சங்ககால வேளிர்கள் கதைகள் - அத்தியாயம் -2 அம்பர்கிழான் அருவந்தை
சங்ககால வேளிர்கள் கதைகள்
அம்பர்கிழான் அருவந்தை
காவிரி தன் அளவில்லாத ஈகைத்தன்மையால் வளம் கொழிக்க வைக்கும் நிலப்பரப்பு சோழநாடு. காவிரியின் கருணையால் முப்போகம் விளையும் நிலமாக, அனைவருக்கும் பசியில்லா வாழ்வை தந்த சோழ நாட்டை பற்றி பல்வேறு புலவர்களும் சங்க இலக்கியங்களில் பாடியுள்ளார்கள். இந்தப் புலவர்களுக்கு பொருளுதவி செய்து புரவலர்களாக வாழ்ந்த கொடை உள்ளம் கொண்ட சிறு மன்னர்கள் பலர் காவிரியின் கரையில் வசித்து வந்துள்ளார்கள். இந்த ஆற்றின் கரையில் அமைந்து தமிழ் வளர்த்த ஊர்களில் மிகவும் முக்கியமானது அம்பர் என்னும் சிற்றூர்.
தற்போதுள்ள நாகை மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் காவிரியின் துணையாராக விளங்கும் அரிசிலாற்றின் கரையில் இந்த ஊர் அமைந்திருந்தது. அரிசிலாறு காவிரியின் துணையாறு என்றாலும் அதையும் காவிரியாகவே கருதிய புலவர் அந்த ஊரை ஆட்சி செய்து வந்த சிற்றரசன் அருவந்தையை
“காவிரி அணையும் தாழ்நீர்ப் படப்பை
நெல்விளை கழனி அம்பர் கிழவோன்
நல்அரு வந்தை வாழியர் புல்லிய” —------ (புறம். 385)
என பாடினார். இந்த பாடலின் பொருள் என்ன தெரியுமா?
வானத்தில் வெள்ளி முளைத்தது; பறவைகள் ஒலித்தன; பொழுது புலர ஆரம்பித்தது. அந்த நேரத்தில், நான் அம்பர் கிழான் அருவந்தையின் எருதுகளாகிய செல்வத்தை வாழ்த்தி, அவன் மனைக்குச் செல்லாமல், அவன் மனைக்கு அருகில் உள்ள மனையின் முற்றத்தில் நின்று, தடாரிப் பறையை அறைந்தேன். என் பறையின் ஒலியைக் கேட்ட அருவந்தை, என் வறுமையை நீக்க விரும்பி, என் இடையில் இருந்த மண் தின்னும்படி பழையதாக கிழிந்திருந்த கந்தைத் துணியை அகற்றி, வெண்ணிற ஆடையை உடுப்பித்து, எனக்கு உணவளித்து என் பசியைப் போக்கினான். காவிரி ஆறு பாயும் தாழ்ந்த நிலத்தில் உள்ள தோட்டங்களையும் நெல்விளையும் வயல்களையுமுடைய அம்பர் என்னும் ஊர்க்கு உரியவனாகிய நல்ல அருவந்தை என்பவன் புல்லி என்பவனுடைய வலிய வேங்கட மலையில் உயர்ந்த வானத்திலிருந்து பெய்யும் மழைத்துளிகளைவிடப் பல ஆண்டுகள் வாழ்வானாக! என்று பொருள் படும்.
இந்தப்பாடலை பாடியவர் கல்லாடனார் என்னும் புலவர். அருவந்தை அம்பர்க்கண் அருவந்தை என்றும் போற்றப் பெறுகிறான். அருவந்தை கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் உடையவன். அனைவரும் போற்றும் படியான அறிவை அவன் கொண்டிருந்ததால் அவன் வாழும் ஊரும் பாராட்டு பெறும் அதிர்ஷ்டம் பெற்றது என்று புலவர்கள் கூறுவார்கள்.
அருவந்தை கற்ற நாவினன், கேட்ட செவியினன், முற்றும் உணர்ந்த மூதறிவாளன், நாகரீக நாட்டின் அரசன் அருவந்தை வாழும் நாடே பிற நாட்டுக்கு உவமை. காலமறிந்து உதவும் காவிரி போன்ற மன்னன், அவன் ஆடவர்களில் எல்லாம் சிறந்த அழகன், என்றெல்லாம் அருவந்தை போற்றப்படுகிறான்.
திருப்பழனத்து கல்வெட்டு ஒன்று, “உய்ய கொண்டார் வளநாட்டு அம்பர் நாட்டு அம்பர் அருவந்தை என்றே குறிப்பிடுகிறது. பழைய வடஆற்காடு மாவட்டத்தில் வந்தவாசி வட்டம் பொன்னூர் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று “பொன்னூரான அழகிய சோழ நல்லூரை அருவந்தை ஆண்டான், திருசோற்றுத் துறையுடையான்” என்று குறிப்பிடுவதன் மூலம் அருவந்தையின் வழித்தோன்றல்கள் பின்னாளில் தொண்டை நாட்டிலும் இருந்தார்கள் என்பது புலனாகும்.
அருவந்தை தன்னை நாடி வரும் புலவர்களுக்கு மட்டும் அல்ல, வேறு நபர்களிடம் சென்று இரந்து நிற்கும் புலவர்களையும் தன்னிடம் அழைத்து வாரி வழங்கும் குணம் உடையவன். தமிழை பாடும் புலவர்கள் பசியோடு இருப்பதை சகித்துக் கொள்ள முடியாதவன். இதையே கல்லாடனார்
வெள்ளி தோன்றப் புள்ளுக்குரல் இயம்ப
புலரி விடியல் பகடுபல வாழ்த்தித்
தன்கடைத் தோன்றிற்று இலனே பிறன்கடை
அகன்கண் தடாரிப் பாடுகேட்டு அருளி
வறன்யான் நீங்கல் வேண்டி
என்று பாடுகிறார். கல்லாடனார் திருவேங்கடத்துக்கு வடக்கே இருந்து பரிசு பெற வந்தார் என்றும் ஒரு கூற்று இங்கே வழங்கப்படுகிறது.
அம்பர் என்னும் அருவந்தை நாட்டுக்கு வேறு ஒரு சிறப்பும் உண்டு. அரிசில் என்பது ஓர் ஆறு இது காவிரியின் துணையாறு என்று முன்னமே கேட்டோம் இல்லையா?. இது தற்போதுள்ள கும்பகோணம் எனப்படும் குடந்தை அருகே ஓடுகிறது. இங்குதான் அரசில் கிழார் என்னும் புலவர் வாழ்ந்தார் எனப்படுகிறது. திருஞான சம்பந்தரின் மூன்றாம் திருமுறை 19 “திரு அம்பர்த் திருப்பெருங்கோயில் பதிகத்தின்” முதல் பாடலில் வரும்
'அரிசில் அம் பெருந்துறை அம்பர் மாநகர்'
என வரும் பாடலால் உணரலாம். இந்த அரிசிலாற்றங்கரையில் உள்ள அம்பர் நகரில் அமர்ந்து சிறப்பாக ஆண்ட சங்க கால மன்னன்தான் அம்பர் கிழான் அருவந்தை. பின்னாளில் அருவந்தையையின் பெயரை உடைய மற்றொரு சிற்றரசன் திவாகர நிகண்டை உருவாக்கினான் என்றும் அறிஞர்கள் கூறுவார்கள். அந்த நிகண்டின் ஒவ்வொரு பெர்யர்த் தொகுதியிலும் அமைந்த செய்யுள்கள் அவனது புகழை விவரிக்கின்றது.
அருவந்தையின் ஊரும் பெரும் கி.பி எட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகும் சிறந்து விளங்கியது என்று அறிய முடிகிறது. அருவந்தை ஈகையில் மட்டுமல்ல வீரத்திலும் சிறந்து விளங்கிய ஒரு சிற்றரசன் ஆவான். சோழர்களின் படை பிரிவுகள் ஒன்றை பொறுப்பேற்று வழிநடதியவன் தான் அருவந்தை.
அருவந்தை குறித்து நிறைய தகவல்கள் கிடைக்காமல் இருப்பது வருத்தத்துக்குரியது என்றாலும், நான் முன்னமே கூறியது போல சில கல்வெட்டுகளும், புறநானூற்றுப் பாடலுமே அருவந்தையின் புகழை பேசுவதற்கு தற்போதைக்கு நமக்கு கிடைத்துள்ளது என்பது ஆறுதலான விஷயம்.
இன்று நீங்கள் கேட்ட அருவந்தை பற்றிய சம்பவங்கள் உங்களுக்கு பலன் தந்திருக்கும் என்று விதைகள் பதிப்பகம் நம்புகிறது. மற்றுமொரு வேளிர் அரசன் குறித்த பதிவுடன் அடுத்த வாரமும் வருகிறோம். அதுவரை காத்திருங்கள். நீங்கள் கேட்ட அம்பர் கிழான் அருவந்தை குறித்து உங்கள் பிள்ளைகளுக்கும், வளரும் தலைமுறைக்கும் சொல்லுங்கள். சங்ககால வேளிர்களை அவர்கள் அறிந்து கொள்வது எதிர்கால தமிழகத்தை கட்டமைக்கும் செயலுக்கும், மற்றவர்களுக்கு உதவும் இதயத்தை பெறுவதற்கும் உதவும் என்று உறுதியாக நம்புகிறோம்.
மற்றுமொரு சங்ககால வேளிர் மன்னன் குறித்த பதிவில் உங்களை எல்லாம் விரைவில் சந்திக்க வருகிறேன்.

Comments