QR குறியீட்டு - மோசடிகள் -
"இரண்டு ஆண்டுகளில் 5000 வழக்குகள்…."
QR குறியீட்டு - மோசடிகள்
Quick Response Codes
இப்படிப்பட்ட தகவல்களை என்றாவது நீங்கள் பத்திரிக்கைகளில் படித்ததுண்டா? படிக்கவில்லை என்றால் உங்களுக்குத்தான் இந்த தகவல்கள் மிகவும் அவசியம். ஒருவேளை நீங்கள் இதை படிக்காமல் விட்டுவிட்டால் 200 கோடி ரூபாய் மோசடி.... நாளை 2000 கோடி ரூபாய் மோசடியாக மாறுவதற்கு நீங்களே காரணமும் ஆகிவிடுவீர்கள்.
“திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்று அன்றே பாடினார் மக்கள் கவிஞர் என்று போற்றப்படும் பட்டுக்கோட்டையார். இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் அத்தியாவசியமான எல்லா பொருட்களையும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலமாக பெறும் நடைமுறைக்கு நாம் மாறியிருக்கிறோம். இங்கே தான் திட்டம் போட்டு திருடும் கூட்டம் விதவிதமான பொறிகளை அமைத்து இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொண்டோமா என்று கேட்டால்…………… பதில்-
இல்லை என்பதுதான். எளிமை, சுதந்திரம், சோம்பேறித்தனம் என்று சகலத்தையும் இன்று நாம் நம் மூளைக்குள் பதிவு செய்து வைத்துள்ளோம்.
இந்த சோம்பேறித்தனம் இன்று நமக்கு பல வகையில் பேராபத்தாக மாறிக் கொண்டு இருக்கிறது. கடைக்கு செல்ல பையை எடுப்பதில் தொடங்கி பர்ஸை சுமந்து செல்வதை கூட இன்றைய நவீனயுக நாயகன் நாயகிகள் விரும்புவது இல்லை. அதை அவர்கள் கவுரவ குறைச்சலாக கருதுகிறார்கள். அந்த சின்ன பொறியை ஆழமாக பிடித்துக் கொண்டிருக்கும் திருட்டு கும்பல் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறார்கள் தெரியுமா? டிஜிட்டல் பண பரிவர்த்தனையை நாம் குறை சொல்லவில்லை. அதில் தவறும் இல்லை. ஆனால் நாம் செய்யும் சில தவறுகள் எத்தனை ஆபத்தானதாக இருக்கிறது என்பதை நம் மூளைக்கு புரிய வைக்கும் முயற்சியே இந்த கட்டுரை…..
1. மோசடியின் துவக்கப்புள்ளி:
QR குறியீட்டு மோசடிகள் எவ்வாறு வடிவமைக்கப்படுகிறது, அதை எப்படி செயல்படுத்துகிறார்கள், இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் தொடரப்பட்ட வழக்குகள், மற்றும் மோசடிகளால் நஷ்டம் சந்தித்த தொகைகளைப் பற்றிய முழுமையான விவரங்களை இந்த ஒலிக்கட்டுரை நமக்கு விளக்கமாக சொல்லும். சரி QR குறியீட்டு மோசடிகள் எங்கிருந்து தொடங்குகிறது? விளக்கமாக தெரிந்து கொள்வோம்.
மோசடி செய்வதற்காக உருவாகும் கூட்டங்கள் அல்லது தனிமனித செயல்பாடுகள் ரகசியமாக சில மென்பொருட்களை உருவாக்கி அதன் மூலமாக மோசடி QR குறியீடுகளை உருவாக்குகிறார்கள். அடிக்கடி மின்னணு பணப் பரிவர்த்தனை செய்யும் எளிய மக்கள் தான் இவர்களின் இலக்கு. இவர்கள் உருவாக்கும் QR குறியீடுகளை அவர்கள் இணையங்களிலும், நம்பிக்கைக்குரிய செயலிகளிலும் இரகசியமாக இணைக்கிறார்கள். சிலர் மளிகைக்கடை, சில்லறை விற்பனை நிலையங்களில் பல நாட்களுக்கு முன்பே ஒட்டப்பட்டுள்ள பழைய QR குறியீடுகளின் மீது இவர்களின் மோசடி QR குறியீடுகளை ஒட்டிவிடுகிறார்கள். இங்கிருந்து தான் பணப் பரிவர்த்தனை மோசடி தொடங்குகிறது.
இணையங்களில் பல பொருட்களின் விலை சரிந்துள்ளது போலவும், ஒன்று வாங்கினால் இரண்டு பொருட்கள் கிடைக்கும் என்றும் அடிக்கடி விளம்பரங்கள் வருவதை நாம் பார்த்து இருப்போம். பலரின் ஆசையைத் தூண்டி விடுவதுதான் இந்த விளம்பரங்களின் நோக்கம். தவறி யாராவது பொருட்களை வாங்க முயற்சிக்கும் போது, வழக்கமாக அந்த இணையத்தில் பணம் செலுத்தும் முறையை போலவே எல்லா வழிமுறைகளும் நிகழும். ஆனால் இறுதியாக அவர்கள் QR குறியீட்டை பயன்படுத்தி மட்டுமே பணம் செலுத்தலாம் என்ற கட்டாய பதிவை வைத்திருப்பார்கள். நம் சோம்பேறித்தனம் இங்கே நம்மை சிந்திக்க விடாமல் பணம் செலுத்த நம்மை தூண்டுவதுதான் அவர்களின் வெற்றி. பணம் கைமாறிய பின் பொருள் நமக்கு வந்து சேராது. அல்லது அவர்களை பின் எப்போதுமே தொடர்பு கொண்டு விவரம் கேட்க முடியாது. இப்படித்தான் QR குறியீடுகளை பயன்படுத்தி பணமோசடிகள் தொடங்குகிறது.
அடுத்ததாக ஒரு செயலியை அதாவது மொபைல் APP-பை நீங்கள் QR குறியீட்டை ஸ்கேன் செய்து, டவுன்லோடு செய்யுங்கள். ஒரே மணி நேரத்தில் பல ஆயிரங்கள் சம்பாதிக்கலாம் என்ற விளம்பரம். இதுவும் இப்படித்தான் நீங்கள் அவர்கள் கொடுத்திருக்கும் QR குறியீட்டை நீங்கள் ஸ்கேன் செய்த மாத்திரத்தில் உங்கள் மொபைல் போனில் நீங்கள் சேகரித்திருக்கும் வங்கி விவரங்கள், அதற்கான பாஸ்வேர்டுகள் உள்ளிட்ட சகல விஷயங்களும் அவர்கள் கணினிக்கு சென்று விடும். சில நிமிடங்களில் அவர்கள் உங்கள் கணக்கில் இருந்து மொத்த பணத்தையும் களவாடும் நிகழ்ச்சிகள் பலதும் இப்போது பிரபலம்.
குறிப்பிட்ட சில பொருட்களை வாங்கும் போது…. அந்த பொருளை பேக் செய்திருக்கும் காகிதத்தில் சில விளம்பர தகவல்கள் இருக்கும். இது குறிப்பாக பெண்கள் உபயோகிக்கும் பொருட்கள், குழந்தைகள் விரும்பி வாங்கும் தின்பண்டங்களில் அதிகம் காணப்படுகிறது. இந்த விளம்பரம் எதுவுமே அந்த பொருளை தயாரித்த நிறுவனத்திற்கு சொந்தமானதாக இருக்காது. குறிப்பிட்ட அந்த நிறுவனத்தின் பொருளை போலியாக தயாரித்து கள்ள மார்க்கெட்டில் விற்கும் நிறுவனங்களும், மோசடி பேர்வழிகளுமாக கூட்டணி அமைத்து செய்யும் பெரிய மோசடி நெட்வொர்க் இதுவென்றால் அது மிகையில்லை. அந்த போலி பொருளின் அட்டைகளில் இருக்கும் QR குறியீட்டை ஸ்கேன் செய்து அனுப்பினால், 10 ரூபாய் கேஷ் பேக் கிடைக்கும் என்றும், ஏராளமான கவர்ச்சிகரமான பரிசுகள் கிடைக்கும் என்றும் விளம்பரங்கள் இருக்கும். இதை நம்பி நாம் ஸ்கேன் செய்யும் போது, நம்மை ஏமாற்றி நம் வங்கியில் இருந்து பணத்தை சுவாகா செய்யும் செயல் நிகழும்.
2. தாமதமாகும் புகார்கள் - சாதகம் யாருக்கு?
இந்த மோசடி பேர்வழிகள் அனைவருமே பிரபல நிறுவனங்களின் முகமூடிகளில் தங்களை மறைத்துக் கொண்டு, எளியவர்கள் பணத்தை கொள்ளையடிப்பது மட்டுமின்றி, அந்த பிரபல நிறுவங்களின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையையும் காலி செய்கிறார்கள். இரட்டை குற்றங்களை செய்துவிட்டு, எங்கோ ஒரு டீக்கடையில் குற்றவாளி சமோசாவும், டீயும் குடித்துக் கொண்டிருப்பான். அவனை கண்டறிவது என்பது மிகவும் கடினமான செயலாக காவல்துறையின் சைபர் கிராம் பிரிவுக்கு மாறிவிடும். இந்த நிகழ்வுகளில் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் பணம் பறிபோன சில மணி நேரங்களிலேயே புகார்களை தருவதில்லை. அதற்கு காரணம் என்ன?
அதிமேதாவித்தனம் தவிர வேறு காரணங்கள் இல்லை. இப்படி கூறுவதற்கு நிறைய கோபம் இந்த சமுதாயத்தின் மீது இருக்கிறது. பணம் பறிபோனதாக அறிந்த நொடியில் இவர்கள் ஒன்று வங்கியின் வாடிக்கையாளர்கள் சேவையை தொடர்பு கொண்டு திட்டிக் கொண்டு இருப்பார்கள், அல்லது வங்கியில் சென்று அங்கிருப்பவர்களிடம் விவாதம் நடத்திக் கொண்டு இருப்பார்கள். யாரும் சைபர் பிரிவு காவல்துறையை அணுகுவது கிடையாது. QR குறியீட்டை பயன்படுத்தி திருடும் கூட்டம் பண பரிவர்த்தனையை செய்ததும், அவர்களின் செயலிகளையும், QR குறியீடுகளையும் மாற்றி விடுவார்கள். அவர்கள் உபயோகித்துக் கொண்டிருந்த சிம் உள்ளிட்ட மொபைல்கள் குப்பைக்கு சென்று இருக்கும்.
ஆற அமர பணத்தை பறிகொடுத்தவர்கள் சென்று, காவல்துறையை நாடும் நேரத்தில், வேறு சிலர் இம்முறையில் பணத்தை பறிகொடுத்து இருப்பார்கள். இந்த குற்றத்தை செய்தவர்கள் யார் என்பதை கண்டறிய சைபர் கிரைம் போலீசாருக்கு கடும் சவால் உருவாகும். மனிதனின் ஆசையை தூண்டிவிட்டு அதன் மூலமாக மோசடி நிகழ்வதை நாம் உணர்வதே இல்லை. QR குறியிடுகள் பாதுகாப்பானவைதான். ஆனால்….. மோசடி குறியீடு எது? உண்மையான குறியீடு எது என்பதை கண்டறிவதில் தான் நம் தோல்விகளும், இழப்புகளும் அடங்கி இருக்கிறது.
3. போலிகளை அடையாளம் காண்பது எப்படி?
QR குறியீடுகளைப் பயன்படுத்தும் முன், அந்த QR குறியீடுகள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதா என்று சரிபார்ப்பது அவசியம். அவசர அவசரமாக நீங்கள் ஷாப்பிங் செல்வதாக இருந்தால், பணம் மூலமாக உங்கள் ஷாப்பிங்கை செய்வது சரியானதாக இருக்கும். QR குறியீடுகளை அங்கீகாரம் இல்லாத கடைகள், வணிக நிறுவனங்கள், இணையங்கள், செயலிகளில் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்ப்பது உங்களுக்கு நல்லது. ஒருவேளை நீங்கள் ஆன்லைன் மூலமாக பண பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்றால் நீங்கள் இணைய வங்கி சேவையை பயன்படுத்துவது பாதுகாப்பாக இருக்கும். சோம்பேறித்தனத்தை முழுமையாக தவிர்ப்பீர்கள் என்றால் உங்கள் பணம் உங்கள் பாக்கெட்டில் இருக்கும் என்பதே உண்மை.
QR குறியீடுகளை ஸ்கேன் செய்யும் செயலிகளைப் பயன்படுத்தும் போது, அந்த செயலியின் நம்பகத்தன்மையைப் சரிபார்ப்பது என்பது மிகவும் முக்கியம். அதற்கு நீங்கள் அந்த நிறுவனத்தின் இணையத்தில் இருக்கும் விவரங்களை ஸ்கேன் செய்வதற்கு முன் சரிபார்க்கலாம். இதுதவிர அந்த நிறுவனத்தின் செயலிகள், ஆன்லைன் மதிப்பீடுகள் மற்றும் விமர்சனங்களைப் பார்ப்பதன் மூலமாக, அந்த QR குறியீடு பாதுகாப்பானதா என்பதை உறுதி செய்வது நல்லது. இதை நாம் இணையங்களின் இணைப்போடு தொடர்பு செய்தும் உறுதி செய்து கொள்ள முடியும். எல்லாவற்றையும் விட உங்கள் தகவல்களை குறிப்பாக வங்கி விவரங்களை, OTP உள்ளிட்ட தகவல்களை கேட்கும் QR குறியீடுகளை முற்றிலும் புறக்கணிப்பது தான் பாதுகாப்பானது என்பதை உணருங்கள்.
4. முடிவுரை:
நவீனம், நாகரீகம், சோம்பேறித்தனம், சுதந்திரமாக இருக்கிறேன் என்ற மனப்பான்மை, எளிமை, போன்ற கோட்பாடுகளை உள்ளத்தில் இருந்து அகற்றிவிட்டு, ஆராய்ந்து தெளிந்து QR குறியீடுகளை உபயோகிக்க பழகிக் கொள்ளுங்கள். எதை எடுத்தாலும், எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நான் QR குறியீட்டை பயன்படுத்துவேன் என்ற எண்ணம் உங்களுக்கு மாறுவது நலம். அதுவே உங்களை மோசடிகளில் இருந்து காக்கும் அரண் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நவீன உலகம் புதிய தொழில்நுட்பங்களை எத்தனை எளிமையாக நம் கரங்களில் தருகிறதோ அதே அளவுக்கு அதில் பாதகங்களையும் தருகிறது. பலனை விட இழப்புகள் அதிகம் என்பதை நீங்கள் உணர்வதே புத்திசாலித்தனம்.
இந்த ஆண்டில் இந்தியாவில் பதிவாகியிருக்கும் QR மோசடி வழக்குகள் எண்ணிக்கை கடந்த இரு ஆண்டுகளை விட அதிகமாக இருக்கிறது. இது குறையவோ அல்லது அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வுகள் கிடைக்கவோ ஆண்டுகள் பிடிக்கலாம். பலருக்கு இழந்த பணம் மீண்டும் கிடைக்காமல் கூட போகலாம். ஆனால் மீண்டும் இது போல நிகழாமல் தடுப்பது நம் கைகளில் தான் இருக்கிறது. அதற்கு விதை விதைப்போம்…. சரியான முடிவுகள் மூலம் தீர்வுகள் காண்போம்.

Comments