ஆழியில் புதைந்த புகாரின் கதை - Episode 1
“கடலுக்குள் இன்னும் உயிருடன் இருக்கும் சோழர் தலைநகர்… அது உண்மையா?”
“மணிமேகலை சொன்னது கதை இல்லை… கடலடியில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மை!”
“40 கிமீ பரப்பளவில் இருந்த நகரம்… ஒரு இரவில் கடலில் மறைந்ததா?”
“இந்திரவிழா நின்ற நாள்… புகார் அழிந்த நாள் — சம்பந்தம் என்ன?”
“தமிழர்களின் Atlantis… பூம்புகார் மர்மம் இன்னும் தீராத புதிர்!”
ஆழியில் புதைந்த புகாரின் கதை - Episode 1
வடஇந்தியாவிலுள்ள பார்குத் என்ற இடத்தில் கி.மு. 2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த ஸ்தூபி ஒன்று இருக்கிறது. இந்த ஸ்தூபிக்கு காகந்தியைச் சேர்ந்த சோமா என்பவர் கொடை அளித்துள்ளார் என்று கல்வெட்டுக் குறிப்புக்கள் சொல்கிறது. காகந்தி- சோமா என்ற பெயர்களுக்கு பின்னே இருக்கும் இரகசியம் என்ன?
கி.பி 7ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டறிந்து ஆய்வு செய்த போது, அவர்கள் பார்வையில்…. காகண்டியைச் சேர்ந்த அண்ணாலன் என்பவன் ஆனிரைகளை மீட்டு வீரமரணமடைந்தான் என்ற தகவலைக் கண்டு சற்று ஆடித்தான் போகிறார்கள். காகந்திக்கும் காகண்டிக்கும் இடையே ஒற்றுமை இருக்க வாய்ப்பிருக்கிறதா?
சிலப்பதிகாரம், மணிமேகலை, பட்டினப்பாலை, அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, முத்தொள்ளாயிரம், தேவாரப் பாடல்கள், திருத்தொண்டர்புராணம், நந்திக்கலம்பகம் போன்ற சங்ககால நூல்கள் போற்றிப் பெருமையுடன் பேசும் இந்த சிறப்பு மிக்க நகரம்… இப்போது எங்கே?
மிளிந்தபன, புத்த ஜாதகக் கதைகள், அபிதம்மாவதாரம், புத்த வம்சாத்தகதா போன்ற புத்தமத நூல்கள் விவரித்து கூறிய இந்திரன் நகர், இன்று கடலுக்குள் கணக்கற்ற வரலாற்று உண்மைகளுடன் இருக்கிறது என்கிறார்களே! அது உண்மையா? இல்லை வெறும் யூக பேச்சு மட்டும் தானா?
பெரிப்ளஸ், மெரிஸ் எரித்ராய், தாலமி, பிளினி, சீன வணிக குழுவினர், தாய்லாந்து நாட்டில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் விரிவாக பேசும் நகரம் இது. பொன்னி என்னும் கன்னிக்கும், குணக்கடல் காளையனுக்கும் இடையே நிகழும் ஓயாத காதல் அலையால் தாலாட்டில் குளித்த துறைமுக பட்டினத்தில் நாளங்காடிக்கும், அல்லங்காடிக்கும் சுற்றுலா சென்று, வரலாறு அறியலாம் வாங்க….
1. சங்கம் விளக்கும் செல்வநகர்:
“காதம் நான்கிலும் கடுங்குரலெழுப்பி
பூதம் புடைத்துண்ணும் பூதசதுக்கமும்”
என்று சிலப்பதிகாரம் எடுத்தியம்பும் சீர் மிக்க நகரம் தான் பூம்புகார். அதாவது நாற்பது நாற்பது கிலோ மீட்டர்கள் வரை நான்கு பக்கமும் விரிந்திருந்த நகரமாக பூம்புகார் இருந்தது என்று இளங்கோ அடிகள் விவரிக்கிறார். பூம்புகார் நகரம் நிர்வாக நலன் கருதி இரண்டாக பிரித்து இருந்தார்களாம். மருவூர்பாக்கம், பட்டினம்பாக்கம் என்று அதற்கு பெயர் வைத்திருந்தார்கள்.
மருவூர்பாக்கம்- பட்டினம்பாக்கம் குறித்து விரிவாக தெரிந்து கொள்வதன் மூலம், சோழர்களின் தலைநகராக இருந்த புகாரின் பெருமைகளை நாம் எளிதாக புரிந்து கொள்ளலாம்.
1.1 மருவூர்பாக்கம்:
மருவூர்பாக்கம் என்பது புகார் நகரின் உட்பகுதியாகும். வணிகர்கள் வாழும் பெரும் நகர்ப்புறம் தான் மருவூர்பாக்கம். தொழில் நகரம் என்று கூட இதை நாம் புரிந்து கொள்ளலாம். மாடமாளிகைகளும், கூட கோபுரங்களும், இந்த நகரில் நிறைந்து இருந்தது. மருவூர்பாக்கத்தில் ஏராளமான பொய்கைகள் அதாவது குளங்கள் இருந்தன என்று சிலப்பதிகாரம் விவரிக்கிறது.
மருவூர்பாக்கத்தில் இலவந்திகைச் சோலை, உண்ணாவனம், சம்பாபதிவனம், உவ்வனம் ஆகிய சோலைகளும்…. வற்றாத குளங்களும் அவை காவிரியோடு வாய்க்கால்கள் மூலம் இணைக்கப்பட்டிருந்த செய்திகளும் பட்டினப்பாலையில் விளக்கமாக விவரிக்கப்பட்டிருக்கிறது.
குளங்களில் கரைகளில் அமைந்திருந்த பெரிய மாளிகைகளில் வணிகர்களும், அயலகத்திலிருந்து வணிகம் செய்ய வந்திருந்த அராபியர், யவனர், சீனர்களின் மாளிகைகளும் இருந்தன. மருவூர்பாக்கத்தில் அமைந்திருந்த மாளிகைகள் அந்த நகரத்தின் வளத்தையும், செல்வ செழிப்பையும் விளக்குவதாக சிலப்பதிகாரம் விவரிக்கிறது.
நன்கு திட்டமிடப்பட்ட தெருக்கள் பிரதான சாலையுடன் இணையும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது. அவரவர் செய்யும் தொழிலுக்கேற்ப தெருக்களை வடிவமைத்திருந்தார்களாம். நறுமண பொருட்களை விற்பனை செய்வோர் ஒரு தெருவிலும், நூல் நெய்வோர் மற்றொரு தெருவிலும், பட்டு, அணிகலன் விற்போருக்கு என்று தனித்தெருவும் இருந்திருக்கிறது.
இது தவிர பொன் விற்பனையாளர், கள் விற்பனை செய்வோர், மீன் விற்பனையாளர்கள், பாத்திரம் விற்பனை செய்பவர்கள் என்று ஒவ்வொருவருக்கும், தனியாக பெரும் தெருக்களை வடிவமைத்து… நகரவியலை முறையாக செயல்படுத்தி இருந்தார்கள். தமிழ் இலக்கியங்கள் எங்கும் இதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கிறது.
மருவூர்பாக்கத்திலிருந்து உள்நாட்டில் இருக்கும் பல இடங்களுக்கும் பொருட்களை ஏற்றிச் செல்ல படகுகளை பயன்படுத்தி இருக்கிறார்கள். அதாவது மருவூர்பாக்கத்தில் இருந்து வணிகர்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கு சரக்குகளை வாகனங்களுக்கு பதிலாக படகுகள் மூலம் கொண்டு சென்று இருக்கிறார்கள். அதற்கு ஏற்ற இயற்கை சூழல்கள் இங்கே அமைந்திருந்தனவாம்.
பூம்புகாரை நோக்கி பாய்ந்து வரும் காவிரி மருவூர்பாக்கத்தின் அருகில் பல கிளையாறுகளாக பிரிந்து, மீண்டும் பட்டினம்பாக்கம் அருகே ஒன்றாக கூடி… கடலில் கலப்பது இயற்கை அளித்திருந்த கொடையாகும். இந்த கிளையாறுகள் வழியாகவே வணிகர்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கு பொருட்களை கொண்டு செல்ல படகுகளை பயன்படுத்தினார்கள்.
அதே போல துறைமுகத்துக்கு கொண்டுச் செல்லவும், துறைமுகத்திலிருந்து பொருட்களை கொண்டு வரவும் படகுகளை வணிகர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்தியாவின் வெனிஸ் நகரம் என்று கடலோடிகள் புகாரை வர்ணித்து இருக்கிறார்கள்.
1.2 பட்டினம்பாக்கம்:
கடற்கரையை ஒட்டி அமைந்திருந்த மற்றொரு பெரும் நகரம் தான் பட்டினம்பாக்கம். இங்கே தான் அரசனின் அரண்மனை இருந்தது. அரண் + மனை அதாவது அரண் சூழ்ந்த மாளிகை. அரசன் கோட்டை கட்டி அதன் உள்ளே தன் மாளிகையை அமைத்திருப்பான். இந்த கோட்டை சுவர்கள் பல அடுக்குகளாக இருக்கும். முதல் பிரிவில் அரசனின் அலுவலர்கள், முக்கிய அதிகாரிகள் வசிப்பார்கள். இரண்டாவது அடுக்கில் படைவீரர்கள் குடியிருப்பும், அதற்கடுத்த அடுக்கில் அந்தணர்கள், வணிகர்கள், மருத்துவர், சோதிடர், மணிகோத்து விற்பவர், உழவர்கள் குடியிருப்புகளும் இருக்கும்.
கோட்டையிலிருந்து வெளியேறும் இராஜபாட்டை அதாவது அரசனின் வீதி துறைமுகத்தையும், மருவூர்பாக்கத்தையும் சென்று சேரும். துறைமுகம் செல்லும் வழியில் பரதவர்கள் குடியிருப்பும்; வணிகர்கள் விடுதிகளும் அமைந்திருக்கும்.
காவற்கணிகையர், ஆடற் கூத்தியர், பூவிலை மடந்தையர், ஏவல் பெண்கள், இசைக்கலைஞர்கள், கூத்தாடிகள் ஆகியோருக்கும் கோட்டைக்கு அருகில் குடியிருப்புகள் இருந்ததாக தெரிகிறது.
காவிரி இங்குதான் கடலில் கலந்தாள் என்பதால் தான் காவிரி பூம்பட்டினம் என்று இந்நகரம் பெயர் பெற்றது. பூம்பட்டினம் என்றால் பூ+ பட்டினம் கிடையாது. புகும்+பட்டினம் என்பதே விளக்கம்.
ஊர் என்றும் பட்டினம் என்றும் வேறுபடுத்திக் காட்டப்பட்ட இருவேறு பெரும் நகரங்களை உள்ளடக்கிய பகுதியாகவே பூம்புகார் இருந்தது.
1.3 பலிப் பீடிகை கதை:
மருவூர்பாக்கத்துக்கும் பட்டினம்பாக்கத்துக்கும் இடைப்பட்ட பகுதி சிறப்பு வாய்ந்தது. இந்த இடத்தை பலிப் பீடிகை என்று அழைத்தார்கள். இந்தப் பகுதிக்கு ஏன் இந்த பெயர் வந்தது என்பதை முதலில் விளக்கிவிட்டு இந்த இடத்தின் மற்ற சிறப்புகளை விவரிக்கிறேன்.
சோழ அரசனாக இருந்த முசுகுந்தன் ஆட்சிக்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே போர் உண்டானதாகவும் அப்போது சோழ மன்னன் முசுகுந்தன் தேவர்களுக்கு ஆதரவாக போரிட்டு அவர்கள் வெல்ல காரணமாக இருந்தான் என்றும் நம்பப்படுகிறது.
அதற்கு கைமாறாக இந்திரன் முசுகுந்தனிடம், சோழ தேசம் பஞ்சத்திலும் பட்டினியிலும் விழாத படி, நாட்டில் மும்மாரி மழை பொழியும் படி செய்வதுடன், சகல செல்வங்களும் குவியும்படி செய்வதாக வாக்குறுதி கொடுத்தானாம். இதையறிந்த அசுரர்கள் இதை தடுக்கும் படி, சோழ தேசத்தில் பல மர்ம தாக்குதல்களை நிகழ்த்தி, இந்திரனின் கோபத்தை சோழ நாட்டின் மீது உருவாக்கிட முயன்றார்களாம்.
இது குறித்து இந்திரனிடம் சென்று முசுகுந்தன் முறையிட …. புகாரை காக்கும் பொருட்டு காவல் பூதம் ஒன்றை முசுகுந்தனுடன் இந்திரன் அனுப்பி வைக்கிறான். அந்த பூதம் மருவூர்பாக்கத்துக்கும், பட்டினம்பாக்கத்துக்கும் இடையே இருந்த பகுதியில் தங்கி, அசுரர்களின் அடாவடிகளை எல்லாம் ஒழித்துக் கட்டுகிறது. இதனால் பயந்து போன அசுரர்கள் இனி புகார் பக்கமே தலை வைத்து படுப்பதில்லை என்று அலறி ஓடினார்களாம்.
அதன் பின் காவல் பூதம் இந்த பகுதியிலேயே தங்கி, நகரை காக்கத் தொடங்குகிறது. நிகழ்ந்த சம்பவங்களை கருத்தில் கொண்ட சோழ மன்னன், இந்திரன் ஆண்டு தோறும் செய்த ஆசீர்வாதங்களுக்கு நன்றியாக சித்திரா பவுர்ணமி இரவில் இந்திரனை போற்றும் விதமாக இந்திரவிழா நிகழ்த்த உத்தரவிடுகிறான். அதே இரவில் காவல் பூதத்தை நினைவு கூறி இந்த பகுதியில் பொங்கல் வைத்து, பலி கொடுக்க வேண்டும் என்றும் ஆணையிடுகிறான்.
அது முதல் புகார் அழியும் வரை தலைமுறை தலைமுறையாக இந்திரவிழா புகாரில் நிகழ்வது வழக்கம். இந்திரவிழா நிகழும் இடம் தான் பலிபீடிகை. இங்கே இந்திரவிழா மிக விமரிசையாக நடப்பது வழக்கம். படைவீரர்களும், காவல் வீரர்களும் இந்திரவிழா நிகழும் நாளில் இங்கே கூடி காவல் பூதத்துக்கு படையல் இடுவதும், தங்கள் குருதியால் சத்தியம் செய்து, சோழ தேசத்தை காக்க உறுதி எடுப்பதும் வழக்கம்.
அதனால் தான் இந்த இடம் பலிப்பீடிகை என்று அழைக்கப்பட்டது. சரி இங்கே வேறு என்ன சிறப்பு என்று அறிந்து கொள்வோம்.
சோலைகள் நிறைந்த இந்த பலிபீடிகையில் மரங்களின் நிழலில் தினமும் பகல் நேரங்களில் பெரும் வணிகம் நிகழ்வது வழக்கம். கதிரவன் குணக்கடலில் (வங்காள விரிகுடா) உதயமாவது முதல் குடக்கடலில் சென்று மறையும் வரை ஓய்வின்றி இங்கே வணிகம் நிகழ்வது வழக்கம். வாங்குபவர்களாலும், விற்பவர்களாலும் இந்த பகுதி நிறைந்து காணப்படுமாம்.
கரிகாலச் சோழன் அரசனாக முடிசூடிக் கொண்டதும், அவன் இமயமலை வரைச் சென்று வெற்றி கொண்டு திரும்பி வந்தான். அப்போது அவன் வென்ற மாபெரும் சாம்ராஜ்யங்களின் வேந்தர்கள் அவனுக்கு சிறப்பு மிக்க மூன்று பரிசுகளை வழங்கியிருந்தார்கள்.
வஜ்ஜிர நாட்டு வேந்தன் கொற்றப்பந்தரையும், மகத மன்னன் பட்டி மண்டபத்தையும், அவந்தி வேந்தன் தோரணவாயிலையும் வழங்கியிருந்தார்கள். இந்த மூன்று பொருட்களுமே இந்திரனால் பல்வேறு காலங்களில் அந்தந்த நாட்டு அரசர்களுக்கு வழங்கப்பட்டதாக ஒரு வழக்கும் இங்கே சொல்லப்படுவதுண்டு.
எது எப்படியோ கரிகால பெருவளத்தான் அவர்களை வெற்றிக்கொண்ட பின் அவர்களிடமிருந்து பெற்ற கொற்றப்பந்தர், பட்டி மண்டபம், மற்றும் தோரணவாயிலைக் கொண்டு, சித்திர மண்டபம் ஒன்றை பலிப்பீடிகை பகுதியில் அமைத்தான். இந்திரனின் மண்டபமாகவே இது கருதப்பட்டது.
பலிப்பீடிகை பகுதியில் மேலும் சுவையான செய்திகள் இருக்கிறது. என்னவென்று பார்க்கலாம் வாருங்கள்.
இங்கே ஐம்பெரும் மன்றங்கள் செயல்பட்டன. இந்த ஐம்பெரும் மன்றங்களும் முறையே வெள்ளிடை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கல் நின்ற மன்றம், பூத சதுக்கம், பாவை மன்றம் என்ற அந்த மன்றங்கள் அரசனின் நீதியையும், நெறி தவறாமையையும் விளக்கும் வண்ணம் செயல்பட்டன.
களவு செய்வோரை தண்டிக்கும் இடம் வெள்ளிடை மன்றம். நோய் நொடியால் வாடுவோர் குறைகளை தீர்க்கும் பொருட்டு அமைக்கப்பட்ட மன்றம் இலஞ்சி மன்றம் எனப்பட்டது. இதனருகே மருத்துவ குணம் நிறைந்த பொய்கை இருந்தது என்கிறார்கள். நஞ்சு தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கும் இடத்தை நெடுங்கல் நின்ற மன்றம் என்று அழைத்தார்கள். தீஞ்செயல் செய்தோரை கண்டித்து தண்டிக்கும் மன்றம் பூத சதுக்கம். காவல் பூதம் தீஞ்செயல் செய்தோரை பிடித்து தின்பதற்கு ஒப்பான தண்டனைகள் இங்கே வழங்கப்பட்டன.
மேலே சொன்ன நான்கு மன்றங்களும் அரசனின் நீதியும் தவறும் போது, அதைச் சுட்டிக் காட்டும் மன்றமாக திகழ்ந்தது தான் பாவை மன்றம். பாவை மன்றத்தில் அரசனின் நீதி குறித்தும், மற்ற நான்கு மன்றங்களின் செயல்கள் குறித்தும் ஐயம் எழும் பட்சத்தில் முறையிடப்படும். அந்த மன்றம் இழந்த நீதியையும், மன்றங்களின் செயல்படுகளையும் ஆய்ந்து நெறிப்படுத்தும்.
அடுத்த அத்தியாயத்தில் இந்திரவிழா குறித்தும், இடதுகண் வலதுகண் துடித்த நிகழ்வைக் குறித்தும் விளக்கமாக விவரிக்கிறேன்.
இந்த பகுதி பிடித்து இருந்தால் மற்றவர்களுக்கும் பகிருங்கள், மறக்காமல் இந்த பகுதி குறித்து உங்கள் கருத்துக்களை கீழே இருக்கும் கமெண்ட் பகுதியில் பதிவிடுங்கள். மறக்காமல் எங்கள் இணையத்தை பின் தொடருங்கள். எங்கள் வாசகர்கள் குழுவில் இணைய கீழே இருக்கும் இணைப்புகளை உபயோகியுங்கள்.
https://whatsapp.com/channel/0029VbBo0F3FMqrXkdrr8G06
இந்திரவிழாவில் சந்திப்போம்!
தொடரும்……


Comments