தீ….தீ….தித்திக்கும் தீ….. (கருவறை களவுகள்) அத்தியாயம் - 3
தீ….தீ….தித்திக்கும் தீ…..
(கருவறை களவுகள்)
அத்தியாயம் - 3
‘பீரு வேணுமா? பிராந்தி வேணுமா? ஜின்னு வேணுமா?’ என்ற பாடலுக்கு கவர்ச்சிக் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணுக்கு 20 வயது இருக்கலாம். அரை குறையான ஆடையில் அவள் காட்டிய முகபாவங்களும் நடன அசைவுகளும் அடிப்பொலியாக இருந்தது என்னமோ உண்மை. அவளுக்கு நன்றாக நடிக்கவும் தெரிந்திருந்தது! அதே நேரத்தில் வார்த்தைகளுக்கு ஏற்ப உணர்ச்சிகளைக் காட்டவும், நடன அசைவுகளை நளினமாக கொடுக்கவும் இயல்பாகவே வந்தது என்று கூட சொல்லலாம்.
அவளது வீடியோவை பார்த்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன் சரசரவென்று கமெண்டில், உணர்ச்சி பொங்க தட்டச்சு செய்யத் தொடங்கினான். ‘அன்பே நீ என்ன மின்னலா? இல்லை என்னைக் கொல்ல வந்த ராட்சசியா? இப்படி எல்லாம் ஆடி என்னை தூங்க விடாம செய்யாதே’ எழுதிவிட்டு பத்து பதினைந்து ஹார்டின் எமோஜியையும், இருபது முப்பது முத்த எமோஜிகளையும் சேர்ந்து சென்ட் செய்தவன், அவளது வேறு வீடியோக்களை பார்க்கும் வேலையைத் தொடங்கினான்.
பேருந்தில் சென்று கொண்டிருந்த 45 வயது மதிக்கத்தக்க ஒருவர், அதே பெண்ணின் வீடியோக்களை ஒன்று விடாமல் பார்த்து, ஜொள்ளிக் கொண்டிருந்தார். மெட்ரோ ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த, சில பல ஆண்களின் இன்ஸ்ட்டாகிராமிலும் இப்போது இந்த பெண் போடும் வீடியோக்களே ட்ரெண்டிங் ஆகத் தொடங்கியிருந்தது. மோகமும், வேகமும், கலந்த அவள் முகபாவனைகளுக்கும், நளினமும், நயமும் கலந்த அவள் உடல் மொழிக்கும் பலர் அடிமையாகி இருந்தார்கள்.
பெசன்ட் நகர் அலுவலகத்தில் கடமைகளை தொடங்கியிருந்த வினித்தும் குகேஷும் மதிய உணவுக்கு முன் கூடி பேசத் தொடங்கியிருந்தார்கள்.
“ஆமாம் மச்சி! இன்னைக்கு காலைல லண்டன்ல இருந்து வந்து இருந்தானே ரிஷி, யாருடா அவன்? அவனை உங்களுக்கு எல்லாம் முன்னாடியே தெரியுமா?” என்று கேட்ட வினித்தை அமைதியாக பார்த்த குகேஷ் ரிஷியை பற்றி சொல்லத் தொடங்கினான்.
“ரிஷி, காயத்ரி சித்தியோட அக்கா உமாவோட மகன். சின்ன வயசுல நாங்க எல்லாருமே ஒண்ணா தான் வளர்ந்தோம். குகேஷ் அம்மா அவனுக்கு 10 வயசு இருக்கறப்பவே இறந்து போயிட்டாங்க. அம்மா பாசமே இல்லாம வளர்ந்தவன் ரிஷி. நான், பிரீத்தி, ரூபா மூணு பேருக்கும் அவன் செல்லமான தம்பி. ரொம்ப பாசமா இருப்பான். அவங்க அப்பா! ஒரு வெள்ளைக்காரியை கல்யாணம் பண்ணிட்டு லண்டன்ல செட்டில் ஆயிட்டார். கொஞ்ச நாள்லயே அவனையும் லண்டனுக்கு கூட்டிட்டு போயிட்டார். இத்தனை வருஷம் கழிச்சு இப்பத்தான் எங்களை பார்க்க வந்து இருக்கான். நியாயமா கிடைக்க வேண்டிய அன்பு, பாசம், வழிகாட்டுதல் எதுவுமே அவனுக்கு கெடச்சது இல்ல” என்று கொஞ்சம் நிறுத்தியவன் ரிஷியைப் பற்றி மேலும் விவரங்களை சொல்லத் தொடங்கினான்.
“அவனோட அப்பாவும் ஒன்னும் பெருசா அவனை அன்பு செஞ்சதா நாங்க பார்த்தது இல்ல. ரொம்ப நல்லவன். தன்னை சுத்தி இருக்கறவங்களை எப்பவும் அன்பா, பாசமா, ரொம்ப சந்தோஷமா வெச்சுக்க நெனைக்கற ஒரு நல்ல ஜீவன். பிரீத்திக்கு அவன்னா ரொம்ப உயிர். என்னை விட அவளுக்கு அவன் மேல ரொம்ப பாசம் அதிகம். அக்மார்க் அடக்கமான பையன் மாப்பிளை. நம்மளை தேடி வந்து இருக்கான். இனி நாமதான் அவனை நல்லா பார்த்துக்கணும்” ரிஷி பற்றி சுருக்கமாக விளக்கி முடித்தான் குகேஷ் .
அனைத்தையும் கேட்டுக் கொண்ட வினீத்துக்கு ரிஷி மீது பரிதாபம் தாண்டிய அன்பு மேலோங்கியது.
“கேட்கவே ரொம்ப எமோஷனலா இருக்கு மச்சி. யூ ஆர் கரெக்ட். நாம் தான் இனி அவனை பார்த்துக்கணும். ரிஷி இஸ் எ குட் சோல்மேட். எனக்கு அதுல சந்தேகமே இல்ல” என்று அவன் தோளை தட்டிக் கொடுத்தான் வினித். தொடர்ந்து நேற்று குகேஷ் சென்ற அலுவலக வேலைகளை குறித்து கேட்க, குகேஷ் அதை குறித்து சொல்ல ஆரம்பித்தான்.
“மாப்பிள்ளை இன்னைக்கு ரெண்டு கிளைன்ட் நம்மகிட்ட அப்பாயின்மென்ட் கேட்டு இருக்காங்க. ரெண்டு பேருக்கும் ஏற்கனவே சோசியல் மீடியாவுல வியூவர்ஸ் இருக்காங்கன்னு சொன்னாலும், இன்னும் ட்ரெண்ட் ஆகி பாப்புலர் ஆகணும்ன்னு சொல்லறாங்க. ப்ரொபைல் எல்லாம் பார்த்துட்டேன். லஞ்சுக்கு முன்னாடி ஒருத்தர், லஞ்சுக்கு அப்புறமா ரெண்டாவது கிளைன்ட். உனக்கு ஓக்கே தான” கேட்டுவிட்டு வினித்தை பார்த்தான் குகேஷ் .
“பண்ணிடலாம் மச்சான். அதுக்குத் தான நாம இருக்கோம். நம்ம டீமை விட்டு, இறங்கி வேலை செஞ்சு குடுத்துடலாம்” பெருமையாக பேசிய வினித் முகத்தில் தன் திறமை குறித்து அளவில்லாத நம்பிக்கை குடியிருந்தது.
“நேத்து ‘ஆ.ஆ.வே.கா’ கட்சியோட ஐ.டி விங் லீடர் கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் இருந்தது இல்ல. வரப்போற எலெக்ஷனுக்கு சோசியல் மீடியாவுல ப்ரோமோஷன் பண்ணிக் கொடுக்க சொல்லி கேட்டு இருக்கார். ஆனா…” என்று குகேஷ் தடுமாறி நிறுத்த, அவனை கேள்விகளுடன் பார்த்தான் வினித்.
“ஏன் என்ன ஆச்சு? ஏதாவது ப்ராபளமா?” என்று கேட்டான் வினித். அவனை யோசனையுடன் பார்த்த குகேஷ், நீண்ட பெருமூச்சொன்றை வெளியிட்டுவிட்டு மேற்கொண்டு நிகழ்ந்த சம்பவங்களை குகேஷிடம் விளக்கலானான்.
“ஆளும் கட்சிக்கு எதிரா சகட்டு மேனிக்கு வீடியோ போட்டு வைரல் ஆக்கணுமாம்! கூடவே அவங்க கட்சில புதுசா சேர்ந்து இருக்கற நடிகைகளை வெச்சு கிளாமர் வித் இன்ப்ளூயன்ஸ் பண்ணற மாதிரி மெசேஜ் செய்யணும்ன்னு சொல்லறார். இதுல கொடுமை என்னன்னா? இந்த நடிகைகள் யாருக்குமே தமிழ் சுத்தமா பேச வராது. கன்டென்ட் எல்லாம் எக்ஸ்க்ளூசிவா இருக்கனும்ன்னு வேற சொல்லறார். பைசாக்கு கேரண்டி! ஆனா….. எல்லாம் நாங்க சொல்லறமாதிரி தான் செய்யணும்ன்னு கண்டிஷன் போடறார். பேசாம விட்டுடலாமா? வேற யாராவது செஞ்சுட்டு போகட்டும்” என்று கூறியவனை பார்த்து புன்னகைத்தான் வினித்.
“என்ன மச்சி இதுக்கு எல்லாமா கவலை படுவாங்க! வர்ற லட்சுமியை வேணாம்ன்னு சொல்ல முடியாது இல்ல? இது நம்ம தொழில். நாய் வேஷம் போட்டுட்டு, என்னால குரைக்க எல்லாம் முடியாதுன்னு சொல்லறது தொழில் செய்ய தகுதி இல்லாத இமேஜை உருவாக்கிடாதா? காசு குடுக்கறவன் வேணும்ங்கறதை செஞ்சு கேட்கத்தான் செய்வான். இது நம்ம ஏரியா! கவலைபடாத மச்சி. நான் பார்த்துக்கறேன். அந்த பார்ட்டிகிட்ட கன்பர்மேஷன் வாங்கிடு. நானும் ரூபாவும் பார்த்துக்கறோம். நமக்குத் தேவை காசு! பேரு! புகழ்!” சொல்லிவிட்டு உற்சாகமாக குகேஷை பார்த்தான் வினித்.
“இல்லடா! அரசியல் விவகாரம்! ஒருத்தனுக்கு ஆதரவா பண்ணி இன்னொருத்தன் நம்மகிட்ட கோவிச்சுகிட்டா?!” என்று உள்ளத்தில் இருந்த பயத்தை குகேஷ் வெளிப்படுத்தினான்.
“அதெல்லாம் ஒன்னும் வராது! அவனுங்களுக்கும் நம்மள மாதிரி இன்னொரு டீம் வேலை செய்யத்தான் போகுது. இதுதான் ப்ராக்டிக்கல்! நாம இதுக்கெல்லாம் யோசிக்க வேண்டிய அவசியமே இல்ல” என்றவனை கூர்ந்து பார்த்த குகேஷ், ‘அவன் கூறியதில் உண்மை இருப்பதாகவே உணர்ந்தான்’.
அதற்குள் அலுவலகத்திற்கு வந்திருந்தாள். அறைக்குள் நுழைந்தவள் தன் பையை மேஜை மீது வைத்துவிட்டு இருக்கை ஒன்றில் அமர்ந்தாள்.
“என்னடா ரெண்டு பேரும் டன் கணக்குல வெட்டி டிஸ்கஷன் பண்ணிட்டு இருக்கீங்களா? எங்க உங்க கிளைண்ட் குமரி குமுதா இன்னும் வரலையா? அந்த கவலைலதான் இப்படி இருக்கீங்களோ” என்று அவர்களிடமும் தன் ஜாலத்தைத் தொடங்கினாள் ரூபா .
“ஹே நீ ஏண்டி இப்படி எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்க? எனக்கு உங்க அண்ணிய தவிர வேற யாரை பத்தியும் ஐடியாவே கிடையாது. என்னோட டார்லிங் தவிர வேற யார் மேலயும் என் கண் இத்துனூண்டு கூட திரும்பாது” என்று அப்ரூவராகி சொன்ன குகேஷ் முகத்தை பார்த்துக் கொண்டே இருந்த வினித் லேட்டாகத்தான்….. தான் மாட்டிக் கொண்டோம் என்பதை உணர்ந்தான். இருந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்ற ஓவர் கான்பிடன்ஸில்…..
“ஆமாம் ரூபா ! எங்களை பார்த்தா ஜொல்லு பார்ட்டிங்க மாதிரியா இருக்கு? நாங்க ரெண்டு பேரும் தங்கத்தை விட சுத்தம். அதுலயும் ஸ்பெஷலா எனக்கு உன்னத் தவிர வேற யாரையுமே பார்க்க புடிக்காது” என்றவாறே… ‘உன்மேல ஒரு கண்ணு! நீ தானே முறை பொண்ணு’ என்று ரூபாவைப் பார்த்து பாட….
“தயவு செஞ்சு நீ கொஞ்சம் உன்னோட ஊத்த வாயை மூடு! எங்க அண்ணனுக்கு இருக்கற பயம் கூட உனக்கு வர வர என்மேல இல்லாம போயிட்டு இருக்கு. நான் கேட்ட கேள்விக்கு எங்க அண்ணனுக்கு முன்னாடி நீ இல்லடா பதில் சொல்லி இருக்கணும். படுவா…. வாடி இன்னைக்கு ராத்திரி உனக்கு வைக்கிறேன் ஜட்ஜ்மெண்ட்டு” என்று பொய்யான கோபத்தை காட்ட….
‘அய்யயோ! தெய்வமே…. நீங்க நெனைக்கறதுக்கு முன்னாடியே நான் எல்லாம் செஞ்சுடுவேன் தெய்வமே!... உங்க அண்ணன் நடிக்கறான்… அவனை நம்பாத செல்லம். ரெண்டு மூணு நாளா அப்பாயிண்ட்மெண்ட் வாங்கறேன்னு சொல்லி, அண்ணா நகருக்கும், அமைஞ்சகரைக்கும் அல்லு விட்டுட்டு அலைஞ்சது இந்த புண்ணிவான் தான். நான் இல்ல” என்று சரண்டர் ஆனவனை உள்ளத்துக்குள் ‘இன்பம் நிறைய ரசித்தாள் ரூபா’. என்றாலும் முகத்தை கோபமாக வைத்துக் கொண்டாள்.
அப்போது அலுவலக பையன் கதவைத் தட்டிக் கொண்டு உள்ளே வந்தான்.
“சார் உங்களை பார்க்க குமரி குமுதா-ன்னு ஒருத்தங்க வந்து இருக்காங்க. உள்ள வர சொல்லவா சார்” என்று பவ்வியமாக கேட்க…. குகேஷும், வினித்தும் ஒரே நேரத்தில் உற்சாகமாகி அடென்க்ஷன் மோடில் எழுந்து நிற்க…. இருவரையும் மாறி மாறி பார்த்து தலையில் அடித்துக் கொண்டாள்.
அதற்குப் பின் தான் இருவரும் தங்கள் பீலிங்ஸை உணர்ந்து, பீஸ் போன பல்புகள் போல ஆனார்கள். அதற்குள் ஆபீஸ் பையனை பார்த்து….
“டே யப்பா! அந்த குமரி குமுதாவை மீட்டிங் ரூம்ல உட்கார வை! சாருங்க வருவாங்கன்னு சொல்லி! கொஞ்சம் ஏசியை ஆன் பண்ணி விடு! குளுகுளுன்னு இருக்கட்டும்” என்று நக்கல் கலந்து சொல்ல, ஆபீஸ் பையன் வெளியேறினான். வினித்தை காட்டிலும் இப்போது குகேஷ் ரூபாவிடம் கெஞ்சத் தொடங்கியிருந்தான்.
‘அதே நேரம்….’
விசாகப்பட்டினத்தில் இருந்து கிளம்பியிருந்த இண்டிகோ விமானம், டெல்லி விமான நிலையத்தின் ரன்வேயில்… வழுக்கிக் கொண்டு தன் சக்கரங்களை பதித்து ஓடத்தொடங்கியது. விமானத்தில் ஜன்னலோரம் அமர்ந்திருந்த கவின். பிரீத்தி பற்றிய நினைவில் இருந்து வெளியே வந்தான்.
இருட்டைக் குறித்த அவள் பயத்தை போக்க அவன் எடுத்த முயற்சிகள் பெரிய மாற்றத்தை உண்டாக்கவில்லை என்றாலும், எப்போது விஷாகா பிறந்தாலோ? அப்போது முதல் அவளுக்குள் இருந்த பயம் அவளையும் அறியாமல் காணாமல் போனது. இப்போதெல்லாம் பிரீத்தி இருட்டுக்கு அஞ்சுவது கிடையாது. அவளையும் அறியாமலேயே இருட்டைக் குறித்த இம்சை உணர்வுகள் விலகியிருந்தது.
அதில் உண்மையில் பெரும் மகிழ்ச்சி கொண்டிருந்தவன் கவின் மட்டுமே. அதுமட்டுமில்லை…. இப்போது எல்லாம் பிரீத்தி யின் ஷார்ட் டெம்பர் குணமும் மொத்தமாகவே மாறியிருந்தது. ஆனால், பொஸசிவ்னெஸ் என்ற புதிய குணம் அவளுக்குள் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியிருந்தது. அவளது சின்ன சின்ன மாற்றங்களையும் குறித்து தீவிரமாக சிந்தித்து தனக்குத் தானே சிரித்துக் கொண்டிருந்த கவின் விமானம் நிறுத்தப்பட்டு பயணிகள் கீழே இறங்குவதற்கான அறிவிப்பு வந்ததை தொடர்ந்து இருக்கையில் இருந்து எழுந்தான்.
கவின் அமர்ந்திருந்த சீட்டிலிருந்து ஐந்து வரிசை தள்ளி, பின்னால் உட்கார்ந்து கொண்டிருந்த ஒரு இளைஞன் பரபரப்பானான். அவனது கைகள் சட்டென்று மொபைலை எடுத்து, டவர் செக் செய்துகொண்ட பின், யாரையோ அழைத்திருக்க, எதிர் முனையில் அழைப்பு ஏற்கப்பட்டது.
“ஹாய்! டார்கெட் டெல்லி ரீச்ட்! இன்னும் பத்து நிமிஷத்துல ஏர்போர்ட் விட்டு வெளிய வந்துடும்” சொல்லிவிட்டு கால் கட் செய்தவன், கவின் அறியாத வண்ணம் அவனை பின்தொடர ஆரம்பித்தான். கவின் தன்னுடைய லக்கேஜை எடுத்துக் கொண்டு, எக்ஸிட் செய்ய நடக்கத் தொடங்கிய நேரத்தில்….. அவன் முதுகில் எட்டு கிலோ எடை கொண்ட ரோஜா குவியல் ஒன்று தாவிக் கொள்ள, அவன் கழுத்தை மெல்லிய பிஞ்சு கரங்கள் தழுவின.
ஒருகணம் கவின் தடுமாறினான் என்றாலும், சுதாரித்துக் கொண்டவன் திரும்பி பார்க்கும் முன், அவன் இடையை சேர்த்து அணைத்த கரத்தில் இருந்த காதல் உணர்வை கொண்டே தன்னை சிறை பிடித்திருப்பது யார் என்று யூகித்துக் கொண்டான்.
“சைக்கோ காதலா! எப்படி இருக்க சுவீட் இடியட்?” என்றவாறே அவனை கன்னத்தில் முத்தமிட்ட பிரீத்தியை பார்த்த கவின் கண்கள் காதலில் பனித்திருந்தன.
“ஹேய்…ங்… நீங்க ரெண்டு பேரும் எப்படி இங்க? நான் உங்களுக்கு வர்ற விஷயத்தை சொல்லவே இல்லையே?” என்று வியப்போடு சொல்ல….
அவன் தோளில் ஏறி கழுத்தை இறுக்கிப் பிடித்திருந்த விஷாகா இப்போது அவன் இடது கன்னத்தில், பிஞ்சு இதழை பதித்து, இலேசா சப்பி எடுக்கத் தொடங்கியிருந்தாள்.
“நீதான் சி.பி.ஐ ஆபீஸரா? உனக்குத் தான் ஸ்பை வேலை எல்லாம் வருமா? நான் சி.பி. ஐ ஆபீசர் பொண்டாட்டி! எனக்கு உன்னை விட அதிகமா ஸ்பை வேலை எல்லாம் செய்ய வரும். அருண் மூலமா நீ கிளம்பி வர்ற விஷயத்தை கேட்டு தெரிஞ்சுகிட்டேன். அதுக்கு அப்புறமா வீட்டுல உட்கார தோணல. விஷாகா வேற உன்னைய கேட்டுகிட்டே இருந்தா! அதான் ஏர்போர்ட்டுக்கு வந்து உன்ன சர்பிரைஸ் பண்ண வந்தோம்” அன்பும், காதலும் வழிந்தோட பேசிய பிரீத்தியை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்ட கவின் அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
“ப்பா….. ப்ப்பா…. என்….க்கும்ம்ம்ம்..” என்ற விஷாகாவை முதுகில் இருந்து இழுத்து இடது புஜத்தில் அணைத்து அமர்த்திக் கொண்டவன் அவளை பாச முத்தத்தில் குளிப்பாட்டினான்.
அவர்களின் பாச நேச பகிர்வுகளை விமான நிலையத்தின் லக்கேஸ் பெல்ட் அருகில் இருந்தவாறே வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்த இளைஞன், அதை உடனே வாட்சப் மூலம் யாருக்கோ பகிரவும் செய்தான். அவர்கள் மூவரும் விமான நிலையம் விட்டு வெளியே வந்து காரில் வீட்டுக்குச் செல்லும் வரை பின் தொடர்ந்தவன், அடுத்த சில நொடிகளில் டெல்லி புறநகர் பகுதிக்கு சென்று சேர்ந்திருந்தான்.
சென்னையிலோ வேறு காட்சி அரங்கேறி கொண்டிருந்தது.
குகேஷ் மற்றும் வினித்தை அவர்கள் அலுவலகத்தில் சந்தித்துவிட்டு கிளம்பியிருந்த குமரி குமுதாவுக்கு அழைப்பு ஒன்று வரவே அவள் மொபைலை எடுத்து பேச ஆரம்பித்தாள்.
“நீ என்னதான் உன் மனசுல நெனச்சுக்கிட்டு இருக்கேடி? உன்ன ரீலிஸ் போடாதன்னு எத்தனை தடவை சொல்லறது? அசிங்கம் அசிங்கமா உன்ன பத்தி எல்லாரும் கமெண்ட் போடுறானுங்க. நெறய பொம்பளைங்களே உன்ன கழுவி ஊத்திட்டு இருக்காங்க. இதெல்லாம் வேணாம். சொன்னா புரிஞ்சுக்க” எதிர் முனையில் பேசியவன் வார்த்தைகளைக் கேட்டு கோபம் தலைக்கேறிய குமுதா அவனிடம்…..
“இதெல்லாம் நீ ஏன் என்கிட்டே சொல்லிட்டு இருக்க? உனக்கும் எனக்கும் தான் பிரேக் அப் ஆயிடுச்சு இல்ல. உன் வேலைய பாரு. எனக்கு என்ன பண்ணனும்ன்னு நீ அட்வைஸ் எல்லாம் சொல்ல வேண்டாம். எனக்கு என்ன செய்யணும்ன்னு உன்ன விட நல்லாவே தெரியும். நான் அவுத்து போட்டுட்டு ரீலிஸ் போட்டா உனக்கு என்னடா நஷ்டம்? எத்தனை தடவை சொல்லிட்டேன். இது பத்தி பேச எனக்கு கால் பண்ணாதேன்னு. உனக்கெல்லாம் அறிவே இல்லையா? வைடா போனை!” என்று கால் கட் செய்ய முயன்றவளை மடக்கி மேலும் பேசினான் எதிர் முனையில் இருந்தவன்.
தொடரும் .......
“நிறுத்துடி! நீ என்ன சமூக சேவை செய்யறதா நெனப்பா? லாஸ்ட் வார்னிங்…. இனி வீடியோ போடாத…. போட்ட போஸ்ட் வீடியோஸ் எல்லாத்தையும் உடனே டெலிட் பண்ணு, இல்லனா….” அவன் முடிக்கும் முன்பாகவே குமரி குமுதா பேசினாள்.
“போட்டா என்னடா பண்ணுவ?”
“உன்ன கொன்னு தெருவுல வீசிடுவேன்டி” உக்கிரமான குரலில் அவன் பேசி முடிக்க குமுதாவுக்கு வேர்த்திருந்தது. அவள் சென்ற டாக்சி திடீரென்று ரெட் சிக்னல் விழவே கிரீச்சிட்டு நின்றது.





Comments
Post a Comment