எல்லைகளுக்கு அப்பால் தமிழின் வேர்களைத் தேடுவது - வரமா சாபமா?
பணம் கிடைத்தது… ஆனால் வாழ்க்கை தொலைந்தது — வெளிநாட்டு தமிழர்களின் சொல்லப்படாத உண்மை!
பணம் கிடைத்தது… ஆனால் வாழ்க்கை தொலைந்தது — வெளிநாட்டு தமிழர்களின் சொல்லப்படாத உண்மை!
பிள்ளைகளுக்கு எல்லாம் கொடுத்தோம்… ஆனால் அடையாளத்தை கொடுக்க மறந்துவிட்டோமா?
அமைதி, உறவு, அடையாளம் — இவை மூன்றும் இல்லாத வாழ்க்கை… உண்மையில் வெற்றியா?
எல்லைகளுக்கு அப்பால் தமிழின் வேர்களைத் தேடுவது - வரமா சாபமா?
அறிமுகம்
கடல்கள் கடந்து, எல்லைகளுக்கு பின்னால் எங்கோ ஒரு தேசத்தில் வாழும் தமிழர்களிடம் ஒரு கேள்வி எழுப்பிவிட்டு இந்தக் கட்டுரையைத் தொடங்குவோம்.
“நீங்கள் வசிக்கும் நாட்டில் எதை அதிகமாக மிஸ் பண்ணுறீங்க?”
என்ன பதில் கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள்? பெரும்பாலும் ஒரே மாதிரி பதில் தான் அனைவரிடமிருந்தும் வரும்.
தமிழ் நாட்டில் எங்கள் பாட்டி வீடு
காலை எழுந்தவுடன் சமையலறையிலிருந்து வெளியேறும் காபி வாசனை- பூஜையறையிலிருந்து வெளிவரும் சாம்பிராணி நறுமணம்.
ஒன்றாக அமர்ந்து குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிடும் நேரம்.
ஊர்த் திருவிழா கொண்டாட்டங்கள்.
பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள்.
பெண்கள் ஒன்றாக சேர்ந்து சமைத்து மகிழும் தருணங்கள்.
வாழையிலையில் உணவு, பனையோலையில் பாயாசம்
தென்றல் தவழும் முற்றமும், நிலா ஒளி வீசும் திண்ணையும்.
இயற்கை மருத்துவமும், இம்சிக்காத எளிய உடற்பயிற்சிகளும்
என்று இந்த பதில்கள் நீண்டு கொண்டே செல்வதை நாம் கேட்டு இருக்கலாம்.
ஆனால் வெளிநாட்டில் பணம் கொழிக்கும் வாழ்க்கை வாழும் அனைவருக்கும், ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்பு தட்டிப் போகிறது.
மேலே சொன்ன ஏக்க பெருமூச்சுகள் தானாக வந்து ஒட்டிக் கொள்கிறது.
பணம் இருக்கிறது. ஆனால்….. மேலே சொன்ன எதையும், அந்த பணத்தால் வாங்க முடியவில்லை.
வாங்க முடியாது என்பதே உண்மை. இருக்கும் போது உதறிவிட்டு சென்றோம். ஆனால் இப்போது அதையே வெளிநாட்டில் இருந்து தேடும் நிலை.
1. தமிழரின் வாழ்க்கை முறை – ஒரு சாதாரண வாழ்க்கை முறையா?
உலகம் இன்று கீழ்கண்ட விஷயங்களைப் பற்றி சமூக வலைத்தளங்களில் வைரல் போஸ்ட் போட்டுக் கொண்டு இருக்கிறது. அதற்காக சிறப்பு பயிற்சி! முகாம்கள், பாட திட்டங்கள் எல்லாம் கொடுக்கிறார்கள். அதை வைத்து காசும் சம்பாதிக்க ஒரு கூட்டம் இருக்கிறது.
✔ “Community Living”
✔ “Organic Lifestyle”
✔ “Mindful Living”
என்றெல்லாம் நீங்கள் கேள்விப்பட்டது உண்டா?
ஆம் என்றால் இது தான் பண்டைய தமிழரின் பழைய பண்பாட்டு பழக்க வழக்கம். இதுதான் இன்று வேறு ஒரு கவர்ச்சியான பெயரில் நம்மிடமே திரும்ப செய்யுமாறு வருகிறது. இதைத்தான் நாம் தொலைத்து இருக்கிறோம்.
நாம் மறந்து போன, நமக்கு மட்டுமே சாத்தியப்பட்ட இந்த முறைகள் தான் இன்று ஆங்கில வார்த்தையை உள்ளடக்கி, புதிய பரிணாமத்தில் நம்மிடமே திரும்ப வந்து நிற்கிறது. ஆனால் இதைத்தான் நாம் நம்புகிறோம். இதைச் செய்ய முயற்சித்தும் கொண்டிருக்கிறோம்.
குறிப்பாக வெளிநாடுகளில் வாழும் நம் உறவுகள், இப்படித்தான் தங்களுக்கென்று இன்று குழுக்களை உருவாக்கிக் கொண்டு, இந்த பழக்கங்களை அங்கே செய்ய முயற்சித்தும் கொண்டிருக்கிறார்கள். உள்ளூரிலோ நாம், உறவுகளை பிரிந்து, உணர்வுகளை தொலைத்துவிட்டு எங்கேயோ ஒரு நகரமயமாக்கல் சூழலில் அகப்பட்டு, இயற்கையாகவே நம் முன்னோர் கற்றுக் கொடுத்த பயிற்சிகளை காசு கொடுத்து செய்து கொண்டிருக்கிறோம்.
“கூடி வாழந்தால் கோடி நன்மை” என்பது முன்னோர் நமக்கு சொல்லிக் கொடுத்த பாலபாடம். நவீனமயமாக்கல், நாகரீக மோகம் எல்லாம் இந்த உன்னத பாடத்தை நாம் உதறிவிட்டு, தனி வாழ்க்கை, தன்னல சிந்தனை, எண்ணம் போல வாழலாம் என்ற மாய உலகத்தில் நம்மைக் கட்டுப்படுத்தி நிறுத்தி இருக்கிறது.
இன்று சேர்ந்து வாழ, கூடி மகிழ, ஆரோக்கிய சிந்தனைகள் என்ற தேவைக்காக, நாம் யாரோ ஒருவர் ஏற்கனவே நமக்கு அறிமுகமாகி- நாம் விட்ட பழக்கத்தை சொல்லிக் கொடுக்கும் நிலையை உருவாக்கி கொண்டிருக்கிறோம்.
பண்டைய தமிழக் கலாச்சாரத்தில் கடைப்பிடிக்கப்பட்ட நல்வாழ்வு வழிமுறைகள், நம் பெற்றோர் பின்பற்றிய நெறிமுறைகள் இன்று நம்மிடையே இல்லை. நமக்கு அடுத்த சந்ததிக்கு நாம் அவற்றை கற்றுக் கொடுக்காமல், எதிர்வரவிருக்கும் தலைமுறையையே தடம் மாற வைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆர்கானிக் லைப் ஸ்டைல் என்ற கோட்பாடு இன்று பரவலாகி வருகிறது. காய்கறி முதல், கண் மை வரை இயற்கையான பொருட்களை கொண்டு தயாரித்திருக்க வேண்டும் என்று பார்த்து பார்த்து வாங்குகிறோம்.
ஆனால் நமக்கு கெடுதலான இரசாயனத்தை அறிமுகம் செய்த மேலைநாட்டு மேதாவிகள் அரை நூற்றாண்டுகளுக்கு முன்னரே, ஆர்கானிக் லைப் ஸ்டைல் முறைக்கு மாறிய உண்மை கொஞ்சம் உங்களுக்கு கசக்கத்தான் செய்யும். ஆனால் அதுவே உண்மை.
தமிழர்கள் ஆரோக்கிய வாழ்வு, இயற்கை உணவு முறைகளை பல தலைமுறைகளாக கடைபிடித்து வந்தனர். அதையே தங்கள் பிள்ளைகளுக்கும், அவர்கள் பிள்ளைகளுக்கும் ஆண்டாண்டு காலமாக சொல்லிக் கொடுத்து வளர்த்தும் வந்தனர்.
ஆனால் இரண்டாயிரமாவது ஆண்டுக்கு பின்னர் நாம் எல்லாவற்றையும் மறந்து, துறந்து விட்டு நவீன வாழ்க்கை முறைக்கு பழகிப் போனோம். நீர் ஆகாரம் பருகிய நாம் இன்று, பெப்சிக்கு பழகி, பீட்சாவுக்கு நாவை பழகிக் கொண்டோம்.
ராகிக் களியை உவ்வே என்று கூறி புறக்கணித்த நாம், ரோமாலி ரொட்டிக்கு சிக்கன் கிரேவியை ஆர்டர் செய்ய கற்றுக் கொண்டதால்… இன்று ஆரோக்கிய வாழ்வுக்காக நவீன மயமாக்கலில் உருவான அதே ராகி மாவு பதார்தத்தை, ராகி மால்ட் என்று கூறி, மூச்சு முட்ட மூணு வேலையும் குடித்துக் கொண்டு இருக்கிறோம்.
அதையும் நம் பிள்ளைகளுக்கு கொடுக்காமல் பூஸ்ட், ஹார்லிக்ஸ் என்று பழக்கி, வேஸ்ட் லைஃபை அவர்களுக்கு பரிசளித்துக் கொண்டிருக்கும் நிலை தவறென்று எப்போது உணர போகிறீர்கள்? ஆரோக்கியமும், இயற்கை நல்வாழ்வு முறையும் குறித்து தமிழ் இலக்கியத்தில் எத்தனையோ குறிப்புக்கள் இருக்கிறது. அதை என்றாவது தெரிந்து கொள்ள நீங்கள் முயற்சித்ததுண்டா?
இதைத் தெரிந்து கொள்ள இப்போதாவது முயற்சி மேற்கொள்ளுங்கள். அதுவே தமிழரின் வாழ்வியல் கோட்பாடு. அதை பழகிக் கொண்டால் போதும், அதுவே நமக்கு ஆரோக்கியமான, இயற்கையான வாழ்வியலை வழங்கும். நம்மைச் சுற்றி அன்பு பாராட்ட கூட்டத்தையும் சேர்க்கும்.
2. வெளிநாட்டு வாழ்க்கை – கனவா? அல்லது அமைதியான தனிமையா?
இன்று நம்மில் பலருக்கும் வெளிநாடுகளில் சென்று பணியாற்றியபடியே அங்கேயே செட்டில் ஆகிவிட வேண்டும் என்ற தணியாத கனவு இருக்கிறது. குறிப்பாக புதிய தலைமுறையிர் மத்தியில் இது வெறியாக கூட இருக்கிறது.
உள்ளூரில் சாப்பிட்ட தட்டைக் கூட கழுவி வைக்க முயற்சிக்காத இன்றைய இளைய கூட்டம் வெளிநாட்டில் சென்று, காசுக்காகவும் கவுரவத்துக்காகவும் ஊபர் ஓட்டவும், ஓட்டலில் சர்வர் வேலை செய்யவும் தயாராக இருக்கிறது. இது எத்தனை முரணான விஷயம் என்று உங்களுக்குத் தோன்றுகிறதா?
ஆனால் இதில் தவறில்லை. இது முரணாக பார்த்தால் முரண். சரியான கோணம் கொண்டு பார்த்தால் சரி. இங்கே எதையும் செய்ய முயற்சிக்காத பிள்ளை வெளிநாட்டில் சென்று சொந்தமாக உழைத்து வாழ நினைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? அது பாராட்டப்பட வேண்டியதுதான். ஆனால் நம் பழக்க வழக்கங்களை தொலைத்து விடாமல் இருக்க வேண்டும் என்பது மட்டுமே அவசியம்.
✔ உயர்ந்த சம்பளம்
✔ வசதியான வீடு
✔ சுய வாழ்க்கை
இதையெல்லாம் வெளிநாட்டில் சென்று வேலை செய்தால் பெற்று விடலாம் எனபது அவர்களின் எண்ணம். சிலர் வெல்லவும் தான் செய்கிறார்கள். ஆனால் இவை எல்லாம் வந்த பின்னும், நம் தமிழ்வழி பண்பாட்டு பழக்க வழக்கங்களில் நாம் நிலைத்து வாழ்கிறோமா என்பது மட்டுமே கேள்வி.
ஓரளவு வெளிநாட்டில் சென்று வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள், இப்போது உளவியல் ரீதியாக சந்திக்கும் உணர்வுகள் வலி நிறைந்தவை. அவர்களில் பலரும் வெளியில் சொல்லிக் கொள்ள முடியாமல் உள்ளுக்குள் அன்பவிக்கும் உண்மை நிலை என்ன தெரியுமா?
பேச யாரும் இல்லாத இரவுகள். குடும்பமாக இருந்தாலும் உறவுகளை பிரிந்த வருத்தம்.
திருவிழா நாட்களில் அவர்களுக்குள்ளாகவே வாழ்த்துகளை பகிர்ந்து கொள்ளும் நிலை.
குடும்பத்திலிருந்து நெடுந் தொலைவில் எதையோ பறிகொடுத்த விரக்தி.
தங்கள் குழந்தைகள் தமிழ் அறியாத நிலை. பேசவும் பழகவும், கூட அவர்களுக்கு ஆங்கிலமே பிரதானமாக இருக்கும் அவலம்.
இது ஒரு மெதுவான வெற்றிடத்தை அவர்களுக்கு உருவாக்குகிறது. மெல்ல மெல்ல அவர்கள் வாழும் நிலையை எண்ணி வருந்தத் தொடங்குகிறார்கள். சொந்த மண்ணில் கிடைக்கும் சுதந்திரம் அந்நிய மண்ணில் இல்லை என்பதை உணர அவர்களுக்கு பாதி வாழ்க்கை தேவைப்படுகிறது. தெரிந்த பின் வருத்தம் மட்டுமே மிச்சமாகிறது.
வெளிநாடுகளில் வாழும் பலருக்கும் தங்கள் குழந்தைகள் இலக்கியம் பயில சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கவே முடியாத நிலை. உறவுகளை பிரிந்த, அல்லது அதற்கு பழகாத சமுதாயத்தை உருவாக்கி கொடுக்கும் சூழல். தமிழர்களின் நாகரீகம், கலாச்சாரம்,கலை பண்பாட்டு பழக்க வழக்கங்கள், இலக்கிய அறிவில்லாத வாழ்க்கை முறையை ஒரு சமுதாயம் சத்தமின்றி மறந்து கொண்டிருக்க யார் காரணம்?
உங்கள் வாழ்க்கையை நீங்கள் அமைத்துக் கொள்ள முழு உரிமை இருக்கிறது. ஆனால் உங்கள் தலைமுறையை சிதைக்க உங்களுக்கு எந்தவிதமான அனுமதியும் இல்லை என்பதை நீங்கள் உணராமல் போனது ஏன்? நாகரீகம் அது சார்ந்த வளர்ச்சி, நவீன தொழிநுட்ப அறிவு இவையெல்லாம் அவசியமே. மறுக்கவே முடியாது. அதை உங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்க உங்களுக்கு சுதந்திரம் இருக்கிறது.
ஆனால் தமிழ்க் கலாச்சாரத்தை எப்படி நீங்கள் உங்கள் தலைமுறைக்கு கொடுக்காமல் புறக்கணிக்கலாம்? இந்த கேள்வி உங்களுக்கானது. நீங்கள் சிந்திக்க அவசியமானது. உறவுகளின் மேன்மை தெரியாத எத்தனை எத்தனை பிள்ளைகளை வருங்காலத்தில் நீங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் யோசிக்க முயலுங்கள்.
வெளிநாட்டு வாழ்க்கை கன்வு! இலட்சியம், குறிக்கோள்- எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் வாழும் இடத்தில் உங்கள் அடையாளம் தமிழாக இருக்க வேண்டும். அது இல்லாத சமுதாயத்தில் நீங்கள் என்ன சாதிக்க முடியும்? பணம், வசதி, நவீன வாழ்க்கை இருந்து என்ன பயன்? நாளை உங்களுக்கு தமிழின் வேர்களை கண்டறிய முடியுமா? தமிழை பயிலாத பிள்ளைக்கு நாளை, தங்க தட்டில் சோறு போட்டாலும் அது செரிக்குமா என்று யோசியுங்கள்.
3. நாம் இழந்த முக்கியமான 5 தமிழ் அனுபவங்கள்
1. குடும்ப உறவு (Joint Family Bond)
முன்பு:
ஒரே வீட்டில் பல தலைமுறையினர் ஒன்றாக வாழ்ந்தனர். ஒருவருக்கொருவர் தோள் கொடுத்து உதவி, உயர்த்தி அழகு பார்த்தனர். பெருமையும், சிறுமையும் என்று எது வந்தாலும் பகிர்ந்து அனுபவித்து மகிழ்ந்தனர். பிள்ளைகளுக்கு எதுவென்று சொன்னாலும் அத்தனை உறவுகளும் முன்னால் வந்து நின்றனர். விட்டுக் கொடுக்கவும், கற்று கொடுக்கவும் உறவுகள் கூடவே இருந்தது.
ஆனால் இன்று:
ஒவ்வொருவருக்கும் தனி வாழ்க்கை. தாத்தாவை பேத்திக்கு தெரியாது. தாத்தா சொல்லிக் கொடுக்கும் நல்வாழ்க்கை முறை குறித்து இளைய தலைமுறைக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய அனுபவ அறிவு கிடைக்க விடாமல் செய்து விட்டோம். பாட்டி சொல்லிக் கொடுக்கும் நீதி கதைகளை பிள்ளைகள் இன்று கேட்டு வளர்வதே இல்லை.
AI சொல்லிக் கொடுக்கும் டாக்சிக் கதைகள் தான் இன்று நாம் கொடுக்கும் அனுபவ அறிவு. மொபைல் போனை கொடுத்து விளையாட்டோடு, விபரீதத்தையும் விதைக்கிறோம்.
5 வயதிலேயே பிள்ளைக்கு மூக்குக் கண்ணாடி போடவும், 10 வயதிலேயே பூப்படையும் கேடான உணவு முறையையும் பழக்கி இருக்கிறோம். திறமையை வளர்க்கிறேன் என்று கூறிக் கொண்டு, 3 வயது பிள்ளைக்கு ரீல் செய்யக் கற்றுக் கொடுக்கும் பெற்றோரே! நீங்கள் தான் இந்த தலைமுறையை கேடு விளைவிக்கும் ஆயுதமாக மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.
மூத்தவர்கள் இல்லாத நிலை பிள்ளையின் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களை மட்டுமல்ல, அனுபவம், ஆளுமை சார்ந்த விஷயங்களையும் சீரழிக்க காரணமாக அமைந்து இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.
2. உணவு கலாச்சாரம்
முன்பு:
✔ வீட்டில் சமைத்த உணவுகளை பிள்ளைகளுக்கு கொடுப்பார்கள். இதற்கு என்றே வீட்டில் இருக்கும் பெரியவர்கள் பலவிதான சுவையான, சத்தான உணவுகளை பிள்ளைகளுக்கு சமைத்து கொடுப்பார்கள்.
✔ பாரம்பரிய உணவு முறை பேணப்பட்டது. ஆரோக்கியம் மட்டுமே இங்கே அக்கறையுடன் கலந்து பரிமாறப்பட்டது.
✔ சிறிய ஆரோக்கிய சீர்கேட்டுக்கும் கை வைத்தியம் கை கொடுத்தது.
✔ மருத்துவரை நாடி, உடனே செயற்கை முறையில் மருந்துகளை கொடுத்து ஆரோக்கியத்தை கெடுக்கும் விஷயங்கள் இல்லை.
✔ பாரம்பரிய விளையாட்டுகள், வித்தைகள் கற்றுக் கொடுக்கப்பட்டதால் பிள்ளைகள் ஆரோக்கியமாக வளர்ந்தார்கள்.
இன்று:
பாஸ்ட் புட் கலாச்சாரத்துக்கு குழந்தைகளின் வாயை பழக்கி இருக்கிறோம்.
ஆரோக்கிய உணவா? தரமானதா என்றெல்லாம் இல்லை. KFC-யும் மெக்டொனால்டும், பீசா ஹட்டும் தான் உங்கள் பிள்ளைக்கு தெரியும்.
கெடுதல் என்று தெரிந்தே அஜினோ மோட்டோ கலந்த உணவுகளை உங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கிறீர்கள்.
சாசும் சான்வெட்ஜும் உங்கள் டீனேஜ் பிள்ளையின் மலட்டுத் தன்மைக்கு காரணமாகும் என்று தெரிந்தும் அதையே கலாச்சாரம் என்று சொல்லி கற்றுக் கொடுக்கிறீர்கள்.
மைதாவில் செய்த மொத்த உணவுகளையும் மேல்தட்டு உணவு முறைகளாக உங்கள் பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்யும் நீங்கள்…. ஆரோக்கியம் பற்றி பேசும் உங்கள் பெற்றோரின் அறிவுரைகளை ஏற்கிறீர்களா?
எதற்கெடுத்தாலும் மருத்துவர் அறிவுரை. மருத்துவமனையில் கால் கடுக்க காத்திருக்க பழகி இருக்கிறீர்கள். கைவைத்தியம் எல்லாம் பூச்சாண்டி என்று நொண்டி சாக்கு சொல்லிக் கொண்டு நாகரீக மேதாவித்தனம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.
விளையாட்டா? பிள்ளைக்கா? சும்மா விளையாடாதீங்க பாஸ். நாங்க இருக்கிறதே அபார்ட்மெண்ட் கலாச்சாரத்தில். இங்கே யாரை நம்பி விளையாட அனுப்புவோம்? கராத்தே, குங்க் பூ, பேஸ் பால் என்று கோச்சிங் அனுப்புகிறோம். அதற்கே பெரும் செலவு பிடிக்கிறது. இது உங்கள் பதில் என்றால்… மன்னிக்கவும் தவறு உங்களிடம் தான் இருக்கிறது.
ஆரோக்கியம் நல்கும் நல்ல விளையாட்டுகளை எல்லாம் நீங்கள் புறக்கணித்ததன் விளைவு உங்கள் பிள்ளைகளின் ஆரோக்கியம் இன்று கேள்விக் குறியாகி இருக்கிறது. உடல் எடை கூடி அவர்கள் 10 வயதில் 20 வயதுக்குரிய தோற்றம் பெற்று நிற்கிறார்கள்.
இந்த நிலை மாற என்ன செய்யப் போகிறீர்கள்? சிந்திக்க அழைக்கிறேன்.
3. திருவிழா அனுபவம்
முன்பு:
முன்பெல்லாம் திருவிழா என்றாலே குடும்பம் + உறவினர் + உற்சாகம் = மகிழ்ச்சி. ஆர்ப்பாட்டம் கோலாகலம் கொண்டாட்டம் என்று இருந்தது. ஆனால் இன்று உங்கள் தலைமுறை அப்படி ஒரு வாய்ப்பை பெறுகிறதா என்று சிந்தியுங்கள்.
தலைவாழை இலை போட்டு விதவிதமான உணவுகளை சாப்பிட்டு மகிழ்ந்த தருணங்கள் உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? இல்லை உங்கள் பிள்ளைகளுக்கு அப்படியொரு வாய்ப்பை நீங்கள் தந்து இருக்கிறீர்களா?
இன்று:
திருவிழா, திருமணம், காதுகுத்து என்று எதுவென்று சொன்னாலும் வெறும் Social media post மட்டும் தான் போடப்படுகிறது.
திருவிழா எப்படி இருக்கும்? உங்கள் பிள்ளைக்கு தெரியுமா?
திருமண நிகழ்ச்சியில் நிகழும் சடங்குகள், சம்பிரதாயங்கள், உறவுகள் கலந்து கட்டி நிகழ்த்தும் உற்சாகம் பற்றி உங்கள் குழந்தை என்றேனும் அனுபவித்து இருக்க வாய்ப்பு கொடுத்து இருக்கிறீர்களா?
சதாகாலமும் பள்ளி வகுப்பு, பாடம், வீட்டு வேலை, பயிற்சி மட்டுமே உங்கள் குழந்தைக்கு நீங்கள் தரும் வாய்ப்பு. நல்லது செய்கிறேன் என்ற பெயரில் உங்கள் பிள்ளைகளை தனிமை செய்து வைத்து, சமுதாய சீர்கேட்டை விதைப்பது மட்டுமே உங்கள் அயராத பணி.
பிறப்பு, இறப்பு, பூப்படைதல், திருமணம், வளைகாப்பு, காதுகுத்து வரை விழாவாக கொண்டாடி அதில் ஆயிரம் பயிற்சியும், அர்த்தங்களும் கற்றுக் கொடுத்த தமிழர் வாழ்வியலை உங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்காமல் தவிர்ப்பதால் அவர்களுக்கு அதன் அர்த்தங்களும் புரியவில்லை. அதை அனுபவிக்கவும் தெரியவில்லை.
இதுதான் வெளிநாட்டில் சென்று நீங்கள் செய்திருக்கும் சிறப்பு நற்செயல் என்றால்…. அடடே அபாரம் என்று சொல்லிவிட்டு கடந்து செல்ல நான் ஒன்றும் உங்கள் வெளிநாட்டு நண்பன் இல்லை. உங்களையும் கெடுத்து தன்னையும் கெடுத்துக் கொள்ளும் நண்பனாக நான் இருக்க விருப்பமும் கொள்ளவில்லை.
பாரம்பரிய உடைகளை கலந்து விட்டீர்கள். பரிணாமம் என்ற பெயரில் ஆன்சைட்டி, டாக்சிக் கொள்கைகளுக்கு நியாயம் சொல்ல பழகிக் கொண்டீர்கள். உங்கள் தலைமுறையையும் அதற்கு அடிமைகளாக மாற்றிக் கொண்டு இருக்கிறீர்கள். இது எதிர்காலத்தை சூனியமாக்கும் செயல் என்பதை மறக்க வேண்டாம்.
4. மொழி மற்றும் அடையாளம்
உங்கள் பிள்ளைகளுடனும் குடும்பத்துடனும் தமிழில் பேசுவது இன்று குறைந்து வருகிறது. ஆங்கிலம் இன்று உங்கள் பிள்ளைகளுக்கு வாடகைத் தாய் மொழியாகி போனதை எண்ணி பெருமை கொள்ள வேண்டாம்.
பிற மொழிகளை கற்பதை எதிர்க்கும் முரண்பாட்டு கொள்கை என்னுடையது இல்லை. பிற மொழிகள் கற்பது உங்கள் அனுபவத்தையும் அறிவையும் வளர்க்கும். அதை நான் வரவேற்கிறேன். ஆனால் அதற்கே முழுமையாக அடிமையாகி உங்கள் அடையாளத்தை தொலைப்பதைத் தான் தவறாக இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
தமிழை பூர்வீகமாக கொண்டு, கிளப்பிய நீங்கள் வெளிநாட்டில் வேலை செய்வதற்காக உங்கள் சுய அடையாளத்தை இழந்து, பிற மொழிக்கு ஆட்பட்டு தொலைந்து போனதை எண்ணி வருத்தம் கொள்கிறேன். உங்களோடு இந்த பிரச்சனை முடிந்தால் நான் வருத்தம் கொள்ள தயங்குவேன்.
ஆனால் உங்களால் உங்கள் சமுதாயமும், தலைமுறையும் தமிழின் அடையாளத்தை இழப்பதைத் தான் நான் வருத்தமுடன் பார்க்கிறேன்.
வெளிநாட்டில் வாழும் நீங்கள் சுதந்திரமாக, அல்லது விருப்பமுடன் உங்கள் பிள்ளைக்கு தமிழ் சொல்லிக் கொடுக்க முடியுமா? அதற்கு நீங்கள் என்றேனும் விருப்பம் கொண்டாவது இருக்கிறீர்களா? உங்கள் பிள்ளைக்கு தமிழ் வராது என்று நீங்களே முடிவெடுப்பது எப்படி நியாயமாகும்? தமிழ் கற்று என்னவாகப் போகிறது என்று, முரண்பாட்டு தத்துவம் பேசினால் அழிவது உங்கள் அடையாளம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
5. மனித உறவுகள்
முன்பு:
✔ உறவுகள் + சொந்த பந்தங்கள்+ நண்பர்கள் = குடும்பம் என்ற விரிவான உறவுமுறை இருந்தது. அது உங்கள் பிள்ளைகளுக்கு பெரிய பலமாகவும் இருந்தது. ஊரில் பிள்ளையை யாராவது ஏதாவது சொல்லி விட்டால் கூட, உங்கள் பிள்ளையை நன்கு அறிந்திருக்கும் ஒருவர் ஓடோடி வந்து நிற்பார். உங்கள் பிள்ளைக்கு இருந்த பாதுகாப்பும் நம்பிக்கையும் இன்று இருக்கிறதா?
இன்று:
வெளியூருக்கு சென்று இன்று வாழ்வை இழந்த பிள்ளைகள் எத்தனை தெரியுமா? அவர்களை இழந்த பின் உங்களுக்கு பணம், பொருள், கவுரவம், அந்தஸ்து இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?
உங்கள் பிள்ளைக்கு இன்று அவன் உறவினர் யாரென்றே தெரியாது. நண்பர்கள் என்ற அணுகுமுறை ஆகவே ஆகாது. அப்படித்தான் கற்றுக் கொடுக்கிறீர்கள். யாரை உதவிக்கு அழைப்பார்கள்? யாரிடம் அவசரத்துக்கு ஆதரவு நாடி செல்வார்கள்?
நீங்களும் வெறுமையாகி உங்கள் பிள்ளைகளையும் வெறுமையாக்கி இருக்கும் இந்த நிலை நியாயம் தானா என்று சிந்தியுங்கள்.
4. ஏன் இப்போது இந்த வாழ்க்கையை தேடுகிறோம்?
மேலே கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் மிகவும் எளியது. நாம் ஒன்றை இழந்த பிறகு தான் அதன் மதிப்பு புரிகிறது. நமக்கு புரிவதற்குள் நம் ஆயுளில் அரை பகுதியை கடந்து நிற்கிறோம். அதற்குள் நம் பிள்ளை வளர்ந்து ஆளாகி இருக்கும். அவனுக்கு நீங்கள் உருவாக்கிக் கொடுத்த சூழல் பழகி, அவன் அதற்குள் பாதி துரத்தை கடந்தும் இருப்பான். கண் கெட்ட பிறகு சூரிய வணக்கம் செய்வதனால் என்ன பலன்?
5. உலகம் ஏற்றுக்கொள்ளும் தமிழ் வாழ்க்கை முறை- உங்களை ஆட்கொள்ளாமல் போனது ஏன்?
இன்று உலகம் கீழ்கண்ட பழக்கங்களை கண்டிப்பாக கற்க சொல்லி வலியுறுத்தி வருகிறது. இதைத் தான் வேண்டாம் என்று நீங்கள் புறக்கணித்து இருக்கிறீர்கள். ஆனால் தமிழன் இதை செய்ய சொன்னால் மறுக்கும் நீங்கள் உங்கள் வெளிநாட்டு ஆலோசகன் சொன்னால் உடனே செய்ய தீர்மானிப்பது உங்களுக்கே முரணாக படவில்லையா? நவீன ஊடக கோமாளிகள் எதை கற்க சொல்கிறார்கள் தெரியுமா? ஏற்கனவே நம் முன்னோர் வாழ்ந்த வாழ்க்கையில் நம்மை கடைபிடிக்கச் சொன்ன அதே பாரம்பரிய வாழ்க்கை முறைகளைத்தான்.
Yoga
Ayurveda
Organic Food
Minimal Living
இவையெல்லாம் என்ன வெளிநாட்டு விஞ்ஞானி கண்டறிந்த வினோத கண்டுபிடிப்புகளா? தமிழன் ஆய்ந்தறிந்து உன்னத வழிகள் இவை. ஆனால் அதை செய்ய தமிழன் சொல்லக் கூடாது. வெளிநாட்டு மனிதன் சொன்னால் சரியாக இருக்கும் என்னும் உங்கள் கோட்பாட்டை எண்ணினால் எனக்கு சிரிப்புதான் வருகிறது.
6. தமிழர் வாழ்க்கை – எதிர்காலத்திற்கு ஒரு பதில்
நவீன உலகம், இளைய தலைமுறை, வெளிநாட்டு இயந்திர வாழ்க்கை இன்று…
👉 Stress
👉 Anxiety
👉 Loneliness
இவற்றுக்கு தீர்வு தேடுகிறது. எங்கிருந்து வந்தது ஸ்ட்ரெஸ்? களத்தில் உடல் வியர்க்க, உடல் வலிக்க விளையாடிய நேரத்தில் இல்லாத ஸ்ட்ரெஸ் என்ற புதிய கண்டுபிடிப்பு இன்று உங்களையும் உங்கள் தலைமுறையையும் எப்படி ஆட்கொண்டது?
அன்ஸ்சைட்டி பேசும் இந்த நவீன தலைமுறைக்கு, குடும்ப உறவு கொடுக்கும் உளவியல் அன்பு என்ற, மருந்து பற்றி தெரியாத நிலைக்கு யார் காரணம்? தமிழன் அதற்குத்தானே கூடி வாழும் கூட்டுக் குடும்ப கோட்பாட்டை வகுத்தான்.
பிள்ளை சோர்ந்தால் நீங்கள் அவனோடு நேரம் செலவிட உங்களுக்கு முதலில் அவகாசம் இருக்கிறதா? இல்லை அவனுக்கு அன்பை வாரி கொடுக்க உங்களுக்குத் தான் பொறுமை இருக்கிறதா? உற்சாகம் கொடுத்து தட்டிக் கொடுக்க உங்களுக்குத்தான் அனுபவம் இருக்கிறதா?
ஆன்ஸசைட்டி வர டாக்சிக் சூழலை கொடுத்ததே நீங்கள் தானே… உங்கள் பெற்றோர் உடனிருந்து இருந்தால் உங்கள் பிள்ளையை கையாளும் விதம் எப்படி இருந்திருக்கும்? என்றாவது யோசித்து இருக்கிறீர்களா? உங்கள் பெற்றோரால் அவர்களை தட்டிக் கொடுத்து, தேற்றி எடுத்து அன்பில் நிறைத்து பீனிக்ஸ் பறவையாக்க முடியும் என்பதை என்றாவது ஒப்புக் கொள்ளத்தான் உங்கள் இதயத்துக்கு தெரியுமா?
Loneliness என்ற வார்த்தையை தயாரித்த பெருமை உங்களையே சாரும். கணவன் மனைவி இருவரும் வெளிநாட்டில் வேலை செய்ய சென்று விடுகிறீர்கள். சம்பளம், செலவினம் கவுரவம், என்ற மாயைகளுக்கு பின்னால் சுற்றும் உங்களுக்கு, உங்கள் பிள்ளைகளை பற்றி என்ன தெரிந்து இருக்கிறது?
சதாகாலமும் படிப்பு, மொபைலில் அல்லது கணினியில் விளையாட்டு…. சமூக வலைத்தள அரட்டை…. விளைவு… தனிமை. உங்கள் பிள்ளைக்கு தோல்வி பயம். சுயமாக எதையும் எதிர்கொள்ள துணிவு இல்லை. செய்… என்ன ஆகிறது பார்க்கலாம் என்று சொல்ல… அல்லது கைபிடித்து செல்ல அனுபவம் வாய்ந்த துணை இல்லை.
அதுவே நீங்கள் தீர்வு தேடும் Loneliness உருவாக காரணம். அதற்கு விடை தேடி திரும்பவும் நீங்கள் செல்வது… தமிழன் கண்டறிந்த வழிமுறைகளுக்குள் மட்டுமே.
7. வெளிநாடுகளில் வாழும் தமிழ் உறவுகள் என்ன செய்யலாம்?
✔ வீட்டில் தமிழ் பேசுங்கள்
✔ குழந்தைகளுக்கு கலாச்சாரம் சொல்லுங்கள்
✔ திருவிழாக்களை கொண்டாடுங்கள்
✔ உணவு முறையை மாற்றுங்கள்
சிறிய மாற்றங்கள்… பெரிய தாக்கம்.
முடிவு
நாம் தொலைத்திருக்கும் வாழ்க்கை… சாதாரண வாழ்க்கை இல்லை. அது தலைமுறை தோறும் தொடர வேண்டிய முழுமையான வாழ்க்கை.
தமிழரின் தமிழ் பண்பாட்டு, கலாச்சார பழக்க வழக்கங்கள், இலக்கிய கற்றல்கள், கலை விளையாட்டு பயிற்சிகள் வெறும் ஏட்டு சுரைக்காய் அல்ல. நடைமுறை சித்தாந்தம். தமிழனாக பிறந்ததற்கு பெருமை கொள்ளும் நீங்கள்…. தமிழனாக வாழவும் முயற்சிக்க வேண்டும். உங்கள் தலைமுறையை அழித்த அவலம் வேண்டாம்.
இன்று நாம் வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டு தேடுவது எதைத் தெரியுமா?
அமைதி
உறவு
அடையாளம்
இந்த மூன்றும் தலைமுறை தலைமுறையாக தமிழர் வாழ்க்கையில் இருந்ததே. அதை வெளியில் தேடாதீர்கள். முதலில் உங்கள் குடும்பத்தில் தேடுங்கள்! உங்கள் உறவுகளிடம் பயிலுங்கள்! தமிழ் இலக்கிய கற்றல் உங்களையும் உங்கள் தலைமுறையையும் ஆரோக்கியமாக, அன்பாக, ஒழுக்கமாக, உயர்ந்த கொள்கைகளோடு வாழ வைக்கும்.
நாம் எல்லைகளை கடந்து வேண்டுமானால் சென்று இருக்கலாம். ஆனால் அந்த வாழ்க்கை இன்னும் நம்முள் இருக்கிறது. அதை மீண்டும் கண்டுபிடிப்பது — நம்முடைய பொறுப்பு.
இந்த கட்டுரை உங்களுக்கு உதவியதாக இருந்தால்:
கீழே உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள் - மற்றவர்களுக்கும் பகிருங்கள்
மேலும் தகவல்களுக்கு: எங்கள் Contact Page மூலம் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
Comments