காற்று வெளியிடை கண்ணம்மா - அத்தியாயம் -6
முகிலன் பிரபாவதியின் பின்னால் இருக்கும் மர்மம் என்ன?
இந்திரா உண்மையிலேயே முகிலன் பிரபாவதியின் மகளா?
மிதுன் மற்றும் மின்மினி இருவரும் இந்திராவின் மீது வெறுப்பை காட்ட என்ன காரணம்?
மிருதுளாவுக்கு இந்திரா மீது இருக்கும் வன்மம் என்ன?
விடை தெரியனுமா? இந்த அத்தியாயத்தை முழுசா வாசியுங்க
6. நீலக்குயில்கள் இரண்டு
பரனூர் சுங்க சாவடியை இந்திராவின் ரெனால்ட் ட்ரைபர் கார் கடந்ததும், சதீஷ் இந்திராவிடம் காரை ஓரம் கட்ட சொன்னான். இந்திராவை சிறிது நேரம் ஓய்வெடுக்க சொன்னவன், காரை தான் இயக்கத் தொடங்கினான். அந்த ஓய்வு இந்தியாவுக்கும் தேவையாக இருந்தது. இந்திரா முன்பக்க இருக்கையில் ஆசுவாசமாக சற்று சரிந்து அமர்ந்தாள். அதே நேரம் புளூ டூத் ஆன் ஆகி அழைப்பு ஒன்று வந்தது. இந்திரா அழைப்பை ஏற்றாள். இணைப்பில் வசந்த் இருந்தான்.
"இந்திரா எங்க போய்ட்டு இருக்கே? பத்திரமா டிரைவ் பண்ணி போ… அவசரம் வேண்டாம். நான் பின்னாடியே வந்துட்டு இருக்கேன். நான் இப்போ தாம்பரம் தாண்டி இருக்கேன். சீக்கிரமா நானும் வந்துடறேன். அப்பாவும், அம்மாவும் வேற கார்ல வராங்க”, என்று கூறினான் வசந்த்.
“ஒன்னும் பிரச்சனை இல்லை வசந்த். சதீஷ் கூட இருக்கான். சதீஷ் தான் இப்போ டிரைவ் பண்ணிட்டு இருக்கான். நான் பத்திரமாத்தான் போயிட்டு இருக்கேன். நீங்க பாத்து வாங்க. மிதுனும் மின்மினியும் வரலையா வசந்த்?”, என்று கவலையோடு கேட்டாள் இந்திரா.
வசந்த் சிரித்தான். எவ்வளவு அவமானங்களை சந்தித்தாலும் முகிலனின் குடும்பம் நன்றாக இருப்பது குறித்து இந்திராவுக்கு இருக்கும் அக்கறை அவனை விரக்தியோடு சிரிக்க வைத்தது என்றே சொல்லலாம். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இந்திரா எவ்வளவுதான் அன்பையும் அக்கறையையும் காட்டினாலும் ஏற்றுக் கொள்ள அந்த வீட்டில் யாரும் இல்லை. அவளை புரிந்து கொள்ள கூட அவர்களுக்கு மனமில்லை என்பதே வசந்த் உதிர்த்த அந்த விரக்தி நிறைந்த சிரிப்பிற்கு காரணமாக இருந்தது.
“வராங்க… வராங்க. வழக்கம் போலதான். மிருதுளா மின்மினிக்கு கொடுத்த ஐடியா- ல மின்மினி ரொம்ப பேசுனா? வேற வழியே இல்லாம அம்மா சத்தம் போட்டாங்க. அதுக்கப்புறம் தான் வீட்ல அமைதி உருவாச்சு. மிதுன் கொஞ்சம் கூட மிருதுளாவ கேள்வியே கேட்கலன்னா எப்படின்னு எனக்கு தெரியல. மின்மினியும் மிருதுளாவுமா சேந்துகிட்டு ரொம்ப பண்ணறாங்க. ஏற்கனவே அத்தைய பேசி ஒரு வழியா ஆக்கிட்டாங்க.... இப்போ மாமாவை ஒரு வழி ஆக்கறதுக்கு முடிவெடுத்து இருக்காங்க போல!?. ஆனாலும் இந்திரா நீ இப்படியே இவங்களுக்காக பாவம் பாக்கறது எனக்கு பிடிக்கலை”, என்று வசந்த் கூற அவனை இடைமறித்தாள் இந்திரா.
“வசந்த் நீங்க பேசறது அவங்களுக்குக் கேட்கப் போகுது பார்த்து பேசுங்க”, என்று கூறினாள் இந்திரா.
மீண்டும் ஒரு சிரிப்பொலி வசந்த்திடமிருந்து வந்தது.
"அதெல்லாம் ஒன்னும் இல்லே. அண்ணன் தங்கச்சி ரெண்டு பேருக்கும் பயங்கரமா பசிக்குதாம். அடையார் ஆனந்த பவனுக்குள்ள ஸ்னாக்ஸ் வாங்க போய் இருக்காங்க. ரெண்டு பேரும் மாமாவை எப்படி சென்னைக்கு கூட்டிட்டு வர்றதுன்னும், அப்படி அவர் வரலன்னா என்ன பண்ணறதுன்னு ஒரே டிஸ்கஷன்ல இருக்காங்க. இவங்களுக்கு எல்லாம் இந்த சூழல்ல எப்படி பசிக்குதுன்னே தெரியல இந்திரா" என செலுத்துக் கொண்டான் வசந்த்.
இந்திராவுக்கும் சதீஷுக்கும் வசந்த் கூறியதை கேட்டு அதிர்ச்சியாக இருந்தது. சதீஷ் முகம் சட்டென்று கோபத்தில் நிறைந்தது என்றாலும் அவன் அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் அடக்கிக் கொண்டான்.
“சரி வசந்த். நாளைக்கு என்ன நடக்குதுன்னு பார்க்கலாம். ஏதாவது ஒன்னு நடந்தேதான் தீரும். நடக்கட்டும்”, என்ற இந்திரா வசந்தை கவனமாக வாகனத்தி ஊட்டி வருமாறு கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தாள். சதீஷ் இந்திராவை பார்த்து மனதில் தோன்றியதை கேட்டான்.
“இந்திரா, முகிலன் வீட்ல ஏன் எல்லாரும் இப்படி இருக்காங்க. வசந்த் மட்டும் தான் கொஞ்சம் எமோஷனா இருக்கார். முகிலன் சார் இப்படி ஒரு சூழ்நிலைல இருக்கறப்போ எப்படி அவங்க ரொம்ப கேஷுவலா இருக்காங்க”, என்று கேட்டான்.
“சதீஷ் உன்னோட கேள்வி நியாயம் தான். ஆனா அதுக்கு நிறைய காரணம் இருக்கு. எங்க இருந்தோ வந்தவ நான். எனக்கு உறவும் கிடையாது. ஊரும் கிடையாது. ஆனா முகிலன் சார் என்ன அவர் வீட்டுக்கு கூட்டிட்டு போய் அவரோட குடும்பத்துக்கு என்னை அறிமுகம் செஞ்சு வெச்சார். அப்போல இருந்து அவரோட குடும்பம் என்னோட குடும்பமா மாறிடுச்சு. பிரபாவதிம்மா என்ன யாரோன்னு பாக்காம, சொந்த பொண்ணாவே பார்த்தாங்க. ஆரம்பத்துல நான் முகிலன் சாரை விரோதி மாதிரிதான் பார்த்தேன். அதுக்கப்புறமா அவர் வீட்டுக்குள்ள போனப்பத்தான் எனக்கு குடும்ப உறவுன்னா என்னன்னு புரிஞ்சது. பிரபாவதி அம்மாவும், முகிலன் சாரும் எனக்கு அதை புரிய வெச்சாங்க கொஞ்சம் கொஞ்சமா எனக்கு முகிலன் சாரோட இலக்கிய திறமை புரிஞ்சது. அவரோட பலமே அவரோட மனைவி பிரபாவதி தான்னு புரிஞ்சுகிட்டேன். ஒவ்வொரு எழுத்தையும் அவர் செதுக்கி செதுக்கி கோர்த்து கதையா எழுதுனார். அத அவரே சொல்லறப்ப அதுல இருந்த உணர்ச்சி பிரதிபலிப்பு, அதுல இருந்த உயிரோட்டம் எல்லாம் எனக்கு புரிய ஆரம்பிச்சது.அவர்கிட்ட இருந்து நிறைய விஷயங்களை நான் கத்துக்கிட்டேன். அவரோட பொண்ணா…. அவர் பக்கத்துல இருந்து ரசிச்சேன். நிறைய கத்துக்கிட்டேன்.
பிரபாவதிம்மா கூட காலைல எழுந்ததுல இருந்து ராத்திரி தூங்கற வரைக்கும் நான் ரொம்ப நேரம் பேசுனேன். என்ன அவங்க ரொம்ப அன்பு செஞ்சாங்க. முகிலன் என்ன அவரோட மகளா பார்த்தார். ஒரு கட்டத்துல நான் அவங்களுக்கு வாரிசா ஆகிடுவேன்னு நிலைமை வந்தப்போ…… “, என்று இந்திரா கூற வருவதற்குள் மீண்டும் ப்ளூ டூத் அழைப்பு வருவதை உணர்த்தியது. இந்திரா பேசுவதை நிறுத்திவிட்டு அழைப்பை ஏற்றாள்.
அழைப்பில் வந்தது மாடசாமி. ஏற்காட்டில் இருந்து அழைத்திருந்த மாடசாமி சிறிது படபடப்புடன் பேசினார்.
"ஏனுங்க நான் மாடசாமிங்க. கிளம்பிடீங்களா. இங்க மழை தூறல் போடுதுங்க. பயங்கர குளிராவும் இருக்கு.. ஐயா வெளியே உட்காந்து இருகாவிய.. கிட்ட போகவும் பயமா இருக்கு. சீக்கிரம் வந்துருங்க...... ", என்று மாடசாமி கூறினார்.
“மாடசாமி அண்ணே கொஞ்சம் பாத்துக்கங்க. முடிஞ்சா ஐயாவை எப்படியாவது உள்ள கூட்டிட்டு போக பாருங்க”, என்று கூறினாள் இந்திரா. எதிர்முனையில் மாடசாமி நிறைய யோசனையுடன் பேசுவது போல தெரிந்தது.
“நான் வேணா ஒன்னு பண்ணறங்க கொஞ்சம் கட்டைய போட்டு நெருப்பு மூட்டி விடறங்க. நெருப்பு எறிஞ்சுட்டு இருந்தா ஐயாவுக்கு கொஞ்சம் சூடாவாவது இருக்கும் இல்லங்க. சரிங்க நீங்க விரசா வந்துடுங்க.", என்று இணைப்பைத் துண்டித்தார் மாடசாமி.
ஏற்காட்டில் இருக்கும் சிநேகப் பிரபா பங்களாவில் காட்சி முனைக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தார் முகிலன். இரவின் கறுமை உண்டாக்கிய வெறுமையை மெல்லிய பனி மூட்டங்கள் தங்கள் நடமாட்டத்தால் நிறைக்க முயன்று கொண்டிருந்தன. அந்த பனி மூட்டங்களை விரட்டி விட எண்ணி மழை சாரலை அனுப்பி போர் தொடுத்துப் பார்த்தாள் இயற்கை தேவதை. காட்சிமுனை அருகில் அமைந்திருந்த சூரிய கடிகாரத்திற்கு அப்பால் கிடுகிடுவென சரிந்த பள்ளத்தாக்கில் இருந்து அணியணியாக கிளம்பி மேலே வந்து கொண்டிருந்த கண்கொள்ளா காட்சி அரங்கேறிக் கொண்டிருந்தது. முகிலன் கண்கள் மட்டும் வேறு உலகத்தின் காட்சிகளை அவருக்கு காட்டிக் கொண்டிருந்தது.
பிரபாவதி வெள்ளை புடவையில் நீலநிற பூக்கள் போட்ட புடவையில் தலைநிறைய மல்லிகைப் பூவுடன் அவள் முகிலனின் தோள்களில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். அவளது தேகசத்தின் வசீகர அழகில், கேசங்கள் காற்றில் பறந்து மோதிக் கொண்டிருந்த சூழலில் முகிலன் மெய்மறந்து பேசிக் கொண்டிருந்தார்.
"இப்படி விடிய விடிய நாம உட்கார்ந்து பேசனும்ன்னு எவ்வளோ ஆசைப்பட்ட பிரபா? பாரு இன்னைக்கு நடந்துடுச்சு" என்ற முகிலனுக்கு பிரபாவதி மெல்லிய குரலில் பேசினாள்.
"ஆமா முகி. எவ்வளவு நாள் நாம இப்படி இருக்கனும்ன்னு பேசி இருக்கோம் இல்லே! நாம காலம் பூரா இப்படியே இருக்கணும் முகி. இன்னைக்கு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்ச இந்த இடத்துல, எனக்கு பிடிச்ச என்னோட முகி கூட, சந்தோஷமா இருக்கற இந்த நொடி... வாழ்க்கைல மிகப்பெரிய வரம்", என்று உணர்வுத் துள்ளலோடு பிரபாவதியின் வார்த்தைகள் வெளியே வந்து முகிலனின் காதுகளில் ஒலித்தது.
"உண்மைதான் பிரபா. ஆனா என்ன எப்பவும் இப்படி தவிக்க விட்டுட்டு நீ பாட்டுக்கு எங்கயும் போய்டாதே. என்னால அத தாங்கிக்க முடியாது. எங்க போறதுனாலும் என்னையும் கூட கூட்டிட்டு போ. நீ இல்லாம எனக்கு வாழத் தெரியாதும்மா. உன்னோட இப்ப நான் இருக்கற மனநிலை எப்படின்னா? முதல் முதலா உன் குரல கேட்டப்ப உண்டான மனநிலை. அவ்வளவு சந்தோஷமா இருக்கு”, என்ற முகிலனையும் பிரபாவதியையும் ஒரு மேக மூட்டம் மூடி விலக, முகிலன் பிரபாவதி மடியில் தலைவைத்து படுத்திருந்தார். பிரபாவதியின் கண்கள், கட்டற்ற தீர்க்கமாக காதலுடன் முகிலனை குனிந்து பார்க்க…. முகிலன் பார்வை பிரபாவதி முகத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தது. அந்த பார்வையில் ஏக்கமும் காதலும்…… காதலுடன் இழையோடிய பனியிலும் மெல்லிய காமும் கலந்திருந்தது.
"முகி உங்களோட அடுத்த கதைய எப்போ எழுதப் போறீங்க? நான் ஏற்கனவே சொன்ன மாதிரி அந்த கதை உங்களோட கரியர் பெஸ்ட் கதையா இருக்கனும். ப்ளீஸ் முகி எழுதுங்க. எனக்காக! என் ஆசைக்காக....." பிரபாவதியின் குரலில் இருந்த கெஞ்சல் கேட்டு முகிலன் இதயம் இளகி பனியாக உருகியது.
"எழுதறேன் பிரபா. ஆனா அந்த கதைய எழுத நீ வேணும். எனக்குள்ள எப்பவும் நீ வந்து உட்காரனும். என்னோட யோசனைல நீ இருந்து எழுத்தா வெளில வரணும். அப்போதான் நீ கேட்கற பெஸ்ட் கதை எனக்குள்ள இருந்து வெளில வரும்...." என்றார் முகிலன். பிரபாவதி குனிந்து முகிலனின் நெற்றியில் முத்தமிட்டாள். அந்த முத்தத்தின் ஈரத்தில் நிறைந்திருந்த அன்பில் முகிலன் கண்மூடி திளைத்தார். அவரது இதயத்தின் நாளங்கள் அளவுக்கு அதிகமாக துடித்தது. அந்த துடிப்பில் பிரபாவதியின் உணர்வுகள் நுழைந்து பிரவாகமாக பரவி நிறைந்தது.
“இந்த முப்பது வருஷத்துல நான் உங்கள விட்டு எப்போ முகி விலகி இருந்து இருக்கேன்..? என்னால உங்கள விட்டு விலகி இருக்கவே முடியாது. நான் உங்களுக்குள்ள, உங்க இதயத்தோட துடிப்புல நிறைஞ்சு இருக்கேன். இந்த நிமிஷம் முதல் என்னோட உயிர் உங்களுக்குள்ள முழுமையா நிறைஞ்சு இருக்கும்... பிராமிஸ்! உங்க உயிரா, உணர்வா, உதிரமா நான் நிறைஞ்சு இருப்பேன். நம்ம ஆயுசுக்கு அப்புறமும் இந்த உலகம் பேசற மாதிரி அந்த கதையை நீங்க எழுதுங்க...." என்று பிரபாவதி கூறும் போதே மீண்டும் பனி மூட்டம் அவர்களை மூடியது. அங்கே பிரபாவதி இல்லை. அவளது மடி இல்லை. முகிலன் அந்த பெஞ்சில் படுத்திருந்தார். அவரது உதடுகள் மட்டும் பிரபாவதியின் பெயரை தொடர்ந்து உச்சரித்துக் கொண்டிருந்தது.
குளிரிலும், பனியிலும், இலேசாக தூவும் மழையிலும் முகிலன் நடுங்குகிறாரோ என்ற எண்ணத்தில் மாடசாமி அவரையே பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார்.
அலைவரிசை தொடர்ந்து அடுத்த அத்தியாயத்தில் ஒளிபரப்பாகும்
Comments