தமிழ்நாட்டின் நவீன அரசியல் களம்

 


தமிழ்நாட்டின் நவீன அரசியல் களம்

அரசியல் என்னும் ஆக்கப்பூர்வமான பணியை இன்றைய தலைமுறை எப்படி பிரதிபலிக்கிறது?. அல்லது எப்படி புரிந்த கொண்டிருக்கிறது. அரசியலை தவறான புரிதலுடன் கற்றுக் கொண்டு...  இல்லை! இல்லை! கற்கவே முயற்சிக்காமல்... தலைவராக மாறி ஆட்சியை நடத்திவிடலாம் என்ற ரீதியிலேயே இன்றைய தலைமுறை இருப்பதாய் எனக்கு தோன்றுகிறது. நவீன அரசியல் என்ற இந்த கட்டுரை அரசியலின் பால பாடத்தை எங்கிருந்து தொடங்கலாம் என்னும் புள்ளியில் இருந்து விரிகிறது. முழுமையாக படியுங்கள்! அரசியல் என்ற உன்னத பணியின் மேன்மையை உணர்ந்து கொள்ளுங்கள். பிரதிலிபி வாசகர்களுக்கு நவீன அரசியலை குறித்து விரிவாக விளக்க கிடைத்த வாய்ப்பை இங்கே சரியாக பயன்படுத்த்திக் கொள்ள முயற்சிக்கிறேன்.

1.தமிழக அரசியல் களம் 

அதிகாரத்தின் அரங்கமும், அறத்தின் அத்துமீறலும் மட்டுமே நவீன தமிழக அரசியலில் இருக்கிறது என்றால் அதுதான் நிதர்சனமான உண்மை. இது கொஞ்சம் வலிக்கிறது என்றாலும், நேரடியாக குற்றம் சொல்கிறது என்றாலும் அதுவே எதார்த்தமும் நடைமுறையயுமாகவும் இருக்கிறது. எப்படி?......

தமிழ்நாட்டின் அரசியல் வரலாறு ஒரு காலத்தில் சமூக நீதி, சுயமரியாதை, மொழி அடையாளம், அறிவுசார் இயக்கம் ஆகியவற்றால் கட்டமைக்கப்பட்ட உயிர்ப்பான களமாக இருந்தது. ஆனால் இன்றைய அரசியல் களம், அந்த உயரிய சிந்தனைகளின் சிதைந்த பிரதிபலிப்பாக மட்டுமே மாறி நிற்கிறது. கருத்தியலின் இடத்தை ஓட்டு அரசியல் கணக்குகள் மட்டுமே பிடித்துள்ளன; கொள்கைகளின் இடத்தை கூட்டணிகள் கைப்பற்றியுள்ளன; மக்களோ அரசியலின் மையமாக இல்லாமல், தேர்தல் காலக் கணக்கில்... காசுக்கு ஓட்டு போடும்  கண்ணியமற்ற ஒழுக்க குறைபாட்டால் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் புள்ளிவிவரங்களாக மாறி தங்கள் அதிகாரத்தை தொலைத்து நிற்கிறார்கள். 

ஊழல் பற்றி பேசும் மக்கள், காசு வாங்கி கொண்டு போட்ட ஓட்டு கூட ஊழல் தான் என்பதை எப்போது உணர போகிறார்கள்? ஊழல் செய்ய ஒப்புதலை தந்துவிட்டு ஊழல், லஞ்சம், வறுமை என்றெல்லாம் கூப்பாடு போடும் மக்கள் அரசியலை கெடுத்ததில் முக்கிய பங்காற்றுகிறார்கள். அரசியலை சாக்கடையாக மாற்றிவிட்டு, கட்சிகளைப் பற்றி கருத்துக் கூறும் நம் முட்டாள்தனம் ஒழியாமல், அரசியலின் அடிச்சுவடு இங்கே மாறப்போவதே இல்லை. 

2. கொள்கை அரசியல் → கணக்குப் அரசியல்

இன்றைய தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் பெரும்பாலும் கொள்கை சார்ந்த அரசியலை விட, தேர்தல் வெற்றியை மையமாகக் கொண்ட “எண்ணிக்கை அரசியல்” அல்லது "ஓட்டு அரசியலில்" மட்டுமே பிழைப்பை நடத்தி வருகின்றன.  யார் எதிரி? யார் நண்பன்? என்பதை இங்கே கொள்கைகள் தீர்மானிப்பதில்லை; தேர்தல் கணக்குகளே தீர்மானிக்கின்றன. அதிலும் ஜாதி வாரி சங்கங்களுக்கு வழங்கும் சீட் முதல் திரைமறைவில் தரும் சூட்கேஸ் வரை இருக்கும் நடைமுறைகளே அரசியல் வெற்றிகளை வகுக்கின்றன என்றால் அதுதான் உண்மை. நேற்று கடுமையாக விமர்சிக்கப்பட்டவன், இன்று மேடையைப் பகிரும் தோழனாக மாறுவது என்பது இங்கு அரசியல் விந்தை அல்ல; வழக்கமான நடைமுறையாகிவிட்டது. 

அதன் உச்சம் என்ன தெரியுமா? ED தொடங்கி சி.பி.ஐ, நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என்று தன்னாட்சி அமைப்புகளை வைத்து நடக்கும் நாடகங்களே இன்று அரசியலை நியாயமாகிக் கொண்டிருக்கின்றன என்றால் உங்களுக்கு கசப்பாக இருக்கிறதா?.... அப்படியென்றால் நீங்கள் இன்னமும் அரசியல் பழகவில்லை என்பதே நிதர்சனம். மொழி, கொள்கை, இன உணர்வு என்றெல்லாம் இருந்த காலம் மாறி இன்று, யார் யாரோ பேசும் அறியாமை பேச்சுகளை நம்பி பின்னால் ஓடும் அவலம் அரசியலை கட்டாய பாடமாகக்காமல் விட்டதன் மோசமான பின்விளைவே. 

3. திராவிட மரபின் சிதைவு

திராவிட இயக்கம் சமூக சமத்துவத்தின் உரக்கக் குரலாக இருந்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் இன்று அந்த மரபு, பெயரளவிலேயே உயிர்ப்புடன் உள்ளது. சுயமரியாதை பேசும் மேடைகளில் அதிகார அகந்தை தாண்டவமாடுகிறது. சமூக நீதி பேசும் அரசியல், பதவி பகிர்வு, வாரிசு அரசியல், அதிகார மையப்படுத்தல் ஆகியவற்றில் தன்னை முழுமையாக மூழ்கடித்துள்ளது. கேள்வி எழுப்பும் குரல்கள் கட்சிக்குள் ஒடுக்கப்படுகின்றன; விசுவாசம் மட்டுமே அரசியல் தகுதியாக மாற்றப்பட்டுள்ளது. மற்றவரை அழித்துவிட்டு, அவன் கல்லறை மேல் சிங்காசனம் அமைக்கவே இங்கே அரசியல் பழக்கம் உருவாகி இருக்கிறது. பதவியை பிடிக்க எவர் காலையும் பிடிக்கலாம், உட்கார்ந்த பின் காலை வாரியும் விடலாம். இதற்கு பெயர் அரசியல் என்று நம்புகிறது ஒரு கூட்டம். அதுவே உண்மை என்று கடைபிடிக்கிறது மற்றொரு இயக்கம். கொள்கைக்காக வளர்த்த கட்சியையே எதிர்த்த இயக்கங்கள் வாழ்ந்த மண்ணில் இன்று, கொள்கையை காற்றில் விட்டுவிட்டு பிள்ளைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது திராவிட மரபின் சிதைவு என்றால் அதில் தவறே இல்லை. அதற்காக நேற்று முளைத்த கட்சிகளெல்லாம் அறிவார்ந்த கொள்கை கொண்டவர்கள் என்று நம்பிவிடலாமா என்றால் இல்லை. அவர்களுக்கு கொள்கை என்ன என்பதிலேயே குழப்பம். சிலருக்கு குறிப்பிட்ட சில பிரச்சனைகளை தவிர தவிர வேறொன்றும் பேசி அரசியல் செய்ய இங்கே தெரியாது. மொழிப்போர் தியாகிகள் யார் என்றோ... தமிழனின் வரலாறு, போராட்ட களங்கள், வாழ்க்கை முறை, பொருளாதார நிலை, கல்வி என்றெல்லாம் எதையும் அறிந்திராத கூட்டம் தான் இன்று அரசியலை பேசிக் கொண்டிருக்கிறது. தமிழக சட்டசபை மாண்புகள் குறித்தோ, சட்ட வரையறைகள், மத்திய மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அமைப்புகளின் பணிகள் குறித்தும் தெரியாத கூட்டம் தான் இன்று இங்கே அரசியல் செய்ய புறப்பட்டு இருக்கிறது. 

4. எதிர்க்கட்சியின் அரசியல் வறட்சி

ஆட்சியை விமர்சிப்பது மட்டுமே எதிர்க்கட்சியின் பணி அல்ல; மாற்று அரசியல் கண்ணோட்டத்தை முன்வைப்பதே அதன் அடிப்படை கடமை. ஆனால் இன்றைய எதிர்க்கட்சிகள் பெரும்பாலும் வாக்குவாத அரசியலில் சிக்கிக்கொண்டு, வழிகாட்டும் அரசியலை மறந்துவிட்டன. ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் வேகம் இருக்கிறது; ஆனால் அதற்குப் பதிலான தீர்வுகளை முன்வைக்கும் தெளிவு இல்லை. இதனால் அரசியல் ஒரு அறிவுசார் விவாதமாக இல்லாமல், பரஸ்பர குற்றச்சாட்டுகளின் சந்தையாக மாறியுள்ளது. அரசியல் களத்தில் ஓநாய் யாரென்றே சொல்ல அஞ்சும் கட்சித் தலைவர்கள் தான் இன்று அரசியல் கட்சி வரிசையில் இருக்கிறார்கள். லஞ்சம், ஊழல், வரி ஏய்ப்பு, வருவாய்க்கு அதிகமாகி சேர்த்த சொத்துக்கள், அராஜக செயலால் விளைந்த வழக்குகளில் சிக்கி இருக்கும் நபர்களே இன்று எதிர்க்கட்சி வரிசையில் இருக்கிறார்கள். சிலரோ மதத்தையும், ஜாதியையும் வைத்து மாய வித்தைகளை காட்டி மக்களை ஏமாற்றிக் கொண்டும் இருக்கிறார்கள். மாநில வரையறை என்ன? ஒன்றிய வரையறை என்ன என்றே இன்னமும் தெரியாத கூட்டம் தான் அரசியல் செய்ய கிளம்பியும் இருக்கிறது. 

5. மத்திய அரசியல் – மாநில அரசியல் மோதல் : மக்கள் மறக்கப்பட்ட களம்

மத்திய–மாநில உறவுகள் இன்றைக்கு அரசியல் சண்டையின் மேடையாக மாற்றப்பட்டுள்ளன. மாநில உரிமைகள் பேசப்பட வேண்டும்; ஆனால் அது உண்மையான கூட்டாட்சிக் கோணத்தில் அல்லாமல், அரசியல் லாபக் கோணத்தில் பேசப்படுகிறது. ஒருபுறம் மத்திய அதிகார மையப்படுத்தல், மறுபுறம் மாநில உணர்ச்சிகளைத் தூண்டும் அரசியல்—இந்த இரண்டிற்கும் நடுவில் நசுங்குவது சாதாரண தமிழ்நாட்டு மக்கள் வாழ்க்கைதான். ஜி.எஸ்.டி முதல் நீட் வரை நிகழும் நாடகங்களை மத்திய அரசு செய்வதை உணராத கூட்டம் தான் இங்கே அரசியல் பேசிக் கொண்டும் இருக்கிறது. பிரச்சனையை பற்றிய பின்புலத்தை படித்தாவது தெரிந்து கொள்வோம் என்ற எண்ணமே இங்கே இருக்கும் நவீன அரசியல்வாதிகளிடம் இல்லை என்பதை கசப்பு என்றாலும் ஒப்புக் கொண்டேயாக வேண்டும். மத்திய அரசின் பிழைகளை, அதன் மறைமுக புறக்கணிப்புகளை உணராத மக்களினமாக தமிழக மக்கள் மாறி வருவது உண்மையிலும் வேதனையின் உச்சம். மத்திய அரசோ மாநில அரசோ மக்களுக்கு எதிராக யார் எதை செய்தாலும் அறிந்து கொள்ளும் ஆர்வத்தின் பரிணாம வளர்ச்சியை சொல்வதே அரசியல். உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் கட்சிகள் திரிக்கும் காட்சிகளை நம்பாமல் உண்மையை சொல்லும் அறிவார்ந்த புத்தகங்களை வாசிக்க வேண்டும். குறைந்த பட்சம் நவீன உலகத்தில் சாட் ஜி.பி.டியை யாவது உபயோகித்து பழக வேண்டும். ஆனால் இதையெல்லாம் செய்ய மாட்டேன் என்றும், போலிகளை மட்டுமே வாங்கி புத்தியை பேதலிக்க வைத்துக் கொள்ளுவேன் என்ற வீம்பும் தான் அரசியல் செய்ய போகும் நபர்களிடமும் இருக்கிறது. அவர்களை நம்பும் மக்களிடமும் இருக்கிறது. இது அபாயத்தின் உச்சம் என்று உணருங்கள்.

6. அரசியல் நாணயமின்மை : பேசுவதும் செய்வதும்

இன்றைய அரசியலில் மிகப்பெரிய நாணயமின்மை என்பது, பேசுவதும் செய்வதும் ஒன்றாக இல்லாததுதான். ஊழல் எதிர்ப்பு மேடைகளில் பேசுவோர், அதிகாரத்தில் வந்ததும் மௌனிகளாக மாறுகின்றனர். வெளிப்படைத்தன்மை வாக்குறுதிகள், ஆட்சியின் முதல் கோப்பிலேயே மறைக்கப்படுகின்றன. அரசியல் பொறுப்பு என்ற சொல், செய்தியாளர் சந்தைகளில் மட்டுமே உச்சரிக்கப்படும் அலங்கார வார்த்தையாகி விட்டது. பத்திரிக்கைகள் விலைக்கு வாங்கப்படுகின்றன. மீடியாக்கள் பொய்யை பரப்பி கல்லா மட்டுமே கட்டுகின்றன. உண்மையை பேச மறுக்கும் இந்த போலித்துவ பத்திரிக்கை, ஊடக அரக்கர்களை இயக்குவதும் பராமரிப்பதும் யார் என்றும் அவர்களை தோலுரிக்கவும் மறுக்கும் அல்லது மருங்கும் கூட்டமாக மக்கள் மாறிய அவலத்தை எண்ணினால் நெஞ்சம் நோகவே செய்கிறது. அரசியலை கண்காணிக்க வேண்டிய ஊடகங்கள், இன்றைக்கு அரசியலின் ஒரு கிளையாகவே செயல்படுகின்றன. கேள்வி கேட்கும் ஊடகங்கள் குறைந்து, விளம்பர அரசியலுக்கு மேடை அமைக்கும் ஊடகங்கள் பெருகியுள்ளன. சமூக ஊடகங்கள் உண்மையை வெளிச்சம் போட வேண்டிய இடத்தில், பொய்யையும் வெறுப்பையும் திட்டமிட்டு பரப்பும் ஆயுதமாக மாற்றப்பட்டுள்ளன. கருத்து அரசியல், இங்கு “டிரெண்ட்” அரசியலாக சுருக்கப்பட்டுள்ளது.

7. முடிவுரை : அரசியல் யாருக்காக?

நவீன தமிழ்நாட்டின் அரசியல், இன்று ஒரு முக்கியமான கேள்விக்கு பதில் தேட வேண்டிய நிலையில் உள்ளது—“இந்த அரசியல் யாருக்காக?” கட்சிகளுக்காகவா? தலைவர்களுக்காகவா? அல்லது உண்மையில் மக்களுக்காகவா?


மக்கள் மீண்டும் அரசியலின் மையமாக மாறாதவரை, இந்த களம் அதிகாரத்தின் அரங்கமாகவே தொடரும். அரசியல் அறத்தின் பாதையில் திரும்பாவிட்டால், அது வரலாற்றின் முன்னால் ஒரு நாள் வெட்கத்துடன் நின்றே தீரும்.

Comments

Popular posts from this blog

காதலர் தின சிறப்புக் கட்டுரை