காற்று வெளியிடை கண்ணம்மா - அத்தியாயம் 4
முகிலன் வீட்டில் வெடித்த குடும்பப் போராட்டம்!
“அப்பா தேவையில்லை!” – மகள் சொன்ன அதிர்ச்சி வார்த்தை!
ரத்தினம் கொடுத்த கடைசி எச்சரிக்கை!
யார் உண்மையா கவலைப்படுறாங்க? யார் நாடகம் ஆடுறாங்க?
மிருதுளாவின் மறைமுக திட்டம் என்ன?
ஏற்காடு போவது யார்? யாருக்காக?
குடும்பம் உடையும் முன்… உண்மை வெளிவருமா?
காதல், சொத்து, அதிகாரம் – எது முக்கியம்?
Episode முழுக்க மர்மம்… முடிவில் அதிர்ச்சி!
இப்போதே படிக்கவில்லை என்றால் பெரிய Twist மிஸ் ஆகும்!
4. முகிலனின் உறவுகள்
முகிலன் வீட்டின் வரவேற்பறையில் கூடியிருந்த அனைவரையும் நோக்கி மிருதுளா சத்தமாக அதே நேரம், கட்டுப்பாடான மனநிலையில் பேச்சை தொடங்கினாள்.
"மிதுன் உங்க அப்பா பண்ணற stunt எல்லாம் சகிக்க முடியல. இங்க எல்லாரையும் தவிக்க விட்டுட்டு அவரு ஜாலியா கிளம்பி ஏற்காடு போய் இருக்கார். எங்கயோ போகட்டும்! சொல்லிட்டு போயிருக்கலாம் இல்லே. இப்படிதான் அவர் எல்லாத்தையும் செஞ்சு வெச்சுட்டு அமைதியா இருப்பார். நாம ஏதாவது கேட்டா அவருக்கு பொத்துகிட்டு வந்துரும். நீங்க வேணா போய் உங்க பாசக்கார அப்பாவ பாத்து கூட்டிட்டு வாங்க. நானும் என் புள்ளைங்களும் ஏன் அலையணும்?. எங்களுக்கு தான் அவரோட எந்த நல்லது கெட்டதுலயும் பங்கில்லன்னு சொல்லிட்டாரே?" என்று மிருதுளா கோபத்தை வெளிப்படுத்தி பேசினாள்.
மிருதுளா முகிலன் பிரபாவதியின் மருமகள். மிதுனன் அவர்களின் மகன். மிருதுளாவின் வார்த்தைகளுக்கு பம்பரமாக சுழலும் மனநிலை கொண்டவன் மிதுனன். சமீப காலமாக மிருதுளாவின் தூண்டுதல் இந்த வீட்டில் அதிகம் என்றே கூறலாம். மிருதுளாவின் வார்த்தைகளை அப்படியே அங்கீகரித்து மின்மினி பேசத் தொடங்கினாள். மின்மினி முகிலன் தம்பதியினரின் ஒரே செல்ல மகள். மிதுனனின் தங்கை.
"அண்ணா! அண்ணி சொல்லறதுதான் சரி. நீங்க எல்லாரும் போங்க. நாங்க வரல. அவரு வந்தா கூட்டிட்டு வாங்க. இல்லன்னா அவரு அங்கேயே இருக்கட்டும்." என்று முகத்தில் அறைந்தது போல பேசினாள் மின்மினி.
‘மிதுனனுக்கு நிறைய குழப்பம் இருந்தது என்றாலும், தன் அன்பு மனைவியும், பாசக்கார தங்கையும் சொல்வதை ஆமோதிப்பதை அவன் அதிகமாக விரும்பினான் என்றே கூறலாம். என்றாலும் அவனுக்கு வீட்டில் மூத்தவராக இருக்கும் இரத்தினத்தின் பதில் அவசியமாக இருந்தது. இரத்தினத்தை மீறி அவன் எதை செய்தாலும், அவனுக்குத் தோல்வியே உண்டாகும் என்பதை அவன் நன்கு உணர்ந்திருந்தான். வசந்தனின் அப்பாதான் ரத்தினம். முகிலனின் பால்யகால சிநேகிதன். முகிலனும் இரத்தினமும் நகமும் சதையும் என்றால்… அதில் மிகை ஒன்றும் இருக்க முடியாது. தலை குனிந்தபடி அமர்ந்து கொண்டு, யோசனையில் இருந்த இரத்தினத்தை பார்த்து மிதுனன் பேசினான்.
“ஆளாளுக்கு பேசிட்டே இருந்தா எப்படி? மாமா நீங்க என்ன ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறீங்க. உங்க friend-அ பத்தி உங்களுக்குத் தானே நல்லா தெரியும். நாங்க என்ன பண்ணனும். சொல்லுங்க. அவரு அன்னைக்கு என் பொண்டாட்டிய ரொம்ப பேசிட்டார் அது என்ன ரொம்பவும் பாதிச்சுடுச்சு. மின்மினி பாவம்!! என்ன தப்பா கேட்டுட்டா? அவள பெத்த புள்ளையே இல்லன்னு சொல்லிட்டார். இவரு பேசுனத தாங்காம தான் அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு. அம்மா இருந்தவரைக்கும் தான் இந்த வீடு கோவில். இவரால எங்க அம்மாவ இழந்துட்டு நிக்கறோம். எங்க புள்ளைங்க பாட்டிய இழந்து தவிக்கறாங்க”, என்று கொந்தளித்தான் மிதுனன்.
அதற்குள் மிருதுளா முந்திக் கொண்டு பேசினாள். அவளது பேச்சில் எள்ளும் கொள்ளும் வஞ்சனையின்றி வெடித்து சிதறின.
"ஆமா நீங்க யாருகிட்ட ஒபீனியன் கேட்கறீங்க பாருங்க?. ஜாடிக்கு எத்த மூடி இவரு. இவருக்கு தெரியாம எதுவுமே நடந்திருக்க முடியாது. வேலிக்கு ஓணான் சாட்சியாம்! எல்லாமே ட்ராமா” என்று கூறினாள் மிருதுளா. அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த இரத்தினத்தின் மனைவி வரலட்சுமி சட்டென்று தலையை உயர்த்தினாள்.
வரலட்சுமி பிரபாவதியின் நெருங்கிய சினேகிதி. முகிலனுக்கு இரத்தினம் போல, பிரபாவதிக்கு வரலட்சுமி. கடந்த 30 ஆண்டுகளாக இந்த சிநேகமும், அன்பும், குடும்ப உறவும் இவர்களுக்குள் தொடர்கிறது. வரலட்சுமியை எளிதாக எவரும் பேச்சிலும், செயலிலும் வீழ்த்திவிட முடியாது. அவளது முடிவையும், பிடிவாதத்தையும் எதிர்த்து பேசக் கூடிய ஒரே ஆள், முகிலன் மட்டுமே. முகிலன் எதைக் கூறினாலும் வரலட்சுமி எதிர்த்து ஒரு வார்த்தை பேச மாட்டாள். அவளுக்கு முகிலன் மீது இருந்த சகோதர பாசம் அப்படிப்பட்டது. இருவரும் உடன் பிறந்தவர்கள் இல்லை என்றாலும், முகிலனை சொந்த அண்ணனாக வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டவள் வரலட்சுமி.
"மிதுன் உன்னோட பொண்டாட்டி வாய அடக்கி வை. உங்க அளவுல மட்டும் தான் அவ பேசணும். என்னோட புருஷன பத்தி பேச அவளுக்கு எந்த யோக்கியதையும் கிடையாது. நானும் ரொம்ப நேரமா பாத்துட்டு இருக்கேன். நீ என்னடான்னா பொண்டாட்டி பேசறத தப்பே இல்லன்னு சாதிச்சுட்டுட்டு இருக்கே. நடக்க வேண்டியது பத்தி இவர்-கிட்ட ஏன் கேட்கறே?. அதான் உன் பொண்டாட்டி சொல்லிட்டா இல்ல. அப்படியே செய்ய வேண்டியது தானே?”, என்ற வரலட்சுமி ஐம்பது வயதில் இருந்தாள். அவளுக்கு ஐம்பது வயதாகிவிட்டதாக எவராலும் சொல்ல முடியாது. வரலட்சுமியை பார்த்து ஏதோ சொல்ல முயன்ற மிருதுளாவை மின்மினி கையைப் பிடித்து அடக்கினாள்.
“உன் தங்கச்சி என்னடான்னா அப்பா-ன்னு கொஞ்சம் கூட மரியாதை இல்லாம பேசிட்டு இருக்கா. உங்க எல்லாருக்கும் பத்து நிமிஷம் நான் டைம் தரேன். ஒழுங்கா போய் கிளம்புங்க. உனக்கும் உன் தங்கச்சிக்கும் அப்பா வேணாமா இருக்கலாம். உன் பொண்டாடிக்கு மாமனார் வேணான்னு இருக்கலாம். ஆனா எனக்கு என் அண்ணன் வேணும். நீங்க எல்லாரும் வரலன்னாலும் நாங்க போய் அவர கூட்டிட்டு வருவோம். டேய் வசந்த் நீ கிளம்பு. உன் பொண்டாட்டிய என்ன செய்யனும்ன்னு வந்து முடிவு பண்ணிக்கலாம்” என்று வரலட்சுமி கூறிவிட்டு இருக்கையில் இருந்து எழ… மின்மினி பதறிப் போய் ஓடி வந்து வரலட்சுமியின் கையை பிடித்துக் கொண்டு…..
"அத்தே நான் என்ன பண்ணேன்?. எனக்கு வாழ்க்கை உங்க வீட்ல தான். இந்த வீட்ல இல்லே. நீங்க சொல்ற மாதிரி நான் கேட்கறேன். நான் இப்படியே வர்றேன் " என்று தன் பக்கமே கோலை திருப்பி அடித்தாள் மின்மினி. மிருதுளா ஆச்சரியத்தில் வாயைப் பிளந்து கொண்டு நின்றாள். வரலட்சுமி மின்மினியை எரித்து விடுவது போல பார்க்க இரத்தினம் மிதுனனை பார்த்து பேசத் தொடங்கினார்.
"உங்க அப்பா அம்மா செஞ்ச பெரிய தப்பு… நீங்க ரெண்டு பேரும் தான். நீ உன் பொண்டாட்டி புடவைக்கு பின்னாடி ஒளிஞ்சு நிக்கறத பாக்கறப்ப எனக்கு ஒரு சந்தேகம் வருது. நீ எல்லாம் எப்படி ஒரு IAS officer ஆனே? உனக்கெல்லாம் பொறுப்பான பதவி வேற. ஆமா உன்னப் பத்தி CM- கிட்ட சொன்னா என்ன தப்பு?. ஏற்காடு போயிட்டு வந்து செய்யறேன். கொஞ்சம் பொறு " என்று பேசிக் கொண்டே எழுந்த இரத்தினம் வசந்தை பார்த்து போகலாம் என்று சைகை செய்தார்.
இரத்தினம் கூறியதை கேட்டு மிதுனன் உண்மையில் மிரண்டு போயிருந்தான். இரத்தினத்திற்கு இருக்கும் செல்வாக்கை மிதுனன் நன்றாக அறிவான். இரத்தினம் சொன்னதை செய்யக் கூடியவர். அவருக்கு இருக்கும் செல்வாக்குக்கு அவர் நினைத்ததை நிறைவேற்றக் கூடியவர் என்பதோடு, தனக்கு பெரிய இழிவையும் ஏற்படுத்த முடியும் என்பதை உணர்ந்தான். வரலட்சுமி, இரத்தினம், வசந்த், மற்றும் மின்மினி ஆகியோர் வீட்டை விட்டு வெளியே செல்ல மிதுனன் செய்வதறியாது திகைத்து கொண்டு நின்றான்.
மிருதுளா வாசலைப் பார்த்து முகத்தை திருப்பி ஒரு வெட்டு வெட்டி விட்டு, மிதுனனை நோக்கி வந்தாள். வந்தவள் நேராக வந்து மிதுனன் கைகளைப் பிடித்துக் கொண்டு அவனை இலேசாக அணைத்துக் கொண்டு பேசத் துவங்கினாள்.
“அவங்க போனா போகட்டும்ங்க. நாம இங்கயே இருப்போம். தேவை இல்லாத சுமை உங்க அப்பா. நீங்க உங்க வேலைய பாருங்க. இதையெல்லாம் போட்டுக் குழப்பிக்காதீங்க. வேணும்ன்னா உங்கள தைரியப்படுத்த இப்பவே ஒரு ரொமான்டிக் ட்ரீட் தரேன். என்ன ஓகே வா”, என்று கண்ணடித்தாள் மிருதுளா.
மிதுனன் அவளது ட்ரீட்டை வேறு ஒரு சந்தர்ப்பமாக இருந்திருந்தால் உடனே ஏற்றுக் கொண்டிருப்பான். ஆனால் இப்போது அவனுக்கு அந்த ட்ரீட் இனிக்கவில்லை. அவன் மிருதுளாவை ஊடுருவிப் பார்த்து இலேசான காதலுடனும், இயல்பை விட அதிகமான சோகத்துடனும் பேசினான்.
"நீ சொல்லறது எல்லாமே சரி தான் மிருதுளா. ஆனா மின்மினி போகறப்ப நான் போகலன்னா நல்லா இருக்குமா? அப்பா வர்றாரோ இல்லையோ? ஏற்காடு போய் தலைய காட்டிட்டு வந்துருவோம். அந்த இந்திரா இந்நேரம் அங்க போயிருப்பா”, என்று பதிலளித்தான் மிதுனன். இந்திரா என்ற பெயரைக் கேட்டதும், ‘திருடனுக்கு தேள் கொட்டிய உணர்வைப்’ பெற்றாள் மிருதுளா. அவளது முகம் மாறியது.
சிறிது நேரம் அமைதியாக யோசித்த மிருதுளா. இறுதியாக தீர்க்கமான முடிவை எடுத்தாள். அவளுக்கு ‘மற்றவரை வெல்வதைக் காட்டிலும்… இப்போது இந்திராவை வெல்ல வேண்டும்’ என்ற உணர்வே மேலோங்கி நின்றது. மிதுனன் முகத்தை தன் கைகளில் ஏந்திப் பிடித்தபடியே அவள் பேச்சைத் தொடங்கினாள்.
“மிதுன் நாமளும் ஏற்காடு போவோம். இல்லன்னா எல்லா உரிமையையும் இந்திராவுக்கு உங்க அப்பா கொடுத்துடுவார். மின்மினி மாமியார் பேச்ச மீற மாட்டா. அவளுக்கு அந்த அளவுக்கு அறிவு பத்தாது. இந்திராவ உங்க அப்பாகிட்ட நெருங்க விடவே கூடாது. நாம இனி யோசிக்க வேணாம். கிளம்புவோம்” என்றாள் மிருதுளா. மிருதுளாவின் வார்த்தைகளை தலையசைத்து ஆமோதித்தான் மிதுனன். மிருதுளாவின் அணைப்பில் இருந்தவாறே அலைபேசியை எடுத்து வசந்துக்கு அழைத்தான்.
அதே நேரம் சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரினால்ட் ட்ரைபர் கார், வாயுவை விட வேகமாக சென்றுக் கொண்டிருந்தது. காரை இயக்கி கொண்டிருந்த இந்திரா நெருப்பில் உருகும் மெழுகின் மனநிலையில் காணப்பட்டாள். அவளது இதயத்தில் மிருதுளாவின் முகமும், மின்மினியின் முகமும் மாறி மாறி தோன்றி மறைந்தது.



Comments