புதிய எழுத்தாளர்கள் முதல் புத்தகம் வெளியிடும்போது செய்யும் 10 தவறுகள்

📌 Topic Summary:

புதிய எழுத்தாளர்கள் செய்யும் இந்த 10 தவறுகள்… உங்கள் புத்தக வெற்றியை முற்றிலும் பாதிக்கக்கூடும்!

புத்தகம் வெளியிடுவது எளிது… ஆனால் சரியாக வெளியிடாதால் என்ன ஆகும் தெரியுமா?

Editing முதல் Marketing வரை — ஒரு சிறிய தவறும் பெரிய இழப்பாக மாறும்!

இந்த தவறுகளை தவிர்த்தால்… உங்கள் பெயர் வாசகர்களின் நினைவில் நிலைக்கும்!




புதிய எழுத்தாளர்கள் முதல் புத்தகம் வெளியிடும்போது செய்யும் 10 தவறுகள்

அறிமுகம்

ஒரு புத்தகத்தை எழுதுவது மிகப்பெரிய சாதனை. தாய் தன் குழந்தையை பிரசவிப்பதற்கு சமம். தவமிருந்தும் தியாகம் பல செய்துமே ஒரு எழுத்தாளர் தன் படைப்பை உருவாக்குகிறார். ஒவ்வொரு பக்கத்தையும் உருவாக்க அவர் மேற்கொள்ளும் சவால்கள், எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதற்காக அவர் எடுத்துக் கொள்ளும் சிரத்தை எல்லாமே விவரிக்க முடியாத விலையேறப் பெற்ற உழைப்பு. 

ஆனால் தான் உருவாக்கிய படைப்பை முறையாகவும், தொழில் ரீதியான கொள்கைகளை உணராமலும், புத்தகமாக வெளியிட முயற்சிப்பார் என்றால்…. அங்கே தான் அவர் சோதனைகளுக்கும் சிக்கிக் கொள்கிறார் என்று அர்த்தம். சாதனைகளை தவற விடும் தமிழ் எழுத்தாளர்களில் பலர், முதல் புத்தகத்தை வெளியிடும் போது சில பொதுவான தவறுகளை செய்கிறார்கள். 

அவர்கள் இதை அறிந்தே செய்வதில்லை. அனுபவமின்மை காரணமாக இந்த தவறுகளை செய்து விடுகிறார்கள்.  இது இயல்பு என்றாலும், அவர்களுக்கு வழிகாட்ட, உதவ யாருமில்லை என்பதாலும் தான் இந்த சோதனைகள் அவர்களை கலங்கடித்து விடுகின்றன.  அப்படி என்ன நடந்துவிடும்? என்று கேட்பீர்கள் என்றால்…. இந்த தவறுகள்:

  • நூலின் விற்பனையை பாதிக்கும்.

  • தனக்கென்று உருவாக வேண்டிய வாசகர்களை இழக்க வைக்கும்.

  • எழுத்தாளரின் நம்பகத்தன்மையை குறைக்கும்.

இந்த கட்டுரையில், நாம் புதிய எழுத்தாளர்கள் நடைமுறையில் அதிகமாக செய்யும், 10 முக்கிய தவறுகள் மற்றும் அதை தவிர்ப்பது எப்படி என்பதைக் குறித்து விரிவாக  பார்க்கலாம்.

1. திட்டமிடாமல் புத்தகம் வெளியிடுவது

பொதுவாக ஒரு படைப்பை எழுதியதும் எழுத்தாளர்களில் பலருக்கும் என்ன தோன்றும்? 

அப்பாடா! நல்ல படியா எழுதி முடிச்சுட்டேன். உடனே இதை பதிப்பிச்சு எல்லாருக்கும் கொண்டுட்டு போய் சேர்த்துடனும். 

இப்படித்தான் பல எழுத்தாளர்களும் எண்ணுகிறார்கள். இது வெகு இயல்பான எண்ணமே. இதில் தவறில்லை. ஆனால் கொஞ்சம் நிதானமும் கொஞ்சம் முன்னெச்சரிக்கையும் இருந்தால் போதும் அடுத்து வரும் எல்லா தவறுகளையும் முறியடித்து விடலாம் என்பதே பால பாடத்தின் முதல் படி. 

பொறுமையும், முன்னெச்சரிக்கையுமா? நான் என்ன போருக்கா போகிறேன்? என்று கேட்பீர்கள் என்றால்…. ஆம் நீங்கள் போர்க்களத்தில் தான் நுழைகிறீர்கள். அதற்கு சரியான திட்டம் வேண்டும். முறையான வியூகம் வகுக்க வேண்டும் என்பதே பதில். என்ன மாதிரியான வியூகங்களை கணக்கில் கொள்ள வேண்டும் தெரியுமா?

  • நம்முடைய வாசகர்கள் யார்? என்ற இலக்கை முதலில் தீர்மானிக்க வேண்டும். 

  • எனது புத்தகத்துக்கு என்ன விலை நிர்ணயிக்க வேண்டும்? என் வாசகர்கள் எளிதாக வாங்கும் திறனில் அது இருக்க வேண்டும் என்பதை அடுத்து வரையறை செய்ய வேண்டும்.

  • மூன்றாவதாக நான் எந்த முறையில் வெளியிட இருக்கிறேன் என்ற வெளியீட்டு முறையை நிச்சயமாக தீர்மானிக்க வேண்டும். 

  • கண்டிப்பாக பக்கத்துக்கு ஒரு தொகை என்ற ரீதியில், மொத்தமாக எழுத்தாளரிடம்… அவரது படைப்பின் காப்புரிமையையே வாங்கிக் கொள்ளும் முறையை கடைபிடிக்கும், பதிப்பக கொள்கை முறையை தவிர்க்க வேண்டும். 

  • நீங்கள் சொந்தமாக வெளியிட விரும்புகிறீர்கள் என்றால்… கண்டிப்பாக உங்கள் நலனை விரும்பும் அல்லது, உங்கள் படைப்பை ஊக்குவித்து அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல விரும்பும் பதிப்பகத்தை நாடுவது நல்லது. 

  • ஒப்பந்தங்கள், விதிமுறைகளை நன்கறிந்த பின்பு கையொப்பமிடுவது நல்லது. நம் படைப்பு வெளிவந்தால் போதும் என்ற ரீதியில் ஒப்பந்தங்களை தெளிவாக வாசிக்காமல், அல்லது அதன் அர்த்தம் உணராமல் கையொப்பமிடுவது மிகப்பெரிய ஆபத்தாக மாறலாம். 

  • தேவை என்றால் சட்ட ஆலோசனைக்குப் பின் கையொப்பமிடுவது நல்லது. அது ஆக்கபூர்வமானதே அன்றி உங்களை பாதிக்கும் படியாக இருக்காது என்பதை உணருங்கள். 


2. தரமற்ற தொகுப்பு (Editing): 

பொதுவாக எழுத்தாளர்கள் படைப்பு முடிந்து விட்டது. ஒரு முறை படித்துப் பார்த்தாகி விட்டது. இதயத்துக்கு திருப்தியாக இருக்கிறது என்ற வரையறைகளை முதலில் களையுங்கள். உங்கள் படைப்பு முடிவடைந்து விட்டது என்பது சரியே! ஆனால் இலக்கிய உலகில் நிலைக்க… இலக்கண பிழைகளை தவிர்க்க வேண்டும். இலக்கண பிழைகளுடன் இருக்கும் படைப்பு உப்பில்லாத பிரியாணிக்கு சமம். ஒற்றுப்பிழைகள், மரபுப் பிழைகள், தவறான வாக்கிய பிழைகள், வார்த்தைப் பிழைகள் உங்கள் படைப்பின் தரத்தை மொத்தமாக சரித்து விடும் என்பதை மறக்க வேண்டாம். 

இது இயல்பாக நிகழும் பிரச்சனை மட்டுமே. எல்லா பெரிய எழுத்தாளருக்கும் இது நிகழ்கிறது. இங்கே ஒரு பக்கம் கூட பிழையின்றி எழுதாத எழுத்தாளர்கள் இல்லை. யானைக்கும் அடி சறுக்குவது வழக்கம் தான். இது தவறே கிடையாது. ஆனால்….

அதை களைந்து விட்டு படைப்பை பதிப்பிக்க நாம் கொடுக்கும் போதுதான், சுவையும், சுகமும் சமமாக கிடைக்கும். வாசகர்கள் இதயம் இதனால் வாசிப்பில் இலயிக்கும். இதை மறக்காமல், தவிர்க்காமல் செய்துவிடுங்கள் உங்கள் படைப்பு நிச்சயம் அடுத்த படியையும் வெற்றிகரமாகவே கடந்து விடும். 

விதைகள் பதிப்பகம் இதற்கென்று தனியாகவே தொழில் முறை எடிட்டிங் பணிகளை செய்கிறது. இரண்டு தரம் வாய்ந்த Proofreading அலுவலர்களை கொண்டு, நான்கு முறை எங்கள் எழுத்தாளர்களின் படைப்பை நாங்கள் சரி செய்கிறோம். இதற்கென்று நாங்கள் அமைத்திருக்கும் எடிட்டிங் குழு இந்த பணிகளை ஒருங்கிணைக்கிறது. இது எழுத்தாளரின் சுமையை குறைக்க உதவுகிறது.


3. மோசமான அட்டைப்படம் (Cover Design)

மிகவும் முக்கியமான பகுதியும் வியூகமும் இந்த இடத்தில் தான் இருக்கிறது. ஒரு படைப்பின் உயிரோட்டதை, வாசகர்களுக்கு கண்கள் வழியே இதயத்துக்குள் கடத்தும் மிக முக்கியமான படி அட்டைப்படமே. அட்டைப்படம் பெரிதாக என்ன தாக்கம் உருவாகிவிடும் என்ற எண்ணம் எழுவது பொதுவானது என்றாலும், இது மிகப்பெரிய ஓட்டையை உருவாக்கும் என்பதை எழுத்தாளர்கள் கவனத்தில் வைப்பது மிகவும் முக்கியம்.

நிறைய எழுத்தாளர்கள் திரைப்படங்களில் இடம் பெரும் நாயகன் நாயகி இருக்கும் படங்களை அட்டைப்படமாக வைத்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன். இது தவறென்று நான் சொல்லவில்லை. ஆனால் அது அந்த படைப்பின் உயிரோட்டத்தை சீர்குலைகிறது என்பதே உண்மை. இப்படிப்பட்ட அட்டைப்படங்கள் ‘எழுத்தாளரின் படைப்பை, திரைப்படத்தின் கதையை ஒட்டிய கதை’ என்ற மறைமுக மாயத்தை வாசகர்களுக்கு நிச்சயமாகவே உருவாக்குகிறது. 

நல்ல அட்டைப்படம் ஒரு படைப்பை எண்ணற்ற வாசகர்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்க்கும். படைப்புக்கு தொடர்பில்லாத அட்டைப்பட வடிவம், தலைப்புகள் வாசகர்கள் இதயத்தை தொடுவதே இல்லை. சிலர் படைப்புகளுக்கு தலைப்புகள் வைக்கும் முறையை ஏனோ தானோவென்று செய்கிறார்கள். திரைப்பட பாடல்களை தலைப்புகளாக வைப்பது. கதைக்கு சம்மந்தமே இல்லாமல் தலைப்புகளை முடிவு செய்வது என பல குறைகள் இங்கே கண்களில் தட்டுப்படுவதை நாம் காணலாம். சில நேரங்களில் நாம் அப்படி செய்தும் இருக்கலாம். அதை தவிருங்கள். 

அட்டைப்படமும், தலைப்பும் நிகழ்த்தும் அதிசயங்கள் பற்றி நீங்கள் நிறைய சித்திக்க வேண்டும் என்பதே மிக முக்கியமான இலக்கு. அதை மறக்காமல் நேரம் ஒதுக்கி செய்யுங்கள்.



4. ISBN பெறாமல் வெளியிடுவது

ISBN குறியீட்டு எண் பெறுவது இன்று மிகவும் எளிமையான முறையே. எழுத்தாளர் தானே ISBN குறியீட்டு எண்னை ஆன்லைனில் பெறலாம். பெரிய பதிப்பகங்கள் மொத்தமாக தங்கள் முயற்சியில் தேவையான சான்றுகளை சமர்ப்பித்து பெறும் முறையும் நடைமுறையில் இருக்கிறது. புத்தகம் வெளியிடும் முன்பாக நாம் ஆன்லைனில் விண்ணப்பித்து ISBN எண்ணை எளிமையாக பெற முடியும். 

ஒரே வாரத்தில் கூட ஆவணங்கள் சரியாக இருந்தால் நாம் ISBN குறியீட்டு எண்ணை பெற அரசு தேவையான எல்லா முன்னெடுப்புகளை செய்து இருக்கிறது. ஆனால் புதிய எழுத்தாளர்கள் பலர் தங்கள் படைப்புகளுக்கு இந்த குறியீட்டை பெற பெரும் செலவு செய்வதாக அறிகிறேன். இப்படி யாரும் ஏமாற வேண்டாம். இந்திய அரசு ISBN குறியிட்டு எண் பெற கட்டணம் எதுவுமே வசூலிப்பது கிடையாது. அதற்கு செலவும் இல்லை. யாரையும் நம்பி அதிக பணத்தை விரையமாக்க வேண்டாம். 

உங்கள் புத்தகங்களுக்கு ISBN பெற விரும்பினால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்…. வழிகாட்டுகிறோம். நீங்களே செய்து பெற்றுக் கொள்ளுங்கள். கட்டணமில்லாத அத்தியாவசிய முறைக்கு கட்டணம் செலுத்தி உங்கள் பொருளாதாரத்தை வீணாக்க வேண்டாம். 

ISBN குறியீட்டு எண் இல்லை என்றால், ஆன்லைன் விற்பனை பாதிக்கப்படும். இது சர்வதேச அளவில் வாசிக்க ஏதுவான சூழ்நிலைக்கு எதிரான நிலைக்கு உங்கள் படைப்பை கொண்டு செல்லும். இது குறித்து விரிவாக விளக்கம் பெற எங்களை நீங்கள் அணுகலாம். 


5. தவறான வெளியீட்டு முறையை தேர்வு செய்வது

பெரும்பாலும் எழுத்தாளர்கள் இங்கே தான் தடுமாறுகிறார்கள். வெளியிடும் முறை அல்லது பதிப்பிக்கும் முறை மிகவும் முக்கியம். உங்களுக்கு உங்கள் படைப்பை நீங்களே விரிவான வாசகர்களிடம் கொண்டு செல்லும் அளவுக்கு பெரிய கம்யூனிட்டி அதாவது குழு அல்லது வட்டம் இருக்கும் என்றால் துணிவோடு சுயவெளியீட்டு முறைக்கு செல்லுங்கள். 

அதில் நடைமுறை சிக்கல் இருக்கிறது என்றால், உங்கள் படைப்பை நல்ல முறையில் அங்கீகரித்து வெளியிடும் பதிப்பகத்தை தேர்வு செய்யுங்கள். POD முறையில் புத்தகத்தை அச்சிட்டுவிட்டு, புத்தக விற்பனை ஏஜெண்டுகளை நம்பி காத்திருக்காதீர்கள். அது உங்கள் பொருளாதாரத்தை மட்டுமல்ல… உங்கள் புத்தகத்தின் தரத்தையும் குறைக்கும்.

பலர் இன்று POD முறையில் புத்தகங்களை அச்சடித்துவிட்டு, விற்க இயலாமல் இடைத்தரகர்களிடம் புத்தகத்தை விற்க கொடுக்கும் அவல நிலை இருக்கிறது. சில நேரங்களில் எழுத்தாளர் இந்த முறையால், விற்க கொடுத்த புத்தகங்களுக்கு பணம் பெற இயலாமல் தவிப்பதுடன், கொடுத்தவர்களிடமிருந்து புத்தகங்கள் சேதமடைந்து திரும்ப அனுப்பப்படும் நிலையை அனுபவிப்பதை காண முடிகிறது.

சரியான பாதையை உங்கள் இலக்கின் அடிப்படையில் சுதந்திரமாக தீர்மானியுங்கள். பொருளாதார ரீதியாக பாதிப்புகளை சந்திக்க வேண்டாம்.


6. விலை நிர்ணயத்தில் தவறு

மிகவும் முக்கியமான கட்டம் இது என்றால் அது மிகையில்லை. உங்கள் வாசகர் யார் என்பதை நீங்கள் முடிவெடுத்த பின் விலை நிர்ணயம் செய்யுங்கள். உதாரணமாக உங்கள் வாசகர்கள் பெரும்பாலும் பெண்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் பெரும் பணம் செலவழித்து புத்தகங்கள் வாங்க இயலுமா என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும். குடும்ப சூழல், பொருளாதார நிலை ஆகியவை இங்கே முக்கிய பங்காற்றுகிறது. அதற்கேற்றவாறு உங்கள் புத்தகத்துக்கு  விலை நிர்ணயம் செய்யுங்கள். 

POD மூலம் நீங்கள் புத்தகம் அச்சடிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்களேன். கண்டிப்பாக உங்கள் புத்தகத்தின் அடக்க விலை அதிகமாகவே இருக்கும். இந்த நிலையில் “நான் 100% இலாப விலைக்கு நூல்களை விற்பேன். அதுவே என் படைப்புக்கு தரம் என்னவென்று சொல்லும்” என்றெல்லாம் தப்பாக கணக்கு போடாதீர்கள். 

உங்கள் புத்தகம் விலையை காரணம் காட்டி புறக்கணிக்கப்படும். விலை நிர்ணயத்தில் பல்வேறு காரணிகள் இருக்கிறது. பலகட்ட ஆலோசனைக்குப் பின் விலை குறித்து இறுதி முடிவு எடுங்கள். 

பதிப்பகம் உங்கள் படைப்பை வெளியிடுகிறது என்றால், இந்த கவலை உங்களுக்கு இல்லை. பதிப்பகத்தின் தொழில்ரீதியான குழுவும், பதிப்பாசிரியரும் சந்தை விலையை, நிலையை நன்கறிந்து இருப்பார்கள். அவர்கள் அனுபவமும் இதில் கலந்திருக்கும். அவர்கள் உங்கள் படைப்புக்கு ஏதுவான விலையை சரியாக தீர்மானிப்பார்கள். அது சரியாகவும் இருக்கும். 


7. மார்க்கெட்டிங் செய்யாமல் இருப்பது

“நான் எழுதியது நல்லா இருந்தா மக்கள் வாங்குவாங்க” இதுவே இன்று பெரும்பாலான எழுத்தாளர்களின் தாரக மந்திரம். இது மிகப்பெரிய தவறு. உங்கள் படைப்பை கடை கடையாக சென்று தேடி வாங்க வாசகர்களுக்கு எந்த அவசியமும் இல்லை. அதற்கு அவர்களுக்கு நேரமும் இல்லை. ஆன்லைனிலும் அவர்கள் தேடி எல்லாம் உங்கள் நூலை வாங்கவும் உன்வர மாட்டார்கள். இந்த யதார்த்த நிலையை நீங்கள் கண்டிப்பாக புரிந்து கொள்ள வேண்டும். 

‘இரண்டு நூல்களை எழுதிவிட்டேன். என்னை வாசகர்களுக்கு நன்றாக தெரியும். அவர்கள் என் புத்தகத்தை வாங்கி கண்டிப்பாக வாசித்து விடுவார்கள்’ என்ற எண்ணம் இங்கே நிறைய பேருக்கு இருக்கிறது. குறிப்பாக சமூக வலைதள பக்கங்களில் எழுதும் எழுத்தாளர்களில் பலரும் அவர்கள் கதைக்கு நிறைய வாசகர்கள் இருக்கிறார்கள் என்று நம்புகிறார்கள். வாசகர்கள் கதைக்கு கொடுத்த கருத்துக்கள், லைக் விவரங்களை வைத்துக் கொண்டு தங்கள் படைப்பு நூலாக வெளிவந்தால் விற்று தீர்த்து விடும் என்ற மாய பிம்பத்தின் வலையில் சிக்கிக் கொள்கிறார்கள். 

உண்மை இதுவே…. 

  1. உங்கள் படைப்பை எழுத்து தளங்களில் விமர்சிப்பதில் எத்தனை பேர், வெறும் வாசகர்கள்? 

  2. உங்களுக்கு அதில் உண்மைத்தன்மை தெரியுமா?

  3. பெரும்பாலான விமர்சனங்களைத் தருபவர்கள் உண்களைப் போலவே இருக்கும் ஒரு எழுத்தாளர் என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. 

  4. அவர்கள் கொடுக்கும் பாசிட்டிவ் விமர்சனம் உங்களையும் அவர்கள் படைப்பை வாசிக்க வைக்கவும், பாராட்டி கமெண்ட் செய்யவும் முன் வைக்கப்படும் யுக்தி. இதை ஆங்கிலத்தில் “GIVEN TAKE POLICY” என்று சொல்வார்கள்.

  5. இது உண்மையாகவே உங்கள் படைப்புக்கு கிடைக்கும் அங்கீகாரம் என்று தவறாக கருத வேண்டாம். இன்று பல எழுத்தாளர்களும் சிக்கிக் கொள்ளும் ஒரு டிராப் என்றால் அது இதுதான். 

  6. உங்கள் வாசகர்கள் கண்ணுக்கு தெரியாதவர்கள். குமரிமுனையின் கடலுக்கு அருகே இருக்கும் குக்கிராமத்தில் கூட அவர் இருக்கலாம். ஆந்திர,கர்நாடக, கேரள எல்லைக்குள்ளும் அல்லது அதற்கு வெளியேயும் கூட இருக்கலாம். உங்கள் அருகில் இருக்கும் ஒருவர் கூட உங்கள் வாசகர்களாக இருக்கலாம். உங்களுக்கே தெரியாத அந்த முகம் தான் உங்கள் படைப்பை தரமுடன் விமர்சிக்க, நேசிக்க, பாராட்ட, பின்பற்றி வர தகுதியுடையவர். அவரை நீங்கள் அடையாளம் காண ஓரிரு படைப்புகள் போதுமானது அல்ல. 

  7. உங்கள் படைப்பு விஸ்தாரமான இந்த உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று சேர வேண்டும்.

  8. அதற்கு நீங்கள் முறையான சந்தைப்படுத்துதல் அதாவது மார்க்கெட்டிங் செய்ய வேண்டும். இது மிக மிக முக்கியம். 

  9. இந்த நவீன யுகத்தில் முறையான வகையில் மார்க்கெட்டிங் செய்வது என்பது தவிர்க்கவே முடியாத அம்சம். அத்தியாவசியமானதும் கூட.

  10. சந்தைக்கு வராமல் மீன் விற்கவும் செய்யாது, கருவாடு காசாக மாறவும் செய்யாது. சந்தையிடுதல் மிகவும் முக்கியம். இதை மறக்கவே வேண்டாம்.


8. தவறான விநியோகம் (Distribution)

Amazon / Flipkart போன்ற ஆன்லைன் தளங்களைப் பற்றி முழுமையாக தெரியாமல், அங்கே புத்தகங்களை விற்று விடலாம் என்ற எண்ணத்தில் முயற்சிகள் செய்யாதீர்கள். சிறிய அளவில் நூல்களை பதிப்பித்து விற்கும் உங்களால் GST சான்றிதழ் இல்லாமல் அல்லது GST வரி செலுத்தாமல் இந்த தளங்களில் புத்தகங்களை விற்பனை செய்ய முடியாது. அதே போல இந்த தளங்களில் கமிஷன் அளவும் அதிகம். முழுமையாக தெரியாமல் இந்த வகை விநியோக முறையை நாட வேண்டாம். 


9. வாசகர்களை புரிந்து கொள்ளாதது

ஒரு நல்ல எழுத்தாளர் முதலில் யாருக்காக எழுதுகிறீர்கள்? என்று தெரியாமல் எழுதுவது = தோல்விக்கு தாமே குழி வெட்டிக் கொள்வதற்கு சமம். உங்கள் வாசகர்களின் உள்ளம் அறிந்து உங்கள் படைப்புக்களை முதலில் தேர்வு செய்யுங்கள். விஞ்ஞானம் பிடித்த வாசகர்களுக்கு வரலாற்றை கொடுப்பதும், புனைவுக் கதைகள் பிடித்த வாசகர்களுக்கு புனைவு அல்லாத படைப்புக்களை எழுதுவதும் மிகவும் முரணான அணுகுமுறை. 

வாசகர்கள் உங்கள் எழுத்தின் வீரியத்தை ரசிக்க வேண்டும். அவர்கள் விருப்பத்தை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். காதல் என்ற பெயரில் “விரசம் நிறைந்த வர்ணனைகளை கொடுப்பதும், உறவுகளின் உள்ளத்தில் இருக்க வேண்டியதை, வார்த்தைகளில் காமம் கொப்பளிக்க எழுதுவதும்… காதல்” என்ற வாதங்களை இங்கே முன்வைக்க முயற்சிக்க வேண்டாம். இது பதிப்பக கொள்கைகளுக்கு முரணானது. 

சில ஆன்லைன் தளங்கள் தங்கள் TRP ரேட்டிங்கை ஏற்றிக் கொள்வதற்காகவும், தங்கள் தளத்தில் நிறைய பேர் படிக்க வர வேண்டும் என்பதற்காகவும் உங்கள் உள்ளங்களை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். இது பதிப்பக விதிகளுக்கு முரணானது. அப்படிப்பட்ட படைப்புக்களை தரமான எந்த பதிப்பகமும் வெளியிடவே செய்யாது. இது போன்ற “விரச வார்த்தைகளை எழுதினால் நான் காதல் கொப்பளிக்க எழுதும் எழுத்தாளர் என்று வாசகர்கள் கொண்டாடுவார்கள் என்று எண்ணிக் கொள்ள வேண்டாம். 

இது கடைசி வரை உங்களை POD பதிப்பாளராக மட்டுமே வைத்திருக்கும். அதற்கு மேல் நீங்கள் வளரவே மாட்டீர்கள். உங்களுக்கு என்றும் உங்கள் படைப்புக்கு என்றும் தரம் இருக்கிறது. உங்கள் மொழி உங்கள் பலம். உங்கள் தமிழ் இலக்கிய பின்புலம் உங்கள் சொத்து. அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் படைப்பின் தரம் எக்காரணம் கொண்டும், யார் ஊக்குவித்தாலும், உங்களை மடைமாற்றம் செய்ய நினைத்தாலும் வளைந்து கொடுக்காது. அதுவே எழுத்தின் வீரம் என்பதை மறக்க வேண்டாம். 


10. பொறுமையின்மை

உங்கள் படைப்பை வெளியிட்ட அடுத்த நாளே 1000 பிரதிகள் விற்றுவிடும் என்று யாரேனும் உங்களிடம் சொன்னால், தயவு செய்து நம்பி விடாதீர்கள். அப்படி தவறியும் உங்கள் எண்ணத்தை வடிவமைத்துக் கொள்ள வேண்டாம். வெற்றியும் விற்பனையும் உங்கள் கழுத்தில் மாலையாக விழ வேண்டும் என்றால்…. அதற்கு காத்திருப்பு என்ற அத்தியாவசியம் அவசியம். 

“வெளியிட்ட உடனே வெற்றி” என்ற மாயாஜாலங்கள் இங்கே நிகழாது. மேலே கூறிய ஒன்பது படிகளையும் நீங்கள் முறையாக கடந்திருந்தால் தான், உங்களுக்கு வெற்றி வசப்படும். தொடர் முயற்சிகளும், அடுத்தடுத்த படைப்புகளும் தான் உங்களை, உங்கள் இருப்பை உறுதி செய்யும். உங்கள் படைப்பு எண்ணற்ற வாசகர்களை சென்று சேர வேண்டும் என்றால் முதலில் நீங்கள் நிறைய வாசிக்க வேண்டும். 

இன்றைய எழுத்தாளர்கள் எழுதத் தொடங்கிய பின் வாசிக்க மறந்து போகிறார்கள். புத்தகங்களை படிப்பது சுமை என்று கருதுகிறார்கள். அடுத்தடுத்து எழுத வேண்டும். அதை செய்ய வேண்டும் இதை செய்ய வேண்டும் என்று கூறிக் கொண்டு வாசிப்பை நீங்கள் ஒதுக்குவதனால்… உங்கள் தரம் குறைகிறது என்பதை மறக்க வேண்டாம். 

நல்ல எழுத்தாளர் நிறைய வாசிக்க வேண்டும். நிறைய பயணிக்க வேண்டும். அதிகம் பேசாமல் கவனிக்க கற்றுக் கொள்ள வேண்டும். இந்த மூன்றும் தான் ஒரு தரமான எழுத்தாளரின் தாரக மந்திரம். 

எனது மானசீக ஆசான் எழுத்தாளர் திரு. உதயணன் ஐயா அடிக்கடி இதைத்தான் எனக்குச் சொல்லுவார். வாசிப்பை தவிர்க்காதீர்கள்! பயணிக்க மறுக்காதீர்கள். எல்லாவற்றையும் விட கவனிக்க தவறாதீர்கள்! இந்த மூன்றும் தான் உங்கள் வெற்றியை தீர்மானிக்கும் சக்திகள். 

முடிவு

ஒரு புத்தகம் எழுதுவது முக்கியம். ஆனால் அதை சரியான முறையில் வெளியிடுவது தான் வெற்றியை தீர்மானிக்கும். மேலே கூறிய 10 தவறுகளை நீங்கள் தவிர்த்தால்:


✔ உங்கள் புத்தகம் வாசகர்களை சென்றடையும்.
✔ உங்கள் பெயர் வாசகர்கள் இதயத்தில் நிலைக்கும்.

உங்கள் எழுத்து — உங்கள் அடையாளம். அதை சரியாக உருவாக்குங்கள்.

இந்த கட்டுரை உங்களுக்கு உதவியதாக இருந்தால்:

👉 கீழே உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள் -  மற்ற எழுத்தாளர்களுடன் பகிருங்கள்

மேலும் தகவல்களுக்கு: எங்கள் Contact Page மூலம் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

Comments

I R Caroline said…
தவறுகளை திருத்திக் கொள்ளச் சொல்லும் உங்கள் அறிவுரை மிக அருமை சகோ.

Popular posts from this blog

காதலர் தின சிறப்புக் கட்டுரை