தீ….தீ….தித்திக்கும் தீ….. (கருவறை களவுகள்) அத்தியாயம் - 2

 தீ….தீ….தித்திக்கும் தீ…..

(கருவறை களவுகள்)



அத்தியாயம் - 2





இருளை மெல்ல மெல்ல விரட்டியபடி கதிரவன் கடலுக்குள் இருந்து எழுந்து வரும் இனிய காலை நேரம்…..

சென்னையில் பிரீத்தி - குகேஷ் பிறந்து வளர்ந்த பூர்வீக வீட்டில் சுப்ரபாதம் ஒலிக்கத் தொடங்கியது. பூஜை அறையில் விளக்குகளை ஏற்றிவிட்டு, தூபம் காட்டியபடி ஈரத்துவாலையை தலைக்கு கட்டிக் கொண்டு வெளியே வந்தாள். அப்போது தான் உறக்கம் கலைந்து திரும்பிப் படுத்த வினித் முகத்தின் மீது சடாலென்று ஒரு ஜோடிக் கால்கள் வந்து விழுந்தன. 


“ஆஆஆஆ… அடேய்! ஏண்டா இப்படி படுத்தறே? அங்கிட்டு திரும்பி காலை போடக் கூடாதா? மூக்கே போச்சு” என்றவாறே, முகத்தின் மீது காலை போட்டுக் கொண்டு உறங்கிய தன் மகனை பார்க்கும் மைத்ரேயனை கவனித்தபடியே அறைக்குள் வந்தாள் ரூபா, அவன் நிலை கண்டு ஒரு நமட்டு சிரிப்பை உதிர்த்தவாறே….


“என்ன மைதா டார்லிங்! இன்னும் தூக்கம் கலையலயா? இப்படியே நீ தூங்கிட்டு இருக்கக் கூடாதுன்னு தான் என் பையன் உன்ன எழுப்பி விட்டு இருக்கான். அதுக்கு எதுக்கு பையனை காலையிலேயே திட்டற?” 


அவளை ‘வெறிக்க ஒரு நொடி பார்த்தவன் பின் இலேசாகி….’ 


“இப்படி எல்லாம் காலையிலேயே வந்து என் முன்னாடி நின்னா எப்படி நான் வேலைக்கு போறது. வேணும்ன்னா நான் குட்டி மைதாவை கொண்டிட்டு போய், அவங்க பாட்டிக்கிட்ட படுக்க வெச்சுட்டு வந்துடவா” என்றான். 


“படவா! ஏற்கனவே பெட்ல ஒன்னு தொட்டில்ல ஒன்னு உன் ரொமான்சால இருக்கு. போதும்! மரியாதையா எழுந்திரிச்சு போய் கிளம்பு. இன்னைக்கு உனக்கு நிறைய வேலை இருக்கு” என்று அவனை அதட்டியவளை, ஒரே தாவலில் பாய்ந்து பிடித்து… அவள் இடையைச் சுற்றி வளைத்தான் மைத்ரேயன். 


“மைதா வேணாம்! காலைலயே என் மூட மாத்தாத! அப்புறம் நல்லா இருக்காது” என அவன் காதில் கிசுகிசுத்தவள், வாசலில் யாரோ வரும் சத்தம் கேட்டு அவனை விலக்கிவிட முயற்சித்தாள். ஆனால் அவனோ அவளை பிடிவாதமாக இன்னும் நெருக்கி அணைத்தான்.  அதற்குள் அறையின் வாசலில் இருந்து ஒரு குரல் கேட்டது. 




“அட லூசுங்களா! கதவை சாத்திட்டு ரொமான்ஸ் பண்ணறது இல்ல! இப்படியா கதவை தொறந்து போட்டுட்டு…..” தலையில் அடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்ப முயன்ற குகேஷை பார்த்து இருவரும் தர்ம சங்கடத்தில் நெளிந்தார்கள். 


சுதாரித்துக் கொண்ட ரூபா முகத்தில் இயல்பை வரவழைத்துக் கொண்டு…. “சரிதான் வாடா அண்ணா! என்னமோ உனக்கு இதெல்லாம் புதுசு மாதிரி!” என்றவாறே அவனை கலாய்க்க, ‘அங்கிருந்து கிளம்பி போக எத்தனித்தவன் திரும்பி அறைக்குள் வந்தான்’.


“என்ன கொடுமை மக்களே இதெல்லாம்? ஒரு அண்ணனை பார்த்து என்ன வார்த்தை சொல்லறா பாருங்க?” என்று கூறிக் கொண்டே தலையில் கைகளை வைத்துக் கொள்ள… அவர்கள் உரையாடலை கேட்டபடியே அலுவலகம் கிளம்ப ஆயத்தமாகி வந்த சாண்ட்ரா அவன் அருகில் நின்று அறைக்குள் எட்டிப் பார்த்தாள். 


“வாங்க அண்ணியாரே! இன்னைக்கு சீக்கிரமாவே கிளம்பிட்ட மாதிரி தெரியுது. சாப்பிட்டுட்டு போகலாம் இருங்க. இதோ வர்றேன்” கூறியபடியே வாசலுக்கு வந்த ரூபா வை, கையமர்த்தி ‘கண்ஜாடை’ செய்த சாண்ட்ரா குறும்பு புன்னகை ஒன்றை வீசினாள். 


“ஆத்தாடி செல்லக் கண்ணு! நீ உன் கடமையை முதல்ல முடிச்சுட்டு வா. நான் எல்லாத்தையும் பாத்துக்கறேன். இப்ப விட்டா அப்புறம் எப்ப?” என்று கூறிக் கொண்டே ‘வம்படியாக குகேஷ் கைகளை பிடித்து இழுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்’. 


அவளது புரிதலை எண்ணி வியந்து கொண்ட உள்ளுக்குள் மகிழ்ந்தாலும், கடமையை செய்யும் நேரத்தில் இந்த நெருக்கம் முக்கியமில்லையே என்ற கேள்வியாலும் ஒரு கணம் யோசனையில் ஆழ்ந்தாள். அதற்குள் அவளருகே வந்துவிட்ட வினித் அவள் தோளை கட்டிக் கொண்டு பேசலானான். 


“சாரிடி! நீ என்ன நினைக்கறேன்னு எனக்குத் தெரியும்?. உன்னோட எண்ணம் சரிதான். காலைல உன்ன பிரெஷ்ஷா பார்த்ததால கொஞ்சம் நிலை தடுமாறிட்டேன். என்ன மன்னிச்சிக்க” என்ற வினித் அவள் நெற்றியில் முத்தமிட்டான். 


சமையலறைக்குள் நுழைந்திருந்த சாண்ட்ரா, அவசரமாக தோசை செய்யும் பொருட்டு கல்லை அடுப்பில் வைத்திருந்தாள். 


அதற்குள் குகேஷ் அவளிடம்….  “நீ என்ன அழகி என்னை பிடிச்சி இழுத்துட்டு வந்துட்டே? இதெல்லாம் நாம தான அவங்களுக்கு சொல்லிக் கொடுக்கணும். இது நம்மளோட கடமை இல்லையா?” என்றவாறே அவளிடம் இலேசான முறைப்பை காட்டினான். அவன் பக்கம் திரும்பிய சாண்ட்ரா ‘அவன் கன்னத்தை தன் இரு கைகளிலும் ஏந்தியவாறே….’ பேசினாள். 


“போகட்டும் விடுங்க! இதெல்லாம் ஒரு சின்ன விளையாட்டு. நாம கூடத்தான் இப்படி எல்லாம் செய்வோம். இதையெல்லாம் பெருசாவா எடுத்துக்குவாங்க? கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி சார் என்ன செஞ்சீங்களாம்?” என்று கேட்டுவிட்டு அவனை புன்னகையுடன் பார்க்க…. அதில் தடுமாறிய குகேஷ், வார்த்தைகளை உளறி வைத்தான்.


“அது… அது… நான் கதவை எல்லாம் சாத்திட்டுதான்…. “ என்று நீட்டி முழக்கி ‘பேந்த பேந்த விழித்தவனை பார்த்து கொள்ளென்று சிரித்தாள்’ சாண்ட்ரா . 


அசடு வழிய நின்ற குகேஷ் கழுத்தை வளைத்த சாண்ட்ரா கைகள், மெல்ல அவன் காதில்…. “சும்மா சொல்லக் கூடாது அக்கியூஸ்ட், நீங்க ரொமான்டிக் ஹஸ்பண்ட் தான்” என்று சொல்ல, குகேஷ் முகம் பெருமையாலும் பேரின்பத்தாலும் நிறைந்தது.  


அதற்குள் அஸ்வினி குரல் டைனிங் ஹாலில் இருந்து கேட்டது. அவளது குரலை அடுத்து காயத்திரி குரலும் சத்தமாக ஒலிக்கவே, சிறுசுகள் முகத்தில் வெட்கமும், சங்கடமும் நிறைந்த நிழல் படரத்தொடங்கியது. 


“அடியேங்களா! வீட்டுல என்னதாண்டி ரெண்டு பேரும் செய்யறீங்க? காலைல சுகர் பேஷண்ட்டுங்க சாப்பிட எதையாவது செஞ்சி தரணும்ன்னு உங்களுக்கு எல்லாம் தோணவே தோணாதா? வாய்விட்டு கேட்டாத்தான் கொண்டாந்து டைனிங் டேபிள்ள வைப்பீங்களாக்கும்?” ஓங்கி ஒலித்த காயத்திரி குரலைக் கேட்டு வேகமாக சமையலறைக்குள் வர, அங்கே இருந்த ஜோடி காலடி சத்தம் கேட்டு தங்களை விடுவித்துக் கொண்டு சமாளிக்கும் பொருட்டு வேலை செய்வது போல நடிக்கத் தொடங்கியிருந்தது. 


அப்போது…..

 

“ஆஆஆஆஆஆ ….’. என்றவாறே அலறிக் கொண்டு கைகளை உதறினான் குகேஷ் .’ சாண்ட்ராவும் ரூபாவும் அவனை பதட்டமுடன் பார்க்க…. கையை வாயில் வைத்துக் கொண்டவாறே திருதிருவென்று விழித்தான் குகேஷ் . சாண்ட்ராவால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. ரூபாவும் அவளது சிரிப்பில் கலந்து கொள்ள…. குகேஷ் இருவரையும் உஷ்ணமுடன் பார்த்தான். 


“என்னடா அண்ணா? தோசை சுட்டியாக்கும்?” சிரித்துக் கொண்டே கிண்டல் அடித்தாள் ரூபா. அவளை நோக்கி அருகில் இருந்த கரண்டியை எடுத்து வீசிய குகேஷ் தோசைக் கல்லில் வைத்து சுட்டுக் கொண்ட கையை உதறிக் கொண்டே துள்ளினான். அதற்குள் சமையலறையில் நடக்கும் சலசலப்பை உற்று பார்த்த இரு பெருசுகளும்… தங்களுக்குள் நமட்டு சிரிப்பை பகிர்ந்து கொண்டனர். 


“அங்க என்னடா சத்தம்?” இலேசாக கடுமை கூட்டி கேட்டாள் காயத்திரி. உடனே குகேஷ் முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு, சமையலறையில் இருந்து குரல் கொடுத்தான். 


“அதொன்னும்மில்லை பெரியம்மா, உங்களுக்குத் தான் சாண்ட்ரா தோசை சுடறா. ரூபா சட்டினி செஞ்சுட்டு இருக்கா” என அசடு வழிந்தான் குகேஷ். 


“தோசை சுடவும், சட்டினி செய்யவும் ஆஆ ஊன்னு எல்லாம் ஏண்டா சத்தம் வருது? சமையல் கட்டுல அவ தோசை சுடறாளா இல்ல கிங்காங் படம் பார்த்துட்டு இருக்காளா? ஆமா இரும்படிக்கற இடத்துல ஈக்கு என்னடா வேலை? நீ அங்க என்ன செய்யறே?”என  சந்தேகத்தோடு கேட்டு வைத்தாள் காயத்திரி. 


இதற்கு மேல் இங்கிருந்தால் ஆபத்து என்று புரிந்து கொண்ட குகேஷ், இரு பெண்களையும் சைகையாலேயே திட்டிக் கொண்டு, சமையலறையில் இருந்து வெளியே வந்தான். சுட்டுக் கொண்ட கையை பின்னால் மறைத்துக் கொண்டே ….


“கிச்சன்ல எல்லாம் டைமுக்கு நடக்குதான்னு இன்ஸ்பெக்ட் பண்ண போனேன் பெரியம்மா! இந்த பொண்ணுங்க எப்பவும் உங்களுக்கு சரியா டிபன் கொடுக்கறது இல்லன்னு, நேத்து தான் அப்பா என்கிட்டே சொன்னார். அதான் ஒழுங்கா வேலை செய்யறாங்களான்னு பாக்க போனேன்… ஹிஹிஹி” என்று அசடு வழிந்தான் குகேஷ் . 


அதற்குள் மாடியிலிருந்து அங்கு நடந்த உரையாடல்களை கேட்டபடி வந்த சௌந்தர் அவனைப் பார்த்து….


“நான் எப்படா உன்கிட்ட டைமுக்கு டிபன் தர்றது இல்லன்னு சொன்னேன். நேத்து நீ என் பக்கமே வரலையே?!” என்று போட்டுக் கொடுக்க செய்வதறியாது விழித்தான் குகேஷ் .  


அதற்குள் வினித் அறையில் இருந்து வெளியே வர… அவனை பின் தொடர்ந்தவாறே மழலை நடையில் பின்னால் கையைக் கட்டிக் கொண்டு, அவர்களின் செல்ல மகன் ராகுல் பெரிய மனிதன் தோரணையில் வந்தான். எல்லோரையும் பார்த்துக் கொண்டே வந்தவன் திடீரென்று வினித்தைத் தாண்டி ஓடலானான். அவன் சுதாரிக்கும் முன் வேகமாக ஹாலுக்குள் ஓடியபடியே இறக்கை போல கைகளை விரித்துக் கொண்டே ராகுல் ‘சுச்சு’ போய் வைத்தான்’.


“அடேய்! அடேய்…. நிறுத்துடா….” என்றவாறே ஓடிய வினித் ‘ஹால் முழுவதும் தன் மகன் செய்து வைத்த அபிஷேகத்தை பார்த்து தலையில் அடித்துக் கொண்டான். எல்லாம் நல்லபடியாக முடிந்தது என்ற தோரணையில், அனைவரையும் பார்த்த அந்த குட்டி வாண்டு, யாரிடம் சென்றால் பாதுகாப்பு என்று புரிந்து கொண்டு, சட்டென்று சௌந்தரிடம் ஓடிச் சென்று ஒட்டிக் கொண்டது. 


சமையலறையில் இருந்து வெளியே வந்த சாண்ட்ராவும், ரூபாவும் ராகுல் செய்து வைத்த காரியத்தை பார்த்து சிரித்துக் கொள்ள…. வினித் திரும்பி ரூபாவை பரிதாபமாக பார்த்தான். ஸ்ட்ரிக்ட் ஆபீசர் தோரணையில் முகத்தை வைத்துக் கொண்ட ரூபா, அவனை கண்ணசைவால் சுத்தம் செய்ய சொல்ல…. மாட்டேன் என்பதுபோல தலையை ஆட்டினான் மைத்திரேயன். 


ஆனால் வேறு வழியில்லை. தன் மகன் செய்யும் குறும்புகள் அனைத்துக்கும் அவனே பொறுப்பேற்க வேண்டும். அப்படிதான் அவன் வாக்கு கொடுத்து குடும்பத்தாரிடம் சிக்கி இருக்கிறான். கோபமுடன் தன் மகனை அவன் பார்க்க… மழலை சிரித்துக் கொண்டே… ‘ப்ப்பா…. சூச்சூ’ என்று கையை காட்ட அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். 


‘அப்போது வீட்டின் வாசலில் கார் ஒன்று வந்து நிற்கும் சத்தம் கேட்டது. அனைவரது பார்வையும் வாசலை நோக்க… கார் டோர் ஓபன் ஆகும் ஓசை எழுந்தது. சௌந்தர் தான் வாசலுக்கு முதலில் சென்றார். அஸ்வினியும் காயத்திரியும் அடுத்தடுத்து வாசலுக்கு செல்ல… காரில் இருந்து இறங்கிய வாலிபன் 25 வயதுக்குள் இருந்தான். வாளித்த உடல்வாகும், அதற்கு ஏற்ற உயரத்திலும், முறுக்கேறிய புஜங்களுடனும் இருந்தவன், தன் உடமைகளை டிக்கியில் இருந்து இறக்கி வைத்தபடியே டாக்சியை கட்செய்து கொண்டிருந்தான்’. 


‘கூலர் அணிந்து தலையில் கேப் அணிந்திருந்தவன், அவற்றை கழட்டிய படியே பேக்-பேகை தோளில் அணிய, அவன் முகத்தை உற்றுப் பார்த்த நொடியில் அடையாளம் கண்டு கொண்ட காயத்திரி இதழ்கள்…. ஆச்சரியத்துடன், ‘ரிஷி’ என்ற பெயரை உச்சரிக்கத் தொடங்கியது’.  


‘யாரிந்த ரிஷி? எங்கிருந்து வருகிறான்? என்ற கேள்விகளுடன் வினித் தன் மகனின் திருவிளையாடலை சரி செய்து கொண்டிருக்க…’ குகேஷ்-ம், ரூபாவும் முகத்தில் இனம் புரியா உணர்ச்சி குவியல்களுடன் அவனை நோக்கி எட்டு வைத்தார்கள். அஸ்வினியும், சௌந்தரும் கூட அவனை கலக்கமுடன் பார்க்க… ராகுல்  வந்தவனை கொஞ்சமும் பயமின்றி பார்த்து… “மாமா” என்று அழைத்தான். 



அதே நேரம்…. 


சென்னையின் புறநகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணை, ஒரு ஆட்டோ நெருங்கி கொண்டிருந்தது. ஆட்டோவின் பின் பக்கத்தில் அமர்ந்திருந்தவன் முகத்தில் ஆத்திரமும் வன்மமும் நிறைந்து இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டோவுக்கும் இருசக்கர வாகனத்துக்கும் இடையேயான தூரம் குறைந்து கொண்டே வர… ஒரு திருப்பத்தில், ஆட்டோவின் பின் பக்கத்தில் இருந்தவன், இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை இலாவகமாக பிடித்து இழுத்து ஆட்டோக்குள் திணித்துக் கொண்டான். அந்த பெண் என்னவென்று யோசிக்கும் முன், ஆட்டோ வேகமெடுத்து, பக்கவாட்டில் சென்ற மண் சாலையொன்றில் பயணிக்கத் தொடங்கியிருந்தது’



தொடரும்...................



Comments

Popular posts from this blog

தமிழ்நாட்டின் நவீன அரசியல் களம்

தீ….தீ….தித்திக்கும் தீ….. (கருவறை களவுகள்) அத்தியாயம் - 3

காற்று வெளியிடை கண்ணம்மா