இயந்திர குதிரை - அறிவியல் மற்றும் தகவல் சார்ந்த கட்டுரை- அத்தியாயம் -1

📌 Topic Summary:

“இங்கிலாந்தில் பிறந்த இந்த எந்திர குதிரை… சென்னையில் எப்படி தனது இரண்டாம் வாழ்க்கையை தொடங்கியது?”


“போர்க்களத்தில் பாராசூட்டில் இறக்கப்பட்ட இந்திர குதிரை…. ஜப்பானை அதிர்ச்சியடைய வைத்த அந்த ரகசிய மாடல் எது?”


“120 ஆண்டுகளாக ராணுவம் நம்பிய ஒரே இயந்திரம்… ஏன் இந்த இயந்திரம் இன்னும் மனித வாழ்வியல் போர்க்களத்தில் வாழ்கிறது?”


“‘Made Like a Gun’ — இந்த வாசகத்துக்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன?”





இயந்திர குதிரை 

(R.E என்னும் அடங்காத காளை)


        நூற்றி இருபது ஆண்டுகள்….


        ஒரே பெயர்…. 


        ராணுவத்தில் சேவை…. 


        பல்வேறு தேசங்களும் கொண்டாடும் பெரிய வரலாறு இதற்கு உண்டென்றால் அது மிகையில்லை. தன்னுடைய நீண்ட பயணத்தில் இந்த எந்திர குதிரை பார்க்காத இடர்கள் எதுவும் இல்லை. துரத்தி வரும் எத்தனையோ போட்டியாளர்களை சாதாரணமாக ஒதுக்கிவிட்டு இன்னமும் குறையாத கவர்ச்சியோடு இதன் ஓட்டம் இன்றும் தொடர்கிறது. 


    இந்த நூற்றி என்பது கிலோ எடை கொண்ட எந்திர குதிரையின் பிறப்பிடம் இங்கிலாந்து, என்றாலும் இது வளர்ந்தது, செழித்தது, இன்னமும் பூரண ஆயுளோடு வாழ்வது எல்லாம் நம் சென்னையில் தான். போர்க்களங்களில் புயலென நுழைந்து எதிரிகள் எதிர்பாராத அதிர்ச்சியை கொடுத்தது தான் இதன் மீதான ஈர்ப்புக்கு முதல் காரணமாக அமைந்தது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பானை ஜன்னி காண வைத்த இந்த எந்திர குதிரைக்கு உலகமெங்கும் ரசிகர்கள் ஏராளம் ஏராளம். 


நவீன யூகத்தில் நாகரீக இளைஞர்களிடையே முரட்டுத்தனத்திற்கு அடையாளமாக திகழும் இந்த எந்திர குதிரை, தனக்கென ஒரு பெரிய ரசிகர்களையே கொண்டிருப்பது என்பது கவனிக்கப்பட வேண்டிய சிறப்பம்சம். சுமார் அரைக்காத தூரத்திற்கு முன்பே இதன் குரலொலி எழும்பிவிடும் என்பதால் அதன் மீது எப்போதுமே பார்வையாளர்களுக்கு ஒரு கண் இருந்து கொண்டே இருக்கும். முன்னர் இராணுவத்திலும், பின்னர் காவல்துறையிலும், பணியாற்றிய இந்த இரண்டு கால் குதிரைக்கு அதனை இயக்குபவர்கள் மட்டும் அல்ல, வழியோரம் பயணிக்கும் அதனை பேருமே இரசிகர்கள் தான். 


என்னங்க சொல்ல வர்றீங்க? எதை பத்தி பேசறீங்க? சட்டு புட்டுன்னு உங்க அறிமுக படலத்தை முடிக்கறீங்களான்னு தான கேட்கறீங்க? சரி… சரி…. விளக்கிடுவோம். இந்த இரண்டு கால் இயந்திர குதிரையோட பேர்…… 


ராயல் என்பீல்டு சுருக்கமா ஆர். ஈ ன்னு செல்லமா கூப்பிடுவாங்க…. இந்த தகவல் கட்டுரைல இப்ப நாம இந்த இயந்திர குதிரையை பத்தித்தான் பேசப் போறோம். ரெடியா… போகலாமா?......... 


1. 1. பூர்வீக வரலாறு விரிவாக:



‘ஜார்ஜ் டவுன் சென்ட்’ என்பவர் 1851 ஆம் ஆண்டில் ரெட்டிச் என்னும் இடத்தில் தையல் ஊசிகள் தயாரிக்கும் வணிகத்தை நிறுவினார். 1882 ஆம் ஆண்டில், ஜார்ஜ் என்று பெயரிடப்பட்ட அவரது மகன், அதே இடத்தில் தையல் ஊசிகளை தயாரிக்கும் பணியோடு, சைக்கிள் உற்பத்தியாளர்களுக்கான பாகங்களைத் தயாரிக்கத் தொடங்கினார். 1886 வாக்கில் டவுன்சென்ட் மற்றும் ஈகோசாய்ஸ் என்ற பெயர்களில் முழுமையான சைக்கிள்கள் அந்த நிறுவனம் மூலம் விற்கப்பட்டன. இந்த வணிகம் 1891 இல் நிதிச் சரிவைச் சந்தித்தது.


பிர்ஹீம்காம் பெர்ரி அண்ட் கம்பெனி (Birhinghaam perri and company) என்னும் நிறுவனம் பேனா மற்றும் அதன் உதிரிபாகங்களை தயாரித்து வந்தது. அதன்  விற்பனை மேலாளராகிய  ஆல்பர்ட் எடி, மற்றும் டி. ரூட்ஜ் அண்ட் கோ வின் (D. Rudge & Co)] பொறியாளர் ராபர்ட் வாக்கர் ஸ்மித் ஆகியோரை ஜார்ஜ் டவுன்சென்ட் நிறுவனத்தின் வணிகத்தை நடத்துவதற்கு அவரது வங்கியாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.1892 -ல், இந்த நிறுவனம் புதிய பங்குதாரர்களின் நிறுவனங்களோடு இணைக்கப்பட்டு  எடி  தயாரிப்பு நிறுவனம் (Eadie Manufacturing Company Limited) என பெயரிடப்பட்டது. 


1907 ஆம் ஆண்டில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட என்பீல்டு ஆட்டோ கார் வணிகத்தில் ஏற்பட்ட கடுமையான இழப்புகளுக்குப் பிறகு, எடி உற்பத்தி மற்றும் அதன் பெடல்-சைக்கிள் பாகங்கள் தயாரிப்பதும் விற்பதுமான வாணிபத்தில் ஈடுபட்டு வந்த “பர்மிங்காம் சிறு ஆயுத நிறுவனத்தால்” (பிஎஸ்ஏ) கையகப்படுத்தத்தப்பட்டது. ஆல்பர்ட் எடி மிடில்செக்சில் இருந்த சிறிய துப்பாக்கித் தொழிற்சாலைக்கு துல்லியமான பாகங்களை விற்பனை செய்யும் ஆர்டர்களைப் பெற்றார். இந்த மதிப்புமிக்க ஆர்டரைக் கொண்டாட, ஆல்பர்ட் எடி மற்றும் ராபர்ட் வாக்கர் ஸ்மித் ஆகிய இருவரும் முடிவெடுத்தனர். தங்கள் நிறுவனத்தை என்ஃபீல்ட் உற்பத்தி நிறுவனம் லிமிடெட் என்று மறுபெயரிட்டார்கள். வாக்கர் ஸ்மித் வடிவமைத்த  அவர்களின் முதல் சைக்கிளை என்ஃபீல்ட் என்று பெயரிட்டனர். அடுத்த ஆண்டு, அவர்களின் சைக்கிள்கள் ராயல் என்ஃபீல்டு என மறுபெயரிடப்பட்டு, ‘மேட் லைக் எ கன்’ என்ற வர்த்தக முத்திரையுடன்  அறிமுகப்படுத்தப்பட்டது.


குவாட்ரி சைக்கிள் என அழைக்கப்பட்ட இவர்களின் முதல் சைக்கிள்  இரண்டு உறுதியான சைக்கிள் பிரேம்களை அடிப்படையாக வைத்து அதன் மீது இருக்கைகள், மற்றும் மோட்டார்கள் பொருத்தப்பட்டதாக வடிவமைக்கப்பட்டது. இதில்  1 1/2 ஹெச்பி டி டியான் இயந்திரத்தைப் பயன்படுத்தினார்கள். 


1900-ம் ஆண்டில் மிகவும் கடினமான வழித்தடம் ஒன்றில் குவாட்ரி சைக்கிளை சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்துவது என்று என்பீல்ட் நிறுவனம் தீர்மானம் மேற்கொண்டு, லண்டனில் இருந்து எடின்பர்க் வரை சென்று விட்டு மீண்டும் அதே பாதையில் திரும்புவது என்ற முடிவை மேற்கொண்டது. இதன் மூலம், கடினமான சாலைகளில் கூட இந்த வாகனத்தை இயக்க முடியும் என்ற நம்பிக்கையை பொது மக்களிடம் விதைப்பது என்பது அதன் நோக்கமாக இருந்தது. 


1901-ம் ஆண்டு பாப் வாக்கர் ஸ்மித் மற்றும் பிரெஞ்சுக்காரர் ஜூல்ஸ் கோபியட் ஆகியோரால் வடிவமைக்கப்பட்ட முதல் ராயல் என்பீல்டு மோட்டார் பொருத்தப்பட்ட சைக்கிள் லண்டனில் நடைபெற்ற ஸ்டான்லி சைக்கிள் கணக்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1 ½ எச்.பி மோட்டார் ஒன்று கைப்பிடிக்கு கீழே பொருத்தப்பட்டு பின் பக்க சக்கரத்தோடு இணைப்பட்டதாக அது இருந்தது. 


1909-ம் ஆண்டு ராயல் என்ஃபீல்டின் முதல் V-ட்வின், 297cc ரக இலகு வகை பைக் ஸ்டான்லி சைக்கிள் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்விட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்ட மோட்டோஸகோச் (Motosacoche) இன்ஜினைப் பயன்படுத்தி இந்த பைக்கை ராயல் என்பீல்டு நிறுவனம் தயாரித்து இருந்தது. ஜான் ஓ' க்ரோட்ஸ் முதல்  லேண்ட்ஸ் எண்ட் ட்ரையல் வரை அடுத்த ஆண்டு நடைபெற்ற பல போட்டிகளில் இந்த வகை மோட்டார் சைக்கிள்கள் பல்வேறு வெற்றிகளை, இந்த மாடல் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 


1914-ம் ஆண்டில், ராயல் என்பீல்டின் முதல் டூ ஸ்ட்ரோக் (Two stroke) மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு வந்தது. முதல் உலகப்ப்போர் தொடக்கியிருந்த அந்த காலகட்டத்தில், இந்த நிறுவனம் தயாரித்திருந்த நிறுவனத்தின் மிகப்பெரிய மோட்டார் சைக்கிள், 770cc 6 hp V-twin பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பிரிட்டன், பெல்ஜியம், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவுக்கு இந்த வகை மோட்டார் சைக்கிள்களை நிறுவனம் விற்பனை செய்தது. 




1924-ம் ஆண்டு ராயல் என்பீல்ட் நிறுவனம் காலால் கியர் போட்டு இயக்கும் முதல் ராயல் என்ஃபீல்டு 350cc OHV 4-ஸ்ட்ரோக் மோட்டார் சைக்கிள், ஸ்போர்ட்ஸ் மாடல் 351, 225சிசி 2-ஸ்ட்ரோக் ஸ்டெப்-த்ரூ 'லேடீஸ் மாடல்' ஆகிய எட்டு வடிவ வாகனங்களை சந்தைக்கு அறிமுகப்படுத்தியது. என்றபோதும் யார் கண்பட்டதோ 1925-ம் ஆண்டு ரேடிச் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து ஒன்று ஏற்பட்டது. அந்த ஆலையின் 18 ஏக்கர் நிலத்திலும் பரவியிருந்த உற்பத்தி நிலையங்கள், அலுவலகங்கள் என அனைத்தையும் நெருப்பு அரக்கன் தன் பசியுள்ள வாயால் விழுங்கத் தொடங்கினான். ஆலையின் சொந்த தீயணைப்பு படை தீயை அணைக்க பெரும் பாடுபட்டது.


இந்த தீவிபத்தில் இருந்து மீண்ட நிறுவனத்தை மீண்டும் கட்டமைக்கும் பணிகள் ஓராண்டுக்கும் மேல் நடந்தது. 1928-ம் ஆண்டு தீவிபத்திற்கு பிறகு புது வடிவ பைக்குகளை களத்தில் இறக்க முடிவெடுத்த ராயல் என்பீல்டு நிறுவனம், தட்டையான எரிபொருள் நிரப்பும் கொள்கலன்களுக்கு பதில் சாய்வான வடிவ எரிபொருள் நிரப்பும் கொள்கலன்களை உருவாக்கியது. அத்துடன் முன் பக்க “போர்க்” முறையில் அது மிகப்பெரிய  அளவில் மாற்றங்களை செய்தது இது வேறு எந்த நிறுவனங்களும் அதுவரை பயன்படுத்தாத முறையாக இருந்தது. போர்க்கில் மாற்றம் செய்து வெளிவந்த முதல் மாடலாகவும் அது இருந்தது. 


1930-ம் ஆண்டு 225சிசி 2-ஸ்ட்ரோக் மாடல் ஏ, 976சிசி வி, ட்வின் மாடல் கே, உட்பட பதினோரு வகையான மோட்டார் சைக்கிள்களை ராயல் என்பீல்டு நிறுவனம் அறிமுகம் செய்து புதிய தசாப்தத்தை தொடங்கி வைத்தது. அத்துடன் புதிய 350 மற்றும் 500சிசி பக்க-வால்வுகளை கொண்டதும்  உலர்-சம்ப் லூப்ரிகேஷன் கொண்ட மேல்நிலை வால்வுகள் கொண்டதுமான மேம்படுத்தத்தப்பட்ட வடிவ இஞ்சின்களை அறிமுகம் செய்தது. 


1932-ம் ஆண்டு நவம்பர் மாதம் லண்டனில் நடந்த ஒலிம்பியா மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் புகழ்பெற்ற ராயல் என்பீல்டு புல்லட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. 250, 350 மற்றும் 500cc, கொண்ட மூன்று மாடல்களை இந்த கண்காட்சியில் ராயல் என்பீல்டு நிறுவனம் காட்சிப்படுத்தியது. இந்த மாடல்கள் எல்லாம் சாய்ந்த 'ஸ்லோப்பர்' என்ஜின்கள், இரட்டை-போர்ட்டட் சிலிண்டர் ஹெட்கள், காலால் இயக்கப்படும் கியர்கள், கொண்டவையாக இருந்தன. இந்த உலகப் புகழ் பெற்ற புல்லட்கள் இன்றும் நம் அனைவரையும் வசீகரிக்கும் இயந்திர குதிரையாக இருப்பது என்பது அதன் வடிவமைப்புக்கு கிடைத்த அங்கீகாரமே. 


1933- ம் ஆண்டு ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு துன்பகரமான ஆண்டாக அமைந்தது. ராயல் என்பீல்டு நிறுவனத்தை தொடங்கிய இரட்டையர்களின் ஒருவரும் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர்களில் ஒருவருமான பாப் வால்கர் ஸ்மித் காலமானார். ராயல் என்பீல்டு புல்லட் வெளிவருவதற்கு காரணகர்த்தாவாக விளங்கிய வால்கரின் மறைவுக்கு ஈடுசெய்யும் வகையில் அவரது மகன் மேஜர் பிராங்க் ஸ்மித் நிறுவனத்தில் தந்தையின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இவர் தன் தந்தையுடன் இணைந்து பல ஆண்டுகளாக பணியாற்றியவர் என்பதால் அவர் நிச்சயமாக ஆக்கபூர்வமான செயல்களை தருவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது. மேஜர் பிராங்க் ஸ்மித் நிறுவனத்தின் மொத்தக் கட்டுப்பாட்டையும் தனக்குக் கீழ் கொண்டு வந்தார்.


அதே ஆண்டு புதிய மாடல் Z 'Cycar' விற்பனைக்கு வந்தது. பயணிகளை இலக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருந்த இந்த மாடல் பைக்குகளில் 148சிசி எஞ்சின், 2-ஸ்ட்ரோக் வகை,  முழுமையாக மூடப்பட்ட என்ஜின் மற்றும் கால்களை பாதுகாக்கும் வகையில் கவர்கள் கொண்டிருந்தது. இது வாகனத்தை ஓட்டுபவருக்கு ஏற்படும் மோசமான விபத்துகளில் இருந்து பாதுகாப்பதாக இருந்தது. 


1936-ம் ஆண்டு 500சிசி புல்லட் மாடல் ஜேஎஃப் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தில் ஒரு ஸ்போர்ட்ஸ் மாடலாக வெளிவந்தது. சிறப்பு தேவைகளை கருத்தில் கொண்டு இவை அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் 4 சிலிண்டர்களை கொண்ட இன்ஜின் தலை இருந்தது. இன்ஜினின் வால்வுகள் வெண்கல உலோகத்தால் செய்யப்பட்டன. 


1936-ம் ஆண்டு முதல் 1945 வரையிலான காலகட்டத்தில், இரண்டாம் உலகப்போர் தொடங்கியிருந்த நேரத்தில் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனம், அதிக அளவில் இராணுவத்திற்கு தேவைப்படும் மோட்டார் சைக்கிள்களையும், மிதிவண்டிகள், ஜெனரேட்டர்கள் மற்றும் விமானத் துப்பாக்கிகளையும், மோட்டார் சைக்கிளில் வைத்து இயக்கும் துப்பாக்கிகளையும் உற்பத்தி செய்தது. இந்த நிறுவனம் இராணுவத்திற்கு என்று பிரத்தியேகமாக உருவாக்கிய ஃப்ளையிங் பிளே ( Flying Play) என அழைக்கப்படும் 125சிசி 'ஏர்போர்ன்' ( Air Borne) மோட்டார் சைக்கிள் மிகவும் பிரபலமான மாடல் ஆகும். இந்த வகை 125 சிசி 2-ஸ்ட்ரோக் மோட்டார் சைக்கிள்களை பாராசூட் மூலமாக வீரர்களுடன் சேர்ந்து, எதிரிகளின் எல்லைக்கு பின்னால் இறக்கிவிடலாம். இந்த வகை மோட்டார் சைக்கிள்களின் பயன்பாடு ஜப்பானுடனான போரின் போது மியான்மர், மலேசியா, தாய்லாந்து, போன்ற இடங்களில் அதிகமாக பயன்படுத்தப்பட்டது. 


1948-ம் ஆண்டில் உலகப்போருக்குப் பிந்தைய தயாரிப்பாக ராயல் என்பீல்டு நிறுவனம் 350சிசி புல்லட் ப்ரோடோடைப், ரேடிகல் ஆயில் சேர்க்கப்பட்ட, ஸ்விங்கிங் ஆர்ம் ரியர் சஸ்பென்ஷனுடன் கூடிய புல்லட்டை அறிமுகம் செய்தது.  இதே ஆண்டில் பிரிட்டிஷ் கோப்பை உட்பட ISTD எனப்படும் சர்வதேச தர கட்டுப்பாட்டு அமைப்பு நடத்திய சோதனையிலிலும் கலந்து கொண்டு இரண்டு தங்கப்பதக்கங்களை இந்த வகை புல்லட் வென்றது குறிப்பிடத்தக்கது. 


1949-ம் ஆண்டு புதிய 350சிசி புல்லட் மற்றும் 500 ட்வின் மாடல்கள் இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு பைக்குகளுக்கும்  ஒரே ஃப்ரேம், ஸ்விங்கிங் ஆர்ம் சஸ்பென்ஷன், டெலஸ்கோபிக் ஃப்ரண்ட் ஃபோர்க்குகள் மற்றும் கியர் பாக்ஸ் ஆகியவற்றைப்உள்ளடக்கியதாக இருந்தன. ராயல் என்ஃபீல்டு உட்பட பிரிட்டிஷ் மோட்டார் சைக்கிள்களை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்க, மெட்ராஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தை கே.ஆர்.சுந்தரம் ஐயர் ஒப்பந்தம் மேற்கொண்டார். 


1952-ம் ஆண்டில் ராயல் என்பீல்டு நிறுவனத்தை சேர்ந்த மிகச் சிறந்த மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் ஜானி பிரிட்டன், 350cc புல்லட்டில் பந்தயத்தில் கலந்து கொண்டு உலகின் மதிப்புமிக்க ஸ்காட்டிஷ் மோட்டார் சைக்கிள் சோதனை போட்டியில் வெற்றி பெற்றார்.


1952-ம் ஆண்டு மெட்ராஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய அரசிடம் இருந்து, 350சிசி புல்லட்டுகளை இராணுவத்திற்கு சப்ளை செய்யும் ஆர்டரை பெற்றது. சுமார் 500 புல்லட்டுகளை ஆர்டராக பெற்றிருந்த இந்த நிறுவனம் தனது ஆர்டர்களை விநியோகிக்க 1953-ம் ஆண்டு வரை கால அவகாசம் பெற்று இருந்தது. இந்த வகை புல்லட்டுகளை ஏற்கனவே பிரிட்டிஷ் இந்திய இராணுவ வீரர்கள் இரண்டாம் உலகப்போரின் போது, பயன்படுத்தி இருந்த காரணத்தாலும், பராமரிப்பு செலவுகள் மிகவும் குறைவானவை என்பதாலும், இந்திய அரசு இந்த மோட்டார் சைக்கிளை இராணுவத்திற்கு வாங்க தீர்மானித்திருந்தது. குறிப்பிட்ட காலத்தில் அதாவது 1953-ம் ஆண்டின் முற்பகுதியில் ரெடிச்சில் இருந்து 500 ராயல் என்பீல்டு 350CC புல்லட்டுகளை இறக்குமதி செய்திருந்தது. அவை முறைப்படி இந்திய அரசிடம் அதே ஆண்டில் ஒப்படைக்கப்பட்டன. 


1955-ம் ஆண்டில் ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவில் மெட்ராஸ் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 'என்ஃபீல்டு இந்தியா'- வை உருவாக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. மெட்ராஸுக்கு அருகிலுள்ள திருவொற்றியூரில் தொழிற்சாலை கட்டும் பணி தொடங்கியது. 1956-ம் ஆண்டில் திருவொற்றியூரில் கட்டப்பட்ட தொழிற்சாலையில் உற்பத்தி தொடங்கியது. ஆரம்ப கால கட்டத்தில் மூலப் பொருட்கள் இங்கிலாந்தில் இருந்து வரவழைக்கப்பட்டு இந்த தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்பட்டன. 1956-ம் ஆண்டின் இறுதிக்குள் சுமார் 163 புல்லட்டுகளை தயாரித்து விற்பனைக்கு அனுப்பும் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. 


1957-ம் ஆண்டில் இரண்டாவது முறையாக ஸ்காட்டிஷ் போட்டியில் பங்கேற்று ஜானி பிரிட்டன் வெற்றி பெற்றார். 250சிசி க்ரூஸேடர் மாடல் பைக்குகள் பிரிட்டனில் அறிமுகம் செய்யப்பட்டது. 1964-ம் ஆண்டில் பத்திரிக்கையாளர்கள் குழுவினர் பயன்படுத்தி அனுபவத்தை பகிர்வதற்காக ஒரு சிறிய நிகழ்வை ராயல் என்பீல்டு நிறுவனம் உருவாக்கியது. “ஜிடி கஃபே ரேசர்” என்னும் ஆகச்சிறந்த முத்திரை பெற்ற பைக்குகளை உபயோகித்துப் பார்த்து மகிழ்ந்த பத்திரிகையாளர்கள் அதை பயன்படுத்திய போது பெற்ற அனுபவத்தை வானளாவ புகழ்ந்து எழுதினார்கள். இந்த பத்திரிகையாளர்கள் 24 மணிநேரத்தில் 8 சுற்றுகள் வரை இந்த புல்லட்டை பயன்படுத்தி அதை இயக்கிய அனுபவத்தை விரிவாக எழுதியிருந்தனர். 


1967-ம் ஆண்டில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ரெட்டிச் தொழிற்சாலையில் இருந்து இரண்டு மாடல்கள் மட்டுமே அறிமுகப்பபடுத்தப்பட்டன. 250cc கான்டினென்டல் GT மற்றும் 736cc இன்டர்செப்டர் ஆகிய இரண்டு மாடல்களை அறிமுகம் செய்ததோடு ரெடிச்சில் இயங்கிவரும் ஆலையை மூட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. 1970-ம் ஆண்டு ஜூன் மாதம் ரெடிச்சில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த நிறுவனம் நிரந்தரமாக மூடப்பட்டு அதிலிருந்த இயந்திரங்கள், மற்றும் உற்பத்தி குறித்த பிற விஷயங்கள் பல்வேறு நாடுகளிலும் இருந்த அதன் கிளை அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டது.


1977-ம் ஆண்டில் இருந்து என்பீல்டு இந்தியா 350சிசி புல்லட்டை இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியது. ஐரோப்பிய நாடுகளில் இந்த புல்லட்டுகளுக்கு இருந்த வரவேற்பை அடுத்து, ஏற்றுமதி வணிகம் மளமளவென வளர்ந்தது என்றே கூறலாம். 1989 ம் ஆண்டில் புதிய 24 500cc புல்லட் வெளியிடப்பட்டது. ஏற்றுமதி சந்தைகளை இலக்காகக் கொண்டு, இந்த பைக் முதன்மையாக கிளாசிக், டீலக்ஸ் மற்றும் சூப்பர்ஸ்டார் என்னும் பிரிவுகளில் வெளிநாடுகளில் கிடைக்கும் படி விற்கப்பட்டது. 


1993-ம் ஆண்டில் என்ஃபீல்டு இந்தியா உலகின் முதல் மற்றும் ஒரே வெகுஜன உற்பத்தி டீசல் மோட்டார் சைக்கிளை உற்பத்தி செய்தது. என்ஃபீல்டு டீசல் என்று அழைக்கப்படும் இது, நிலையான புல்லட் ரோலிங் சேஸில் நிறுவப்பட்ட அதிக எரிபொருள் திறன் கொண்ட 325சிசி பவர் யூனிட்டைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது என்னும் தகவல்  குறிப்பிடத் தக்கது. 1994-ம் ஆண்டு என்பீல்டு இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான ஆண்டாக இருந்தது. 


வர்த்தக வாகனங்கள் மற்றும் டிராக்டர் உற்பத்தி செய்யும் நிறுவனமான எய்ச்சர் குழுமம், என்ஃபீல்டு இந்தியா லிமிடெட் நிறுவனத்தை கையகப்படுத்தி புதிய முதலீடுகளை செய்தது. எய்ச்சர் இந்தியாவில் 1948 ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு விற்பனை கிளைகளை கொண்டுள்ளதாக இருந்தது. சுமார் நாற்பது ஆண்டுகளாக ராயல் என்பீல்டு என்ற அடையாளத்தை பெற மேற்கொண்ட முயற்சிகள் இந்த ஆண்டு இந்திய நிறுவனமான எய்ச்சருக்கு அந்த அதிஷ்டம் கிடைத்தது. ராயல் என்பீல்டு என்னும் பெயரை பயன்படுத்திக் கொள்ள அனுமதியும் கிடைத்தது. அதைத் தொடர்ந்து ராயல் என்ஃபீல்ட் மோட்டார்ஸ் லிமிடெட் என்று நிறுவனத்திற்கு மறுபெயரிடப்பட்டது. 


இதுவரை நாம் ராயல் என்பீல்டு நிறுவனம் வளர்ந்த வழிகளையும், அதன் பாதையில் சந்தித்த இடர்களையும் குறித்து விரிவாக கேட்டோம். இனி ராயல் என்பீல்டு மோட்டார்ஸ் லிமிடெட் நிறுவனம் குறித்து விரிவாக இரண்டாம் பாகத்தில் கேட்போம். 




இந்த தொடர் பிடிச்சு இருந்தா எங்களை பாலோ பண்ணுங்க… உங்க நண்பர்களுக்கு பகிருங்க… மறக்காம கீழ இந்த அத்தியாயம் பத்தி கமெண்ட் பண்ணுங்க. எங்களோட புது கதைகள் கட்டுரைகளை கீழ இருக்கற லிங்க்-கை கிளிக் பண்ணி இப்பவே வாசியுங்க…. 


https://www.vithaigalpathipagam.com/2026/02/5.html

https://www.vithaigalpathipagam.com/2026/02/2_51.html 

https://www.vithaigalpathipagam.com/2026/02/2_14.html






Comments

Popular posts from this blog

காதலர் தின சிறப்புக் கட்டுரை