ஊரும் பேரும் - வரலாற்று தொடர்- அத்தியாயம் - 1
தமிழகத்தின் ஒவ்வொரு ஊருக்கும் சூட்டப்பட்டுள்ள பெயர்களுக்கு பின்னால் மறைந்திருக்கும் அறியாத உண்மைகள் என்ன?
சங்க பாடல்கள், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் நிலப்பரப்பு அடிப்படையில் நம் முன்னோர் ஊர்களுக்கு பெயர் சூட்டிய வரலாறு தெரியுமா?
கோடியக்கரை, குளித்தலை, திருவையாறு, மயிலாடுதுறை, காவிரிப்பூம்பட்டினம் போன்ற ஊர்கள் நிலம், நாடுகள், குடியும் படையும், குலமும் கோவும், தேவமும் தளமும் என்ற பிரிவுகளின் அடிப்படையில் உருவானது எப்படி?
ஊரும் பேரும்
(அறியாத உண்மைகள்)
வரலாற்று தொடர்
தமிழகம் பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்ட தன்னிகரற்ற நிலப்பரப்பு. இலக்கியங்களும், மொழியும் இங்கு வளர்ந்தது போல வேறெங்கும் வளர்ந்ததில்லை. முடியுடை மூவேந்தர்களும், அவர்கள் வளர்த்த கலை, இலக்கிய, பண்பாட்டு, கலாச்சார பழக்க வழக்கங்களும் இன்று வரை இந்த மண்ணுக்கென தனிச் சிறப்புகளை உருவாகியிருக்கிறது என்பதை மறுக்க இயலாது.
தமிழகத்தின் ஒவ்வொரு இடத்தையும் ஒவ்வொரு நிலப்பரப்பையும் அடையாளப்படுத்த தக்க காரணங்களுடன் பெயர்கள் சூட்டப்பட்டு அவை வழிவழியாக மக்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழர்களின் நாகரீக வாழ்வை பிறருக்கு அடையாளப்படுத்தும் அற்புதமான கருவிகள் சங்க பாடல்கள். சங்க பாடல்களில் குறிப்பிடப்படாத தகவல்களே இல்லை என்று கூறலாம். இன்றும் உலக அரங்கில் நம்மைக் குறித்து நம் மொழி, கலாச்சாரம், மற்றும் பண்பாட்டு, பழக்க வழக்கங்களைக் குறித்து பேசுவதற்கு இவையே ஆதாரமாக இருக்கின்றன.
சங்க பாடல்கள் தமிழகத்தின் ஊர்களை குறித்து பல்வேறு இடங்களில் அழகாக எடுத்துரைக்கின்றன. தமிழகத்தின் ஊர்கள் பற்றிய ஆராய்ச்சியும், அவை காலப்போக்கில் மருவி வேறு பெயர்களுக்கு மாறியதையும் உணர்ந்த தமிழக அரசு அதனை மீண்டும் சீர் செய்யும் பொருட்டு 2020-ம் ஆண்டு முதற்கட்டமாக சுமார் 1018 ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப மாற்றும் உத்தரவை நடைமுறைப்படுத்தியது. வழக்கத்தில் இருக்கும் பல ஊர்களின் பெயர்களை மீண்டும் பழைய பெயர்களில் மாற்றும் நடவடிக்கையும் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. அது நடைமுறைப்படுத்தப்பட்டும் உள்ளது. .
தமிழகத்தின் ஒவ்வொரு ஊருக்கும் சூட்டப்பட்டுள்ள பெயர்களுக்கு தனித்துவமான பல காரணங்கள் இருந்திருக்கின்றன. பெரிய ஊர்கள் முதல், சிறிய குக்கிராமம் வரை மக்கள் சூட்டியருக்கும் பெயர்களில், பல்வேறு அர்த்தங்கள் பொதிந்துள்ளதை நாம் அறிந்திருக்கிறோமா என்றால் இல்லை என்பதே உண்மை. வளரும் தலைமுறையும், எதிர்காலத் தலைமுறையும் அவர்கள் காலத்தில் இது குறித்து அறிந்து கொள்ள வாய்ப்பின்றி போய்விடக் கூடாது என்ற அச்சம் தமிழ் ஆர்வலனாக, எழுத்தாளனாக எனக்குள் இருப்பதை உளமார உணர்ந்துள்ளேன்.
அது குறித்துதான் இந்த கட்டுரையில் நாம் வாசிக்க இருக்கிறோம். தமிழக ஊர்களின் பெயர்களும், அதற்கான காரணங்களும் மிகவும் சுவையானதாகவும், சுவாரஸ்யமானதாகவும் இருக்கும் படி அதை உங்களுக்கு தருவதில் பெரும் மகிழ்வும் கொள்கிறேன்.
1. ஊருக்கு பெயர் சூட்டிய வரலாறு:
பழந்தமிழர் நகரங்களையும் துறைமுகங்களையும், வணிக ஊர்களின் பெயர்களையும் கண்டறிய பல்வேறு வகைகளில் பெயர்களை சூட்டி நினைவில் வைத்துள்ளனர். பொதுவாக ஊர்களின் பெயர்களை உருவாக்க அவர்கள் பயன்படுத்திய முறை மிகவும் எளிமையானது. நால்வகை நிலங்களை அடிப்படியாக வைத்து ஊர்களை வகைப்படுத்திய தமிழர்கள், அந்த நிலங்களின் தன்மைகளை வைத்தே பெயர்களையும் சூட்டியுள்ளனர் என்பது மிகவும் அடிப்படையான செய்தி.
நிலங்களின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட இடங்களை, அதன் தன்மைக்கு ஏற்பவே பெயரிடும் எளிமையான முறையை அவர்கள் கடைபிடித்து இருக்கின்றார்கள். அத்துடன் பெயர் சூட்டப்பட வேண்டிய இடத்திற்கு என்று வேறு ஏதேனும் சிறப்புத் தன்மைகள் இருக்குமானால் அதையும் இணைத்தே சூட்டியுள்ளார். உதாரணத்திற்கு கோடியக்கரை என்னும் ஊரின் பெயரை எடுத்துக் கொள்வோமே.
அடிப்படையில் இந்த நிலம் கடலை சார்ந்த நிலப்பகுதி. இது நெய்தல் நிலப் பின்புலத்தைக் கொண்டது. இரண்டாவது இந்த நிலம் ஒரு நிலப்பரப்பின் முனைப்பகுதியாக அதன் இறுதியில் அமைந்துள்ளது. ஆகவே இந்த இரண்டு காரணங்களையும் ஒன்றிணைத்து கோடியில் இருக்கும் கரை என்னும் பொருள்படும் படியாக கோடியக்கரை என்று பெயரிட்டனர். .
தமிழக ஊர் பெயர்களை அன்றைய தமிழர்கள்
நிலம்,
நாடுகள், நகரங்கள்
குடியும் படையும்
குலமும் கோவும்
தேவும் தளமும்
என்னும் பிரிவுகளின் கீழ் பிரித்து உருவாக்கியதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நிலத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட பரந்த தமிழகத்தை முன்னோர் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று பிரித்திருந்தனர். மலையும் மலையை சார்ந்த நிலப்பரப்பும் குறிஞ்சி எனப்பட்டது. காடும் காட்டை சார்ந்த பகுதியும் முல்லை என்றழைக்கப்பட்டது. வயலும் வயலை சார்ந்த பகுதியும் மருதம் என்றும், கடலும் கடலை சார்ந்த பகுதி நெய்தல் என்றும் அழைக்கப்பட்டது.
மலையும் மலையை சார்ந்த பகுதியும் அடங்கிய ஒரு இடத்தை நம் முன்னோர்கள் கோடு, குன்று, பாறை, அறை. கல் என்றும்…. மலையின் அடியில் மலையை ஒட்டி அமைந்த இடங்களை, கிரி, அசலம், சைலம், அத்திரி என்றும் வகைப்படுத்தினர். முன்நாட்களில் குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த தொன்மையான குடியினர் குறவர் என்று அழைக்கப்பட்டனர். அவர்களது வாழ்விடத்தை உணர்த்தும் விதமாக அந்த இடத்தை “குறிச்சி” என்று அழைக்கலாயினர். பொதிகை மலையடிவாரத்தில் இன்றும் ஏராளமான ஊர்ப் பெயர்கள் குறிச்சி என வழங்கப்படுவதை நாம் கேட்க இயலும். பின்னாளில் மலையிலும் மலையை சார்ந்த பிற இடங்களிலும் வாழும் மற்றவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் குறிச்சி எனப் பெயரிடுவது மரபானது. உதாரணத்திற்கு இராமநாதபுரத்தில் இருக்கும் ஒரு ஊரின் பெயர் பிராமணக்குறிச்சி. அதே போல இன்று மாவட்டமாக உயந்துள்ள கள்ளக்குறிச்சியையும் நாம் உதாரணமாக கொள்ளலாம்.
பழங்காலத்தில் மரங்கள் நிறைந்த காடுகள் மலிந்திருந்தன. கரிகால் பெருவளத்தான் காடுகளை சீராக்கி ஊர்களை அமைத்தான். இந்நாட்களில் பாடல் பெற்றத் தலங்கள் என்று போற்றப்படும் பல்வேறு வழிபாட்டுத் தளங்களும் முற்காலத்தில் வனங்களுக்கு நடுவிலேயே அமைந்திருந்தன. உதாரணத்திற்கு சிதம்பரம் - தில்லைவனம் என்றும், மதுரை- கடம்பவனம் என்றும், திருநெல்வேலி - வேணுவனம் என்றும் அழைக்கப்பட்டிருப்பதை சங்கப்பாடல்களில் காண இயலும். காடுகளை அடிப்படையாக கொண்டு உருவான ஊர்களை காடு, காவு, பொழில், என்றும் சோலைகளின் நடுவில் அமைந்த பகுதிகளை சோலை, தோப்பு, தண்டலை என்றும் நம் முன்னோர் வகைப்படுத்தி வைத்திருந்தனர். சோலையைக் குறிக்கும் தமிழ்ச் சொல் தண்டலம் எனப்படும். தண்டலம் தண்டரை என்றும் வழங்கப்பட்டது. காவிரிக்கரையில் பள்ளத்தாக்கான இடத்தில் அமைந்த செழுஞ்சோலையை குழித்தண்டலை என்று பெயரிட்டனர் நம் முன்னோர். அந்த குழித்தண்டலையே இன்று குளித்தலையாக மருவியிருக்கிறது.
சோலையை அடிப்படையாக கொண்டு பல் ஊர்கள் இருந்துள்ளன. உதாரணத்திற்கு “பழமுதிர்ச் சோலை” என்னும் இடம் முருகனது படைவீடுகளில் ஒன்றாகும் என்று திருமுருகாற்றுப்படை விளக்குவதை நாம் காணலாம். சேலத்தில் தலைச்சோலை என்னும் இடம் இன்னமும் இருக்கிறது. அதே போல மரம் செடி, கொடிகளின் தொகுப்பாக உள்ள இடத்தை தோப்பு என்று பட்டியலிட்டனர் நம் முன்னோர். தோப்பை அடிப்படியாக கொண்ட ஊர்கள் நிறைய இருப்பது நாம் அறிந்ததே. உதாரணமாக மான்தோப்பு என்னும் ஊர் இராமநாதபுரத்திலும், நெல்லித் தோப்பு என்னும் ஊர், கடலூரிலும், தஞ்சையிலும் இருப்பதை நாம் இங்கே கவனிக்க வேண்டும்.
காடும் காட்டைச் சார்ந்த இடங்களையும் வனம் என்றும் ஆரண்யம் என்றும் குறிப்பிடுகின்றனர். புன்னைவனம், திண்டிவனம் ஆகிய ஊர்களில் வனம் அடைச்சொல்லாக அமைந்திருக்கிறது இல்லையா? அதே போல வேதாரண்யம் என்ற ஊரின் பெயரில் ஆரண்யம் வருவதை கவனியுங்கள். தேவாரம் பாடிய மூவருள் சுந்தரர் நாவல் என்னும் இடத்தில் பிறந்தார். நாவல் மரம் நிறைந்த பகுதியில் பிறந்த அவரை பெரிய புராணத்தில் ‘அருமறை நாவல் ஆதி சைவன்’, என்று குறிப்பிட காணலாம். இந்த நாவல் என்னும் ஊர் சுந்தரர் பிறந்த மண்ணாக அறியப்பட்டதால் பின்பு திருநாவல் என்றும், ஈசனால் ஆட்கொள்ளப்பட்டு அவரது திருவடிகளை பின்பற்றி அவருக்குப் பிரியமானவராக இருந்த காரணத்தால் திருநாவல் நல்லூர் என்று அழைக்கப்பட்டது.
கெடில நதிக்கரையில் பாதிரி மரங்கள் நிறைந்த புலியூர் என்னும் ஊரே “திருப்பாதிரிப்புலியூர்” என்று மருவியது. முல்லை நிலத்தில் இருக்கும் ஊர்களில் பெரும்பாலும் பாடி, பட்டி என்ற அடைமொழி இருக்கும் என்பதை கவனிக்க. உதாரணத்திற்கு குறிஞ்சிப்பாடி, கோவில்பட்டி ஆகிய ஊர்களை சொல்லலாம்.
காடுகளை விட்டு சதுப்புநிலப்பகுதியில் நுழைந்த பண்டைய தமிழர்கள் ஆறுகளின் கரைகளை பண்படுத்தி நீர்பாய்ச்சி மருத நிலமாக மாற்றினர். அவ்வாறு அவர்கள் பதப்படுத்தி விவசாயம் செய்த இடங்களே மருதம் என்ற நிலப்பரப்பு ஆனது. மருத நிலப்பரப்புகளை முன்னோர்கள் ஆறு, துறை, அரங்கம், துருத்தி என்ற பெயர்களில் வகைப்படுத்தினர்.
சேரநாட்டில் பாயும் ஒரு நதியின் பெயர் நெய்யாறு. அந்த ஆற்றின் கரையில் அமைந்த பெயரை நெய்யாற்றின்கரை என்று அழைக்கின்றார்கள். இந்த ஊர் கன்னியாகுமரி, கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளது. இவ்வாறு நாட்டின் உயிரென விளங்கும் நதிகளின் பெயரையே ஊர்களுக்குப் பெயர்களாக வைத்துள்ளனர் நம் முன்னோர். சோழ நாட்டில் ஒரு ஊரின் பெயர் ஐயாறு. அதாவது காவிரி உள்ளிட்ட ஐந்து நதிகள் இந்த ஊரில் பாய்வதால் இதற்கு அந்தப் பெயர் இடப்பட்டது. இந்த இடம் பாடல் பெற்ற தலமாக மாறியதால் திரு என்னும் வார்த்தை சேர்க்கப்பட்டது. ஆகவே திருஐந்தாறு என்று அழைக்கப்பட்டது. பின் அது மருவி இன்று திருவையாறு என்று மாறியது.
ஆறு என்ற சொல்லை உள்ளடக்கிய பல்வேறு ஊர்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு சேலம் மாவட்டத்தில் உள்ள ஊரு ஊரின் பெயர் ஆத்தூர். அதே போல சென்னையில் பாயும் ஒரு நதிக்கு அடையாறு என்று பெயர். செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து பிறக்கும் இந்த ஆறு சென்னையில் பாய்ந்து பின் கடலில் கலக்கிறது. இந்த ஆற்றின் கரையில் இருக்கும் ஊரை இன்றும் நாம் அடையார் என்றே அழைக்கிறோம்.
ஆறுகளில் மக்கள் இறங்கி நீராடுவதற்காக அமைக்கப்பட்ட இடங்களை துறை என்று அழைப்பர். தமிழ்நாட்டில் ஆறுகளை அடுத்துள்ள ஊர்களை துறை என்ற அடைச்சொல்லில் அமைத்திருக்க காண இயலும். ஆற்றின் கரையில் அமைந்த செழுமையான சோலைகளில் மயில்கள் தொகை விரித்தாடும். அப்படி காவிரி ஆற்றின் கரையில் அமைந்த சோலையில் மயில்கள் தோகை விரித்தாடும் பகுதியை மயில் ஆடும் துறை என்று முன்னோர் பெயரிட்டு அழைத்தனர். அதுவே இன்று மயிலாடுதுறை என்று மறுவியுள்ளது.
ஆற்றின் நடுவில் அமைந்த இடை நிலங்கள் வரங்கம் என்று வடமொழியில் குறிப்பிடுகின்றார்கள். அதே வரங்கத்தை தமிழில் துருத்தி என்று பெயரிட்டு அழைத்தனர் தமிழர்கள். பதினோரு நாயன்மார்களும் பாடிய பதியாகிய வரங்கம் ஒன்று திருச்சிராப்பள்ளி அருகே உள்ளது. அந்த பகுதியே திருவரங்கம் என்றும் இந்நாளில் ஸ்ரீரங்கம் என்றும் அழைக்கப்படுகிறது.
ஆறுகள் கூடும் இடத்தை புனிதமான இடங்களாக கருதி தமிழர்கள் வழிபட்டு வந்தனர். அந்த இடங்களை கூடல் என்று தமிழர்கள் பெயரிட்டு அழைத்தனர். தொண்டை நாட்டில், பாலரும், சேயாறும், கம்பையாரும் சேறும் இடத்தை திருமுக்கூடல் என்று வழங்குவதை இன்றும் நாம் காணலாம். இதே போல தாமிரபரணியாறு, சித்ரா நதி, மற்றும் கோதண்டராம நதி ஆகிய மூன்றும் கூடும் இடத்தை முக்கூடல் என்று பெயரிட்டு அழைக்கிறோம். முக்கூடற்பள்ளு என்னும் சிறந்த நாடகம் இந்த ஊரைப் பற்றியதே ஆகும்.
இது தவிர அணை, ஏரி, குளம், பேரி ஏந்தல், தாங்கல் என்ற பெயர்களும் நீர் நிலைகளை ஒட்டி அமைந்த ஊர்களுக்கு வழங்கப்பட்டது. சீவலப்பேரி, அம்பாசமுத்திரம், கல்லணை, புத்தேரி போன்ற ஊர் பெயர்களை இதற்கு உதாரணமாக கூறலாம். இது தவிர நீர்நிலைகளை ஒட்டி அமைந்துள்ள இடங்களை தோட்டம், விளை, வயல், கழனி, பண்ணை, என்ற பெயர்களும் நீர்நிலைகளுக்கு வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு நீண்ட நெடிய கடற்கரைகளை கொண்டதாக இயற்கையாகவே அமைந்திருக்கிறது. சோழ நாட்டின் கடற்கரையை உள்ளிட்ட பகுதி சோழ மண்டல கடற்கரை என்று வழங்கப்பட்டு வந்தது. அதை ஐரோப்பியர்கள் கோரமண்டல் கடற்கரை என்று குறித்தனர். பாண்டிய நாட்டின் கடற்கரைகள் மிகுதியாக முத்துக்களை அறுவடை செய்தன. ஆகவே அது முத்துக்கரை என்றும், சேர நாட்டில் கடற்கரைகளை மேல் கரை என்றும் தமிழர்கள் குறிப்பிட்டனர்.
கடற்கரையில் அமைந்த சில ஊர்களை அதன் பெயர் கொண்டே உணரமுடியும். பாண்டிய நாட்டில் கீழக்கரை என்ற ஊர் உள்ளது. அக்காலத்தில் இந்த ஊரில் முத்துக் குளித்தல் சிறப்பாக நடைபெற்று வந்தது. வைகை ஆறு கடலோடு கலக்கும் இடத்திற்கு ஆற்றங்கரை என்று பெயர். இங்கு சங்கு வாணிபம் சிறப்பாக நடந்து வந்துள்ளது. இராமேஸ்வரத்துக்கு அருகில் இருந்த ஊருக்கு கோடி கரை என்று பெயர். இந்த ஊரை குறித்த குறிப்புகளை தாலமி, முதலிய யவன கடலோடிகள் தங்கள் குறிப்புகளிலும், வரைப்படங்களிலும் குறிப்பிட்டு உள்ளனர்.
பொதுவாக கடல் வாணிபம் நடைபெற சாதகமான இடங்களை துறை என்று அழைத்தனர். துறைமுகங்கள் என்று இவற்றை நாம் இன்று அழைக்கின்றோம். இந்த துறைமுகங்கள் பெரும்பாலும் ஆறுகள் கடலோடு கலக்கும் கழிமுகங்களில் அமைந்திருந்தன. குமரியாறு கடலோடு கலந்த இடத்தில குமரித்துறை அமைந்திருந்ததாக இலக்கியங்கள் கூறுகின்றனர். இது கடற்கோளால் அழிந்தது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை பெரிய துறையாக இருந்தது. இங்கிருந்து பெரிய அளவில் வாணிபம் நடந்ததை சங்க இலக்கியங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
கொற்கையின் அழிவிற்குப் பிறகு, காயல் என்ற ஊர் பெரிய துறையாக பாண்டியர்களுக்கு அமைந்தது. பதிமூன்றாம் நூற்றாண்டில் காயல் துறை சிறப்பாக விளங்கி உள்ளது. அதை காயல் பட்டினம் என்று அழைத்துள்ளனர். இத்தாலிய மாலுமி மார்க்கோ போலோ காயல் பட்டினம் குறித்து விரிவாக அவரது பயணக் குறிப்புகளில் எழுதியுள்ளார்.
கடற்கரையில் அமையும் நகரங்களை பட்டிணங்கள் என்று தமிழர்கள் அடையாளப்படுத்தினர். காவிரி கடலோடு சங்கமிக்கும் இடத்தில் அமைந்த பட்டினத்தை காவிரிப்பூம்பட்டினம் என்று அழைத்தனர். இந்த நகரத்தைப் பற்றிய பாடல் தொகுப்புக்கு பட்டினப்பாலை என்று பெயர். இந்த நகரமே பின்னாளில் பூம்பட்டினம் என்றும், பூம்புகார் என்றும், புகார் என்றும் புலவர்களால் பாடப் பெற்றது. இந்த கடற்கரை நகரங்கள் இரு பாகங்களை கொண்டதாக இருந்தது. ஊர் இருக்கும் பகுதி ஒரு பிரிவாகவும் பட்டினம் இருக்கும் பகுதி மற்றொரு பிரிவாகவும் இருக்கும். அதன்படி காவிரிபூம்பட்டினத்தில் ஊர் இருக்கும் பகுதி மருவூர்பாக்கம் என்றும் பட்டினம் இருக்கும் பகுதி பட்டினம்பாக்கம் என்றும் அழைக்கப்பட்டது என்பதை சங்க இலக்கியங்கள் மூலம் நாம் அறிய இயலும்.
நாகப்பட்டினம் என்னும் ஊரும் அது போலவே தான் இரு பகுதிகளை கொண்டதாக இருந்தது. நாகூர் என்னும் ஊரும் துறைமுகம் இருந்த பாதி பட்டினம் வேண்டும் இருந்தது அவை இணைந்தே இன்று நாகப்பட்டினம் என்று அழைக்கப்படுகிறது. சேர நாட்டில் பிரசித்தி பெற்ற துறைமுகம் முசிறி ஆகும். முசிறியும் ஊரும் பட்டினமும் இணைந்த பகுதியே. முசிறியில் ஊர் அமைந்த பகுதி கொடுங்கோளூர் என்றும், துறைமுக பகுதி மாகோதைபட்டினம் என்றும் அழைக்கப்பட்டது.
கடற்கரை சிற்றூர்கள் பாக்கம் என்று அழைக்கப்படுவது இன்றும் தொடர்கிறது. சென்னையில் மட்டும், கோடம்பாக்கம், மீனம்பாக்கம், வில்லிவாக்கம், சேப்பாக்கம், நுங்கம்பாக்கம், புரசைவாக்கம், புதுப்பாக்கம் என்று நிறைய பாக்கம் இருப்பதை நாம் அறிந்துள்ளோம் அல்லவா? நெய்தல் நிலத்தில் பூர்வகுடி மக்களை, வலைஞர், பரதவர், செம்படவர் என்று பெயரிட்டு அழைப்பர். இவர்கள் வாழும் பகுதியை குப்பம் என்று அடைச் சொற்களால் குறிப்பிடுவர். சென்னையில் அதுபோல நிறைய குப்பங்கள் ஊர் பெயருடன் இணைத்து வருவதை காணலாம்.
இதுவரை ஊர்களின் பெயர்களை பண்டைய தமிழர் எவ்வாறு அமைத்தனர் என்பதைக் குறித்துப் பார்த்தோம். இனி தமிழகத்தில் பிரபலமான நகரங்களின் பெயர்க் காரணம் குறித்த விளக்கங்களை அடுத்த அத்தியாயத்தில் விவரிக்கிறேன் மறக்காமல் வாசியுங்கள்.
எங்களோட புது கதைகள் கட்டுரைகளை கீழ இருக்கற லிங்க்-கை கிளிக் பண்ணி இப்பவே வாசியுங்க….
https://www.vithaigalpathipagam.com/2026/02/5.html
https://www.vithaigalpathipagam.com/2026/02/2_51.html
https://www.vithaigalpathipagam.com/2026/02/2_14.html

Comments