நீட் (NEET) வேண்டாம்! நியாயம் வேண்டும் - (விழிப்புணர்வு ஆய்வு கட்டுரை)

📌 Topic Summary:

மாநிலப் பாடத்திட்டத்தில் 100% மதிப்பெண் எடுத்தாலும் மருத்துவக் கனவு ஏன் சிதைகிறது? 

'ஒரே நாடு ஒரே தேர்வு' என்ற முழக்கத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் ஒரு குறிப்பிட்ட தேசியப் பாடத்திட்டத்தின் (NCERT) ஆதிக்கம் என்ன? 

தகுதி என்ற பெயரில் கிராமப்புற மாணவர்கள் திட்டமிட்டு வெளியேற்றப்படுகிறார்களா?" 

"கல்வி என்பது ஒரு சேவைத் துறையா? அல்லது பல்லாயிரம் கோடிகள் புழங்கும் கார்ப்பரேட் சந்தையா? 

பள்ளிப் படிப்பையே பயனற்றதாக்கி, லட்சக்கணக்கான ரூபாய் கட்டணம் வசூலிக்கும் தனியார் பயிற்சி மையங்களை மட்டுமே சார்ந்திருக்க வைக்கும் இந்தத் தேர்வு முறையின் அப்பட்டமான வணிகப் பின்னணி என்ன?


   

நீட் (NEET) வேண்டாம்! நியாயம் வேண்டும் 

(விழிப்புணர்வு ஆய்வு கட்டுரை)


இந்திய மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதாகக் கூறி, நடுத்தர மற்றும் ஏழை மாணவர்களின் கனவுகளைத் தகர்த்து, ஒரு சில பெருநிறுவனங்களின் கல்லா கட்டும் கருவியாக மாற்றப்பட்டிருக்கிறது "நீட்" (NEET) தேர்வு. இதுவே அப்பட்டமான உண்மை. 


அண்மைக் காலங்களில் வெளிச்சத்திற்கு வந்துள்ள வினாத்தாள் கசிவுகள், நீதிமன்றத்தின் மெத்தனப் போக்குகள் மற்றும் பயிற்சி மையங்களின் போலி விளம்பரங்கள் ஆகியவை இந்தியக் கல்வி முறையின் ஆகப்பெரும் வீழ்ச்சியை அம்பலப்படுத்தியுள்ளன.


மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே இந்த முறைகேடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான விரிவான சமூக-அரசியல் மற்றும் சட்டப்பூர்வ அலசலே இது. எதையும் கடந்து போகாமல் முழுமையாக வாசியுங்கள்.


தேசத்திற்கு நீட் தேர்வு ஏன் தேவையற்றது?


மத்திய அரசு நீட் தேர்வை ஒற்றை இலக்காக முன்வைக்கும் போது, அது இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் இழைக்கப்படும் அநீதி என்பதைப் பொதுமக்கள் உணர வேண்டும். நீட் தேர்வை அறிமுகம் செய்தது 2013-ல் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம். அதை அரசியலமைக்கு எதிரானது என்று கூறி உச்சநீதிமன்றம் தடை செய்தது. ஆனால் 2016-ம் ஆண்டில் மத்தியில் ஆட்சியில் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, குறிப்பாக பாரதிய ஜனதா அரசாங்கம் தான் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டு நீட்டுக்கு எதிரான தடையை நீக்கியது? அதற்குப் பின் இன்றுவரை நிகழ்ந்த சம்பவங்கள் தான் இன்று ஜந்தர் மந்தரில் நிகழும் போராட்டத்துக்கு முக்கிய காரணமாக அமைந்தது. சரி நீட் ஏன் வேண்டாம்?. தேசிய தேர்வு முகமை என்ற அமைப்பின் கெடுபிடிகள், சி.பி.எஸ்.சி அமைப்புடனாக இணைந்து அவை மேற்கொள்ளும் திரைமறைவு வேலைகள் பற்றிய புரிதல் தான் இங்கே முக்கியம். முதலில் ஏன் நீட் வேண்டாம் என்று பார்த்து விடுவோம்.


  • மாநில உரிமைகள் பறிப்பு: நீட் தேர்வு முறை நேரடியாகவே மாநில உரிமைகளை பறிக்கிறது. கல்வி என்பது அரசியலமைப்பின் பொதுப் பட்டியலில் உள்ளது. மாநில அரசுகள் தங்களின் சொந்த உள்கட்டமைப்பு மற்றும் வரிப்பணத்தில் கட்டும் மருத்துவக் கல்லூரிகளில், மாணவர்களைச் சேர்க்கும் உரிமையை மத்திய தேர்வு முகமைக்கு மாநிலங்கள் தாரை வார்ப்பது என்பது அரசியலமைப்பு வலியறுத்தும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.

  • இதைக் காரணம் காட்டித்தான் உச்சநீதிமன்றம் நீட் தேர்வுக்கு தடை விதித்தது. தனியார் நிறுவனங்கள் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மருத்துவ கல்வி, இடஒதுக்கீட்டில் முறைகேடுகளும், பண வர்தனைகளும் சட்டத்துக்கு புறம்பாக இருப்பதாக கூறி அதை முறைப்படுத்தி தேசிய தேர்வு முகமை மூலம் ஒரே தேர்வு முறையை கொண்டு வர உத்தரவிடுகிறது.

  • யார் தூண்டுதலில் தனியார் கல்லூரிகள் வழக்கு தொடுத்தன? இதுதான் இங்கே நடந்த அதிகார சூழ்ச்சி. இன்றும் தமிழகத்தில் தனியார் பள்ளி கூட்டமைப்பு ஆட்சியாளர்களுக்கு ஜால்ரா போட்டு பேட்டி கொடுப்பது, அறிக்கை கொடுப்பதை பார்க்கிறோம் அல்லவா? அதே போலத்தான் அன்று தனியார் கல்லூரி கூட்டமைப்புகள் என்ற ஒரு அமைப்பை வழக்கு தொடுக்க வைத்து, அதற்கு தீர்வு காண அப்போதைய ஒன்றிய அரசாங்கம் நீதி மன்றத்தில் முன் வைத்த மறுசீரமைப்பு மூலம் ஒற்றைத் தேர்வு முறை என்ற வாதம் உச்சநீதிமன்றத்தால் ஏற்கப்பட காரணம். 

  • அவசர அவசரமாக நீட் மசோதா பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதற்கு அத்தனை அவசரம் காட்டியிருக்க தேவையே இல்லாத நிலையில், தங்கள் உத்தரவுக்கு கீழ்ப்படிந்த அமைப்புகளுக்கு நலம் கொடுக்கும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டே ஒன்றிய அரசு இதை நிறைவேற்றியது என்பதே உண்மை. 

  • நீட் தேர்வு முழுமையாக CBSE பாடத்திட்டத்தின் அதாவது NCERTபாட புத்தகங்களை உள்ளடக்கிய தேர்வு முறை. தேசம் முழுமைக்கும் பொதுவான தேர்வு முறை என்ற அம்சத்தையே இது கேள்விக் குறியாக்குகிறது. எப்படி? விரிவாக கீழே பார்க்கலாம் வாருங்கள்.


நீட் (NEET) தேர்வின் கட்டமைப்பு, அதில் சிபிஎஸ்இ (CBSE) பாடத்திட்டத்தின் ஆதிக்கம் மற்றும் இதனால் மாநிலப் பாடத்திட்ட (State Board) மாணவர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்த முழுமையான மற்றும் தெளிவான விளக்கம் கீழே இருக்கிறது முழுமையாக வாசியுங்கள்:

1. நீட் தேர்வு எவ்வாறு வடிவமைக்கப்படுகிறது? (How NEET is Framed)

தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) வழிகாட்டுதலின்படி, தேசிய தேர்வு முகமையின் (NTA) மூலம் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 

  • தேர்வு முறை: இது பேனா மற்றும் தாள் (Pen-and-Paper / OMR Sheet) முறையில் நடத்தப்படும் ஒரு போட்டித் தேர்வாகும்.

  • வினாக்கள் வடிவமைப்பு: மொத்தம் 200 வினாக்கள் MCQ-க்கள் அடிப்படையில்  கேட்கப்படும். அதில் மாணவர்கள் 180 வினாக்களுக்கு 3 மணி நேரம் 20 நிமிடங்களில் பதிலளிக்க வேண்டும். இயற்பியல் (45), வேதியியல் (45), தாவரவியல் (45) மற்றும் விலங்கியல் (45) என வினாக்கள் பிரிக்கப்பட்டிருக்கும்.

  • இந்த வினாக்கள் அனைத்துமே NCERT புத்தகங்களில் இருக்கும் பாடங்களை அடிப்படையாக கொண்டவை என்பதுதான் இங்கே முக்கியமான விஷயம். எனில் ஒன்றிய அரசு யாருக்கு சாதகமாக இதை செய்கிறது என்ற கேள்வி தானாகவே எழுகிறது? இதில் எங்கிருந்து பொதுவான ஒற்றைத் தேர்வு முறை வரும் என்பதே நம் வாதம். இதை கவனிக்காத நீதிமன்றங்களுக்கு எதைக் காட்டினால் புரியும் என்பதே நீட்டுக்கு எதிரான மாணவர்களின் கேள்வி? 

  • நீட்-டில் இருக்கும் அடுத்த திருட்டுத்தனம் என்ன தெரியுமா? எதிர்மறை மதிப்பெண் (Negative Marking): ஒவ்வொரு சரியான பதிலுக்கும் +4 மதிப்பெண்களும், தவறான பதிலுக்கு -1 மதிப்பெண்ணும் வழங்கப்படும். இந்த நெகடிவ் மதிப்பெண் முறை தான் மாணவர்களை கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. 

  • இது தகுதிக்கான தேர்வு என்பதை விட, மாணவர்களை "நீக்குவதற்கான (Elimination)" தேர்வாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உயர் வகுப்பினர், வசதி படைத்த மாணவர்கள், ஒன்றிய பாடத்திட்டத்தை செயல்படுத்தும் தனியார் பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவராகலாம் என்ற கேவலமான கொள்கை ஒளிந்திருப்பதை நீதிமன்றம் கவனிக்கவில்லையா? 

  • அல்லது இதைக் குறித்து ஒன்றிய அரசை கேள்வி கேட்க நீதி மன்றத்துக்கு குரல் இல்லையா? 

  • அல்லது இதை நீதி மன்றம் அங்கீகரிக்கிறதா? இல்லை இதுதான் ஒரே நாடு! ஒரே தேர்வு என்ற ஒன்றிய அரசின் நேர்மைக்கு நீதிமன்றம் தரும் அனுமதியா? 

  • இந்த கேள்வியைத் தான் மாணவர்கள் இப்போது கேட்கிறார்கள்? பதில் சொல்ல வேண்டிய நீதிமன்றமும், ஒன்றிய அரசாங்கமும் ஜந்தர் மந்தரில் அடிக்கும் அந்தர் பல்டிகளை பார்க்கும் போது உண்மையாகவே வேதனை மட்டுமே மிஞ்சுகிறது. 

2. சிபிஎஸ்இ (CBSE / NCERT) அமைப்பின் ஆதிக்கம் என்ன?

ஒன்றிய அரசு நீட் தேர்வு அனைத்து மாணவர்களுக்கும் பொதுவானது என்று கூறினாலும், நடைமுறையில் இந்தத் தேர்வு முற்றிலும் சிபிஎஸ்இ 11 மற்றும் 12-ஆம் வகுப்பு NCERT பாடப்புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்படுகிறது.

  • நேரடித் தொடர்பு: நீட் தேர்வின் உயிரியல் (Biology) மற்றும் வேதியியல் (Chemistry) வினாக்களில் 85% முதல் 90% வரையிலான கேள்விகள், NCERT புத்தகங்களின் வரிகளில் இருந்தும், அதில் உள்ள அட்டவணைகளிலிருந்தும் நேரடியாகக் கேட்கப்படுகின்றன.

  • CBSE மாணவர்களுக்கு மட்டுமே சாதகம்: சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களின் பள்ளிப் பொதுத் தேர்வுக்குப் படிக்கும் அதே பாடப் புத்தகமே நீட் தேர்விற்கும் உபயோகிக்கப்படுகிறது என்பதால் அதிகம் செலவழித்து கோச்சிங் செல்லத் தேவையில்லை. அவர்கள் தனியாக எந்தப் புதிய பாடத்தையும் படிக்கத் தேவையில்லை. இது அவர்களுக்கு இயல்பாகவே ஒரு மிகப்பெரிய சாதகமான சூழலை உருவாக்குகிறது.

  • ஆனால், மாநில கல்வி முறையில் இருக்கும் மாணவர்கள் இதற்காக கோச்சிங் செல்ல நிர்பந்திக்கப்படுகிறார்கள். போகாத மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தும் பலனில்லை. இதுவே யதார்த்தம், உண்மை.

3. மாநிலப் பாடத்திட்ட (State Board) மாணவர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள்?

ஒரே தகுதித் தேர்வு என்ற கொள்கை, இந்தியாவில் நிலவும் கல்விப் பொருளாதாரப் பாகுபாடுகளைக் கணக்கில் கொள்ளாததால், மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். இதையெல்லாம் இங்கே கடவுளர்கள் நிலையில் இருக்கும் நீதிமான்கள் கவனித்து நியாயம் கேட்பார்களா என்றால்? மாட்டார்கள். அதைக் குறித்து பேசவோ அது குறித்த மனுக்களை விசாரிக்கவோ கூட இந்த அதிகாரம் இருந்தும் பயன்படுத்தாத சட்டமேதைகளுக்கு நேரமிருக்காது! விருப்பம் இருக்காது! ஐயோ அவர்கள் அமர்ந்திருக்கும் நாற்காலிக்கு கூட மூட் இருக்காது. ஆனால் நீதிமன்றங்கள் எதையெல்லாம் ஒன்றிய அரசுக்கும், CBSE கல்வி நிறுவனங்கள், நீட் கோச்சிங் சென்டர்களுக்கு சாதகமாக செயல்படும் வண்ணம் நடக்கின்றன என்று பார்க்கலாமா?

  • பாடத்திட்ட முரண்பாடு (Curriculum Mismatch): ஒவ்வொரு மாநிலமும் தங்களின் பிராந்தியத் தேவைகள் மற்றும் வரலாற்றுப் பின்னணிக்கு ஏற்ப சொந்தமாகப் பாடத்திட்டங்களை (State Board Syllabus) வைத்துள்ளன. இந்தத் தேர்வுகளில் விளக்கமாக எழுதுவதற்கும், மாநிலத் தேவைகளுக்கும் முக்கியத்துவம் தரப்படும். ஆனால், நீட் தேர்வு முற்றிலும் NCERT-ஐ மட்டுமே பின்பற்றுவதால், மாநிலப் பாடத்திட்டங்களில் முதலிடம் பிடிக்கும் மாணவர்கள் கூட நீட் தேர்வில் தோல்வியடையும் நிலை ஏற்படுகிறது.

  • மொழிப் பெயர்ப்பு குளறுபடிகள் (Language Barrier): நீட் தேர்வு தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்பட்டாலும், வினாக்கள் முதலில் ஆங்கில NCERT புத்தகங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு, பின்னர் பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப் படுகின்றன. இந்த மொழிபெயர்ப்புகளில் ஏற்படும் பிழைகள் மற்றும் கடினமான கலைச்சொற்கள் (Scientific Terms) அரசுப் பள்ளி மாணவர்களைப் பெரும் குழப்பத்திற்கு உள்ளாக்குகின்றன.

  • பயிற்சி மையங்களின் கட்டாயம்: மாநிலப் பாடத்திட்டப் பள்ளிகளில் பொதுவாகப் போட்டித் தேர்வுகளுக்கான "Conceptual Application" எனப்படும் சூத்திரங்களைப் பயன்படுத்தி கணக்கிடும் முறைகள் (குறிப்பாக இயற்பியல் மற்றும் வேதியியலில்) கற்பிக்கப் படுவதில்லை. இதனால், லட்சக்கணக்கில் பணம் கொடுத்து தனியார் பயிற்சி மையங்களுக்குச் செல்ல முடியாத ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவு அடியோடு சிதைக்கப்படுகிறது.

  • இதில் ஏதாவது ஒன்றைக் குறித்து இதுவரை இந்த நீதிமன்றங்கள் பேசி இருக்கின்றனவா? குறைந்தபட்சம் கவலைப்பட்டு இருக்கின்றனவா? என்றால் இல்லை. இதில் இவர்கள் சட்டப்படி, அரசியலமைப்பின்படி, சாட்சிகள் மற்றும் ஆவணங்கள் படித்தான் நடந்து கொள்கிறார்களாம். அதன் வழியாகத்தான் உத்தரவுகளை பிறப்பிக்கிறார்களாம்.  



4. நீட்- மற்றும் சிபிஎஸ்இ கூட்டணி நியாயமானதா? இதன் பின்னணி என்ன?

ஒரு நாட்டின் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு என்பது, நாட்டில் உள்ள அனைத்து கல்வி வாரியங்களின் (State Boards) பொதுவான அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அதை விடுத்து, மத்திய அரசின் ஒரு குறிப்பிட்ட வாரியத்தின் (CBSE) பாடப்புத்தகத்தை மட்டுமே தகுதியாக வைப்பது அப்பட்டமான பாகுபாடாகும்.

இதன் பின்னணியில் உள்ள விமர்சனங்கள்:

  • சமூக நீதி மற்றும் கூட்டாட்சித் தத்துவப் பறிப்பு: இந்திய அரசியலமைப்பின்படி கல்வி என்பது பொதுப் பட்டியலில் (Concurrent List) உள்ளது. மாநில அரசுகள் தங்களின் சொந்த வரிப்பணத்தில் கட்டும் மருத்துவக் கல்லூரிகளில், அந்தந்த மாநில மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க முடியாதபடி இந்தத் தேர்வு தட்டிப் பறிக்கிறது. 

  • இது கிராமப்புறங்களில் உள்ள மருத்துவ உள்கட்டமைப்பை நேரடியாகப் பாதிக்கிறது, ஏனெனில் நகர்ப்புற பயிற்சி மையங்களில் படித்து வரும் மாணவர்கள் கிராமப்புறங்களில் சேவை செய்ய விரும்புவதில்லை.

  • கோச்சிங் மாஃபியாக்களின் வளர்ச்சி: பள்ளிக் கல்வி முறையை இந்தத் தேர்வு முற்றிலும் பயனற்றதாக்கி இருக்கிறது என்பதே உண்மை. இன்று நகரங்களில் இயங்கும் கார்ப்பரேட் பயிற்சி மையங்கள், மாணவர்களின் மதிப்பெண்களையும் படங்களையும் கோடிக்கணக்கில் விலைக்கு வாங்கி போலி விளம்பரங்களைச் செய்கின்றன. 

  • கல்வி என்பது ஒரு சேவைத் துறையிலிருந்து மாறி, பல்லாயிரக்கணக்கான கோடிகள் புழங்கும் ஒரு கார்ப்பரேட் வர்த்தகமாக மாறியுள்ளதன் வெட்கக்கேடான பின்னணி இதுவே ஆகும்.

  • எதை சரி செய்கிறோம் என்று இந்த நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு பீத்திக் கொண்டதோ அதே இங்கே ஆட்டம் காணுவது அதற்கு தெரியுமா என்றால்? தெரியும்.

  • ஆனால் அது குறித்து நாங்கள் முடிவெடுக்க முடியாது என்று அமர்வில் இருக்கும் நீதிபதிகள் பொறுப்பே இல்லாமல் பதில் சொல்லிவிட்டு போய் விடலாம். 

  • அவர்களை இந்தியாவில் இருக்கும் எந்த குடிமகனும் கேள்வி கேட்கவும் முடியாது. அவர்கள் மீது பொறுப்பற்ற நீதி வழங்கியதாக வழக்கும் தொடுக்க முடியாது. இதுவே இந்திய அரசியல் சாசனத்தின் கேடு மிக்க கோட்பாடு. 

இவ்வாறாக பல ஓட்டையுடன் இருக்கும் இந்த நீட் என்ற பானையை தூக்கிக் கொண்டு வந்து நீட்டும் ஒன்றிய அரசுக்கு ஓட்டு போட்டு மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுத்ததன் விளைவை இன்று இந்த நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது. நீட்-டை வைத்து இங்கே தனியார் பள்ளிகளும், CBSE பாடத்தை உயர்த்திப் பிடிக்கும் பள்ளிகளின் உரிமையாளர்களும், ஆகாஷ், ALLEN, Resonance  போன்ற தனியார் கோச்சிங் சென்டர்களும் ஆண்டுதோறும் 5000 முதல் 50000 கோடி வரை இலாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். எப்படி தெரியுமா?விரிவாக பார்க்கலாம் வாருங்கள். 

முதலில் இந்தியாவில் இருக்கும் இளநிலை மருத்துவ பட்டப்படிப்பு-க்கான நிர்ணயிக்கப்பட்ட இட எண்ணிக்கை விவரங்களை தெரிந்து கொள்வோம். அதன் பின் இதில் ஆண்டு தோறும் நிகழும் கோடிக்கணக்கான ருபாய் முறைகேடுகளை பார்க்கலாம்.

5. இட எண்ணிக்கை vs பயிற்சி மையங்களின் போலிச் சேர்க்கை முறைகேடுகள் (Coaching Forgeries)


இந்திய மருத்துவக் கவுன்சிலின் தரவுகளின்படி, நாடு முழுவதும் உள்ள இளங்கலை மருத்துவ இடங்களின் (MBBS Seats) எண்ணிக்கை சுமார் 1.1 லட்சம் மட்டுமே. இதில் குறிப்பிட்ட சதவீதத்தை ஒவ்வொரு மாநிலமும் மத்திய ஒதுக்கீட்டுக்கு என்று ரிசர்வ் செய்ய வேண்டும். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதுகிறார்கள். 


எப்படி நடக்கிறது இந்த மோசடி?

  • ஏமாற்று விளம்பரங்கள்: முன்னணி பயிற்சி மையங்கள் தங்களிடம் சேரும் அத்தனை மாணவர்களுக்கும் இடம் உறுதி என்பது போன்ற போலிப் பிம்பத்தை விளம்பரங்கள் மூலம் உருவாக்குகின்றன. இது அப்பட்டமான நுகர்வோர் ஏமாற்று வேலை (Consumer Fraud) ஆகும்.

  • புகைப்பட ஃபோர்ஜரி (Forgery): மாநில அளவில் அல்லது தேசிய அளவில் முதலிடம் பெறும் ஒரு மாணவனின் புகைப்படத்தை, இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் (Allen, Akash, Resonance போன்றவை) அனைத்தும் தங்களின் சொந்த மாணவர் என்று விளம்பரம் செய்கின்றன.

  • ஒரு மாணவனுக்குப் பல லட்சங்களைக் கொடுத்து அவனது வெற்றிய விலைக்கு வாங்கி, அதை வைத்துப் பல்லாயிரக்கணக்கான பெற்றோர்களைத் தங்களின் மையங்களை நோக்கி இழுக்கிறார்கள்.

  • பினாமி நிறுவனங்களின் முதலீடுகள்: இந்த கோச்சிங் மாஃபியாக்களுக்குப் பின்னால் பெரும் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் பினாமி நிறுவனங்களின் (Benami Entities) கறுப்புப் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுகள் வலுவாக உள்ளன.

  • கல்வி நிறுவனங்கள் என்ற பெயரில் இயங்கும் இந்த மையங்கள் மட்டுமே, ஆண்டுக்கு ₹3,000 முதல் ₹5,000 கோடி வரை லாபம் ஈட்டும் கார்ப்பரேட் நிறுவனங்களாகச் செயல்படுகின்றன.


இதில் இருக்கும் இன்னும் ஒரு விஷயம் குறித்து உங்களுக்குத் தெரியுமா? சொல்கிறேன் கவனமாக வாசியுங்கள். 


2021-ஆம் ஆண்டு, கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆன்லைன் கல்வி அலை உச்சத்தில் இருந்தபோது, பைஜூஸ் என்ற நிறுவனம் செயல்பட்டதாய் உங்களுக்கு நினைவிருக்கிறதா? இப்போது அந்த நிறுவனம் எங்கே? பைஜூஸ் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடி, முறைகேடு புகார்கள் மற்றும் கடன் சுமை காரணமாக திவாலாகும் நிலையை (Insolvency/Bankruptcy) எட்டியுள்ளது. அதன் சந்தை மதிப்பு $22 பில்லியன் டாலரிலிருந்து பூஜ்ஜியமாக சரிந்துள்ளது என்பதே தற்போதைய தரவுகள் சொல்லும் உண்மை. 


இதே பைஜூஸ் நிறுவனம் முதலீட்டாளர்களின் பணத்தை வைத்துக் கொண்டு சந்தையில் அக்ரசிவ் விளம்பரங்கள் மூலம் ஒரு போலி பிம்பத்தை உருவாக்கியது என்பதே உண்மை. பல்லாயிரக்கணக்கான நடுத்தரக் குடும்பங்களை இஎம்ஐ (EMI) கடன்களில் தள்ளி, ஆன்லைன் கோர்ஸ்களை விற்க கட்டாயப்படுத்தியதாக அதன் மீது கடுமையான புகார்கள் உள்ளன. சரி விஷயத்துக்கு வருவோம்.


இந்த பைஜுஸ் நிறுவனம் 1988-ஆம் ஆண்டு ஜே.சி. சவுத்ரி (J.C. Chaudhry) என்பவரால் தொடங்கப்பட்ட ஆகாஷ்  ஆஃப்லைன் பயிற்சி மையத்தை சுமார் $950 மில்லியன் டாலருக்கு (அதாவது சுமார் ₹7,000 கோடிக்கு) வாங்கி கையகப்படுத்தியது. இந்த ஒப்பந்தத்தின்படி, ஆகாஷ் நிறுவனம் பைஜூஸின் ஒரு துணை நிறுவனமாக (Subsidiary) மாற்றப்பட்டது என்ற உண்மை உங்களில் யாருக்கேனும் தெரியுமா? திவாலான பைஜுஸ் நிறுவனம் இன்றும் ஆகாஷ் பயற்சி மையத்தின் 30% பங்குகளை வைத்திருக்கிறது. பிற அமெரிக்க கடன் நிறுவனங்கள் மற்றும் மணிப்பால் குழுமத்தின் (Manipal Group) ரஞ்சன் பாய் மற்றும் பிளாக்ஸ்டோன் (Blackstone) போன்ற பெரிய நிறுவனங்கள் ஆகாஷில் பெருமளவு முதலீடு செய்து, அதன் நிர்வாகப் பங்குகளை வைத்திருக்கின்றன.


ஆண்டுக்கு இந்த நிறுவனம் சுமாராக 1000 முதல் 2000 கோடி வரை நீட் பயற்சி என்ற பெயரில் வருவாய் ஈட்டிக் கொண்டிருக்கிறது. திவாலான ஒரு நிறுவனம் அதிகாரப் பூர்வமாக வேறு பெயரில் செயல்பட்டு ஆண்டுக்கு பெருமளவு வருவாயை ஈட்டிக் கொண்டிருப்பது முறைகேடு என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது? என்று உச்சநீதி மன்றத்தில் இருக்கும் அரசியல் சாசன அமர்வு விளக்குமா? முறைகேடுகளை களைய, கோடிக்கணக்கான கேபிடேஷன் கட்டணங்களை குறைக்க என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொண்டு தீர்ப்பு வழங்கிய நீதிபதி தாவே தலைமையிலான இந்த அமர்வுக்கு இந்த மோசடிகளை குறித்து யோசித்து தீர்ப்பெழுத தெரியவில்லையா? அல்லது ஒன்றிய அரசின் அவசரத்தை மட்டுமே பிரதானமாக எண்ணி தீர்ப்பு கொடுத்தார்களா? ?


எங்கிருந்து இந்த விவகாரம் நீதிமன்றத்தின் கோமாளித் தனத்தில் முடிந்தது என்று தெரிந்து கொள்வது உங்களுக்கு அவசியமானது என்று கருதுகிறேன்.


6. நீதித்துறையின் மெத்தனமும் தற்போதைய தோல்விகளும் (The Failure of the Justice System)

சமீபத்திய நீட் முறைகேடுகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் மற்றும் அதன் அமர்வுகள் செயல்பட்ட விதம், நீதியின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது என்பதே உண்மை. ஆறு நீதிபதிகள் சேர்ந்து இரண்டு நீதிபதிகள் தடை செய்த நீட்-டுக்கு உயிர் கொடுத்து ஒன்றிய அரசின் கரங்களில் தாரை வார்த்தார்கள். எப்படி? விரிவாக வாசியுங்கள் கீழே:


2013-ம் ஆண்டில் ஒன்றியத்தை ஆண்டு கொண்டிருந்த மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு தான் நீட் தேர்வை அறிமுகம் செய்தது. அதற்கு எதிரான வழக்கை விசாரித்த மூன்று பேர் கொண்ட உச்ச நீதிமன்ற பென்ச், நீட் அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறி அரசின் சட்ட வடிவத்துக்கு தடை விதித்தது. 


2013-ம் ஆண்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் திரு. அல்தமஸ் கபீர். இவரது தலைமையிலான அமர்வில்தான் நீட் வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு வழக்கும் நடந்தது. இந்த அமர்வில் இருந்த மற்ற இரு நீதிபதிகள் திரு. விக்கிரமஜித் சென், மற்றும் அனில்.ஆர். தவே. இந்த பெஞ்ச் வழங்கிய தீர்ப்பின் விவரம் என்ன தெரியுமா? தலைமை நீதிபதி திரு. அல்தமஸ் கபீர் மற்றும் விக்ரமஜித் சென் இருவரும் நீட் அரசியல் சாசனத்தின் படி கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்று தீர்ப்பு எழுதினார்கள். ஆனால் அமர்வில் இருந்த மற்றொரு நீதிபதியான அனில்.ஆர். தவே மட்டும் நீட் அவசியம் என்று தீர்ப்பு எழுதினார். பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பே செல்லும் என்பதால் நீட்-டுக்கு தடை விதிக்கப்பட்டது.


ஆனால் 2014-ம் ஆண்டுக்கு முன் குஜராத் முதலமைச்சராக பதவியிலிருந்த தற்போதைய பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் 2013-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் திரு.மன்மோகன்சிங்-குக்கு எழுதிய கடிதத்தில், "மத்திய அரசு கொண்டு வரும் நீட் தேர்வு என்பது மாநில அரசுகளின் கல்வி உரிமைகளைப் பறிக்கும் செயல் (Anti-Federal). குஜராத் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் கிராமப்புற மாணவர்களை இந்தத் தேர்வு கடுமையாகப் பாதிக்கும். எனவே, குஜராத் மாநிலத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்" என்று வாதிட்டு இருந்தார். 


களம் மாறியது தேர்தல் முடிந்து திரு. நரேந்திரமோடி அவர்கள் இந்தியாவின் பிரதமராக மாறியிருக்கிறார். 2016-ல் நீட் தேர்வுக்கு எதிரான தடையை எதிர்த்து ஒன்றிய அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்கிறது. அதில் பல்வேறு வாக்குறுதிகள், திருத்தங்கள் கொண்டு வரப்படுகிறது. குறிப்பாக "மருத்துவக் கல்வியில் உள்ள ஊழலையும், தனியார் கல்லூரிகளின் முறைகேடுகளையும் ஒழிக்க ஒரே நாடு, ஒரே தேர்வு (One Nation, One Exam) என்ற கொள்கையை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசு தயாராக இருப்பதாகவும், அதனால் நீட் தேர்வுக்கு எதிரான தடையை நீக்கி புதிய சட்ட மசோதாவை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும், ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கிறது.


உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அப்போது பதவி வகித்தவர் திரு. டி.எஸ். தாக்கூர். அரசியல் சாசன நடைமுறைப்படி மறுசீராய்வு மனு பட்டியலிடப்படும் போது, ஏற்கனவே அதில் இருந்த நீதிபதிகள் கொண்ட அமர்வை அமைக்க வேண்டும் என்ற பழைய பஞ்சாங்க விதியை கையில் எடுத்தார் நீதிபதி டி.எஸ். தாக்கூர். அதன்படி பழைய வழக்கில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி திரு. அல்தமஸ் கபீர் மற்றும் விக்ரமஜித் சென் ஆகியோர் ஓய்வு பெற்றுவிட்ட காரணத்தால், வழக்கில் எதிர் தீர்ப்பு கொடுத்த அனில்.ஆர்,தாவே தலைமையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு இதை பட்டியலிட்டு உத்தரவிடுகிறார். 


இதை அப்போதே அரசியல் பார்வையாளர்களும், சமூக ஆர்வலர்களும் விமர்சித்தார்கள். நீட்டுக்கு எதிராக ஏற்கனவே தீர்ப்பெழுதிய ஒரு நீதிபதி தலைமையில் அரசியல் சாசன அமர்வு மறுசீராய்வு மனுவை விசாரிக்கும் என்ற முற்றிலும் மாறுபட்ட ஒருதலைப்பட்சமான முடிவாகவே இது கருதப்பட்டது. ஒன்றிய அரசு கொடுத்த முறைகேடுகளை ஒழிப்போம்! ஒரே நாடு! ஒரே தேர்வு என்ற நடைமுறை தனியார் மருத்துவக் கல்லூரிகளை கட்டுப்படுத்தி, கட்டண முறைகேடுகளை தடுக்க உதவும் என்றெல்லாம் அள்ளிவிட்ட வசனங்களை அப்படியே ஏற்றுக் கொண்ட அரசியல் சாசன அமர்வு, 2013-ல் நீட்டுக்கு விதித்த தடையை அகற்றியது. 


இதே போலத்தான் நீதிபதி அனில். ஆர். தாவே முன்பும் தீர்ப்பு எழுதி இருந்தார். இந்த தீர்ப்பை அடுத்து உடனே புதிய சீர்திருத்தங்களுடன் நீட் மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து, நிறைவேற்றி நடைமுறை படுத்தியது ஒன்றிய அரசு. அதற்கு பின் நீட் அழுத்தம் காரணமாக மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்தன. கோச்சிங் சென்டர்கள் பெருகின. 




தமிழகத்தில் தங்கை அனிதா மரணித்து முதலில் நீட்- தேர்வுக்காக முதல் போராட்ட விதையை ஊன்றினார். அன்று முதல் இன்று வரை நீட் தேர்வால் மன அழுத்தம், பண நெருக்கடி, கோச்சிங் சென்டர்கள் தரும் டார்ச்சர் என்று மருத்துவ கனவுகளுடன் இருந்த இளம் மாணவர்கள் இறக்கத் தொடங்கினார்கள். 


இந்திய ஊடகங்கள் மற்றும் மருத்துவ இதழ்களின் சமீபத்திய பகுப்பாய்வின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் சுமார் 93 நீட் தேர்வு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2025 மற்றும் 2026-ம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் எண்ணிக்கை 46. நடப்பாண்டில் நீட்- தேர்வு முறைகேடுகளால் பாதிக்கப்பட்டு மன அழுத்தம் காரணமாக இறந்த மாணவர்கள் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக 5. ஆனால் இறந்தவர்கள் 20 பேர். 


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மற்றும் அரசியல் சாசன அமர்வில் இருந்து தீர்ப்பு எழுதிய இந்த ஆறு நீதிபதிகளும் தான் இந்தியாவில் சிறந்த மருத்துவர்களாக வரவேண்டிய சுமார் 100 மாணவர்கள் இறப்புக்கு காரணம். இவர்களை கேள்வி கேட்கவோ, விமர்சிக்கவோ, ஏன் இவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கவோ இந்த நாட்டில் உரிமை இல்லை. இவர்களை தண்டிக்க சட்ட புத்தகத்தில் இடமும் இல்லை. இதற்கு பெயர் தான் ஜனநாயகம். 


சரி முந்தைய காலத்தில் நிகழ்ந்த தவறுகளை சரி செய்ய இன்று இருக்கும் நீதிபதிகளாவது முயற்சி செய்வார்களா என்றால்….. அதற்கு வாய்ப்பே இல்லை என்ற ரீதியில் தான் அவர்கள் செயல்பாடுகள் இருக்கின்றன. ஓய்வுக்கு பின் கிடைக்கும் சுகபோக வாழ்வு, பதவி, அதிகாரத்துக்கு விலை போகும் நீதிபதிகளை தான் கடந்த 12 ஆண்டுகளாக நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.


ஒன்றிய அரசின் எல்லா செயல்களையும் நியாயப்படுத்தி கருத்துக் கூறுவதை மட்டுமே நீதிமன்றங்கள் செய்து கொண்டிருக்கின்றன. 


6.1 2026 தேர்வு ரத்து மற்றும் குளறுபடிகள்:


2026 மே 3 அன்று நடைபெற்ற நீட் தேர்வில் மீண்டும் வினாத்தாள் கசிவு (Paper Leak) உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தேசிய தேர்வு முகமை (NTA) மே 12 அன்று தேர்வை ரத்து செய்து, ஜூன் 21 அன்று மறு தேர்வு நடத்தியது. ஆனால், இந்த முறைகேடுகளுக்குக் காரணமான NTA அமைப்பை முற்றிலுமாக மாற்றி அமைக்கவோ அல்லது கணினி வழித் தேர்வுக்கு (CBT) மாறவோ கோரிய மனுக்களை நீதிமன்றம் நடைமுறைச் சிக்கல்களைக் கூறி நிராகரித்தது. இதுதான் நீதி…. இதற்காகத்தான் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளை ஒன்றிய அரசு பணிக்கு அமர்த்தி இருக்கிறது.


6.2 மாணவர் போராட்டங்கள் மீதான நீதிமன்றத்தின் அலட்சியம்:


நிலைமை கைமீறி போகிறது. தற்கொலைகள் நாடெங்கும் நடக்கிறது. தன்னார்வலர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் இது குறித்து பேசுகிறார்கள். வேலையில்லா திண்டாட்டம் குறித்து விவாதம் எழுகிறது. அங்கே தான் கதாநாயகன் அறிமுகமாகிறார். 


ஒன்றிய அரசுக்கு இவர் தான் குரல். வேலையில்லா பட்டதாரிகளை அநாகரிகமாக குறிப்பிட்டு இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் அமர்ந்திருக்கும் தலைமை நீதிபதி திரு. சூரியகாந்த் விமர்சனம் செய்கிறார். வேலையில்லா இளைஞர்களை, இளம்பெண்களை கரப்பான் பூச்சிகள் என்று இவர் கூற இவருக்கு எந்த அரசியல் சாசனம், எந்த விதி இடம் கொடுத்தது என்று யாரும் கேட்கவில்லை. இவர் குறித்து யாருமே பேசவில்லை. அவரது வார்த்தை கொடுத்த மன உளைச்சல் தான் இன்று, டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மற்றும் பொது மக்களால் உருவாக்கப்பட்ட "CJP" (Cockroach Janata Party) இயக்கமாக மாறியிருக்கிறது.  


இந்த அமைப்பின் சார்பில், டெல்லி காவல்துறையின் அத்துமீறல்கள் மற்றும் மாணவர் ஒடுக்குமுறைக்கு எதிராகத் தொடரப்பட்ட அவசர வழக்குகளை நீதிமன்றம் கையாண்ட விதம் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இன்றே ஈரான்- இஸ்ரேல்- அமெரிக்க போருக்கு தீர்ப்பு எழுதி, விதி வகுக்க கிளம்ப போகிறார்கள் போல இருக்கிறது.


  • தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வின் அணுகுமுறை: ஜந்தர் மந்தர் போலீஸ் அத்துமீறல்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வழக்கறிஞர்கள் முயன்ற போது, தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, "எங்கள் நேரத்தையும் உங்கள் நேரத்தையும் வீணாக்காதீர்கள், வீடியோக்களைப் பார்க்க எங்களுக்கு நேரமில்லை" என்று கூறி வழக்கை அவசரமாக விசாரிக்க மறுத்துவிட்டது.

  • அதிகார வர்க்கத்திற்குச் சாதகமான போக்கு: தேர்வு முகமையின் வெளிப்படையான தோல்விகள் மற்றும் சிபிஐ விசாரணைகள் நடந்து கொண்டிருக்கும் சூழலிலும், ஒட்டுமொத்த தேர்வு முறையையும் சீரமைக்காமல், தற்காலிகத் தீர்வுகளையே நீதிமன்றம் வழங்கி வருகிறது. இது தன்னாட்சி பெற்ற நீதித்துறை, மத்திய அரசின் நிர்வாகக் குறைபாடுகளைக் கண்டிக்கத் தவறி விட்டதோ? என்ற அச்சத்தைப் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.


இந்த நாட்டின் நீதிமன்றங்கள் தங்கள் மாண்பை இழந்து 12 ஆண்டுகள் ஆகி விட்டது. நீதிபதிகள் நியாயம் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எல்லாம் இனி யாருக்கும் இருக்கப் போவதில்லை. 


மத்திய அரசின் பிடிவாதப் போக்கும், கார்ப்பரேட் பயிற்சி மையங்களின் பணப்பசியும், நீதித்துறையின் மெத்தனப் போக்கும் இணைந்து இந்தியாவின் மருத்துவக் கனவை ஒரு வியாபாரப் பொருளாக்கியுள்ளன. 


கல்வி என்பது வியாபாரச் சரக்கோ அல்லது முறைகேடுகளின் கூடாரமோ அல்ல; அது அடித்தட்டு மக்களின் சமூக மாற்றத்திற்கான ஆயுதம். இந்த விழிப்புணர்வைப் பெற்றோர்களும் மாணவர்களும் புரிந்து கொள்ள வேண்டும. இந்தியாவின்  ஒட்டு மொத்த தேர்வு முறையையும், கல்வி குறித்த அதிகார வரம்பையும் மாற்றி அமைக்க வேண்டும். நீதி, நிதி, கல்வி, மக்கள் நலன் குறித்த சீர்திருத்தத்திற்காகவும், மாநிலங்களின் கல்வி உரிமைக்காகவும் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.


கண்டவனும் கை வைக்க நாம் பிள்ளைகளை பெற்று விடவில்லை. நம் பிள்ளைகள் மேல் கை வைக்க எவனுக்கும் உரிமையும் இல்லை. நம் பிள்ளைகள் கொலை செய்யவில்லை. இந்தப் பாழாய் போன அரசுகள் போல கொள்ளையடித்து வயிற்றை நிரப்பிக் கொள்ளவில்லை. தேசத்துக்கு எதிராக தீவிரவாதம் செய்து உயிர்களை கொன்று குவிக்கவில்லை. ஆனாலும் எங்கள் பிள்ளைகளை மாநில, ஒன்றிய அரசுகள் காவல்துறையை ஏவி அடித்து நொறுக்குகிறீர்கள். 


எங்கள் பிள்ளைகளை விரட்டி விரட்டி அடிக்கும் காவல்துறையினர் சிந்திக்க வேண்டுகிறேன். உங்கள் வீட்டிலும் பிள்ளைகள் இருக்கிறார்கள். உங்கள் பிள்ளைகளும் மருத்துவராக வரவேண்டும் என்றுதானே, இன்று இந்த மாணவர்கள் போராடுகிறார்கள். ஆனால் இதை காவல் துறையில் உள்ளவர்கள் உணரும் வரை, அரசுகள் போடும் உத்தரவுகளை நிறைவேற்ற நீங்கள் ஏவல் துறையாக மட்டுமே இருப்பீர்கள். அதையும் இந்த அரசுகள் மெளனமாக வேடிக்கை பார்க்கும். 


நீதிமன்றங்கள் தங்களுக்கு கிடைக்கும் இலாப நட்ட கணக்கு மட்டுமே போடும். 


ஆனால் எங்கள் மாணவர்கள் உரிமைக்காக குரல் எழுப்புவதில் என்ன தவறு இருக்கிறது? 


நீட் வேண்டாம். நியாயம் மட்டுமே வேண்டும். 


எங்கள் கல்வி! எங்கள் உரிமை. 

முழுமையாக படியுங்க! தெரியாத விஷயங்களை புரிஞ்சுக்கங்க! இதுவரைக்கும் நம்மள முட்டாளா மாத்தி வெச்சு இருந்த விஷயங்கள் பத்தி தெரிஞ்சுக்கங்க! மறக்காம உங்க கருத்தை பதிவு செய்யுங்க…..


Comments