ஆழியில் புதைந்த புகாரின் கதை - Episode 2

📌 Topic Summary:

இந்திரவிழாவின் வழக்கம் எங்கிருந்து தொடங்கியது?

மாவளத்தான் இலங்கைக்குச் செல்லும் வழியில் செய்த தவறு பூம்புகார் அழிய காரணாமாக இருந்ததா?

கிருஷ்ணன் செய்ய வேண்டாம் என்று சொன்னதால் தான் இந்திரவிழா நிறுத்தப்பட்டதா?

காமன் பண்டிகைக்கும் இந்திரவிழாவுக்கும் என்ன வித்தியாசம்?

பாண்டியர்களின் சித்திரைத் திருவிழா- புகாரின் இந்திரவிழா! வித்தியாசமா அத்தியாவசியமா?


முழுக் கட்டுரையும் வாசியுங்கள்.




2. இந்திரவிழாவும் பூம்புகார் நகரமும்


பலிக்கொடை குறித்தும், மன்றங்களின் செயல்பாடுகள் குறித்தும் புகாரில் நிகழ்ந்த சம்பவங்களை சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். இந்த பகுதியில் நாம் பூம்புகாரின் இந்திரவிழா குறித்த தகவல்களுடன் ஆரம்பிப்போம்.


பலிப்பீடிகையைச் சேர்ந்த ஐம்பெரும் மன்றங்கள் ஒன்றிணைந்து இந்திரவிழாவை நடத்தினார்கள். வணிகர்கள், ஊர் மக்கள், படைவீரர்கள், எண்பேராயத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இந்த விழாவை சிறப்பிக்க பொறுப்புகளை ஏற்பது வழக்கம். பட்டத்து இளவரசன் முதல், பச்சிளம் குழந்தை வரை இந்த விழாவை சிறப்பிக்க ஒன்று கூடுவது வேறு எங்கும் காணப்படாத பழக்கம். 


இந்திரவிழாவின் வழக்கம் எங்கிருந்து தொடங்கியது? என்பதை சுருக்கமாக சொல்லிவிடுகிறேன். 

பூம்புகாரை ஆண்டு வந்த சோழ மன்னன் பெயர் தூங்கெயில் எறிந்த தொடித்தோள் செம்பியன். அவனிடம் அகத்தியர் கொடுத்த ஆணைப்படி இந்திரனை வணங்கி பல ஆண்டுகள் தவமிருந்தான். அவன் தவத்தை மெச்சி அவனது விண்ணப்பத்துக்கு பலனளிக்க இந்திரன் பூம்புகார் நகருக்கு வருகை தந்தான். இந்த நிகழ்வை கொண்டாடும் விதமாகவே பூம்புகாரில் ஆண்டு தோறும் 28 நாட்கள் திருவிழா அனுசரிக்கப்ட்டது. இதுவே இந்திரவிழாவின் துவக்க நிகழ்ச்சியாகும்.


இதே போல மகாபாரதத்திலும் ஒரு சம்பவம் குறிப்பிடப்பட்டுள்ளது. அகத்தியரின் காலத்தில் சோழ மன்னன் பெயர் தூங்கெயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் இந்திரவிழாவை தொடங்கியது போலவே, வடசேடியை ஆண்ட உபசீரர வசு என்ற மன்னன் இந்திரவிழாவை நடத்தி இருக்கிறான். இமயமலை அருகே இருக்கும் இந்த நாட்டை இளங்கோவடிகள் வித்தியாதர தேசம் என்று குறிப்பிட்டு இருக்கிறார். 


மருத நிலமான புகாரில் மழைக் கடவுளான இந்திரனுக்கு விழா எடுத்தனர் என்றாலும், அவன் பௌத்தம், சமணம், போன்ற மதங்களிலும் கொண்டாடப்படுபவன் என்பதால் மதங்களைக் கடந்தும் இந்த விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது என்பதை மணிமேகலை விரிவாக விளக்குகிறது. அதே போல நகரில் இருந்த எல்லா கோவில்களிலும் சிறப்பு அலங்காரங்கள், பூஜைகள் நடந்தனவாம். விழா நிகழும் அந்த 28 நாட்களிலும் வெவ்வேறு நகரங்கள், நாடுகளிலும் இருந்து விழாவில் காத்து கொள்ள வந்த விருந்தினர்கள், அறிஞர்கள், அரசர்கள் மக்கள் மன்றங்களில் உரையாற்றினார்கள் என்று அறிய முடிகிறது.


விழாவின் இறுதி நாளில் நிகழும் தேர் போட்டி மிகவும் பிரபலம். இந்தப் போட்டியில் சோழ மன்னர்கள், இளவரசர்கள், அண்டை நாட்டு அரசர்கள், இளவரசர்கள், ஏன், யவன தேசத்திலிருந்து வந்த அரச குலத்தவரும் கலந்து கொள்வார்கள் என்ற தகவல் அறியும் போது பெரும் வியப்பாகவே இருக்கிறது. இளஞ்செட் சென்னி புகாரின் இந்திர விழாவில் ரதமோட்டிய நிகழ்வுகளை சங்க இலக்கியங்கள் வழியாக விரிவாக அறிய முடியும்.


இத்தகைய சிறப்புகளுடன் நடைபெற்று வந்த இந்திரவிழாவின் இறுதி நாளில், நகரத்து மக்கள், வேறு இடங்களில் வந்திருந்தவர்கள் என்று அனைவரும், குடி, குலம், தகுதி பாராமல் ஆண், பெண் என்ற பேதமின்றி பொன்னி நதி கடலோடு சங்கமிக்கும் முகத்துவாரம் அருகே கடலில் நீராடி விழாவை நிறைவு செய்வார்களாம். 


தவறான அறிவுரைகள், அண்டை நாடுகளுடன் போர், மன்னனின் தலைக்கனத்தால் பின்னாளில் விழா கொண்டாடும் வழக்கம் மறக்கப்பட்டிருக்கலாம் என்ற காரணங்கள் பலதும் சொல்லப்படுகிறது. சோழ தேசத்தில் நிகழ்ந்த பல அரசியல் மாற்றங்களும், இந்திரவிழாவை கொண்டாடி வந்த மரபை மாற்றி இருக்கிறது என்பதை அறிய முடிகிறது. குறிப்பாக வட நாட்டினரின் வருகையும், அவர்கள் அரச கட்டிலுடன் ஏற்படுத்திக் கொண்ட செல்வாக்கும் தவறான போதனைகளை உருவாக்கியதாக தெரிகிறது. 


அதே நேரம் மற்றுமொரு வரலாற்று தகவல் சொல்லும் காரணம் மிகவும் யதார்தமானதாக இருக்கிறது. அதாவது சோழ இளவரசனாக இருந்த மாவளத்தான் இலங்கைக்குச் செல்லும் வழியில் நாக நாட்டிற்கு சென்று சேருகிறான். நாக நாட்டின் இளவரசி பீலிவளைக்கும் மாவளத்தானுக்கும் இடையே காதல் மலர்கிறது. காதலின் விளைவாக பீலிவளை ஒரு குழந்தையை பெற்றெடுக்கிறாள். தன் சகோதரனின் திடீர் மரணம் காரணமாக மாவளத்தான் அவசரமாக சோழ நாட்டுக்கு திரும்புகிறான். குறிப்பிட்ட காலம் கடந்தும் அவன் திரும்ப வராத காரணத்தாலும், தனக்குப் பிறந்த குழந்தையை பற்றி நாக நாட்டு அரசனுக்கு அறிவிக்க முடியாத சூழலிலும் பீலிவளை தனக்கும் மாவளத்தானுக்கும் பிறந்த குழந்தையை தொண்டை கொடியை  கருத்தில் அணிவித்து குணக்கடலில் மிதக்க விட்டுவிட்டு அரண்மனைக்குத் திரும்புகிறாள். 


சில காலம் கழித்து சோழ நாட்டின் அரசனாக முடிசூடிக் கொண்டு அரசாளும் மாவளத்தான் தன் மகன் கடலில் மிதக்கவிடப்பட்ட செய்தியை அறிகிறான். அவனைத் தேடி அலைவதிலேயே அவன் கவனம் முழுவதும் இருந்ததால் அவன் இந்திர விழாவைக் கொண்டாட மறந்தான் என்றும் அதனால்தான் புகாரை கடல் கொண்டது என்றும், கடலில் மகனை தவிக்க விட்டதற்கு தண்டனையாகவே கடல் மகள் கோபம் கொண்டு புகாரை விழுங்கினாள் என்றும் மணிமேகலை காவியம் வேறு ஒரு விளக்கத்தை தருகிறது.


மகாபாரதத்தில் கிருஷ்ணன் ஆயர்குல மக்களிடம் இந்திர விழாவை கொண்டாடாமல் புறக்கணிக்க சொல்வதாகவும், இதனால் இந்திரன் ஆத்திரம் அடைந்து பெரும் மலையை பொழிய வைத்தான் என்றும், ஆயர்களை காப்பாற்ற கிருஷ்ணன் கோவர்த்தன மலையை குடையாக உயர்த்திப் பிடித்து ஆயர் குலத்தவரை காப்பாற்றினான் என்றும், இதனால் கர்வம் குறைந்த இந்திரன் கிருஷ்ணனிடம் வந்து தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டான் என்றும் உலவும் கதையை கூறி இந்திரவிழா வழக்கம் ஒழிந்து போனதாக நம்பவைத்திருக்க கூடும் என்ற ஆராய்ச்சியாளர்கள் கருத்தை மறுப்பதற்கும் இல்லை. 


அழகான ஒரு ஆண்டில் உலகமே வியந்து பார்த்த இந்திர விழா சட்டென்று நின்று போனது. அடுத்த சில நாட்களில் உருவான கடல் கொந்தளிப்பில் புகார் என்ற நகரம் கடலுக்குள் புதைந்தும் போனது. இது எதேச்சையாக நடந்திருக்கலாம் என்றாலும், இதுவரை நாம் வாசித்த நம்பிக்கைகள், ஒழுங்கு முறைகளை மீறியதால் உருவான மாறுதல்கள் காரணமாக இயற்கை புகாரை மூழ்கடித்துவிட்டதோ என்ற தோன்றலும் உருவாகாமல் இல்லை. 


கரிகாலச் சோழன் அரசாண்ட காலத்தில் சோழர்களின் தலைநகரமாக பூம்புகார் இருந்துள்ளது. அதற்கு முன் வரை உறந்தை என்றழைக்கப்பட்ட உறையூரே சோழர்களின் முதன்மை தலைநகராக இருந்தது. இரண்டாம் தலைநகராக அல்லது முக்கிய வணிக நகரமாக மட்டுமே இருந்த புகாரை கரிகாலச் சோழன் தான் தலைநகராக மாற்றினான். அதன் பின் பிற்காலச் சோழர்கள் காலத்தில் முதலில் குடந்தை என்றழைக்கப்பட்ட கும்பகோணமும், அதற்குப் பின்னர் தஞ்சையும் சோழர்கள் தலைநகராக மாறின. 


இராஜேந்திர சோழன் காலத்தில் தொடங்கி, மூன்றாம் இராஜராஜ சோழன் காலம் வரை, அதாவது பாண்டிய பேரரசின் இரண்டாம் காலம் வரை கங்கை கொண்ட சோழபுரம் சோழர்கள் தலைநகராக விளங்கியது. 


ஆனால் இவற்றில் கோலோச்சி நிற்பது, புகார் மட்டுமே. இந்திரவிழாவினால் மட்டும் அல்ல… இயற்கையின் கொடைகளாலும், நிரம்பி வழிந்த போன் பொருளாலும் புகார் உலக வரலாற்றில் இடம்பெற்றது என்பதே வரலாறு கூறும் உண்மை. 


மக்களின் பசிப் பிணியை அகற்றும் பொருட்டு மும்மாரி பொழிய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் தான் இந்திரவிழா கொண்டாடப்பட்டது என்பதை நான் தெளிவாக புரிந்து கொள்வது அவசியம். மழைக் கடவுளாக இருந்த இந்திரன் ஆண்டு தோறும் பொன்னி நதி பெருக்கெடுத்து ஓடும் வண்ணமும், நிலங்களில், ஏரி குளங்கள் நிரம்பி வழியும் வண்ணமும் மழையைக் கொடுத்தால், உழவுத் தொழில் நிறைவாக நடக்கும் என்பதையும், அதனால் மக்கள் பசியின்றி வாழ இயலும் என்பதையும் சோழ மன்னர்கள் ஆணித்தரமாக நம்பினார்கள். அதன் பொருட்டே இந்த விழாவை நடத்தினார்கள் என்பதே லாஜிக்கல் உண்மை.


இதே இந்திர விழா பாண்டிய நாட்டிலும் கொண்டாடப்பட்டிருக்கிறது. இன்றளவும் சித்திரைத் திருவிழா என்று இந்த விழா கொண்டாடப்பட்டு வருவதை நாம் அறியலாம். வைகை நதி வற்றாமல் தேசத்தில் பாய்ந்தோட வேண்டும் என்ற பாண்டிய அரசர்களின் நம்பிக்கை, சோழர்கள் எண்ணிய அதே பசி போக்கும் சிந்தையின் தொடர்ச்சி என்றால் அதில் தவறே இல்லை என்றே கருதுகிறேன். 


இந்திர விழாவுடன் காமனுக்கும் விழா எடுத்தார்கள் என்று தெரிகிறது. புகாரில் இது நடந்தததாகவும், பாண்டிய நாட்டிலும் இது பின்னர் பின்பற்றப்பட்டதாகவும் குறிப்புக்கள் மூலம் அறிய முடிகிறது. இந்திர கொடியேற்றி விழா தொடங்குவது போலவே, மகர கொடியேற்றி காமன் விழாவும் நடந்ததாக மணிமேகலையும், சிலப்பதிகாரமும் விளக்குகின்றன. 


நான் முன்பே சொன்னது போல, புகாரின் 28-ம் நாளில் முகத்துவாரத்தில் நிகழும் நீராடும் விழாவையே காமன் விழா என்று அறிய முடிகிறது. இதை வசந்த திகல பான' என்ற நூலில் வரதாச்சாரியார் என்ற ஆசிரியர் பதிவு செய்து இருக்கிறார். 


இதையே சிலப்பதிகாரத்தில் வரும் கடலாடு காதை பகுதியும் நமக்குச் சுட்டிக் காட்டுகிறது. கடலாடு காதையில் அர்சகுமாரரும் பரதகுமாரரும், கணிகையரும் ஆடவரும் பெண்டிரும் எவ்வாறெல்லாம் மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்று கூறியிருப்பதை வாசிக்கும் போது மேலே சொன்ன குறிப்பு உண்மையாகிறது, மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் எதிர்நோக்கும் விழாவாகவும் இந்த நிகழ்வுகள் இருந்துள்ளன. இந்திர விழாவுடன் காமன் விழாவும் கொண்டாடப்பட்டது என்ற செய்தி, இந்திர விழா முடிந்தபின் அதாவது இந்திரனுக்கு நீராட்டும் நிகழ்ச்சி முடிந்த பின், மக்கள் கடலாடு காதையில் காமக்களிப்பில் மூழ்கி நீராடி மகிழ்ந்த செய்தி இந்திர விழா--காமன் விழா இணைந்து நடந்ததை உறுதி செய்கிறது. 


பாண்டியர்களும் இந்திரவிழாவையும், காமன் விழாவையும் கொண்டாடினார்கள் என்பதை சின்னமனூர் குறிப்புக்கள் மூலம் அறியலாம். 


அடுத்த அத்தியாயத்தில் புகாரின் நகரமைப்பு, மக்கள் தொகை, குறித்து விளக்கமாக விவரிக்கிறேன். 


இந்த பகுதி பிடித்து இருந்தால் மற்றவர்களுக்கும் பகிருங்கள், மறக்காமல் இந்த பகுதி குறித்து உங்கள் கருத்துக்களை கீழே இருக்கும் கமெண்ட் பகுதியில் பதிவிடுங்கள். எங்கள் இணையத்தை பின் தொடருங்கள். எங்கள் வாசகர்கள் குழுவில் இணைய கீழே இருக்கும் இணைப்புகளை உபயோகியுங்கள்.


மீண்டும்  சந்திப்போம்! 


தொடரும்…… 


Comments

Anonymous said…
பழமையாக வரலாற்று சிறப்புகளை அறியும் வாய்ப்பு தந்தமைக்கு நன்றி. மேலும் வளரட்டும் உங்கள் பணி

Popular posts from this blog

நீட் (NEET) வேண்டாம்! நியாயம் வேண்டும் - (விழிப்புணர்வு ஆய்வு கட்டுரை)