காற்று வெளியிடை கண்ணம்மா - அத்தியாயம் - 2
காற்று வெளியிடை கண்ணம்மா
2. உயிரைத் தேடி ஓர் பயணம்
“கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை” என்று உயிரே படப் பாடலை வானம்பாடி எப்.எம்மில் கேட்டுக் கொண்டிருந்த ஒரு நடுத்தர வயதுக்காரர் தன் மனைவியிடம் பேசத் தொடங்கினார் ....
“எங்க போனான் இந்த மனுஷன்?. இவனுங்களுக்கெல்லாம் தலைகனம் ஜாஸ்தி... ஊரே இங்க தேடுது. இந்த ஆளு என்னடான்னா எல்லாரும் தேடுங்கன்னுட்டு எங்கேயோ போய் உட்காந்துகிட்டு சுய விளம்பரத்துக்கு செட்டப் செஞ்சுட்டு இருக்கான். ஒரு வேளை அவன் மருமகன் ஏதாவது படம் எடுப்பானா இருக்கும்?. அதுக்கு விளம்பரம் செய்யத்தான் இந்த ஸ்டண்ட் போல” என்றார், அந்த நடுத்தர குடும்பத்தின் தலைவர்.
அப்போது அவருக்கு காபி எடுத்துக் கொண்டு வந்த மனைவி அவரிடம் கோபமுடன் பேசினாள்.
“ஏங்க இப்படி பேசறீங்க? என்னமோ அவரு வீட்டுக்குள்ளே தினமும் புழங்கி திரிஞ்ச மாதிரி. உங்களுக்கு தெரியாத ஒண்ண ஏன் பேசறீங்க? அவரு பொஞ்சாதிய தன்னோட சிநேகிதியா பார்த்தார். இங்க எங்க!!!??... பொஞ்சாதிய தவிர ஊர்ல இருக்கற பொம்பள எல்லாம் இல்ல... சினேகிதி" என்று ஒரே போடாக போட்டாள் அவர் மனைவி. அடுத்த கணமே, அழைப்பு வராத போனை எடுத்து காதில் வைத்துக் கொண்டு, வேகமாக வெளியேறினான் அவள் கணவன்.
இத்தனை விஷயங்களும் இங்கு நடந்து கொண்டிருக்க அந்த காட்சிகளுக்கு அப்பாற்பட்ட கனவுலகில், இருட்டை கிழித்துக் கொண்டு பேருந்து ஒன்று சேர்வராயன் மலைப்பாதையில் வளைந்து திரும்பியது. ஏற்காடு சென்று கொண்டிருந்த பேருந்தில் ஜன்னலோர இருக்கையில், ஒரு சால்வையை போர்த்திய படி அந்த மனிதன் உட்கார்ந்து இருந்தார். அவரது விழிகளில் இருந்து கண்ணீர் அருவி வழிந்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கு ஒருமுறை விழிகள் தன் முழுக் கொள்ளளவையும் எட்டி ஊற்றாக சறுக்கி, அவரது சால்வையை நனைத்துக் கொண்டிருந்தது. பேருந்து ஓவ்வொரு கொண்டை ஊசி வளைவிலும் திரும்பும் போது, அவரின் நினைவலைகள், எங்கோ ஒரு நிச்சயமற்ற சூழலில், புயல் காற்றில் சிக்குண்ட ஒற்றை பனைமரம் போல அல்லாடி தவித்தது.
பனியின் தாக்கத்தில் பேருந்துக்குள் குளிர்ந்தது. ஆனால் சலனமே இல்லாது அமர்ந்திருந்த அந்த மனிதனுக்கு எப்படியும் ஒரு ஐம்பத்தைந்து வயதிருக்கும். அவரது நிலைகுத்திய பார்வையின் பின்னணியில் பல்வேறு காட்சிகள் தோன்றி மறைந்துக் கொண்டிருந்தது. அந்த காட்சிகளில் ஒன்றில் ஒரு பெண் தேவதையாக சிரித்துக் கொண்டு, அவருக்கு கதை சொல்லிக் சிரிக்க வைத்தாள். பிறகு காணாமல் போனாள். மீண்டும் காட்சியில் வந்து அவரது காதுகளில் மென்மையாக ஊதி கூச்சமூட்டினாள்.
பேருந்துக்குள் விளக்குகள் அணைக்கப்பட்டு, இரவு விளக்கு மட்டும் நீல நிறத்தில் மெல்லிய ஒளியை வீசிக் கொண்டிருந்தது. பேருந்தின் நடத்துனர் எப்.எம்-மை ஆன் செய்தார். எப்.எமில் அறிவிப்பாளர் பேசிக் கொண்டிருந்தார்.
"ஆல் இந்திய ரேடியோ, ஏற்காடு வானொலி நிலையம். நேரம் சரியாக இப்போது எட்டு மணி பதினைந்து நிமிடம். நிகழ்ச்சியில் அடுத்து வரும் பாடலை, பிரபல எழுத்தாளரும், கதை சொல்லியுமான திரு. முகிலனுக்காக நேயர்களின் சார்பில் ஒலிபரப்புகின்றோம். பாடல் இடம் பெற்றத் திரைப்படம் உயிரே. பாடலைப் பாடியவர்கள் உன்னி மேனன் மற்றும் சுவர்ணலதா
ஹாலோ எப்.எம். தொடங்கி கோடை எப்.எம் வரை அனைத்து நிலையங்களும் சரியாக இரவு எட்டுமணிக்கு முகிலனுக்காக, அவரது மீட்சிக்காக அவருக்கு பிடித்த அந்த பாடலை நேயர்கள் விருப்பமாக ஒரே நேரத்தில், ஒன்றாக ஒளிபரப்பு செய்தன.
"ஓ.. கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை..
கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை..
கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை
என்று சுவர்ணலதா ஆலாபனையை தொடங்க பேருந்தின் ஜன்னலோரத்தில் உட்கார்ந்திருந்த மனிதனின் முகத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இப்போது திப்புவின் குரலில் பல்லவி தொடங்கியது.
பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடிப் பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்.
அந்த மனிதனின் வெறித்திருந்த கண்கள் இப்போது சுழன்றன. அவனது முகம் இப்போது தெளிவாகத் தெரிந்தது. இரண்டு நாட்களாக சவரம் செய்யப்படாத முகம், கனத்த முறுக்கு மீசை. ஊரெல்லாம் இரண்டு நாளாக தேடிக் கொண்டிருக்கும் அந்த முகிலன் தான் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தது. முகிலனின் கரங்களை அவரது கண்களில் தோன்றிய பெண் பிடித்து தன் கன்னத்தில் வைத்துக் கொண்டாள். எப்.எம்-மில் திப்பு மீண்டும் பாடத் துவங்க அவள் முகிலனின் தோளில் சாய்ந்து கொண்டாள்.
“உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே
ஓடி வா..”
திடீரென்று அந்த பெண் எழுந்து பேருந்தின் பின் பக்கம் சென்றாள். முகிலன் திரும்பி அவளை பார்க்க அவள் பேருந்திலிருந்து இறங்கி மலைப்பாதையின் இறக்கத்தில் சிரித்தபடியே பின்னோக்கி நடக்கத் துவங்கினாள். முகிலன் அவளை நோக்கி கையை நீட்டினார். பேருந்து வளைவில் திரும்ப முகிலனின் கண்களில் இருந்த காட்சி மறைந்து ஒளியை பரப்பியபடி பயணிக்கும் பேருந்தை உள்ளுக்குள் இருந்து பார்க்கும் தோற்றம் தெறிந்தது.
இப்போது பேருந்தின் நடத்துனர் குரல் ஒலித்தது. ‘பார்க், லேக் இறங்கறவங்க இறங்குங்க’....
பெரும்பாலானவர்கள் அங்கே இறங்கத் தொடங்கினர். மீண்டும் பேருந்து கிளம்பியது பாடலும் தொடர்ந்தது. திடீரென்று அவரது பக்கத்தில் தும்பை பூ நிறத்தில் புடைவையும், நீல நிற ரவிக்கையும் அணிந்து, தலை நிறைய மல்லிகை பூச்சூடி அதே பெண் வந்து அமர்ந்தாள். அவளது கண்களில் காதல் தீ பிறவி இருந்தது. முகிலனின் முகத்தை அவள் தன் இரு கரங்களிலும் ஏந்தினாள். இரு ஜோடிக் கண்களும் ஒன்றை ஒன்று காதலில் தீண்டி மகிழ, சட்டென்று அவள் தன் மலரினும் மெல்லிய இதழ்களை குவித்து முகிலனின் இதழ்களில் பொருத்தினாள்.
பேருந்து இப்போது மீண்டும் ஒரு வளைவில் திரும்ப அவளை முகிலன் தேடினார். அதற்குள் பேருந்து ஏற்காடு பேருந்து நிலையத்தின் முன் நின்றது. அனைவரும் பேருந்தில் இருந்து இறங்கினர். இறுதியாக முகிலன் இறங்கினார். அப்போது பேருந்திலிருந்து எப்.எமில் அந்த பாடல் வரிகள் ஒலித்தது.
இதயம் கருகும் ஒரு வாசம் வருகின்றதா
காற்றில் கண்ணீரை ஏற்றி
கவிதைச் செந்தேனை ஊற்றி
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே
ஓடி வா..
என்ற வரிகள் பாடலில் ஒலிக்க முகிலன் தொண்டையில் துக்கம் நிறைந்து நின்றது. விழிப் பொய்கை விடுத்த நீரலைகள் கன்னம் வழிந்து அவரின் சட்டையை நனைத்தது. ஒருவழியாக தன்னை நிறுத்திக் கொண்டவரின் கால்கள், மெல்ல நடக்கத் தொடங்கின. பேருந்து கொட்டச்சேடு செல்லும் பாதையில் செல்ல பாடலின் ஒலியும் தேய்ந்து நின்றது.
முகிலன் மெல்ல மெல்ல நடக்கத் தொடங்கினார். பனியின் தாக்கம் அதிகம் இருந்தது. அவர் எதையும் உணர்ந்து கொண்டவராக தெரியவில்லை. அவரது கால்கள் ரெட்ரீட் செல்லும் பாதையில் பயணிக்கத் தொடங்கியது. சிறிது நேர பயணத்தில் அவர் "சில்வர் லைன் ஹில் வியூ கம்யூனிட்டி" என்ற பெயர் பலகை இருக்கும் இடத்தை அடைந்திருந்தார். சில்வர் லைன் ஹில் வியூ கம்யூனிட்டி என்பது ஒரு குடியிருப்பு பகுதி. இங்கு பலருக்கும் சொந்தமான சொகுசு மாளிகைகள் இருந்தன. மலையின் உயரமானப் பகுதியில் அமைந்திருக்கும் இந்த குடியிருப்பை, ஒவ்வொரு பாகமாக பிரித்து ஒவ்வொருவர் வாங்கி இருந்தனர். திரையுலகின் பிரபலங்கள் தொட்டு, தேசிய அளவில் பிரபலமானவர்களுக்கும் அங்கே சொந்தமாக இடம் இருந்தது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த பகுதியில் உயரமான பகுதியில் இருந்த இடத்தை முகிலன் வாங்கியிருந்தார். அங்கே ஒரு ரம்மியமான கண்ணாடி மாளிகையை தன் சினேக மனைவிக்கு, அன்புப் பரிசாக உருவாக்கியிருந்தார். அந்த கண்ணாடி மாளிகையின் ஒவ்வொரு சிறு அமைப்பும் அவரின் பிரியசகியின்… எண்ணங்களாக உருவாகி பளிச்சிட்டு மின்னியது. பங்களாவின் எதிரில் ஒரு காட்சிமுனையை நிர்மாணித்திருந்தார். அங்கே, கிரானைட்டில் வடிவமைக்கப்பட்டு செய்யப்பட்ட சாய்வு நாற்காலி மற்றும் ஒரு மேஜையும் இருந்தது. அந்த பென்ஞ்ச் மற்றும் மேஜையை காத்தவாறு கிரானைட் கொண்டு அமைக்கப்பட்ட குடை ஒன்று இருக்கும். அதன் மேற்பகுதி முழுவதும் கண்ணாடியால் போர்த்தப்பட்டிருந்தது. பார்த்து பார்த்து தன காதல் மனைவிக்காக அவர் அந்த மாளிகையை உருவாக்கியிருந்தார்.
சென்ற ஆண்டு விடுமுறையில், தன் தோழியான மனைவியுடன் ஏற்காட்டிற்கு வந்திருந்த முகிலன், இந்த கண்ணாடி மாளிகையை அன்பு பரிசாக தன் இதய ராணிக்கு அர்ப்பணித்திருந்தார். அன்று அவரது அன்பு மனைவியின் உள்ளம் மகிழ்ந்து துடித்ததை, அவளின் விழிகள் பாடிய ஆலாபனையில் உணர்ந்திருந்தார். பத்து நாட்கள் பரவசமாக, அந்த இல்லத்தின் அத்தனை விஷயங்களையும் ரசித்து மகிழ்ந்து கொண்டாடித் தீர்த்த போது…. இருவருமே அறிந்திருக்கவில்லை மீண்டும் ஜோடியாக இங்கு வரமாட்டோம் என்று…..!!!!!
தாயின் மடி தேடித் தவிக்கும் பிள்ளைப் போன்ற சுபாவம் கொண்டவர் முகிலன். அவரது மனைவிக்கு முகிலன் தான் மூத்த பிள்ளை. இருவரின் இதய ஓட்டங்களின் வேகமும், சிந்திக்கும் திசையும் ஒன்றாக இருக்கும். முகிலனின் படைப்புகளை முதலில் கேட்பது அவரது காதல் மனைவி தான். அவர் சொல்ல சொல்ல ரசித்து கேட்டு விட்டு, முதலில் விமர்சனம் செய்வது அவளது வழக்கம்.
‘இலக்கியம் இந்த தேவதைக்கு பிடித்துப் போக முகிலன் தான் காரணம். தமிழ் மொழியை வெறும் பேச்சு வழக்கிற்கு மட்டுமே உபயோகித்த அவரது மனைவியை, தன் வசீகர எழுத்துக்களால் வாசிக்கவும், ரசிக்கவும் தூண்டியவர் முகிலன். ஒரு கட்டத்தில் அவரின் எழுத்துக்கள் உயிர் துடிக்கும் வரிகளாக மாற, அவளே காரணமாகி போனது… முகிலன் மட்டுமே அறிந்த உண்மை. பல நேரங்களில் தான் படைக்க போகும் கதையின் கரு எது என்று? குழம்பி நிற்கையில், அவர் தேடிச் சென்று பிரபாவதி மடியில் தான் தலை சாய்ப்பார்.
‘கருவறையின் வாயில் திறந்து, வெளியேறும் பிள்ளை போல…. ஊற்றாக பிறக்கும் கற்பனையின் முழு கொள்ளளவையும், தனக்குள் நிரப்பிக் கொண்டபின் எழுவார்’. பல நேரங்களில் கதையின் தலைப்பும், முதல் வரியும் அவர் மனைவியின் உதடுகளே உதிர்க்கும். ஒவ்வொரு படைப்பையும் முகிலன் படைக்கும் போது, அந்த மொத்த வார்த்தைகளின் பூக்குவியல், அவர் தன் மனைவிக்குத் தொடுத்த மாலையாக மாறியிருக்கும்’.
முகிலனின் ‘மனித மொழி’ என்ற சிறுகதைக்கு தமிழக அரசின் விருது கிடைத்திருந்தது. அந்தக் கதையில் வரும் வார்த்தைகள் ஒவ்வொன்றும், அவரது மனைவியின் எண்ண ஊற்றுகளாகவே சிந்தித்து எழுதியிருந்தார் முகிலன். அந்த கதையை வானம்பாடி எப்.எம் நிகழ்வில் அவர் குரலில் கேட்ட, எண்ணற்ற உள்ளங்களின் இதயத்தில் மனித மொழி தோன்றியது.
‘உயந்த மலையின் மீது மூச்சு வாங்க ஏறியவர், குளிர்வதை குறித்தோ, மழையின் துளியில் தான் நனைந்து இருந்தது குறித்தோ வருந்தவில்லை. அவருக்கு உடலுக்குள் எந்த விதமான உணர்ச்சி நாளங்களும் துடிக்கவே இல்லை எனலாம்’.
அவர் சில்வர் லைன் கம்யூனிட்டியின் நுழைவு வாயிலை நோக்கி செல்வதை, ஒரு ஜோடிக் கண்கள் கூர்ந்து கவனித்தது. அந்த கண்களில் ஆச்சரியம் அளவின்றி பரவி விரிய, இமைகள் சில நேரங்களுக்கு படபடத்து சில்லிட்டு நின்றன. அந்த உருவம் மெல்ல முகிலனை பின் தொடரத் தொடங்கியது. முகிலனை பின்தொடர்ந்த உருவத்தின் கரங்களில் நீண்ட உருட்டு தடி இருந்தது.
தொடரும் .................
.jpg)
Comments