காற்று வெளியிடை கண்ணம்மா - அத்தியாயம்- 3
காணாமல் போன எழுத்தாளர் முகிலன் கண்டுபிடிக்கப்பட்டாரா? இல்லையா?
ஏற்காடு மலைப்பாதையில் நடந்தது… உண்மையா? மாயையா?
“சிநேகப் பிரபா” பங்களாவில் காத்திருந்த பெண் யார்?
இறந்துபோன பிரபாவதி மீண்டும் வந்தாளா?
முகிலன் பார்த்தது… நினைவா? நிழலா?
இருட்டில் எரிந்த விளக்குகள்… யார் ஏற்றியது?
முகிலன் பைத்தியமா?
ஏற்காடு ஹில் வியூ கம்யூனிட்டியில் நிகழ்வது மர்மமா?!
காதல் நினைவுகள் மனிதனை பித்தனாக்குமா?
காதல்… இழப்பு… மாயம்… மர்மம்
3. இந்திராவும் பிரபாவும்
சூரியனின் மறைவை மகிழ்ச்சியோடு கொண்டாடிக் கொண்டிருந்த விண்மீன்கள், நிலவின் வெளிச்சத்தில் கண் சிமிட்டிக் கொண்டிருக்க…. வெண்மதியின் மீது தங்கள் காதலை வெளிப்படுத்தும் நோக்கத்தில் முகிலினங்கள் வரிசையாக சென்று அவளை உரசிக் கொண்டிருந்தன. மேகங்களின் தீண்டலின் மதி மகள் வெட்கம் கொண்டாள் போல… அடிக்கடி தன் இருப்பை அவள் முகில்களின் பின்னால் மறைத்துக் கொண்டு போக்கு காட்டியபடியே பிரகாசித்துக் கொண்டிருந்தாள்.
சென்னை நுங்கம்பாக்கம்….
லயோலா கல்லூரிக்கு செல்லும் பிரதான வாயிலுக்கு எதிரே இருந்த பல்லடுக்கு வணிக வளாகத்தின் பன்னிரெண்டாம் தளம்.
வானம்பாடி எப்.எம் அலுவலகம்… பணியாளர்கள் பலர் வீடு திரும்பிக் கொண்டிருக்க, இரவுப் பணிக்கு வந்து கொண்டிருந்த சொற்ப பணியாளர்கள் மட்டும் லிப்டில் நுழைந்துக் கொண்டிருந்தனர். சதீஷ் தன் பையை சரி பார்த்து விட்டு, பைக் சாவியை மேஜை அறையில் இருந்து எடுத்தான். வீட்டுக்கு கிளம்ப அவன் எத்தனிக்கும் நேரத்தில் ஒரு குரல் அவனை திடுக்கிட வைத்தது.
“ஹே.... சதீஷ் அந்த சென்னை மியூசிக் அகாடமி நியூஸ் இன்னும் நீ தரலியே! ஆமா எங்க கிளம்பிட்டே....?” கேள்வியைக் கேட்டவர் குணா. வானம்பாடி எப்.எம்மின் தலைமை அதிகாரி.
ஐம்பது வயதில் ஆர்ப்பாட்டமாக உருவத்தை வளர்த்து வைத்திருந்தவர். கொஞ்சமும் வஞ்சனையின்றி உணவருந்துவார் போல… ஆனால் அவரது உருவத்திற்கு தான் அங்கு பணியாற்றிய அனைவரும் பயந்து நடுங்கினார்கள். பணியில் அவரை அடித்துக் கொள்ள முடியாது. இன்று வசமாக சிக்கியது சதீஷ் என்ற எலி.
“பாக்க மாட்டீங்கன்னு நம்பி… நான் போகும் போது கரெக்டா கண்டுபிடிக்கறீங்களே எப்படி சார்?”, என்று கேட்டபடியே அவர் முன் பவ்வியமாக வந்து நின்றான் சதீஷ்.
“முயல் புடிக்கற நாய் மூஞ்ச பாத்தா தெரியும் மேன். எதுக்கு அது கால தூக்குதுன்னு.... இன்னைக்கு நீ வேலைய முடிக்காம வீட்டுக்குப் போகக் கூடாது. Music Academy News இன்னும் அரைமணி நேரத்துல என் table-ல இருக்கணும். புரியுதா?” என்று வழக்கத்தை விட சற்று அதட்டலாகவே கூறினார் குணா. சதீஷ் சரியென்று தலையாட்டினான் என்றாலும் உள்ளுக்குள் அவரை நன்றாக திட்டினான்.
“இரு இரு இன்னைக்கு உனக்கு பாய்சன் வெச்சு கொன்னுடறேன்.....” என்று மெல்லிய குரலில் சொல்லிக் கொண்டான் குணா.
‘சதீஷ் மனதிற்குள் எதையோ சொல்கின்றான்’ என்பதை புரிந்து கொள்ளும் குணா…
"என்ன எப்படிடா கொல்லறதுன்னு Plan போடறியா நீ? you useless fellow....” என்று கோபத்தில் குணா கத்த… சதீஸ் வேறுவழியின்றி அவரது அர்ச்சனைகளை கேட்டுக்கொண்டிருந்தான். சில நொடி அர்ச்சனைகளுக்குப் பிறகு, குணா தனது அறைக்கு திரும்ப… சதீஷ் பேயறைந்த முகத்துடன் திரும்பி நடந்து, தனது இருக்கையில் வந்து அமர்ந்தான். அவனுக்கு ‘வேலை பார்க்கும் மனநிலை இல்லை’ என்பதை அவனது முக பாவங்களே தெளிவாக பிரதிபலித்துக் கொண்டிருந்தது.
அதே வேளையில் அவனது மேஜைக்கு பக்கவாட்டில் இருந்த கண்ணாடி அறைக்குள் பெரிய அகலமான மேஜையின் பின்புறம் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த ஒரு உருவம், அலைபேசி ஒலிப்பதை உணர்ந்து அழைப்பை ஏற்றது.
‘அந்த உருவத்தின் மெல்லிய நீண்ட நடுவிரலை அணி செய்து கொண்டிருந்த மோதிரம் ஒரு விதம் என்றால்…. விரல்களை பாதுகாத்து வளர்ந்திருந்த நீளமான நகங்களும், அவற்றை அழகு செய்திருந்த வெளிர் சிகப்பு நிற நகப் பூச்சும் வேறு விதமான அழகை கொடுத்தன. ஏ.ஆர் ரகுமான் ஏர்-டெல் நிறுவனத்திற்காக இசையமைத்திருந்த ரம்மியமாக இசை மேஜை மேலிருந்த அலைபேசியிலிருந்து எழவே… அவள் கரம் அலைபேசியை எடுத்து பின் காது மடல்களில் பொருத்தி…
"ஹலோ Indira here......" என்று தேனில் கலந்த ரோஜா இதழ்களின் இனிமையில் பேசியது. பேசிய அந்த குரலுக்கு சொந்தக்காரியின் பெயர் இந்திரா பிரியதர்ஷினி. நம் கதையின் நகர்வுகளை நிர்ணயிக்க போகிறவள்.
வானம்பாடி எப்.எம்-மின் இணை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர். மும்பையில் விசுவல் கம்யூனிகேஷன் படித்துவிட்டு இரண்டாண்டுகள் போர்ட் பிளேயர் வானொலியில் பணியாற்றிய அனுபவம் உடையவள். ‘செம்பருத்தி பூவின் மீது பாலாடை ஊற்றி, சந்தனத்தில் அபிஷேகம் செய்து வைத்தது போல நிறமும், மேனி பொலிவும் கொண்டவள். வட்ட முகத்தில் துள்ளி குதிக்கும் இரண்டு கயல்களை, சேரனின் வில் கொண்டு வேலி அமைத்து, சறுக்கி நீண்ட நாசியை, சிறிய மூக்குத்தியால் கட்டுக்குள் வைத்திருக்கும் நிலா முகத்தை உடையவள். ஐந்தடி ஆறங்குலம் உயரம். உயரத்தை ஈடுகட்டும் உடலமைப்பு. முன்னெழில் மோக நிலையையும், பின்னெழில் பேரின்ப அழகையும் வெளிப்படுத்துவதால், இலேசாக தெரியும் செல்லமான தொப்பை கூட அவளுக்கு அழகாகத்தான் இருக்கும். நீளமான பட்டு கேசத்தை பக்குவமாக பராமரித்து, அதனை சிறிய அலங்கார துணியால் கட்டுக்கோப்புடன் அடக்கி வைத்திருப்பது அவளது வழக்கம்.
அலைபேசியின் மறுமுனையில் கரகரத்த ஆணின் குரல் கேட்டது.
"ஹலோ….லோ…. ஏனுங்க ரேடியோ ஸ்டேஷன்காரங்கவியலா??. நான் மாடசாமிங்க. நேத்து காலத்த முகிலன் ஐயா பங்களாக்கு வந்தவங்க தானே பேசறது".
‘இந்திராவின் உடலிலும், செயலிலும் பரபரப்பு கூடியது. இருக்கையின் நுனிக்கு வந்தவள்’ பதில் கூற தொடங்கினாள்.
"ஆமாங்க மாடசாமி. நான் தான் பேசறேன். என்ன விஷயம் சொல்லுங்க? அய்யா பத்தி ஏதாவது தகவல் கிடைச்சுதா?"
மாடசாமியின் குரல் தொடர்ந்து பேசத் துவங்கியது.
“ஆமாமுங்க. ஐயா இங்க வந்து இருக்காங்க. இப்போ தான்... பஸ்ஸ விட்டு இறங்கி, பங்களாவ பாத்து போறாவிய. நீங்க அவரு வந்தா சொல்ல சொன்னீங்களா?.... அதான் போன் போட்டேங்க".
இந்திரா தனது மேஜையில் இருக்கும் buzzer- யை அழுத்தி சதீஷை சைகை காட்டி உள்ளே வருமாறு அழைத்தாள். அப்படியே மாடசாமியிடம் பேச்சும் கொடுத்தாள்.
“மாடசாமி நல்லா பாத்தீங்களா? அது முகிலன் ஐயா தானா?”
“ஐயோ நெசமா தானுன்ங்க. நம்ம ஐயாவ எனக்கு அடையாளம் தெரியாம போயுடுங்களா? ஐயாவே தானுங்க. பாருங்க சரியா நம்ம பங்களா பாத்து போறாவிய..!!! சந்தேகமே இல்லீங்க!”. என்றார் மாடசாமி. அதற்குள் சதீஷ் இந்திராவின் கேபினுக்குள் நுழைந்திருந்தான்.
அவனை சைகை காட்டி இருக்கையில் அமர சொன்னவள் மீண்டும் மாடசாமியிடம் பேசலானாள்.
"சரி.... சரி நான் நம்பறேன் மாடசாமின்னே, நீங்க அய்யாவ பத்திரமா பாத்துக்கங்க... நான் உடனே கிளம்பறேன். விடியறப்ப அங்க வந்துடுவேன். அதுவரைக்கும் அவர பத்திரமா பாத்துக்கங்க போதும். இடைல இடைல நான் உங்கள கூப்பிடறேன்”, என்று பரபரத்தாள் இந்திரா.
"சரிங்க சரிங்க. கொஞ்சம் விரசா வந்துருங்க. மழைத் துளி வேற இலேசா விழுது. எனக்கு கொஞ்சம் கவலையா இருக்கு. சீக்கிரம் வந்துடுங்க…. அப்ப நான் வெச்சுடட்டுங்களா?”, இணைப்பு துண்டிக்கப்பட இந்திரா சதீஷிடம் விவரம் கூறினாள்.
"சதீஷ் நாம உடனே ஏற்காடு கிளம்பனும். நீ ரெடி ஆகு. உன் வீட்டுக்கு இன்பார்ம் பண்ணிடு. நான் குணா சார்-கிட்டே பேசிட்டு வர்றேன்.... முகிலன் சார் இருக்கற இடம் தெரிஞ்சுடுச்சு”, என்று மகிழ்ச்சியோடு கூறினாள் இந்திரா. இந்திரா இப்படி கூறியதும் சதீஷ் ஆச்சரியத்தில் உறைந்து போனான்.
"உண்மையாவா இந்திரா? யப்பா!!! இனிமேல் சாப்பாடு பிரச்சினை தீந்தது. நிம்மதியா தூங்கலாம்." என்று வாய் விட்டு சொன்னான் சதீஷ். அவனை ஏற இறங்க பார்த்த இந்திரா…
"ஹே.... என்னடா உளர்ற? இப்போ என்ன… நீ சாப்பிடாமலா இருக்கே?. போய் கிளம்பற வேலைய பாரு", என்று இந்திரா கூறினாள்.
சதீஷுக்கு ஒரு விதத்தில் நிம்மதியாக இருந்தது. அதே வேளையில் தன் மனைவியை எப்படி சமாளிப்பது என்று எண்ணியவாறே வந்து தன் இருக்கையில் அமர்ந்தான்.
அதே நேரம்
ஏற்காடு மலையில் பனி கொட்டும் இரவில், முகிலன் மூச்சு வாங்க தன் பங்களாவை நோக்கி வேகமாக நடந்து கொண்டிருந்தார். அவரது உணர்வுகள் எதையோ நாடியும் தேடியும் செல்வதாக இருந்தது.
இன்னும் ஒரே ஒரு வளைவு தான் அவரது பங்களாவை அடைந்து விடுவார்.
“ஹில் வியூ கம்யூனிட்டி”-க்கு உட்பட்ட அந்த குடியிருப்புக்குள் அங்கொன்றும் இங்கொன்றுமாக எரிந்துக் கொண்டிருந்த விளக்குகள் பனிமூட்டத்தால் மங்கலாக தங்கள் ஒளியை வீசிக் கொண்டிருந்தன. முகிலன் குறிப்பிட்ட பங்களாவை அடைந்திருந்தார்.
“கீரீச்……..”
என்று ஒலியெழுப்பியபடி நுழைவு வாயில் கதவுகள் திறக்க… கதவுகளைத் தள்ளிக் கொண்டு "சினேக பிரபா" பங்களாவிற்குள் நுழைந்துக் கொண்டிருந்தார் முகிலன். நுழைவு வாயிலில் இருந்த கோட்டை மதிலில் பதிக்கப்பட்டிருந்த “சிநேகப் பிரபா” என்னும் எழுத்துக்களை முகிலனின் கரங்கள் வாஞ்சையுடன் தடவியது. அத்தனை இருட்டிலும் "சினேக பிரபா" என்ற எழுத்துக்கள் மட்டும் பிரகாசமாக முகிலன் கண்களில் ஒளிர்ந்தது அவருக்கு மட்டுமே தோன்றிய உணர்வாக கூட இருக்கக் கூடும்.
விக்கித்து அந்த மாளிகையை நோக்கியவரின் கண்களில் மட்டுமே பற்பல காட்சிகள் விரிந்தது. சட்டென்று பங்களாவுக்குள் ஒவ்வொரு விளக்காக எரியத் தொடங்க…. முகிலனின் கண்களில் இதுவரை தேங்கியிருந்த சோகங்கள் மறைந்து பிரகாசம் கூடியது.
முகிலன் மெல்ல நடந்து பங்களா வளாகத்திற்குள் சென்றார். அங்கே செயற்கையாக வடிவமைக்கப்பட்டிருந்த மரப்பாலத்தின் பின்னணியில், சட்டென சுடர்விட்ட விளக்குகளின் ஒளி வெள்ளத்தில் பங்களா ரம்மியமாக காட்சியளிக்க…. முகிலன் முகம் முழுவதும் குபீரென்று இன்ப வெள்ளம் பரவி நிறைந்தது.
முகிலன் பாலத்தில் நடக்கத் தொடங்க…. பங்களாவுக்குள் இருந்து ஒரு பெண் மகிழ்ச்சியோடு பேசும் குரல் கேட்டது. முகிலன் நடக்கும் சத்தம் உள்ளே கேட்டிருக்க கூடும் போல…. பங்களாவின் கதவுகள் பட்டென திறக்க, கதவுக்கு பின்னால் இருந்து கருநீல நிற புடவையில், தலை நிறைய மல்லிகை பூ சூடி, கொட்டிக் கவிழ்த்து ,வரிசையாக அடுக்கி வைத்த மாணிக்க பற்கள் பளிச்சிட, ஆரஞ்சு சுளை வடிவ இதழ்களில் அல்லியின் வண்ணம் இயற்கையாகவே நிரம்பி பளபளக்க… அவள் புன்னகை பூத்தபடி வெளியே வந்து, இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு முகிலனிடம் பேசலானாள்…
"ம்ம்ம்…. வாங்க முகிலன். இவ்வளவு நேரமா சார் எங்க போனீங்க? உங்களை எதிர்பார்த்து எவ்வளவு நேரமா நான் இங்க காத்து இருக்கேன் தெரியுமா? நீங்க ரொம்ப மோசம். நான் இங்க காத்திருப்பேன்னு கொஞ்சம் கூட உங்களுக்கு அக்கறையே இல்லே. வாங்க… அதுக்கு இன்னைக்கு உங்களுக்கு நைட் பனிஷ்மென்ட் இருக்கு”. என்று சிணுங்களுடன் கூடிய வார்த்தைகளை அவள் கூற…. முகிலனின் இதயத்திற்குள் அவை இன்பமாக புகுந்து பேரலைகளை பிராவாகிக்க வைத்தது.
"இல்ல.. !!!.. நான் கொஞ்சம்……யோசிச்சுட்டே நடந்து…. அப்படியே…" என்று நா குழறி உளறினார் முகிலன்.
பொதுவாகவே பிரபாவதியிடம் எதற்காகவாவது தவறு செய்து சிக்கிக் கொண்டால், இப்படித்தான் உளறுவார் முகிலன்.
"அது பனிஷ்மெண்ட் எல்லாம் வேண்டாம். இதெல்லாம் ஓவர்மா. நான்… நான் உனக்கு ஏன் லேட்டுன்னு எஸ்பிளேன் பண்னறேன்? இதோ பாரும்மா நான் சமாதானம்! சரண்டர்", என்று அவர் பேசத் தொடங்க….
அவர் தோளை ஒரு கரம் தொட்டு உசுப்பியது.
"ஐயா… நான் மாடசாமிங்க… வாட்ச்மேன்…" என்ற குரல் கேட்ட நொடியே, அந்தப் பெண் மறைந்து போனாள். அதுவரை எரிந்து கொண்டிருந்த விளக்குகள் அணைந்து… எங்கும் இருளாக காட்சியளித்தது. இதுவரை அவர் பார்வையில் தென்பட்ட அனைத்தும் முகிலனின் கண்பார்வையில் இருந்து மறைந்து போயிருக்க!… மயக்கம் தெளிந்த உணர்வில் சுற்றும் முற்றும் பார்த்தார் முகிலன். அங்கே அவரது பங்களா காவலாளி மாடசாமி நின்று கொண்டிருந்தான்.
"ஐயா வணக்கமுங்க… பங்களாவை திறக்கட்டுங்களா!!??…" என்ற மாடசாமியை முகிலன் நன்றாக உற்றுப்பார்த்து ‘சரியென்று தலையை ஆட்டினார்’. நடந்த அத்தனையும் அவருக்கு மீண்டும் நிழலாக இதயத்தில் தோன்றியது. மாடசாமி பங்களாவை திறந்து விட்டு விளக்குகளை ஒளிரவிட்ட போது…. ‘தான் அங்கே வந்த போது கண்ட காட்சி அனைத்தும் பிரம்மை என்ற உணர்வு முகிலனுக்கு புரிந்தது. மாடசாமி மீண்டும் அவரருகே வந்து….
"ஐயா சாப்பிட எதாச்சும்" என்ற மாடசாமியை பார்த்து வேண்டாம் என்று சைகை காட்டியவர், அவன் போகலாம் என்பது போல கையை ஆட்டினார். உண்மையில் முகிலன் உணவருந்தி மூன்று நாட்கள் இருக்கும். ஆனால் பசி இல்லை, உடலில் சோர்வும் இல்லை, வலியில்லை, உறக்கமில்லை, இப்படி "இல்லை" என்பது முகிலனின் வாழ்வில் இல்லாது போகட்டும் என்று அரும்பாடுப் பட்டவள். இன்று இல்லாது போய் விட்டாளா? என்று எண்ணிய முகிலனின் இதயத்தில் மீண்டும் சோகம் வந்து சிம்மாசம் போட்டு அமர்ந்து கொண்டது.
அப்போது மெல்லியதொரு சிரிப்பொலி முகிலனின் பின்னால் சற்று தொலைவில் இருந்து கேட்க…. அவர் திரும்பி பார்த்தார். வியூ பாயிண்ட் பக்கத்தில் போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்து சிரித்தபடி, அந்த பெண் தன் இரண்டு கரங்களையும் நீட்டி அவரைப் பார்த்து பேசினாள்….
“முகிலா அங்க என்ன பண்ணறீங்க? இங்க வாங்க நான் இங்க இருக்கேன்”.
அந்த குரலின் மாயத்தில்… மந்திரத்திற்கு கட்டுப்பட்டவர் போல முகிலன் வியூ பாயிண்ட்டை நோக்கி உற்சாகமாக நடக்கலானார். முகிலனை எதிர்பார்த்து அந்த பெண் புன்னகையோடு அமர்ந்திருக்க, அவளது கருநீலப் புடவை காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது. அவள் சூடியிருந்த மல்லிகையின் மணம் முகிலனை ஏதேதோ செய்ய அவர் தனது நடையின் வேகத்தை கூட்டினார். அதே வேளையில் அந்த பெண்ணோடு பேசினார்.
“பிரபா வீட்டுக்குள்ள இருந்து எப்ப இங்க வந்த? நான் கொஞ்ச நேரத்துல ரொம்ப குழப்பிட்டேன். குளிரலையா உனக்கு?’” என்று கேட்டவாறே முகிலன் நடந்து கொண்டிருந்தார். பிரபா என்னும் அந்தப் பெண் பேசவில்லை. சிரித்தாள். சிரித்துக் கொண்டே இருந்தாள்…..
யார் இந்த பிரபா? முகிலனை இப்படி அலைக்கழித்துக் கொண்டிருக்கிறாள்?. அவளது எண்ணங்களை சுமந்துக் கொண்டு முகிலன் இப்படி பித்தனாக அலைவதன் பின்னணி என்ன? அடுத்த அத்தியாயத்தில் வாசிக்கலாம்…..
இந்தக் கட்டுரை குறித்த உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே கமெண்டில் வந்து சொல்லுங்கள். இந்த கட்டுரை பிடித்து இருந்தால் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் பகிருங்கள். இது போன்ற வரலாற்று தகவல்களை விளக்கமாக தெரிந்து கொள்ள எங்கள் பதிப்பக இணைய தளத்தை இப்போதே பாலோ செய்யுங்கள்.
எங்களோட புது கதைகள் கட்டுரைகளை கீழ இருக்கற லிங்க்-கை கிளிக் பண்ணி இப்பவே வாசியுங்க….
https://www.vithaigalpathipagam.com/2026/02/part-1_28.html
https://www.vithaigalpathipagam.com/2026/02/2_51.html
Comments