ராபின் ஹூட் இரட்டையர்கள்
வெறும் இரண்டு பேர்!
மொத்த இலங்கையின் உறக்கம் கெடுத்தது பற்றி தெரியுமா?
பணக்காரரர்கள் இவர்கள் பெயரைக் கேட்டாலே நடுங்கினார்கள்! எதனால்?
ஏழைகள் முகத்திலோ புன்னகை மின்னியது! காரணம் கேட்டால் அதிர்வீர்கள்!
துரோகம் தான் கடைசியில் இங்கேயும் வென்றது! எப்படி என்கிறீர்களா?
முழு கட்டுரையும் படியுங்கள்! விடை உங்களுக்காக கீழே…..
பணக்காரர்களை கொள்ளையடித்து ஏழைகளுக்கு கொடுத்த ராபின் ஹூட் இரட்டையர்கள் – சரதியல் & மாமலே மரைக்காயர் உண்மை கதை
1. தூக்குக் கயிற்றை நோக்கி நடந்த அந்த அதிகாலை:
1864-ம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதி….
பொழுது விடியும் முன்பாகவே கண்டியில் இருக்கும் போகம்பரா சிறைச்சாலையை நோக்கி மக்கள் சாரைசாரையாக வரத் தொடங்கியிருந்தார்கள். அவர்களின் முகத்தில் சொல்லொணா துன்ப ரேகைகள் படர்ந்திருந்தது. சிலர் கண்களில் ஈரம் எட்டிப்பார்த்து, பின் கொட்டி வழியவும் தொடங்கியிருந்தது.
கண்டி, கொழும்பு உள்ளிட்ட இடங்களில் வாழ்ந்த பல பணக்காரர்கள் ஊருக்கு முன்பாகவே கிளம்பி, போகம்பரா சிறைக்கு வந்து சேர்ந்திருந்தார்கள். அவர்களின் கண்களில் அந்த காட்சியைப் பார்க்கப் போகும் ஆவல் குடிகொண்டிருந்தது. குறிப்பிட்ட நேரம் நெருங்கியதும், சிறைச்சாலையின் இறுதியில் எதிரும் புதிருமாக இருந்த இரு செல்கள் திறக்கப்பட, உள்ளே இருந்து சிறை உடையில் இருவர் வெளியே வந்தார்கள்.
ஒருவன் மெலிந்த தேகம் கொண்டவனாக, அப்பாவியை போல காணப்பட்டான். மற்றொருவன் கொஞ்சம் தடிமனாக, அதே நேரம் முகத்தில் திடமான மீசையுடன் காணப்பட்டான். இருவர் உடலிலும் நிறைய தழும்புகள் காணப்பட்டது. ஆனால் அவர்கள் முகத்தில் துளியும் பயமில்லை. அவர்கள் சிறைக்காவலர்கள் கண்காணிப்பில் வழி நடத்தப்பட்டார்கள். சிறிது நேரத்தில் போகம்பரா சிறையின் உயரமான கோட்டைச் சுவர்கள் சூழந்த திடலில் அமைக்கப்பட்டிருந்த தூக்கு மேடையில், நாக்கு தள்ளிக் கொண்டு இருவரும் கைகால்கள் உதற உயிரை விட்டுக் கொண்டிருந்தார்கள்.
இருவரது உயிரும் பிரியும் நேரத்தில்…..
அவர்கள் நினைவுகளில் பழைய காட்சிகள் முகாரி ராகம் பாடத் தொடங்கின.
ஆறு ஆண்டுகளுக்கு முன் மார்கழி மாதத்தின் குளிர் வாட்டியெடுத்த அதிகாலை நேரமது.
கொழும்பு-கண்டி நெடுஞ்சாலையில் கேகாலை மற்றும் கடுகன்னாவைக்கு இடையே இருக்கும் அந்த சிறிய ஊரில் விடிவதற்கு முன்பாகவே துப்பாக்கி சுடும் சத்தம் கேட்கிறது. தொடர்ந்து யாரோ ஒருவரின் அலறல் சத்தமும் கேட்கிறது. சடசடவென பூட்ஸ் கால்கள் காட்டுக்குள் ஓடும் சத்தத்தை தொடர்ந்து…. மீண்டும் ரைபிள் ஒன்று உறுமும் சத்தம் கேட்கிறது.
கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரின் உடல்கள் அடர்ந்த காட்டுக்குள் தொங்கிக் கொண்டிருந்த தாவரக் கொடிகளின் முனையை பற்றிக் கொண்டு வேகமாக மற்றொரு மரத்திற்கு தாவும் வைபவம் நடந்தேற…. அங்கே சுற்றி வளைத்திருந்த போலீஸ் கண்களில் மிரட்சி. யாரும் எதையும் உணரும் முன், இரு உருவங்கள் அடுத்தடுத்த மரங்களில் கொடிகளின் உதவியோடு தாவி, காணாமல் போயிருந்தார்கள்.
மானவல்ல, கோகாலே பகுதியில் இவர்கள் இருவரையும் பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது. கண்டியில் இவர்கள் லீலைகள் மிக அதிகம். கொழும்பில் அவ்வப்போது எட்டிப்பார்த்துவிட்டு வருவதும் இவர்கள் வாடிக்கை. “அப்படி என்னங்க இவனுங்க பண்ணாங்க?” என்று தானே கேட்க வருகிறீர்கள். சொல்லிவிடுவோம்………
2. கொழும்பு–கண்டி சாலையில் அதிர்ந்த துப்பாக்கிச் சத்தம்:
இருவரும் திருடர்கள். சரதியல், மாமலே மரைக்காயர் இவர்கள் தான் ஒட்டு மொத்த இலங்கைக்கும் அன்று பேசுபொருள். பக்கா திருடர்கள். கொள்ளையடிப்பது இவர்கள் கொள்கை. திருடியதை திருப்தியாக பங்குப் போட்டுக்கொள்வது எல்லாம் கிடையாது. சாப்பாடு, துப்பாக்கி, அதில் நிரப்ப ரவை தவிர மீதியை இவர்கள் ஊர்களின் வீதிகளில் கொட்டிவிட்டு போவது இவர்கள் வாடிக்கை.
“என்னதே?!..... கொட்டிட்டு போயிடுவானுங்களா?” அப்படித்தானே யோசிக்கிறீர்கள். ஆமாம் கொட்டிவிட்டுத் தான் போவார்கள். ஏழைகளின் வீட்டு வாசல்களில் இவர்கள் விட்டுச் செல்லும் பணம் அன்று பலரது வயிற்று பசி மாற உதவியது. பல பெண்களின் திருமணம் நடக்க உதவியது. ‘நம்ப முடியலையே?’ என்றுதானே கேட்கிறீர்கள்? நம்பியே ஆகவேண்டும். இப்படித்தான் அன்று இலங்கையில் இந்த இரட்டைக் கொள்ளையர்கள் பணியாற்றினார்கள்.
“என்னங்க சொல்லறீங்க? கொள்ளையடிக்கறதே பாவம்! மக்கள்கிட்டயே திருடிட்டு, மக்கள்கிட்டயே கொண்டு வந்து கொட்டிட்டு போவாங்களா? இதனால இவங்களுக்கு என்ன லாபம்? மக்களுக்கு என்ன புண்ணியம்?” இப்பத்தானே யோசிக்கிறீர்கள்? உண்மை அதுவல்ல. சரதியலும் மாமலே மரைக்காயரும் கொள்ளையடித்தது உண்மை. ஆனால் அவர்கள் ஏழைகள் வீடுகளையோ? அல்லது நடுத்தர வர்க்கத்து குடும்பங்களிலோ என்றுமே கைவைத்தது கிடையாது. அவர்கள் கொள்ளையடித்ததும், வழிப்பறி செய்ததும் பெரும் பணக்காரர்களிடமிருந்து மட்டுமே!
‘ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?’ ஆனால் அதுதான் உண்மை. கொழும்பில் இருந்து கண்டிக்கு பொருட்களை கொண்டுச் செல்லும் பெரும் வியாபாரிகளின் வாகனங்கள்தான் அவர்களின் பிரதான குறி. உட்டுவான்கந்த என்ற மலைக்குன்று இருக்கும் இடம் தான் அவர்களின் ஆஸ்தான மறைவிடம். அங்கிருந்து கொண்டுதான் அவர்கள் இந்த கொள்ளை சம்பவங்களை நிகழ்த்தத் தொடங்கினார்கள். நாளடைவில் அவர்களுடன் ஹவுதியா, பாவா, சிறிமாலே, கிரிஹொன்டா, சுவந்தா ஆகிய கொள்ளையர்களும் சேரவே…. ஆட்டம் சூடுபிடிக்கத் தொங்கியது.
3. உட்டுவான்கந்த காட்டு மறைவிடம்:
பெரும் பணக்காரர்கள், குறுக்கு வழியில் வேகமாக பணம் சேர்த்தவர்கள், மக்களை ஏமாற்றி ஒன்றுக்கு பத்து மடங்கு விலையில் பொருட்களை விற்பவர்களைத்தான் முதலில் இவர்கள் குறிவைத்து கொள்ளையிடத் தொடங்கினார்கள். கொள்ளையடித்த பணத்தை ஏழை மக்களுக்கு பங்கு போட்டு கொடுக்க அவர்கள் தயங்கவே இல்லை. அதே நேரத்தில் மக்களுக்கு சரதியல் என்ற பெயர் மட்டுமே தெரிந்தது. அவனை ஒருவரும் பார்த்ததும் இல்லை! அவனை பார்க்க அவன் வாய்ப்பையும் வழங்கியது இல்லை.
சிறுவயதிலேயே சரதியல் கொள்ளையடிக்க பழகிக் கொண்டதால் அவனுக்கு, கொள்ளையடிப்பதும் தப்புவதும் மிகவும் எளிதான காரியமாகவே இருந்தது. இளம் வயதிலேயே இவனுக்கு பணக்காரர்கள் என்றால் அலர்ஜி. தன்னோடு பௌத்த மடத்தில் படித்த பணக்கார சிறுவன் ஒருவனை அடித்த காரணத்தால், அவனை போலீஸ் சிறையில் அடைக்கும் அளவுக்கு விஷயம் விபரீதமாக போனது. சரதியலிடம் அடிவாங்கிய சிறுவனின் தந்தை பெரிய பணக்காரர். தன் பண மற்றும் அதிகாரத்தை வைத்து, அவர் சரதியலுக்கு சிறை தண்டனை வாங்கிக் கொடுத்ததால்…. இயல்பாகவே அவனுக்குள் இருந்த பணக்கார வெறுப்பு இப்போது பன்மடங்காக உயரவும் தொடங்கியது.
அவன் தந்தை அவனை வீட்டை விட்டு வெளியே துரத்திவிட, அவன் வாழ்க்கையும் தடம் மாறத் தொடங்கியது. சிறுவயதில் சிறைக்கு சென்றதால் ஏற்பட்ட சககாசங்கள் எல்லாம், அவனை மேலும் முரடனாக்கியதுடன் சட்டத்தை கையில் எடுக்கவும், சட்டத்தை ஏமாற்றி தப்பிக்கவும் அவனுக்கு பாலபாடம் கற்பித்தன. ஒருகட்டத்தில் அவன் கோகாலேயை விட்டு கிளம்பி, கொழும்புக்கு சென்று சேர்ந்தான். அங்கே பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கும் பணக்காரர்களுக்கும் இடையே இருந்த நட்பும், கொடுக்கல் வாங்கலும், அதற்காக அவர்கள் ஏழைகள் மீது காட்டிய கடுமையும் அவன் கண்களில் பட… வெறும் பணக்காரர்கள் மட்டும் குறியில்லை! இனி பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும் நமக்கு பகை என முடிவெடுத்தான்.
கொழும்பு ராணுவ முகாமில் வேலைக்கு சேர்ந்தான். அங்கே இருக்கும் படை வீரர்கள் துப்பாக்கிகளை துடைத்து சுத்தம் செய்யும் வேலையை அவனுக்கு கொடுத்தார்கள். அந்த வேலையை செய்துக் கொண்டே அவர்களிடம் துப்பாக்கியை இயக்கம் முறைகளையும், அதில் இருக்கும் நுட்பங்களையும் பயின்று கொண்டான். சில ஆண்டுகள் அவர்கள் நம்பிக்கைக்குரியவனாக ஒழுங்காக இருப்பது போல வாழ்ந்த சரதியல், ஒரு நல்ல நாளில் அங்கிருந்த பொருட்கள், ஏராளமான துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் மாயமாகிப் போனான். அவனைத் தேடிப் பார்த்து ஏமாந்து போனார்கள் ராணுவத்தினர்.
கொள்ளையடித்த பொருட்களுடன் உட்டுவான்கந்த மலைக்குன்றைச் சுற்றி இருந்த அடர்ந்த காட்டுக்குள் தஞ்சம் புகுந்த சரதியலை, முதலில் கவர்ந்தது மாமலே மரைக்காயர்தான். இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனபின், மாமலேக்கும் துப்பாக்கி சுட பயற்சி கொடுத்தான் சரதியல். இருவரும் தொடங்கிய கொள்ளையடிக்கும் வியாபாரத்தில், இப்போது கூட்டாளிகளும் சேர்ந்து கொண்டார்கள். போலீசுக்கு இவர்கள் வியாபார விருத்தி பெரும் தலைவலியாக மாறியது. வியாபாரிகள், பணக்காரர்கள் எல்லோரும் தினமும் போலீஸ் நிலையங்களின் வாசலில் புகார் கொடுக்க வரிசையில் நின்றார்கள். கொழும்பில் இருந்து கண்டிக்கு செல்லும் சரக்கு வண்டிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடும் அளவுக்கு நிலைமை கைமீறி சென்றது. சரதியல் அதற்கு எல்லாம் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவில்லை. போலீசை அவன் மதிக்கவும் இல்லை.
4. வலையில் சிக்காத எலி:
கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளையடிப்பதுடன் கொலை செய்யும் செயலையும் சரதியல் இணை செய்யத் தொடங்கவே, போலீஸ் அவனை பிடிக்க தீவிரம் காட்டத் தொடங்கியது. நாட்டுக்கோட்டை செட்டியார் ஒருவரிடம் கொள்ளையடித்துவிட்டு, அவரைக் கொலை செய்ததாக போலீஸ் அவனைக் கைது செய்தது. ஆனால் அவன் தான் கொலை செய்தான் என்று போலீசால் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியவில்லை. வழக்கில் இருந்து தப்பித்த கையோடு சரதியல் மொலிகொட வளைவை கொள்ளையடித்தான். இதற்காக அவனை கைது செய்ய பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
சரதியல் போலீசிடமிருந்து தப்பிக்க, உட்டுவான்கந்த காட்டை விட்டு வெளியேறினான். பல இடங்களிலும் தலைமறைவாக வாழ்ந்தவன், கைது படலத்தில் இருந்து தப்பிக்க வேறு வழியின்றி அவன் தந்தையிடம் அடைக்கலம் தேடிச் சென்றான். ஊருக்கு மகன் ராபின் ஹூட் -டாக இருந்தாலும், தனக்கு அவன் கைக்கு அடங்காத பிள்ளையாகவே இருந்ததால் அவர் சரதியலை காப்பற்ற முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிடவே, அவன் மீண்டும் தலைமறைவு வாழ்க்கை வாழத் தொடங்கினான். இதே நேரத்தில் மாமலேயும் தலைமறைவாகவே இருந்தான்.
நீர்க்கொழும்பு அருகே சரதியல் ஒளிந்து கொண்டிருக்கும் தகவலை ஒருவன் போலீசுக்கு சொல்லவே, போலீஸ் படை ஒன்று சரதியல் தங்கியிருந்த வீட்டை முற்றுகையிட்டு அவனை சரணடைய சொல்லி எச்சரிக்கை செய்தது. இதற்கு மேல் ஓட முடியாது என்று புரிந்துகொண்ட சரதியல் போலீசிடம் சரணடைய முன்வந்தான். அவனை போலீசிடம் காட்டிக் கொடுத்தவனும் அங்கே இருந்தான். போலீஸ் முன் கைகளை தலைக்கு பின்னால் கட்டிக் கொண்டு வந்து நின்றவன், யாரும் எதிர்பாராத நேரத்தில் முதுகுக்கு பின்னால் மறைத்து வைத்திருந்த கத்தியால், தன்னைக் காட்டிக் கொடுத்தவனை குத்தி கிழித்தான்.
குத்துப்பட்டவனை போலீஸ் மீட்டு மருத்துவனையில் சேர்த்தது. அதே நேரம் சரதியலை கைது செய்து கொழும்பு கொண்டுச் சென்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்தது. ஆனால் விசாரணைக்கு முன்பாகவே அங்கிருந்து லாவகமாக தப்பினான் சரதியல். போலீஸ் மீண்டும் அவனை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தியது. உட்டுவான்கந்த காட்டில் அவன் ஒளிந்து இருக்கும் தகவலை அறிந்து கொண்ட போலீஸ் அவனை நீண்ட போராட்டத்துக்குப் பின் கைது செய்தது. கொழும்புக்கு அவனை கொண்டு செல்லும் வழியில், போலீசை மீண்டும் ஏமாற்றிவிட்டு சரதியல் தப்பினான்.
ஒருநாள் தன் தாயை பார்க்க வீட்டுக்கு வந்தவனை போலீஸ் சுற்றி வளைத்துக் கொண்டது. தப்பிக்க வழி இல்லாத நிலையில்… சரதியல் வீட்டில் இருந்த சிறிய துவாரம் வழியே துப்பாக்கியை நுழைத்து இரண்டு போலீஸ் அதிகாரிகளை சுட்டுக் கொன்றான். போலீஸ் பின்வாங்கியது. அந்த குழப்பமான நேரத்தில் அவர்கள் கண்களை ஏமாற்றிவிட்டு, சரதியல் காட்டுக்குள் நுழைந்து தப்பிச் சென்றான்.
மீண்டும் உட்டுவான்கந்த காட்டுக்குள் திரும்பிய இந்த எலியை பிடிக்க போலீஸ் விரித்த எந்த வலையும், விலையும் பலன் தரவில்லை. அரசு அதிகாரிகளும், போலீஸ் அதிகாரிகளும் மக்களிடம் சென்று பேசினார்கள். சரதியலை பிடிக்க உதவுமாறு கோரினார்கள். பரிசு தருவதாக பேரமும் பேசினார்கள். ஆனால் மக்கள் சரதியலை காட்டிக் கொடுக்க முன்வரவில்லை. ஏன்? அவர்கள் சரதியலைக் கண்டு அஞ்சினார்கள். அதே நேரம் அவன் செய்த நன்மைகளை எண்ணி மௌனம் காத்தார்கள். இதனால் போலீஸ் பெரும் பின்னடைவை சந்திக்க நேர்ந்தது.
5. கொன்றால் பாவம்! தின்றால் போச்சு!
போலீஸ் எவ்வளவோ முயன்றும் மக்களை சரதியலுக்கு எதிராக திருப்ப முடியவில்லை. இறுதியாக அதர பழைய பார்முலாவை போலீஸ் கையில் எடுத்தது. சரதியல் கூட்டத்தில் வீக்கான எலி எதுவென்று தேடினார்கள். நீண்டகால தலைமறைவு, கொள்ளையடிப்பதை தானம் செய்வதில் திருப்தியின்மை, கொள்ளையடித்து வயிற்றை நிரப்ப முடியாததால் ஏற்பட்ட விரக்தி என்று பல கசப்புகளுடன் இருந்த அந்த எலி தானாகவே வந்து தோதாக தலையைக் கொடுத்தது. அதைத்தான் எதிர்பார்த்து காத்திருந்த போலீஸ் வாகாக எலிக்கு ரொட்டித் துண்டுகளை போட்டதுடன், வழக்குகளை தள்ளுபடி செய்வதாகவும், நிறைய பணம் கொடுப்பதாகவும் சொல்லி, ஆசையைத் தூண்டி விட்டது.
எலிக்கு இன்னமும் பயம் போகவில்லை. கொஞ்சம் உண்ட வீட்டு விசுவாசம் எல்லாம் பேசியது. பணத்தை விட பதவியை அடைவதில் எலிக்கு அக்கறை அதிகமாக இருந்ததை மோப்பம் பிடித்த போலீஸ்… அதற்கும் ஏற்பாடு செய்வதாக சொல்லவே சிறிமாலே என்ற அந்த எலி, நரியாக மாற ஒப்புக் கொண்டது. “கொன்றால் பாவம் தின்றால் போய்விடும்” என்று சிறிமாலேவுக்கு தூபம் போட்டு வேட்டைக்கு தயாராக சொல்லி அனுப்பி வைத்தது காவல்துறை.
போலீஸ் சுற்றி வளைத்துவிடும் என்ற நிலையில், பாதுகாப்பாக இருக்க இடம் தேடி அலைந்து கொண்டிருந்தார்கள் சரதியலும் மாமலே மரைக்காயரும். சிறிமாலே அவர்களை சந்தித்து பாதுகாப்பான இடம் பார்த்து வந்து இருப்பதாக சொன்னான். மாமலே அவனை நம்பவில்லை என்றாலும், சரதியல் சிறிமாலே மீது நம்பிக்கை வைத்தான்.
மாவனல்ல என்ற இடத்தில் சிறிமாலே ஏற்கனவே திட்டமிட்டு தேர்ந்தெடுத்திருந்த வீட்டுக்கு இரட்டையர்களை கூட்டிக் கொண்டுச் சென்றான். அந்த இடத்தில் அவர்களை தங்க வைக்க வேண்டிய அனைத்தையும் சிறிமாலே ஏற்கனவே செய்தும் வைத்து இருந்தான். குறிப்பிட்ட நாளில் திடீரென்று போலீஸ் வீட்டை முற்றுகை செய்தது. சரதியலும், மாமலே மரைக்காயரும் வைத்திருந்த துப்பாக்கிகளில் இருந்த தோட்டாக்களைத் தவிர மற்ற தோட்டாக்களை தந்திரமாக சிறிமாலே எடுத்துச் சென்று இருக்க… போலீசுக்கு துணிவு கூடியிருந்தது. சிறிமாலே செய்த துரோகம் தெரியாமல் இரட்டையர்கள் போலீசுடன் யுத்தம் செய்யத் தொடங்கினார்கள். இருவரும் சளைக்காமல் போலீசுக்கு தண்ணிக் காட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இருந்த வீட்டை போலீசால் நெருங்க முடியவில்லை.
ஆனால்…..
சிறிது நேரத்துக்குப் பின் தான் தோட்டாக்கள் தீர்ந்து வருவதும், தோட்டா வைத்திருந்த பெட்டி காணாமல் போயிருப்பதும் அவர்களுக்குத் தெரிய வந்தது. துப்பாக்கிச் சூட்டில் சரதியல் காயமடைந்தான். அதனால் ஆத்திரம் கொண்ட மாமலே… போலீஸ் சார்ஜண்ட் உட்பட இரு காவலர்களை நோக்கி அடுத்தடுத்து சுட்டான். அதில் ஒரு போலீஸ்காரர் சம்பவ இடத்திலேயே இறந்தார். என்றாலும் போலீஸ் தோட்டாக்கள் இல்லாமல் சிக்கிக் கொண்ட, மாமலே மரைக்காயரையும், சரதியலையும் துப்பாக்கி முனையில் கைது செய்தது.
இம்முறை போலீஸ் மிக கவனமாக இருவருக்கும் கைகால்களை பிணைத்து சங்கிலியால் கட்டி, பூட்டு போட்டு கோர்ட்டில் கொண்டுவந்து நிறுத்தியது. கண்டி நீதிமன்றம் அவர்களுக்கு எதிரான வழக்கை வேகமாக நடத்தி இருவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அவர்கள் கைது செய்யப்பட்டு மரண தண்டனை பெற்ற செய்தி கேட்டு சிலருக்கு மனம் மகிழ்ச்சியால் துள்ளியது. பலர் இந்த இரட்டை ராபின்ஹூட்-களுக்காக வருத்தம் கொண்டார்கள். குறிப்பாக கேகாலை, மானவல்ல, ரம்புக்கன, பொலகாகவலை, குருநாகல் போன்ற ஊர்களில் வாழ்ந்த மக்கள் மரணதண்டனை நடக்க இருந்த சிறையை நோக்கி படையெடுத்தார்கள். தங்களை பாதுகாக்க வந்த கேடயத்தை, மரணத்துக்கு கையளிக்க அவர்கள் விருப்பம் கொள்ளவில்லை.
ஆனாலும், அறிமுக பகுதியில் குறிப்பிடது போலவே, தண்டனை நிறைவேற்றும் நாளில் சரதியலையும் மாமலே மரைக்காயரையும் தூக்கிலிட்டது அரசு.
6. இது நீதியா? பழி தீர்க்கும் வேட்டையா?
சரதியலும் மாமலே மரைக்காயரும் ஒன்றும் நியாயவான்கள் கிடையாது. உயிரை பறிப்பதும், பிறருக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் வண்ணம் ஆயுதங்களை உபயோகிப்பதும் எந்த நாட்டின் சட்டத்திலும் சரியென்று குறிப்பிடவில்லை. கொள்ளையடிப்பது குற்றமே. ஆனால் அவர்கள் இருவரும் பணக்காரர்கள் மீதான கோபத்தில் அவர்களிடமிருந்து பொருட்களை பறித்தார்கள். அவர்களை மிரட்டி பணம் சேர்த்தார்கள். நியாயமாக இதை அரசாங்கம் செய்திருக்க வேண்டும். நீதி பணக்காரர்களை தண்டித்திருக்க வேண்டும்.
ஆனால்…. அப்படி ஒன்றும் நிகழவில்லை. ஏழைகள் இறுதிவரை ஏழையாகவே இருக்கிறார்கள். பணக்காரன் மேலும் மேலும் சேர்த்து கொழுத்து வெடித்து விடும் அளவுக்கு பெருத்துக் கொண்டே போகிறான். ஏழைக்கு அரசுகள் முகத்தை மறைத்துக் கொள்வதும், பணக்காரர்களுக்கு சலுகைகளை வாரிக் கொடுப்பதும் உலகத்தில் நிகழும் மிகப்பெரிய அநியாயம். நீதித்துறை இதையெல்லாம் கண்ணைக் கட்டிக்க கொண்டு வேடிக்கை பார்ப்பதால்தான் சரதியல், மாமலே போன்ற குற்றவாளிகள் உருவாகிறார்கள். அரசுகள் அவர்களை தீவிரவாதிகள், கொள்ளையர்கள் என்றெல்லாம் எளிதாக முத்திரைக் குத்தி முடக்கவே பார்க்கும்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் தொடங்கி உள்ளூர் கவுன்சிலர் தேர்தல் வரை வெற்றிகளை இன்று நிர்ணயிப்பது பணக்காரர்கள் தான். ஒருநாட்டின் பொருளாதார அறிக்கையை தயாரிக்க அரசாங்கம் பணக்காரர்களை அழைத்து கருத்து கேட்கிறது. அவர்கள் காட்டும் திட்டத்தை ஏற்றும், அவர்கள் வளர்ச்சி விகிதத்தை வைத்தும் நிதிநிலை அறிக்கை உருவாகிறது. வங்கி கடன் முதல் தள்ளுபடி வரை பணக்காரர்களுக்கு சலுகையாக வாரிக் கொடுக்கிறது அரசு. ஆனால் ஏழைக்கு வட்டிக்கு வட்டி போட்டு, அவனது கோமணத்தையும், மானத்தையும் பறிக்கின்றன வங்கிகள். அதை நியாயம் என்கிறது சட்டம்.
ஏழை வாங்கிய கடனை திரும்பிச் செலுத்த முடியாத போது, அவனது நன்மதிப்பை சிபிள்(CIBIL) என்ற பெயரில் குறைத்து அவன் மேற்கொண்டு கடன் வாங்க இயலாதவாறு செய்யும் இந்த அரசுகள்…. பணக்காரன் செய்யும் மோசடிகளை கண்டுக் கொள்வதே இல்லை. இது அநீதி என்று எந்த நீதிமன்றமும் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்வதற்கு கூட விரும்புவது கிடையாது.
ஏழைகளை யாரேனும் காப்பற்ற வந்தால் அவன் குற்றவாளியாக்கப்படுகிறான். அவன் குடும்பம் சீரழிக்கப்படுகிறது. இறுதியில் காவல்துறை அவர்களை சுட்டுக் கொன்று நீதியை நிலைநாட்டியதாக நாடகமும் ஆடுகிறது. சரதியலும் மாமலேயும் குற்றவாளிகள்தான். ஆனால் பணக்காரனுக்காக அவர்களைக் கொன்றது, ஏழைகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியே…. அரசும், நீதியும் நல்லவர்களால் ஆளப்படாவிட்டால் இன்னமும் கூட நிறைய… சரதியலும் மாமலே மரைக்காயர்களும் ராபின் ஹூட் அவதாரம் எடுப்பார்கள். இது தீராத யுத்தம். தீர்க்கப்படவேண்டும் என்றால் நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு வேண்டும்.
நீதியின் மீது நீதி கேட்டு வழக்கு தொடுக்க இங்கே சட்டத்தில் வழிவகை வேண்டும். அரசுகளை தவறு இழைக்கும் நேரத்தில், மக்களே அவர்களை வாபஸ் பெற அரசியல் சாசனத்தை திருத்தவும் வேண்டும்.
இந்த படைப்பை நீங்கள் விரும்பினால்…. உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு பகிருங்கள். எங்கள் வெப்சைட்டை பின் தொடருங்கள். மறக்காமல் கீழே கமெண்ட் செய்து எங்கள் படைப்புக்களை மெருகேற்ற உத்வேகம் கொடுங்கள்.
#இலங்கை வரலாறு #உண்மை குற்றக் கதைகள் #ராபின் ஹூட் வரலாறு #தமிழ் வரலாற்று கட்டுரை #கொள்ளையர்கள் வரலாறு #British காலனி வரலாறு சரதியல் மாமலே


Comments