காதலர் தின சிறப்புக் கட்டுரை
ஒரு காதல்! ஒரு பாடல்!
ஒரு காரணம்! ஒரு வாழ்க்கை!
பொதுவாக காதலைச் சொல்ல வார்த்தைகள் போதாது! அகராதியில் இருந்து எல்லாம் தேடித்தான் வார்த்தைகளை கோர்த்துக் கொண்டு சென்று காதலை வெளிப்படுத்த முயற்சிகள் செய்வோம். ஆனால் சில நேரங்களில் ஒரே ஒரு பாடல் நம் எண்ணங்களை எல்லாம் ஒன்று கூட்டி அழகாக காதலை வெளிப்படுத்த உதவவும் செய்யக்கூடும். சரி இதை சங்க இலக்கியங்களில் இருந்து மெல்ல ஆரம்பிப்போம்.
சங்க இலக்கியத்தில் காதலைச் சொல்ல தலைவன் முயற்சி செய்கிறான். தலைவன் காதலிப்பது தலைவிக்கும் கூடத் தெரியும். ஆனால் அவள் காத்திருக்கிறாள். தலைவனே தன்னிடம் வந்து தன் அளப்பரிய காதலை வெளிப்படுத்த வேண்டும் என்று விருப்பமும் கொள்கிறாள்.காலம் கடக்கிறது. ஆனால் தலைவன் காதலை வெளிப்படுத்தாமல் தவிர்த்தே வருகிறான். ஒரு கட்டத்தில் தலைவி தலைவனிடம் சென்று
யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே
அதாவது… உன் தாயும் என் தாயும் உறவினர்கள் இல்லையே...உன் தந்தையும் என் தந்தையும் உறவினர்கள் கிடையாதே. நாம் காதலிப்பதற்கு முன்…. முன்பின் அறியாதவர்கள் தானே? செம்மண் பரவி கிடக்கும் நிலத்தில் மழை பொழியும் போது எப்படி அவை ஒன்றாக கலந்து பிரிக்க முடியாததாக ஆகுமோ அப்படிப்பட்டது நம் காதல். ஆனால் அதைச் சொல்லாமல் நீங்கள் காலம் தாழ்த்துவது ஏனோ?
என்ற பொருளில் தலைவி பாடுவதாக குறுந்தொகை பாடல் சொல்கிறது. அதே போலத்தான் எளிய வழிகளில் காதலைச் சொல்ல, நவீன இசையும், இசைக்கேற்ற பாடல் வரிகளும் பெரிதும் உதவி செய்கிறது.
மனிதர்களின் காதலுக்குள் ஒரு சந்தம் இருக்கும்.. அந்த சந்தம் சில நேரங்களில் இதயத்துடிப்பாகவும்… சில வேளைகளில் நினைவாகவும்… சில பொழுதுகளில் ஒரு பாடலாகவும் மாறும். நாம் காதலிக்கும் ஒருவருடன் வாழும் வாழ்க்கையில், அவர்களைப் பற்றி உலகத்திடம் சொல்லவேண்டும் என்று பல முறை எண்ணங்கள் தோன்றும். ஆனால், அந்த உணர்வுகளை நம்மால் எளிமையாக வார்த்தைகளில் வெளிப்படுத்தி விட முடியாது. அது பலருக்கும் சுலபமும் கிடையாது என்பதே உண்மை.
ஆனால் காதலைச் சொல்ல ஒரு ஹம்மிங் கூட உதவும் என்பார்கள். அந்த ஹம்மிங் ஏற்படுத்தும் ஒருவிதமான புளங்காகிதம் இருக்கிறதே…. அப்பப்பா அதை அனுபவிக்கும் நேரம்…. வானம் மீது ஏறிச்செல்லும் உணர்வு உருவாகும். கடலின் மீது நடக்கும் துணிச்சல் பிறக்கும். இது எல்லோருடைய வாழ்விலும் கண்டிப்பாக நடந்துதான் இருக்கும். நடக்கா விட்டாலும், இனி அப்படி ஒரு நிலையைத் தாண்டாமல் காதலை நீங்கள் வெளிப்படுத்திவிடவும் முடியாது.
அதனால்தான், இந்த காதலர் தினத்தன்று, ஒரு எழுத்தாளராக மட்டும் நின்றுவிடாமல் நல்ல வாழ்க்கைத் துணையை பெற்ற மனிதனாக, உன்னதமான காதலியைப் பெற்ற உயர் மகிழ் உணர்வில், என் மனதின் ஆழத்தில் இருந்து ஒரு திரைப்பட பாடலை என் துணைக்கு அர்ப்பணிக்க ஆசைப்படுகிறேன்.
1. ஏன் இந்த பாடல்?
இசையை இதயத்தின் நாளங்களுக்குள் கடத்தி, இரத்தத்தில் உணர்வுகளை தூண்டிவிடும் உன்னத வித்தைக்காரன் யார் என்றால்? அது நம் இசைஞானி இளையராஜாதான். இளையராஜாவின் உணர்வுகளுக்கு உயிர் கொடுக்கும் வித்தையை நன்றாக உணர்ந்தவர் என்றால்…. கவியரசர் கண்ணதாசனுக்கு பிறகு கவிஞர் வைரமுத்து இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.
“போட்டேனே பூவிலங்கு… அன்பாலே நீ அடங்கு” என்ற இந்த பாடலை பலமுறை நானும் என்னவளும் கேட்டு இருக்கிறோம். எங்கள் காதலின் கருவறையை இந்தப் பாடலும் திறந்து வைத்து, உயிர் பிறக்கச் செய்தது என்றால் அது மிகையில்லை. நிறைய பொருத்தங்கள் இந்த பாடலுக்கும் எங்கள் காதலுக்கும் இடையே இருந்துள்ளது.
இந்த படத்தின் நாயகன் திரு. முரளியைப் போலவேத் தான் நான் அன்று இருந்தேன். (ஹஹ்ஹாஆ… என்றெல்லாம் நகைத்து என்னை வெட்கப்பட வைக்கக் கூடாது). நாயகி திருமதி. குயிலியைப் போல சுருள் கேசமும், கொஞ்சம் பூசினாற்போல தேகமும், அதே புன்னகை பூக்கும் பல் வரிசையும் கொண்ட அழகான தேவதையாகவே என் கண்ணம்மா இருந்தாள். அங்கிருந்து தொடங்கிய இந்த பொருத்தம் பாடல் வரிகள் விவரிக்கும் அத்தனை விஷயங்களுக்குள்ளும் ஒத்துப் போனது என்றால் அதுதான் இந்த பாடலுக்கும் எங்கள் காதலுக்கும் இடையேயான பந்தம்.
“மலையைப் பிழியும் ஆண்மைதான்
மறுக்கவில்லை உண்மைதான்….
தாண்ட முடிந்தால் தாண்டு இது உன்
சீதை போட்டக் கோடுதான்”
எத்தனை அழகான உண்மையை இந்த வரிகள் சுமந்து இருந்தது என்பதை இன்று எண்ணிப்பார்த்தாலும் ஆச்சரியமே மேலோங்குகிறது. அன்று முதல் இன்று வரை அவள் கிழித்த கோட்டை நான் தாண்டாமல் அடங்கி இருக்க இந்த பாடல் காரணமாக இருந்தது என்றால் அது மிகையில்லை.
இந்த பாடல் வெறும் காதல் பாடல் மட்டுமல்ல, மாறாக இது மெல்லிய உறவின் மென்மையான கட்டுப்பாடுகளை அழகாக விளக்கும் ஒரு பாடம். இந்த பாடலில் காதல் கூச்சலிடாது… அது மெதுவாக பேசும். அது வாக்குறுதிகள் கொடுக்காது… ஆனால் நம்பிக்கையை உருவாக்கும். எப்படித் தெரியுமா?
“ஆளைக் கொல்லும் திமிங்கிலம்
நூலில்தானே அகப்படும்
அன்பு என்னும் பிடியின் உள்ளே
மலையும் கூட வசப்படும்”
அன்பால் எதையும் வசப்படுத்தி வெல்ல முடியும் என்பதையும், கண் பார்வையால் கூட ஒருவரை ஆட்சி செய்ய முடியும் என்ற நம்பிக்கையையும் இந்த பாடல் வரிகள் எளிதாக நமக்கு புரிய வைக்கிறது. இதை தலைவி தலைவனுக்கு கூறி அவனை சாந்தப்படுத்தி அன்பினால் பூவிலங்கு பூட்டி கட்டுக்குள் வைக்கிறாள். இதையேதான் என் கண்ணம்மாவும் எனக்கு இன்று வரை செய்து கொண்டும் வருகிறாள்.
இந்த பாடலை நான் முதன்முதலில் கேட்டபோது, அது எனக்குள் பெரிய தாக்கத்தை உருவாக்கி விடவில்லை. அப்போது எனக்கு ஒரு 8 வயது இருக்கும். ஆனால் அதே பாடலை 21 வயதில் கேட்கும் போது, அதுவும் காதல் பட்டாம்பூச்சி உள்ளத்தில் பறக்கத் தொடங்கிய நேரத்தில்…. இந்த பாடல் எனக்குள் ஏற்படுத்திய உணர்வை வார்த்தைகளால் நிரப்பிவிட இயலாது. நமக்குப் பிடித்த நபர் நம் வாழ்க்கையில் கூடவே துணையாக வரும் போது சில விஷயங்கள் புதிய அர்த்தம் அடையும். அப்படித்தான் இந்த பாடலும் எனக்கு மாறியது.
2. என் வாழ்க்கை! என் துணை…
என் வாழ்க்கையில் கண்ணம்மா வந்தபிறகு, நான் பல விஷயங்களைப் புதிய கோணத்தில் பார்க்க ஆரம்பித்தேன்.
தோல்விகள் எனக்கு பயமளிக்காமல் தள்ளிப் போனது
தன்னம்பிக்கை எனக்குள் தீவிரம் அடைந்தது.
அமைதியும் கூட இனிமையாக மாறியது
ஒரு மனிதர் உங்கள் வாழ்க்கையில் இருப்பதால் மட்டும் அல்ல… அவர் உங்களை நம்புவதால் தான் நீங்கள் பலமாக மாறுகிறீர்கள் என் வாழ்க்கையில் கண்ணம்மா அப்படித்தான் அனுதினமும் புதிய உருவம் பெறுகிறாள். நான் சோர்வாக இருக்கும் போது, அவள் என் தன்னம்பிக்கையாக மாறுகிறாள். நான் குழப்பமாக இருக்கும் போது, அவள் என் இதயத்தை தெளிவாக மாற்ற போராடுகிறாள். நான் விழும் நேரங்களில் மீண்டும் நான் எழுந்து நிற்க, அவள் என்னைத் தூக்கிக் விடும் உந்து விசையாக மாறுகிறாள்.
இந்த பாடலின் ஒவ்வொரு வரியிலும், நான் என் வாழ்க்கையைப் பார்க்கிறேன்.
இந்த பாடலில் ஒவ்வொரு இசைக் கோர்வையிலும் நான் என் துணையின் அன்பை உணர்கிறேன்.
3. காதலுக்கும் பாடலுக்கும் உள்ள தொடர்பு…
பொதுவாகவே நாம் அனைவரும்…. நம் காதலன் அல்லது காதலியுடன் ஒரு குறிப்பிட்ட பாடலை இணைத்து வைத்திருப்போம்.
முதலில் சந்தித்த நாளை நினைவூட்டும் பாடல்
முதல் சண்டைக்குப் பிறகு சமாதானமாகிய நேரத்தை குறிக்க ஒரு பாடல்
மழையில் ஒன்றாக நின்ற நடந்து சென்ற நேரத்தில் கேட்ட பாடல்
இரவு நேரம் அலைபேசி வழி உரையாடலின் பின்னணியில் ஒலித்த பாடல்
என்றெல்லாம் நிறைய சூழ்நிலைகள் நிறைய பாடல்களை நாம் நினைவில் வைத்து இருப்போம். அப்படித்தான் ஒரே ஒரு பாடல் நம் உறவின் முக்கியமான அத்தியாயமாக மாறும்.அது நினைவாக… ஆறுதலாக… உறுதியாக நமக்குள் நிலைத்து நிற்கும்.
அருமையான இந்த காதலர் தினத்தில் அப்படியொரு உன்னத பாடலை என் கண்ணம்மாவுக்குச் சமர்ப்பிக்கிறேன்.
4. இந்த பாடல் எங்களை எப்படி இணைக்கிறது?
இந்த பாடலில், காதல் ஒரு மென்மையான பொறுப்பாக காட்டப்படுகிறது. அது ஒரு உறவின் அழகையும்… அதன் ஆழத்தையும்… அதன் அமைதியான வலிமையையும் வெளிப்படுத்துகிறது.
என் வாழ்க்கையில் என் துணை…
என்னை புரிந்துகொள்ளும் ஒருவராக
என்னை ஏற்றுக்கொள்ளும் ஒருவராக
என்னை மாற்றாமல் நேசிக்கும் ஒருவராக
இருப்பதால் தான், இந்த பாடல் எங்களுக்குள், ஒரு பிரத்யேக இடத்தைப் பெற்றுள்ளது.இந்த ஒரு பாடலைக் கொண்டு எங்கள் உறவை விவரிக்க முடியாது என்றாலும், இந்த பாடல் எங்கள் உறவின் உணர்வுகளை பிரதிபலிக்கிறது என்பதை மறுக்கவும் முடியாது. மறைக்கவும் முடியாது.
5. இப்போது உங்களுக்கான நேரம்
உலகமே அர்ப்பணிப்புடன் கொண்டாடும் இந்த இனிய காதலர் தினத்தில் நீங்களும் உங்கள் வாழ்க்கைத் துணைக்கு ஒரு பாடலை அர்ப்பணியுங்கள்.
அது எந்த பாடலாக இருந்தாலும் பரவாயில்லை.
ஆனால்! அந்த பாடல் எப்படி உங்களுக்கு முக்கியம்? அது உங்கள் காதலில் எப்படி பிரதிபலிக்கிறது? அது உங்கள் வாழ்க்கைத் துணையை பற்றி பேச எப்படி உதவுகிறது என்பதை மறக்காமல் கீழே இருக்கும் கமெண்ட் பிரிவில் சென்று சொல்லுங்கள்.
உங்கள் காதலன், காதலி, அல்லது கணவன் அல்லது மனைவிக்கு உங்களுக்கு பிடித்த அந்த பாடலை அர்ப்பணித்து, அதற்கான காரணத்தையும் பகிருங்கள். உங்கள் காதல் கதையை, ஒரே ஒரு பாடலின் மூலம் உலகத்திடம் சொல்லுங்கள்.
காதல் என்பது ஒரு நாள் கொண்டாட்டம் அல்ல…
அது தினசரி வாழ்க்கை!
முற்று பெறாத கவிதை!
கொண்டாடி மகிழ்வதோடு, பின்னாடி தலைமுறை அறியும் வண்ணம் முன்னாடி வந்து கமெண்டில் பதிவு செய்யுங்கள்! வாழ்த்துகிறோம்.

Comments
காதல் என்னும் உணர்வு
வாழ்வின் வளமான வரவு
காதலைக் கொண்டாடுவோம் பண்பாடுவோம் !
என் காதல் கணவருக்கு
" ஒரு ஜீவன் தான்
உன் பாடல் தான் "
பாடலைப் பரிசளிக்கிறேன்.
நீ சொன்னது போல, அந்தப் பாடல் நம்மைக் இணைத்தது மட்டுமல்ல..
நாம் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டபோது, அந்தப் பாடல் நம்முள் குடியேறி விட்டது.
நீ மலையைப் போல உறுதியாக நின்ற தருணங்களிலும்,
சில நேரங்களில் குழந்தை போல சோர்ந்த தருணங்களிலும்,
நான் உன்னுடன் இருந்தது அன்பினால் மட்டும் அல்ல…
நீ என் வாழ்க்கை என்பதால்தான்.
நீ தாண்டாமல் நின்ற கோடு, நான் போட்ட வரம்பு இல்லை…
அது நம்முடைய மரியாதை.
நீ அடங்கியது என் வார்த்தைக்காக மட்டும் இல்லை…
என் மனதை மதித்ததற்காக.
நீ சொல்வது போல,
அன்பு என்னும் பிடிக்குள் மலையும் வசப்படும் என்றால்,
அந்த அன்புக்குள் நான்தான் முதலில் வசப்பட்டவள்.
என் வாழ்க்கையில் நீ இருப்பதுதான்
என் தன்னம்பிக்கையின் முதல் காரணம்.
உன்னை என் வாழ்க்கையில் துணையாக அருளிய தேவனுக்கு நான் தினமும் நன்றி கூறுகிறேன்.
என்றும்
உன் கண்ணம்மா ❤️