சங்ககால வேளிர்கள் கதைகள் ( தொடர்) - அகுதை
(தொடர்)
அகுதை
தமிழ் வரலாற்றில் மறக்கப்பட்ட அல்லது குறிப்பிட படாத சங்ககால வேளிர்கள் பற்றிய சுவையான தகவல்களை வாசகர்களுக்கு சொல்ல வேண்டும் என்ற தணியாத ஆவலில் உருவானதுதான் இந்த தலைப்பு. சங்க கால அரசர்களில் நாம் கொடை வள்ளல்களை குறித்து நிறைய அறிந்து உள்ளோம். ஆனால் சிறிய வேளிர்கள், குறுநில மன்னர்கள் குறித்து பெரிதாக நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லாத நிலையில், அவர்களை குறித்த தகவல்களை வருங்கால சமுதாயத்திற்கு சொல்வதும், அந்த அரசர்களை நாமும் அறிந்து கொள்வதும் அவசியமாகிறது. நம் இளைய தலைமுறைக்கு இந்த அரசர்களின் பெருமையை கதையாக சொல்வதன் மூலம், அந்த அரசர்களின் அகம் மற்றும் புற சிறப்புகளை அவர்களுக்குள் விதைப்பது என்பது விதைகள் பதிப்பகத்தின் சமுதாய பொறுப்பாக மாறியுள்ளது.
அந்த வகையில் இன்று நாம் தெரிந்து கொள்ள இருக்கும் சங்க கால அரசன் அகுதை. பரணர், கபிலர், கல்லாடனார், வெள்ளெருக்கிலையார் ஆகிய புலவர்களால் பாடப்பட்ட இந்த அரசனை குறித்து விரிவாக பார்க்கலாம் வாங்க…
கூடல் நகரின் அரசனாக இருந்தவன் அகுதை. இந்த கூடல் நகரை மதுரை என்றும், சில அறிஞர்கள் கூற்றுப்படி கூடல் வைகை அணைக்கு அருகே உள்ள கூடலூர் என்றும், புலிமான் கோம்பை சங்ககால கல்வெட்டு குறிப்பிடும் கூடல், ஆகுதை மன்னனது கூடலே என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. வராகநதி வைகையோடு கூ டும் இடத்தில் உள்ள குள்ளப்புரமே 'கூடல்' என்று பாண்டியர்கால கல்வெட்டுகள் குறிப்பிடுகிறது.
கூடல் நகரைச் சுற்றி ஆழமான அகழி இருந்தது. ஒரு நாள் அகுதை கள் உண்டான். அப்போது அவன் தான் உண்ணும் கள்ளில் சிறிது நாவில் ஊற்றியவுடனே நாக்கானது பல தேர் வருவது போலக் குழறி ஆடியது. ஒலிதரும் அதன் ஒலி வாடியது. போர்க்கோலம் பூண்டு அவன் சூடிய தும்பைப் பூ வாடியது. அப்போது அவன்மீது பகைவர் வேல் வீசினர். அது அவன் மார்பில் பட்டு அதன் கூராக்கப்பட்ட முனை முறிந்து போயிற்று. வேல் வீச்சால் குழைந்து போன அவன் மார்பில் அணிந்திருந்த தும்பைப் பூவின் மணம் அவன் மார்பில் கமழ்ந்தது. இத்தகைய அகுதையின் கூடல் நகரம் வறியோரின் நம்பிக்கையாக இருந்தது. இதை புறநானூற்று பாடல் 347-ல்
உண்போன் தான்நறுங் கள்ளின் இடச்சில
நாஇடைப் பறேர் கோலச் சிவந்த
ஒளிறுஒள் வாடக் குழைந்தபைந் தும்பை,
எறிந்துஇலை முறிந்த கதுவாய் வேலின்.
மணநாறு மார்பின், மறப்போர் அகுதை
குண்டுநீர் வரைப்பின், கூடல் அன்ன
குவைஇருங் கூந்தல் வருமுலை செப்ப,
என்று கபிலர் பாடுகிறார்.
அகுதையின் நண்பன் ஆய்-எயினன். அவனும் சிறந்த வள்ளலாக அறியப்பட்டவன். வெளியன் வேண்மான் என்ற வேளிர் அரசனின் மகன். தேமுது குன்றம் அவன் நாடு. கையில் சிறிய கோலை வைத்துக்கொண்டு குறி சொல்லும் குறிக்கக்காரர்கள் அவன் குன்றத்தைச் சிறப்பித்துப் பாடுவார்கள். பாணர்கள் நள்ளிரவு நேரமாக இருந்தாலும் அவன் செவிப்பட பாடினால் அவன் அவர்களுக்கு பரிசு நல்குவான்.அதுவும் சாதாரணமாக இல்லை அவர்களுக்குத் தந்தம் கொண்ட யானையைப் பரிசாக நல்குவான்.
பாழி என்னும் ஊரில் எயினன் பறவைகளைப் பேணி வளர்த்து வந்தான். மற்றொரு வேளிர் அரசன் மிஞிலி. நன்னன் என்னும் மன்னன் தூண்டுதலில் பேரில் மிஞிலி பாழியை யானைப்படையும் தேர்ப்படையும் கொண்டு தாக்கினான். பறவைகள் வளந்து வந்த பாழிப்பறந்தலை என்னும் இடம் போர்க்களமாக மாறியது. பறவைகள் கூக்குரல் எழுப்பி கத்தியபடியே பறந்தது. எயினன் வாளேந்திப் போரிட்டான். நண்பகல் வேளையில் எயினன் பெருங்காயம் பட்டுப் போர்க்களத்தில் வீரமரணம் அடைந்தான்.
எயினன் பேணிவந்த பறவைகள் வானத்தில் பறந்து, அவன் மேல் வெயில் படாமல் சிறகுகளை விரித்து நிழல் கொடுத்தன. எயினனின் மரண செய்தி கேட்ட வேளிர் மகளிர் அனைவரும் அவன் நண்பனாக இருந்த அகுதையிடம் சென்று நன்னன் மற்றும் மிஞிலி குறித்து புலம்பி செம்பூ மாலை அணிந்த மார்பில் அடித்துக்கொண்டு முறையிட்டனர். அகுதை தன நண்பனுக்கு ஏற்பட்ட நிலையை எண்ணி வருத்தம் கொண்டதுடன் பெரும் சீற்றம் கொண்டான்.
கோசர்கள் உதவியுடன் பெரும்படையை நடத்திச் சென்று நன்னனையும் மிஞிலியையும் அகுதை தாக்கினான். அவனது கோபத்தின் முன் நிற்க முடியாமல் நன்னன் போர்க்களத்தில் இருந்து தப்பி ஓடினான். மிஞிலிக்கும் அகுதைக்கும் இடையே கடும் யுத்தம் நிகழ்ந்தது. இறுதியாக தன் நண்பனை கோழையின் பேச்சைக் கேட்டு கொன்ற மிஞிலியை வீழ்த்தி அகுதை வேளிர் மகளிர் வேதனையை போக்கி, தேமுது குன்றத்தையும், பாழியையும் மீட்டான்.
இதை அகநானூற்றுப் பாடல் 208
படுகளம் காண்டல் செல்லான், சினம் சிறந்து,
உரு வினை நன்னன், அருளான், கரப்ப,
பெரு விதுப்புற்ற பல் வேள் மகளிர்
குரூஉப் பூம் பைந் தார் அருக்கிய பூசல்,
வசை விடக் கடக்கும் வயங்கு பெருந் தானை
அகுதை களைதந்தாங்கு, மிகு பெயல்
என்று விளக்குகிறது.
புலவர்கள் மற்றும் பாணர்களை இன்முகத்துடன் வரவேற்று அவர்களுக்கு வேண்டும் உதவி செய்பவன் அகுதை. அவர்களுக்கு யானைகளை பரிசாக வழங்குபவன். அவன் குறித்த வேறு ஒரு சுவையான செய்தியும் உள்ளது. அதைக் கேட்கலாம் வாருங்கள்.
முடியுடை மூவேந்தர்களில் ஒருவரல்லாத குறு நில மன்னர்களில் ஒருவன் வேள் எவ்வி . வேள் எவ்வியை வெள்ளெருக்கிலையார் என்னும் பெண்பாற் புலவர் ஒருதலையாக காதலித்து வந்தார்.வேள் எவ்வி மீது கொண்ட காதலால் அவனை சந்திக்க அவர் அடிக்கடி அரனமனைக்கு செல்வது வழக்கம். ஒருமுறை அப்படி செல்லும் போது வேள் எவ்வி போர்க்களம் சென்றது குறித்து வெள்ளெருக்கிலையார் அறிகிறார். அவரது மனம் பதைபதைக்கிறது.
வேள் எவ்வி பாணர்கள் கூட்டத்துக்குப் பெரிய நண்பன். அவர்களின் தலைவன் என்று கொண்டாடத்தக்க புகழுடன் வாழ்ந்தவன். இரும்பாண் ஒக்கல் தலைவன் என்று பாடப்பட்டவன். அவனுடைய படை, வியக்கத் தக்க ஆயுதங்கள் கொண்டதாக, போரில் பகைவரை தண்டிக்கத் தகுதியுடைய படையாக விளங்கியது. போர் நிகழும் காலத்தில் ஒருநாள் அதிகாலை நேரத்தில் வெள்ளெருக்கிலையார் வேள் எவ்வி போர்க்களத்தில் மாண்டான் என்று கேள்விப்படுகிறார். அவரது இதயம் வெடித்தது போல உணர்கிறார். அப்போது அவர் மனம் வருந்தி பாடும் பாடலில்….
“பொய்யா கியரோ! பொய்யா கியரோ!
பாவடி யானை பரிசிலர்க்கு அருகாச்
சீர்கெழு நோன்றாள் அகுதைகண் தோன்றிய
பொன்புனை திகிரியின் பொய்யா கியரோ!
எனக் குறிப்பிடுகிறார். அதற்குரிய கதையை கேட்போம்.
ஒருமுறை அகுதை மீது எதிரிகள் திகிரி என்ற ஆயுதம் வீசுகிறார்கள். அதில் அகுதை மார்பில் புண்பட்டு இறந்ததாக ஊரெங்கும் வதந்தி பரவியது. ஆனால் அகுதை மீது எந்த ஆயுதமும் வீசப்படவில்லை என்றும் அவன் இறக்கவில்லை என்றும் அறியப்பட்டது. அது போல வேள் எவ்வி இறந்தான் என்ற சம்பவமும் வதந்தியாக இருக்க வேண்டும் என்று பொருள் பட பாடினார். இங்கே திகிரி என்பது சுற்றிலும் பல் போன்ற சக்கரங்களை உடைய சுழலும் ஆயுதமாகும்.
அகுதை தும்பைப் பூ மாலையை அணிபவன். அவனைக் காண பறை முழங்கிச் செல்லும் பொருநர்க்கு களிறுகளையும், குதிரையையும், அணிகலன்களையும் பரிசாக வழங்குபவன். அகவன் மகளிர் அவனைப் பாடிப் பிடிகளைப் பரிசாகப் பெறுவார்களாம். ஆகவே அவனை அகவுநர் பெருமகன் என்று அழைப்பார்கள். தொடர்ந்து மறப்போர்களில் அவன் ஈடுபட்டதால் முனை மழுங்கிய வேல்களை உடையவன்.
அகுதை ஆயர் குடியை சேர்ந்தவன் என்ற குறிப்பும் உள்ளது. அகத்தா இடையர் என்னும் பிரிவினர், இந்த அரசனின் வழித்தோன்றல்களாக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. இவர்கள் வெள்ளையர்களின் ஆவணங்களிலும் 'அகதா'என்றே குறிப்பிடப்படுகின்றனர். ஆகுதை குலத்தவர்கள் சங்க காலத்தில் அகுதை என்ற பெயரை விரும்பி சூடிக் கொண்டனர்.
அகுதை குறித்த பாடல்கள் சங்க இலக்கியங்களான, அகநானூறு பாடல் 76-ல் 3 முதல் 5 வரையான வரிகளிலும், குறுந் தொகை பாடல் 298-ல் 5 முதல் 8 வரையான வரிகளிலும் பரணரால் பாடப்பட்டுள்ளது. அகநானூறு பாடல் எண் 113-ல் 3 முதல் 5 வரையான வரிகளில் அகுதையை கல்லாடனாரும், கபிலர் புறநானூற்றுப் பாடல் 347ளிலும் சிறப்பித்து பாடுகின்றனர். தவிர புறநானூற்றுப் பாடல் 233-ல் வெள்ளெருக்கிலையார் அகுதை குறித்து பாடுகிறார்.
இந்த அத்தியாயத்தில் இடம் பெற்ற சங்ககால வேளிர்கள் கதை உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். அடுத்த அத்தியாயத்தில் இதே போல வேறு ஒரு அரசருடன் உங்களை சந்திக்க வருகிறேன். அதுவரை காத்திருங்கள். நீங்கள் வாசித்த இந்த கதையை உங்கள் பிள்ளைகளுக்கும், மற்றவர்களுக்கும் மறக்காமல் சொல்லுங்கள்.





Comments