அறிவிப்புகள்
விரைவில்....
விதைகள் பதிப்பகத்தின் மற்றுமொரு மாறுபட்ட படைப்பே இந்த நாவல். காதல் இல்லாத ஜீவராசிகள் இந்த உலகத்தில் இறைவனால் படைக்கப்படவே இல்லை. எல்லா உயிர்களும் காதலில் மகிழாமல் வாழ்வை கடக்க முடியாது. சிலருக்கு காதல் கைகூடி நீண்ட நிம்மதியான, மகிழ்ச்சி நிறைந்த வாழ்வாக அமைகிறது. பலருக்கும் காதல் என்பது தொடக்கத்தில் இன்பமாகவும், மறுபாதியில் துன்பமாகவும் மாறி, அனுதினமும் நரகத்தை பரிசாக தரும் நிலையும் நடைமுறை வாழ்வில் இருக்கிறது.
‘காற்று வெளியிடை கண்ணம்மா’ எழுத்தாளர் பாரதிப்பிரியனின் எண்ணத்தில் உதித்த ஒரு மெல்லிய காதல் கதை. ஒரு எழுத்தாளராக, குரல் கலைஞராக அவர் எதை நேசித்து செய்தாரோ? அதையே கதைக்களமாக உருவாக்கி இருக்கிறார் என்றே கூறலாம். ஒரு எழுத்தாளர் தன் முப்பது வருட காதல் வாழ்க்கை-யை நேரலையில் தன் நேயர்களுக்கும் குடும்ப உறவுகளுக்கும் சொல்லி முடிப்பதே இந்த நாவலின் ஒரு வரி கதை என்றாலும் அதை நேர்த்தியாக வாசகர்கள் விரும்பும் வண்ணம் காட்சிகளாக விரித்து அவர்கள் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் படியாக, அபாரமான எழுத்து நடையை ஆசிரியர் கையாண்டு இருக்கிறார். நாவலின் ஒரு வரியைக் கூட நீங்கள் வாசிக்காமல் கடக்க முடியாது. அப்படியொரு விவரிப்பு இந்த நாவல் முழுவதும் இருப்பதை நீங்கள் வாசிக்கும் போது முழுமையாக உணர்வீர்கள்.
நவீன காலத்தில் இளைஞர்கள் இதயத்தில் எழும் காதலில் எத்தனை தூரம் உண்மையும், அர்ப்பணிப்பும், புரிந்து கொள்ளும் தன்மையும் இருக்கும் என்று நாம் கணிக்க இயலாது. ஆனால் காதல் எப்படிப்பட்டது? என்பதையும், காதலிக்கும் ஒவ்வொருவரும் எப்படி வாழ வேண்டும்? என்பதையும் கற்றுக் கொள்ள இந்த நாவல் நிச்சயமாக துணை நிற்கும் என்று கருதுகிறேன். நாவலில் வரும் எல்லா பாத்திரங்களும் குறிப்பாக இரத்தினம், வரலட்சுமி, கோபால் போன்றோரின் அர்ப்பணிப்பு நிறைந்த பாத்திரப் படைப்புகளும் உங்கள் அனைவரது எண்ணத்தையும் கொள்ளை கொள்ளும் என்பது திண்ணம்.
சாதி, மதம், இனம், மொழி கடந்து காதல் இன்றும் நிலைக்க முகிலன், பிரபாவதி போன்ற கதாபாத்திரங்கள் கொண்ட அன்பும், பிணைப்பும், உறுதியும் கூட காரணமாக இருக்கலாம். காதல் என்றால் இப்படித்தான் இருக்கும்! இப்படித்தான் சுகம் தரும்! இப்படித்தான் வலிக்கும்! இப்படித்தான் எல்லாவற்றையும் கடந்து வெல்லும் என்பதை இவர்கள் இருவர் கதாபாத்திரங்கள் வாயிலாக நேயர்கள் உணர்ந்து, புரிந்து கொள்ளலாம். இது வெறும் காதல் கதை அல்ல. நட்பு, உறவு சிக்கல், பொறாமை, வஞ்சம், குடும்ப உறவுகளின் மாறுபட்ட மனநிலை என்று பலதையும் வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான படைப்பு. காதல் கடக்க வேண்டிய பாதையில் இருக்கும் பல்வேறு மைல்கற்கள் இவை எல்லாம் என்பதை நாவலாசிரியர் நயமாக இங்கே வாசகர்களுக்கு புரிய வைத்து இருக்கிறார்.
விதைகள் பதிப்பகத்தின் மூலமாக இந்த நாவலை டிஜிட்டல் வடிவில் இந்த தளத்தில் வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். ஒரு முழுநீள திரைப்படமாக திட்டமிடப்பட்டு, அதற்கான திரைக்கதை-வசனம் வரை எழுதி முடிக்கப்பட்ட இந்த கதையை வெள்ளித் திரையில் காட்சி வடிவத்தில் காணும் முன் வாசகர்கள் வாசித்து மகிழ பதிப்பிக்க வாய்ப்பு கிடைத்ததில் எங்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி.
வாசகர்கள் இந்த நாவலுக்கு உங்கள் பேராதரவை கொடுத்து வாழ்த்தி, விமர்சிக்க அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.
.jpg)
Comments
Post a Comment