கோலிவுட் சக்ரவர்த்தி - சொல்லப்படாத கதை - அத்தியாயம் 1

📌 Topic Summary:

• 1976-ம் ஆண்டு AVM ஸ்டுடியோ அருகே நடந்த ஒரு தற்செயலான சந்திப்பு தென்னிந்திய சினிமா வரலாற்றையே எப்படி மாற்றியது?

• மாவு மில்லில் வேலை பார்த்த ஒரு ஏழை ஆந்திரா பெண்ணை கண்டுபிடித்து, பின்னர் கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவு தேவதையான மாற்றிய  அந்த ஆஜானுபாகுவான மனிதர் யார்?

• நடிகர், வசனகர்த்தா, திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட கலைஞர் ஆக உருவாகும் முன்பு, வினுச்சக்கரவர்த்தி எப்படி காவல்துறை உதவி ஆய்வாளர் (Sub-Inspector), ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர், குத்துச்சண்டை வீரர் என பல்வேறு வாழ்க்கைப் பரிணாமங்களை கடந்து வந்தார்?

• Parasangada Gendethimma என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் வினுச்சக்கரவர்த்தி சினிமாவிற்கு வர தயாரிப்பாளர் திருப்பூர் மணி மற்றும் இயக்குனர் மாருதி சிவராம் எந்த முக்கிய பங்கு வகித்தனர்?

• அந்த கன்னடக் கதையே பின்னர் 1979-ல் வெளியான “ரோசாப்பூ ரவிக்கைக்காரி” (Rosapoo Ravikkaikari) என்ற தமிழ்த் திரைப்படமாக மாறி, வினுச்சக்கரவர்த்தியை தமிழ்சினிமா ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது எப்படி?

• “வண்டிச்சக்கரம்” (1980) திரைப்படத்தின் மூலம் விஜயலட்சுமி → சில்க் ஸ்மிதா என மாறிய உண்மையான வரலாறு என்ன?






கோலிவுட்  சக்ரவர்த்தி - சொல்லப்படாத கதை 

1976-ம் ஆண்டின் பிற்பகுதி….


நண்பகல் கடந்திருந்த நேரமது. அன்றைய மெட்ராஸ் நகரத்தின் பரபரப்பான மதிய வேளையில் AVM ஸ்டியோ அருகில் இருக்கும் இளநீர் கடைக்கு முன் ஒரு வாடகை கார் வந்து நிற்கிறது. 


காரின் பின்பக்கத்தில் இருந்து ஒரு ஆஜானுபாகுவான மனிதர் இறங்கி வருகிறார். அவரது தோற்றத்தில் இருந்த வசீகரமும், அவரது பார்வையில் இருந்த மிடுக்கும் அவரை கம்பீரமாக காட்டுகிறது. 


“இந்தாப்பா வழுக்கையா இரண்டு இளநீ  வெட்டு!” கூறிவிட்டு சுற்றும் முற்றும் பார்க்கிறார் அந்த மனிதர். விருகம்பாக்கம் வடபழனி சாலையில் ஆங்காங்கே சென்று கொண்டிருந்த வாகனங்களை பார்த்தபடியே, அவர் AVM ஸ்டுடியோவை ஆழமாக பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில்…. 


“இந்தாங்க சார்! இஸ்ட்டரா வோணுமா சார்?” என்று கேட்ட இளநீர் விற்கும் மனிதனை பார்த்து புன்னகைத்த அந்த ஆஜானுபாகுவான ஆசாமி…. 


“அடக்கழுதை! இதையெல்லாமா வெச்சு குடிப்பாங்க? தூக்குனமா வாய்வெச்சு தொண்டையில நனைய கவுத்தமான்னு இல்லாமா?” என்று கூறியபடியே புன்னகைக்கிறார். ஒரு இளநீரை கடைக்காரரிடமிருந்து வாங்கிக்கொண்டு, நடந்து சென்று காரின் பின் பக்கத்தில் இருக்கும் பெண்ணிடம் கொடுக்கிறார். 


“கர்ணம்! இன்னொரு இளநீ குடிக்கறியா?” அன்பொழுகும் குரலில் பேசிய அந்த சிங்க மனிதனை, அருள் வீசும் பார்வையால் ஆக்கிரமித்த பெண்… 


“போதுங்க!” என்ற சிக்கன வார்த்தை கூறி நிறுத்த…. 


“அட குடி! அடிக்கற வெயிலுக்கு என்னத்த பெருசா நீ சாப்பிட்டுட போறே? இளநீ தான…” என்று கூறி சிரிக்கிறார். 


அவர்கள் சம்பாஷணையை இடைமறிக்கும் விதமாக இளநீர் கடையிலிருந்து வெள்ளிக் கொலுசு மணிகள் குலுங்கும் விதமாக ஒரு காந்தக் குரல் கேட்கிறது. 


“அன்னக்காரு! இளநீ எவ்வளோ? தண்ணி நெறைய இருக்குமா?” 


என்று தெலுங்கும் தமிழும் கலந்த வார்த்தைகளைக் கேட்டு இருவரும் கடையை திரும்பிப் பார்க்கிறார்கள். அங்கே 14 வயதுக்குள், பருவயதில் மலர துடிக்கும் ரோஜா மொட்டு போல நிற்கும் இளம் பெண்ணைக் கண்டு இருவரும் ஆச்சரியத்தில் உறைகிறார்கள். 


சட்டென்று அந்த ஆஜானுபாகுவான மனிதனின் இதயம் எதையோ தேடித் கண்டு கொண்டது போல துடிக்கிறது. அவர் வேகமாக அந்த பெண் அருகில் செல்கிறார். கடைக்காரரிடம் பேசிக் கொண்டிருந்த பெண், அவர் அருகில் வந்ததும் அவரை ஆச்சரியம், பயம், கலவரம் கலந்து பார்க்கிறாள். 


நொடிப் பொழுதில் ஆயிரம் ஆயிரமாயிரம் செய்திகளை வெளிப்படுத்திய அந்த பெண்ணின் கண்களும்…. அதில் ஒளிந்திருந்த கோடானுகோடி வசீகர ஒளிக்கீற்றுகளும், அதைத் தாங்கிய முகபாவங்களும், உணர்வுகளை பிரதிபலித்த உடல்மொழிகளும் அந்த மனிதரை ஆச்சரியத்தில் திணறடிக்கவே… 


“இந்தாம்மா! உன்னோட பேரு என்ன? என்ன வேலை பாக்கறே?” என்று கரகரப்பான சிம்மக்குரலில் அவர் கேட்க…. அவரது குரல் தொனியில் அஞ்சி அந்தப் பெண்ணிடம் நடுக்கம் உருவானது. அவள் தயங்கியபடியே நிற்க… 


“அட சொல்லு பாப்பா! அய்யா கேக்கறாரு இல்ல?” என்று கடைக்காரர் அந்தப் பெண்ணிடம் சொல்கிறார். ஆனால் அந்த பெண் பேசாமல் தன் கண்களை மான்களின் வேகத்தில் சுழற்றவே… எதிரில் நின்று கொண்டிருந்த மனிதரிடம் எண்ணற்ற மகிழ்ச்சி ரேகைகள். அதற்குள் கடைக்காரரே அவருக்கு பதில் கூறலானார். 


“அது ஆந்திரா பொண்ணு சார்! இங்கதான் மாவு மில்லுல வேலை பாக்குது. குடும்ப வறுமை போல! முதலாளிகிட்ட முன்பணம் வாங்கிகிட்டு அவங்க வீட்டுல கொண்டாந்து விட்டுட்டு போயிட்டாங்க. ஆறுமாசமா இங்கதான் வேலை பாக்குது” என்று பதில் கூறி முடிக்கும் முன், காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த பெண் அங்கே வந்து சேர்ந்திருந்தார். 



“என்னங்க! என்ன ஆச்சு? ஏன் இப்படி உறைஞ்சு போய் நிக்கறீங்க?” என்று கணவரிடம் அந்தப் பெண் கேட்க… அதிர்ச்சியும், ஆச்சரியமும், மகிழ்ச்சியும் விலகாத தொனியில் அந்த மனிதர் பதில் கொடுத்தார்.


“கர்ணம்! புது கதைல ஒரு கேரக்டர் வெச்சு இருக்கேன். அதுக்கு ஏத்தமாதிரி ஒரு பொண்ண தேடிகிட்டு இருக்கேன்னு சொன்னேன் இல்ல. அந்த எல்லா குணாதிசயங்களும் இந்த பொண்ணுகிட்ட இருக்கு. நான் தேடிட்டு இருந்த பொண்ணு இவதான்” என்று மகிழ்ச்சியோடு சொல்லி முடிக்க… எதுவும் புரியாமல் திருதிருவென்று விழித்தாள் அந்த இளம் பெண். 


கர்ணம் சில நொடிகள் அந்த பெண்ணை உற்று நோக்கிவிட்டு, அவள் கரங்களைப் பற்றிக் கொள்ள… மெல்ல பயம் விலகி அவள் இலேசாக உதடுகளை வளைத்து அளவாக பற்கள் வெளிப்பட சினேக சிரிப்பொன்றை உதிர்த்தாள். 


அடுத்த மூன்று மணி நேரத்தில், விஜயலட்சுமி என்ற அந்த இளம்பெண் கர்ணம் கையைப் பிடித்துக் கொண்டு, ஆஜானுபாகுவான மனிதரின் காரில் ஏறி, அவர் வீட்டுக்கு பயணித்துக் கொண்டிருந்தாள். 


யார் அந்த ஆஜானுபாகுவான மனிதர்? கண்களில் காந்தமும், சிரிப்பில் பல்லாயிரம் வெண்கல மணிகளும் கலந்த இளமையின் இன்ப நிலாவான அந்த பெண்ணுக்கு தெரியுமா? 


இன்னும் சில நாட்களில் அவள் தென்னிந்தியாவில் வாழும், பல கோடி ஆண்களின் கனவில் தினமும் வந்து போகும் தேவதையாக மாறப் போகும் அதிசயம் நிகழ இருப்பதை அவள் தான் உணர்ந்து இருந்தாளா? 




கல்லூரி நாட்களில் குத்துச் சண்டை வீரர், கட்டுக்கோப்பான பழக்க வழக்கங்களுக்கு சொந்தக்காரர், காவல்துறை உதவி ஆய்வாளர், இரயில்வே நிலைய அதிகாரி, திரைப்பட கதாசிரியர், எழுத்தாளர், வசனகர்த்தா, நடிகர் என்று பல பரிணாமங்கள் காட்டிய அந்த சிங்கக் குரலுக்கு சொந்தக்காரர் யார் என்று அறிய வேண்டுமா? 


“வினுச்சக்ரவர்தி” என்ற லக்கி சார்ம் இல்லாமல் 2014-ம் ஆண்டு வரை தமிழ் சினிமாவே…. இல்லை! இல்லை…. தென்னிந்திய சினிமாவே இல்லை என்ற நிலை இருந்தது. அவரால் கண்டறியப்பட்ட விஜயலட்சுமி பின்னாளில் காளையர்களின் கனவை கலைத்த “சில்க்” ஸ்மிதா ஆன வரலாறு உலகமே அறியும். 


வினுச்சக்கரவர்தியின் சொல்லப்படாத பக்கங்களில் இருந்த, விவரிக்க மறந்த கதையைத்தான் இந்த கட்டுரையில் விவரிக்க இருக்கிறேன். வாங்க நம்ம லக்கி சார்ம் பத்தி விளக்கமா வாசிக்கலாம். 


1. திருப்புமுனை தந்த திருப்பூர் மணி:


1977-ம் ஆண்டு 


‘பரசங்கட ஜென்டிதிமா’ கன்னட திரைப்பட சூட்டிங் ஸ்பாட்…..


இயக்குனர் மாருதி சிவராம் தீவிரமாக அடுத்த காட்சி பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறார். அவரைச் சுற்றி அவரது உதவி இயக்குனர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். அடுத்த காட்சியை எப்படி எடுக்கலாம் என்ற குழப்பம் அவர்களுக்கு இருக்கிறது. அவர்களுக்கு சற்றுத் தள்ளி மற்றொரு தமிழ்த் திரைப்பட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. அங்கே போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருக்கிறார் தயாரிப்பாளர் திருப்பூர் மணி. 


குறிப்பிட்ட காட்சியை பற்றிய குழப்பத்தை தீர்க்கும் பொருட்டு, இயக்குனர் மாருதி சிவராமுக்கு, ஆஜானுபாகுவாக தோற்றமளித்த ஒருவர் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். திருப்பூர் மணி அந்த மனிதர் காட்சியை விவரித்துக் கொண்டே செல்வதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார். அவரால் அந்த கதை சொல்லும் நுட்பத்திலிருந்து விலகவே முடியவில்லை. 


காட்சி பற்றிய விளக்கம் முடிகிறது. இயக்குனர் மாருதி சிவராம் காட்சியை விளக்கியவரை எழுந்து கைகுலுக்கி பாராட்டிவிட்டு, காட்சியை எடுக்க ஆயத்தமாகிறார். அதுவரை எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த திருப்பூர் மணி, தன் உதவியாளரை அழைத்து, காட்சியை விளக்கிய மனிதரை பற்றி விசாரிக்கிறார். 


“ஐயா! அவரு பேரு வினுச்சக்ரவர்தியாம்! கன்னட இயக்குனர் புட்டண்ணாகிட்ட அசிஸ்டென்ட்டா வேலை பார்த்து இருக்காரு. இந்த படத்துக்கு அவரு தான் திரைக்கதை எழுதி இருக்காராம். சொந்த ஊரு உசிலம்பட்டின்னு சொல்லறாங்க” என்று உதவியாளர் வந்து சொல்லவும், திருப்பூர் மணி வினுச்சக்கரவர்தியை பார்க்க விரும்புவதாக கூறுகிறார். 


படப்பிடிப்பு முடிந்த நேரத்தில், திருப்பூர் மணியை சந்திக்க உதவியாளர் வினுவை அழைத்து வருகிறார். 


“வணக்கம் சார்! கூப்பிட்டு விட்டீங்கனு உங்க அசிஸ்டென்ட் சொன்னார்” என்று வினுச்சக்கரவர்தி திருப்பூர் மணியிடம் சொல்ல…. 


“உட்காருப்பா! உன்கிட்ட பேசலாம்ன்னு தோணுன்னுச்சு! அதான் கூட்டியார சொன்னேன். ஆமாம் உனக்கு எந்த ஊரு?” என்று கொங்கு வட்டார வழக்கில் மணி வினவுகிறார். 


“எனக்கு சொந்த ஊரு உசிலம்பட்டி. அப்பா, அம்மா ரெண்டு பேருமே மெட்றாஸ் வந்து செட்டில் ஆகிட்டாங்க. இங்க தான் ராயப்பேட்டை வெஸ்லி ஸ்கூல்ல படிச்சேன். அப்புறமா AM ஜெயின் காலேஜ்ல காமர்ஸ்ல டிகிரி முடிச்சேன்” என்று வினுச்சக்கரவர்தி நிறுத்த… அவரை ஏற்பட்டு பார்க்கிறார் திருப்பூர் மணி. 


“உன்னோட குரல், உடல் மொழி எல்லாம் ஒருமாதிரி விரைப்பா வேறமாதிரி இருக்கு. ஆனா உன்னோட அணுகுமுறை அதுக்கு எதிரா இருக்கே! எப்படி?” என்று கேட்கிறார் தயாரிப்பாளர். வினுச்சக்கரவர்தி சிரித்துக் கொண்டே… 


அதொன்மில்லங்க சார்! காலேஜ் முடிச்சுட்டு போலீஸ் ட்ரைனிங் போயிருந்தேன். போஸ்டிங் கெடச்சு ஐஸ் ஹவுஸ் ஸ்டேஷன்ல 2 வருஷம் எஸ்.ஐ யா வேலை பார்த்தேன். காலேஜ்ல படிக்கறப்பவே பாக்சிங், ஹாக்கின்னு கொஞ்சம் பிட்னஸ் கேம்ல எல்லாம் இருந்ததாலயும், போலீஸ் ட்ரெயினிங் கொடுத்த புண்ணியத்தாலயும் கொஞ்சம் அப்படி என்னோட தோற்றம் இருக்கு. வேற ஒன்னும் இல்லங்க” என்று பணிவாக வினுச்சக்கரவர்தி சொல்ல திருப்பூர் மணி வியந்து போகிறார். 


“அடடே! நீ போலீஸ்ல வேலை செஞ்சியாப்பா? அப்புறம் ஏன் வேலைய விட்டுட்ட? அங்கேயே இருந்து இருந்தா வேற மாதிரி லைப் கெடச்சு இருக்குமே?” என்று திருப்பூர் மணி அவர்கள் வினுவிடம் வினவுகிறார். 


“இல்லங்க சார்! அங்க என்னோட சம்பளம் 150 ரூபா. எஸ்.ஐ யா வேலை செஞ்சுக்கிட்டே ரயில்வே எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணேன். ஸ்டேஷன் மாஸ்டர் வேலை கெடச்சது. போலீஸ் வேலைய விட்டுட்டு ஸ்டேஷன் மாஸ்டரா ஒரு 3 வருஷம் வேலை செஞ்சேன். எனக்கு எழுதறது, சினிமா, கலை மேலதான் ஆர்வம். அதான் கன்னட இயக்குனர் புட்டண்ணா அண்ணன்கிட்ட வேலைக்கு சேர்ந்தேன். அவரு கொடுத்த பயிற்சி, அவரோட வழிகாட்டுதல் தான் இப்ப ‘பரசங்கட ஜென்டிதிமா’ படத்துல ஸ்க்ரீன் பிளே அசிஸ்டென்ட்டா மாத்தி இருக்கு” என்று விளக்கம் கொடுக்கிறார் வினுச்சக்ரவர்தி அவர்கள். 


திருப்பூர் மணிக்கு வினுவை மிகவும் பிடித்துப் போகிறது. ‘பரசங்கட ஜென்டிதிமா’ படம் வெளியாகி சக்கைப் போடு போடுகிறது. திருப்பூர் மணி அதே படத்தின் தமிழ் உரிமையை வாங்குகிறார். ஸ்ரீகிருஷ்ணா அலனஹள்ளி எழுதிய நாவலைதான் அவரது கதையின் தலைப்பான ‘பரசங்கட ஜென்டிதிமா’ என்ற பெயரில் கன்னடத்தில் திரைபபடமாக எடுத்து இருந்தார்கள். 


ஸ்ரீகிருஷ்ணா அலனஹள்ளி தமிழ்த்திரைப்பட நாடகர் திரு. சிவகுமார் அவர்களுக்கு இந்த கதையை சொல்ல, அவர் தன் ஆஸ்தான தயாரிப்பாளரான திருப்பூர் மணியிடம்… இந்த கதையை தமிழில் தயாரிக்க உரிமையை வாங்கச் சொல்கிறார். 


ஏற்கனவே ஸ்ரீகிருஷ்ணா அலனஹள்ளிக்கு வினுச்சக்கரவர்த்தியை நன்கு தெரியும் என்பதாலும், அவரது திறமை குறித்து அவர் நன்கறிந்திருந்த காரணத்தாலும் அவருக்கும், தமிழில் தயாரிக்கப்படும் திரைப்படத்தில் வாய்ப்பு வழங்க சிபாரிசு செய்கிறார். 


1977-ம் ஆண்டில் இதற்கான ஆயத்தங்கள் தொடங்கி நடந்து, 1979-ம் ஆண்டில்  ‘பரசங்கட ஜென்டிதிமா’ கதை தமிழில் ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ என்ற படமாக வெளியானது. அதில் வினுச்சக்கரவர்தி அவர்கள், வினு என்ற பெயரில் தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமாகிறார். அதில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்படவே வாய்ப்புகளும் வந்து சேருகிறது. 


இதே திரைப்படத்தில் தான், நகைச்சுவை நடிகர் திரு. லூஸ் மோகன் அவர்களும் அறிமுகமானார் என்பது கூடுதல் தகவல்.


ரோசாப்பூ ரவிக்கைக்காரி வெற்றி பெற்ற பிறகு, வினுச்சக்கரவர்த்தியின் கதை சொல்லும் திறனை தயாரிப்பாளர்கள் கவனிக்க தொடங்கினர். இதனிடையே வினுச்சக்கரவர்தி அவர்களுக்கும் திருப்பூர் மணிக்கும் இடையே ஏற்படும் நட்பால், வினு ஏற்கனவே எழுதி இருந்த கதை ஒன்றை தயாரிப்பாளர் திருப்பூர் மணி அவர்கள் தயாரிக்க தீர்மானிக்கிறார். 


இந்த திரைப்படத்திற்கு கதாபாத்திரங்களை வடிவமைக்கும் நேரத்தில் தான், AVM ஸ்டுடியோ அருகில், மாவு மில்லில் வேலை பார்த்த விஜயலட்சுமியை வினுச்சக்கரவர்தி சந்திக்க நேர்கிறது. 


வினுசக்ரவர்த்தி அவர்கள் விஜயலட்சுமியை தான் கதை-திரைக்கதை எழுதியிருக்கும் திரைப்படத்துக்கென்று தயார் படுத்த முடிவெடுக்கிறார். அதற்கு அவருக்கு பெரும் உதவி செய்தது வேறு யாருமல்ல, வினுவின் துணைவி கர்ணப்பூ தான். விஜயலட்சுமியை முழுமையாக திரைப்படத்துக்கென்று தயார் செய்யும் வேலையை கர்ணப்பூ அவர்கள் சிரமேற்று செய்தார் என்றே சொல்ல வேண்டும். 


மொழியை பயிற்றுவித்தது முதல், உணர்வுகளை வெளிப்படுத்துவது, நடனம் என்று சினிமாவுக்கு தேவைப்பட்ட அனைத்தையும் விஜயலட்சுமிக்கு பயிற்றுவித்தது வினுவின் துணைவியார் தான். விஜயலட்சுமிக்கென்றே சிறப்பு கதாபாத்திரத்தை உருவாக்கினார் வினுச்சக்கரவர்தி அவர்கள். 




1980-ம் ஆண்டு நடிகர் திரு.சிவக்குமார் அவர்களின் 101வது திரைப்படமாக ‘வண்டிச்சக்கரம்’ என்ற பெயரில் வினுவின் படைப்பு வெளிவந்தது. இயக்குனர் திரு. கே. விஜயன் அவர்கள் திரைப்படத்தை இயக்கி இருந்தார்கள். ‘சில்க்’ என்ற கதாபாத்திரத்தில் ஸ்மிதா என்ற பெயரில் விஜயலட்சுமி இந்த படத்தில் அறிமுகமானார். அது முதல் ஸ்மிதா “சில்க்” என்ற அடை மொழி சேர்த்து சில்க் ஸ்மிதாவாக பிரபலமானார். 


இதற்கு பின் என்ன நடந்தது? வினுவின் திரைப்பட வாழ்க்கை திரைக்கு பின் சென்றதா? அல்லது திரையில் மின்னியதா? மீண்டும் வினுவின் படைப்பு வெள்ளித்திரையில் மின்னியதா? அடுத்த அத்தியாயத்தில் விரிவாக வாசிக்கலாம். 


இந்த கட்டுரை பற்றிய உங்கள் கருத்தை மறக்காமல் கீழே இருக்கும் கமெண்ட் பகுதியில் கொடுங்கள். இந்த கட்டுரை பிடித்து இருந்தால் மற்றவர்களுக்கும் சிபாரிசு செய்து பகிருங்கள். மறக்காமல் எங்கள் வெப்சைட்டை பாலோ செய்யுங்கள். 



Comments

Anonymous said…
Wowww, beautifully written. When I started to read I felt that I am also standing behind those characters. It's lively.. each and every dialogue. I loved it.
Please mention your name and location in your comment. That will be very helpful to us. Thank you so much for your Wonderful comment.

Popular posts from this blog

நீட் (NEET) வேண்டாம்! நியாயம் வேண்டும் - (விழிப்புணர்வு ஆய்வு கட்டுரை)