தவிக்கிறார்கள். நண்பர்கள் இருந்தாலும், ஆழமான உணர்ச்சி உரையாடல்கள் இல்லாமல் போகிறது. இதனால், ஒரு ஆண் தனது பிரச்சினைகளை தனியாகவே சுமக்க வேண்டிய நிலை உருவாகிறது. இந்த தனிமை, மனஅழுத்தத்தை பலமடங்கு அதிகரிக்கிறது.
கவலை மற்றும் அழுத்தத்தை ஆண்கள் சந்திக்க என்ன காரணங்கள் இருக்கக் கூடும்? நவீன உலகில் தான் ஆண்களுக்கு மனஅழுத்தம் இருந்ததா? பண்டைய தமிழர்கள் இதை எப்படி எதிர்கொண்டார்கள்? ஈஸ்ட்ரோஜென் சுரபி ஆண்களுக்கும் சுரக்குமா? அதனால் உருவாகும் சோர்வை ஆண்கள் எப்படி கையாள்கிறார்கள்? விவரமாக தெரிந்து கொள்ள அடுத்த அத்தியாயத்தை மறக்காமல் வாசியுங்கள்.
தொடரும்………………………….
இந்தக் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே இருக்கும் கமெண்ட் பகுதியில் வந்து உங்கள் கருத்தை பகிருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் நலன் விரும்பிகளுக்கும் பகிருங்கள். எங்கள் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் கட்டுரைகளை குறித்து உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் வாட்சப் குழுவிலும், முகநூல் குழுவிலும் இணையுங்கள்.


Comments