காற்று வெளியிடை கண்ணம்மா
காற்று வெளியிடை கண்ணம்மா
(நேரலையில் ஒரு காதல் கதை….)
தொடர் கதை
1. முகிலனைத் தேடும் முகிலினங்கள்
வங்கக் கடலோடு இரவெல்லாம் காதலில் திளைத்து மகிழ்ந்திருந்த உற்சாக புன்னகையை காட்டியபடி, கடமையாற்ற கிளம்பியிருந்தான் அருணன் என்னும் பகலவன்.
‘மெரினாவின் மணல்வெளியை ஓயாது முத்தமிட்டு மகிழ்ந்திருந்தாள் கடல்குமரி. தீராத அலையெனினும் தீரமுடன் போராடி, அந்நியனின் கண்ணிலெல்லாம் மணல்பொடியை தூவிவிட்டு, சமுத்திரத்தின் மச்சங்களை அள்ளிவந்த கட்டுமரங்களின் அணிவகுப்பு, ஆழ்கடலின் ஆபத்துக்களில் எல்லாம் வென்று வரும் வெள்ளித் தேர்களாக காட்சியளித்தது.
தெள்ளு தமிழ் கொஞ்சியாடும் நாவாளர் அண்ணாவின் சதுக்கம் தொட்டு, கலங்கரை விளக்கு வரையான காமராஜர் சாலையெங்கும் நடைப்பயிற்சி செய்ய வந்தவர்கள் தலைகளால் நிறைந்திருந்த அற்புத காலை அது……
பலரின் காதுகளில் மாட்டியிருந்த ஹெட்-போன்களிலும் ஒலித்துக் கொண்டிருந்த வானம்பாடி எப்.எம்-மில் அறிவிப்பாளரின் வசீகர குரல் ரீங்காரமிட்டது!.
“காற்றலையில் கதை சொல்ல வரும் உங்கள் வானம்பாடி எப்.எம்மின் அன்பு அறிவிப்பாளன் நான் மகேஷ். நேரம் சரியாக ஆறு மணி முப்பது நிமிடங்கள். அடுத்த முப்பது நிமிடங்கள் உங்களுக்கென்று….. புலரும் புதுப் பொழுதை பொலிவோடு கொண்டாட கவிப் படிக்கப் போகின்றேன் ”, என்று பேசத் தொடங்க....
நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த இரண்டு நண்பர்கள் காதில் மாட்டியிருந்த ஹெட்-போனை கழற்றினர்.
“சந்துரு சார் எங்க நம்ம முகிலனை பத்து நாளா வானம்பாடி எப். எம்-ல காணோம். மனுஷன் என்னமா கதை சொல்லுவான்யா. இப்போ யார் யாரோ சொல்லறாங்க ஒன்னும் கேட்க பிடிக்கலையே”, என்றார் சவுந்தர்.
“ஆமாம் சார், காலைல வாக்கிங் போறப்ப அந்த குரலை கேட்டுட்டு நடந்தா, போற தூரமே தெரியாது. காதுக்குள்ளே தமிழ் உச்சரிப்பில் அந்தாளு அவ்வளவு அழகா கதை சொல்லுவான். இப்போ பத்து நாளா யார் யாரோ வராங்க. என்னென்னமோ சொல்லறாங்க. ஆனா மனசுல ஒட்டவே மாட்டேங்குது. முகிலனுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே சார்?”, என்றார் சவுந்தர். இருவரும் பேசியபடியே கடக்க…
நேரம் காலை ஒன்பது மணி.
வடபழனியில் இருந்து பெசன்ட் நகர் செல்லும் பேருந்தின் மொத்த கொள்ளளவு பயணிகள் காதையும் ஆக்கிரமித்து இருந்த வானம்பாடி எப்.எம் செயலியில், அனைவரின் கவனத்தையும் ஒரு வசீகர குரல் கட்டிப் போட்டு கதை சொல்லிக் கொண்டிருந்தது.
“செழித்து திளைத்த மலையின் சரிவில், வாளித்து பொங்கி சரிந்த காவிரி”.... என்று தான் எழுதிய கதையொன்றை, ரசித்து ருசித்து தன் உணர்வுகளால் நிறைத்து வார்த்தை வடிவம் கொடுத்துக் கொண்டிருந்தார், முகிலன். முகிலன் குறித்து ஒரு அறிமுகம் இங்கே தேவை.
முகிலன்....
அறுபது வயது இளைஞர். ஐம்பதுக்கும் மேற்பட்ட கதைகள், நூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகள், இருபது தொடர் கதைகள், சில திரைப்படங்களுக்கு வசனகர்த்தா, திரைப்பட பின்னணி இசைக்கலைஞர், என்று பன்முகத் திறமை கொண்ட திறமையான எழுத்தாளர். தன் கதைகளை அவரே தன் குரலில் கூறும் போது, உணர்வலைகளும், நிகழ்வுகளும் நம்மை அறியாது அவர் கூறும் இடத்திற்கே பயணம் செய்ய வைக்கும்.
வெள்ளை சட்டையும், நிறைவாக வேட்டியும் கட்டியிருக்கும் இவரது எளிமையும், நீள்வட்ட முகத்தை ஆக்கிரமித்திருக்கும் மூக்குக் கண்ணாடியும், நீண்ட நாசிக்குத் தடைபோட, தழைத்து வளர்ந்த அடர் மீசையும், வளவென்று முகச்சவரத்தில் வழித்தெடுத்து வனப்பில், வீங்கிய கன்னங்களும் முகிலனின் முக அடையாளங்கள். ஐந்தடி ஏழங்குலத்தில் வளர்ந்திருந்தவரை, இன்னமும் இளமையாக காட்டும் தினவெடுத்த தோளும், அகன்ற மார்பும், மார்பை பிணைத்து தாங்கிய தொந்தி இல்லாத இடுப்பும் கூறும்… இவரின் முதுமையடையாத இளமையின் எழிலை.
எழுத்தாளராக வாழ்வை தொங்கி, தன் குரலின் வளமையால் மேடைகளை கட்டிப்போட்டு, திரைப்படங்களில் பல கதாபாத்திரங்கள் பேசும் குரலாக ஜொலித்தவர். இன்று, அலைபேசியும், கணினியும் வளர்த்து வரும் செயலிகள் தாக்கத்திலும், தன்னை இணைத்துக் கொண்டு தனக்கென தனி முத்திரையை பதித்தவர்.
“என்ன குமாரு வானம்பாடி எப்.எம்-ல நம்ம முகிலன ஆளையே காணோம். வெறுசா இக்குதுப்பா. அண்ணாத்தே சவுண்டு இல்லாமே செம காண்டா ஆகுதப்பே...” என்ற ஆட்டோக்காரர் ஆறுமுகத்தை... பார்த்து மற்றொரு ஆட்டோக்காரர் பேசத் தொடங்கினார்.
“இன்னா ஆறுமுகம் உனக்கு மெய்யாலுமே மேட்டர் தெரியாதா...??. முகிலன் சாரோட சம்சாரம் போன வாரம் ஹார்ட் அட்டாக்ல தவறிருச்சுப்பா. ஆழ்வார் திருநகர் இல்ல….. அங்க நடிகர் முரளி பிளாட்டான்டதான்பா முகிலன் ஊடு... நேத்து அந்த ஏரியாக்கு ஒரு சவாரி போனப்பதாம்பா எனிக்கியே மேட்டர் உசாராச்சு” என்ற குமாரிடம் முகிலன் மனைவி குறித்து இன்னும் விபரம் கேட்கத் தொடங்கியிருந்தார் ஆட்டோக்காரர் ஆறுமுகம்.
பரபரத்து பணியில் மூழ்கி இருக்கும் சென்னையின் மதிய உணவு இடைவேளை…..
வானம்பாடி எப்.எம் அலுவலகத்தில் உணவறைக்கு அருகில் அவன் நின்று கொண்டிருந்தான்.
சதீஷ் ….. இதுதான் அவனது பெயர்.
வானம்பாடி எப்.எம்மில் செய்தி பிரிவில் பணியாற்றி வரும் இருபத்தியேழு வயது இளைஞன். பல நேரங்களில் அவன் வேலை செய்வது யாருக்குமே தெரியாது. சில நேரங்களில் வேலை செய்வதாக சொல்லிக் கொண்டே இருப்பான். வேலையில் அவன் அடிக்கும் ஓ.பி-க்கும் சேர்த்து வேலை வாங்கி விடுவாள் அவன் மனைவி .
எதையோ எதிர்பார்த்து காத்திருந்த சதீஷை நோக்கி அவனது சக நண்பன் ஒருவன் புன்னகையோடு வந்தான்.
“என்ன மச்சான் இங்க நிக்கறே? சாப்பிட போகலே… வேணும்ன்னா வாடா மச்சி நான் தலைப்பாகட்டிக்குதான் பிரியாணி சாப்பிட போறேன். சேர்ந்தே சாப்பிட போகலாம்”, என்று அழைத்தான் சதீஷின் சக நண்பன்.
சதீஷ் இலேசாக முகத்தை சிரித்தபடி வைத்துக் கொண்டு பேசினான். “இல்லே மச்சி நீ போய்ட்டு வா… நான் வீட்டு சாப்பாட்டுக்கு வெயிட்டிங். என் மனைவி கஷ்டப்பட்டு செஞ்சு அனுப்பற லுஞ்சுக்கு எந்த ஓட்டல் சாப்பாடும் ஈடாகாது மச்சி. நீ கெளம்பு”, என்றான் சதீஷ்.
சரி என்பது போல தலையாட்டிவிட்டு அந்த சக நண்பன் நகர முயன்ற போது, சதீஷின் அலைபேசி ஒலித்தது. தொடுதிரையில் சிரித்துக் கொண்டு தெரிந்த மனைவியின் படத்தை பார்த்து பவ்வியமாக மனநிலைக்கு மாறி, குரலில் கனிவு கூட்டி சதீஷ் பேசினான்.
“ஹாலோ... சொல்லுமா”?
“ஏங்க.. சாப்பிடீங்களா”? என்று ஒலித்தது அவன் மனைவியின் குரல்..
“இதோம்மா உன்னோட சமையலை எதிர்பார்த்து மாமா வெயிட்டிங் செல்லம். நீ ஆசையோட செஞ்சு அனுப்பற ரசம் சோறுக்கும், ஆச்சி ஊறுகாய்க்கும் ஈடு இணை இருக்கா? இந்த மாநிலத்துலயே யாருக்கும் அப்படியொரு கைப்பக்குவம் இல்லே ராசாத்தி”, என்று குழைந்தான் சதீஷ்.
“அய்யய்யோ நான் சமைக்கலைங்க. எனக்கு மனசு சரி இல்லே. உங்க எப்.எம் இன்வெஸ்டிகேஷன் டீம் முகிலன் பத்தி விசாரிச்சுட்டு இருந்தார்களே!. ஏதாவது தகவல் கிடைச்சதா? அத கேட்கத் தான் நான் கூப்பிட்டேன். நீங்க இன்னைக்கு ஹோட்டல்ல சாப்பிட்டுக்கங்க. நான் அவருக்காக விரதம் இருக்கேன். நீங்க ராத்திரி வர்றப்ப சிம்ரன் ஆப்பக்கடைல ஆப்பமும், மட்டன் சுக்காவும் பார்சல் வாங்கிட்டு வந்துடுங்க”. என்ற மனைவியை நினைத்து இதயத்தில் திட்டத் தொடங்கினான் சதீஷ்.
“சரிம்மா… பரவாயில்லே. நான் முகிலன் பத்தி தகவல் கிடைச்சதும் சொல்லறேன். நீ டயர்டா இருப்பே. போய் ரெஸ்ட் எடு ராஜாத்தி”, என்று இணைப்பை துண்டித்தவனை முறைத்தபடி நின்று கொண்டிருந்தான் சக நண்பன்.
“அது ஒன்னும் இல்லே மச்சி. என் வைப்புக்கு கொஞ்சம் உடம்பு முடியலையாம். என்ன கடைல சாப்பிடுக்க சொன்னா? அதென்னமோ நடந்தா உடம்பும் கூட கூட வருதாமே? படுத்துக்கலாம் போலவே இருக்காம். ஆமாம் நீ எங்க போறே சொன்ன? தலைப்பாகட்டிக்கா? இரு நானும் வர்றேன்”, என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றான் சதீஷ். ஆனால் அவன் நண்பன் அவனை பார்த்து ஒரு கிண்டலான புன்னகையை உதிர்த்து விட்டு பேசினான்.
“அடேய் நீ சொன்ன எல்லாத்தையும் பொறுத்துக்கலாம்டா. ஆனா உன் வைப் வைக்கற ரசத்துக்கும், தலைப்பாக்கட்டி பிரியாணிக்கும் ஒப்பீடு செஞ்ச பாரு… அந்த கொடுமையை தான் தாங்கிக்கவே முடியல. உன் வைப்போட கைப்பக்குவதுக்கு தலைப்பாக்கட்டி பிரியாணி சரியா வராது. நான் பிரியாணி சாப்பிட போகல, தக்காளி சோறு சாப்பிட போறேன்”, என்று கூறி கிளம்ப முயன்றான் அவன் நண்பன்.
“கோவிச்சுக்காதே மச்சான். இன்னைக்கு பிரியாணி என்னோட ட்ரீட். ஆசைய காட்டிட்டு மோசம் செய்யாதே வாடா”, என்று அவனை பிடித்து இழுக்க கொண்டு லிப்டுக்குள் நுழைந்தான் சதீஷ்.
“மச்சி, உன் வீட்லயும் இன்னைக்குதான் விரதம்? எங்க வீட்லரெண்டு நாளாவே விரதம். நானும் என் புள்ளைங்களும் கடைல தான் சாப்பிடறோம். எப்படியாவது அந்த மனுஷன் வந்து சேரனும்... இல்லன்னா நம்ம வீட்டுக்காரிங்க நமக்கு சோறு இல்ல, பச்ச தண்ணி கூட குடுக்க மாட்டாங்க” என்று தன்னுடைய வேதனையை பகிர்ந்தான் நண்பன்.
கடந்த நான்கு நாட்களாக ஒட்டுமொத்த வானம்பாடி எப்.எம் குழுவும், ஊர், ஊராக முகிலனை தேடி வருகின்றனர். ஊரெல்லாம் அவரைப் பற்றிய பரபரப்பும் பேச்சும் அதிகமாகிக் கொண்டே இருந்தது.
அதே நேரம்…..
வடபழனி காவல் நிலையத்தில் இரண்டு இளைஞர்கள் தலைமைக் காவலருக்கு முன்பாக கவலை தோய்ந்த முகத்தோடு அமர்ந்திருந்தார்கள். அவர்களை வெளியே இருக்கும் ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து சிலர் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
தொடரும்……





Comments
Post a Comment