யுத்த களமும் இரத்த ஆறும் - (Historical Non Fiction Series) அத்தியாயம் 2
ஈரான்–இஸ்ரேல் நட்பு எப்போது பகையாக மாறியது?
1979 இரானிய புரட்சி மத்திய கிழக்கு அரசியலை மாற்றியதா?
எண்ணெய் அரசியல் இந்த போரின் மறைமுக காரணமா?
ஹமாஸ், ஹிஸ்புல்லா உருவாக்கத்தின் பின்னணி என்ன?
அணுஆயுத போட்டி வளைகுடா பதற்றத்தை தூண்டுகிறதா?
மொஸாட் தாக்குதல்கள் ஈரான் முன்னேற்றத்தை தடுத்ததா?
மத்திய கிழக்கு நாடுகள் உலகப்போரின் மையமா?
2. ஈரான் இஸ்ரேல் உறவும் பிரிவும்:
கடந்த அத்தியாயத்தில் ஈரான் இஸ்ரேலை எதிர்க்க தொடங்கியது என்ற இடத்தில் நிறைவு செய்து இருந்தோம். அதே போல சியோனிஸ்டுகள் வேறு, கிருஸ்தவர்கள் வேறு என்பதையும் தெளிவு படுத்தியிருந்தேன். இனி ஈரான் இஸ்ரேல் நட்பும் பிரிவும் குறித்து விரிவாக பேசலாம்.
புவிசார் அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை. நிரந்தர பகைவனும் இல்லை. ஆனால் அதிகாரவெறி, ஆதிக்க மனப்பான்மை, மத இனப் பகை என்னும் கோட்பாடுகள் உயிர்ப்புடனே இருக்கின்றன. அதுவே போருக்கு பாதையிட்டும் கொடுக்கின்றன.
இஸ்ரேல் என்னும் நாடு உருவானது முதல் அது அதிகம் நெருக்கமாக இருந்தது யாருடன் தெரியுமா? வேறு யாருடனும் இல்லை. இன்று கண்மூடித்தனமாக போரிட்டுக் கொள்ளும் ஈரானுடன் தான். ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால் வரலாறு அதைத்தான் சொல்கிறது.
ஷா மொஹமத் ரெசா பஹல்வி ஈரானின் தலைமை பொறுப்பில் இருந்தவரை இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே ஆழமான நட்பு இருந்தது. ஒரு கட்டத்தில் ஈரான் இஸ்ரேலுக்கு இரகசியமாக கச்சா எண்ணெய் சப்ளை செய்ததுடன், இராணுவ உறவில் ஒன்று பட்டு நிற்கும் அளவுக்கு இரு நாடுகளிடையே நட்பு இருந்தது. அதற்கு காரணம் இல்லாமலும் இல்லை. இருவருக்குமே அரபு நாடுகள் கூட்டமைப்பு மீது கடும் அதிருப்தி நிலவியதே அதற்கு பின்னால் இருந்த சூட்சமம் என்பது பலருக்கும் தெரியாத உண்மை.
1979-வரை நீடித்த இந்த உறவு இரானிய புரட்சியால் முடிவுக்கு வந்தது. 1979-ம் ஆண்டில் ஈரானில் புரட்சி மூலமாக ஷா மொஹமத் ரெசா பஹல்வி பதவி பறிக்கப்பட்டது. அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். இரானிய புரட்சிக்கு வித்திட்ட அயத்துல்லா கொமேனி ஈரானின் உயர் தலைவர் பொறுப்பை ஏற்ற மறுநிமிடமே இஸ்ரேலுடனான அனைத்து உறவுகளையும், நட்பையும் முறித்துக் கொள்வதாக அறிவித்தார். இஸ்ரேலை அகற்றுவதே ஈரானின் லட்சியம் என்ற போக்கை அவர் முன்னெடுத்தார்.
அத்துடன் கொமேனி நின்றுவிடவில்லை. ஈரானிய புரட்சிகர விடுதலைப் படை மூலமாக அவர், இஸ்ரேல் எல்லையில் லெபனான் புரட்சிகர படை ஒன்றை ஆதரிக்கவும் தொடங்கினார். ஹிஸ்புல்லா தீவிரவாத படைக்கு பயிற்சி அளிப்பதுடன் ஆயுதங்கள் வழங்குவது, நிதி உதவி தருவது என்று கொமேனி மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல் எதிர்ப்பை ஊக்குவிக்கவும் தொடங்கினார். இஸ்ரேலில் மேற்கு கரையில் முடக்கப்பட்ட பாலத்தீனியர்கள் அதிகம் வசிக்கும் காஸாவில், பாலஸ்தீனிய விடுதலைப்படைக்கு தாராளமாக பண, ஆயுத உதவிகள் கொமேனி மூலம் செய்யப்பட்டது.
ஒரு கட்டத்தில் பாலத்தீனிய விடுதலைப் படையின் தலைவர் யாசர் அராபத் இஸ்ரேலுடன் இணக்கமாக செல்ல, ஒப்பந்தங்களை உருவாக்கியதால் ஆத்திரம் கொண்ட கொமேனி, பாலஸ்தீனிய விடுதலைப் படையை உடைத்து ஹமாஸ் தீவிரவாத அமைப்பாக செயல்படவும் வைத்தார். ஹமாஸ் தீவிரவாத அமைப்பு யாசர் அராபத்தை கொலை செய்யவும் தூண்டினார். ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்புகளை வளர்த்துவிட்டதன் மூலம் இஸ்ரேலுடன் மறைமுகமாக போரை நடத்தி வந்த கொமேனி மீது இஸ்ரேலின் சியோனிஸ்ட் அரசாங்கம் கடும் அதிருப்தி கொண்டது.பகையும் வளர்ந்தது.
இஸ்ரேலுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும், சிரியா, ஜோர்டான், லெபனானில் கொமேனி உருவாக்கிய புரட்சிகர படைகள் இஸ்ரேலை ஒவ்வொரு முறையும் தாக்கிக் கொண்டே இருந்தது என்பது வரலாறு. இதனால் ஆத்திரம் அடைந்த இஸ்ரேல் ஈரானிய அணுசக்தி விஞானிகளை தந்திரமாக தீர்த்துக் கட்டியது. இஸ்ரேலின் மொஸாட் உளவு அமைப்பு இந்த பணியில் ஈடுபட்டது. ஈரான் தன்னை அந்த பிராந்தியத்தில் பலமான அமைப்பாக உருவாக்கிக் கொள்ள, ராணுவ ரீதியாகவும், ஆயுத பலத்தாலும் முன்னேற்றம் அடைய வேண்டிய நிர்பந்தம் உருவானது.
கொமேனி அதை சர்வ சாதாரணமாக கையாண்டு வெற்றியும் கண்டார். ஈராக்கில் சதாம் உசேன் ஆட்சி அகற்றப்பட்ட பின், வளைகுடா நாடுகளுக்கு தலைமைத் தளமாக மாற கொமேனி துடித்தார். இங்குதான் கச்சா எண்ணெய் அரசியல் தொடங்குகிறது.
வளைகுடா நாடுகளான ஏமன் , குவைத், பஹ்ரைன், கத்தார், அரபு அமீரகம், லிபியா, என்று அனைத்திலும் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயை கட்டுப்படுத்தும் அதிகார மையமாக மாறவேண்டும் என்பதே கொமேனியின் விருப்பமாக இருந்தது. ஆனால் குவைத், அரபு அமீரகம், கத்தார் போன்ற நாடுகள் அமெரிக்காவுடன் கைகோர்த்தது கொமேனி கண்சிவக்க காரணமாக மாறியது.
ஈரானில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயில், பாதிக்கும் மேல் ராணுவத்துக்கும், ஆயுத உற்பத்திக்கும் செலவழிக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனிடையே இஸ்ரேல் அணுஆயுதங்களை தயாரித்து இருப்பு வைக்கத் தொடங்கியதை அறிந்த கொமேனி, தங்கள் நாட்டிலும் அணுஆயுதம் தயாரிக்க தேவையான சாத்தியங்களை உருவாக்க உத்தரவிட்டார்.
மொஸாட் மூலம் இதை மோப்பம் பிடித்த இஸ்ரேல், மத்திய கிழக்கு நாடுகளிலும், வளைகுடா பிராந்தியத்திலும் தன்னை விட வலிமையான நாடு இருக்கக் கூடாது என்பதில் முனைப்பு காட்டியது. அமெரிக்காவுடனான லாபியும், நெருக்கமும் அதற்கு உதவ… ஈரான் அணுஆயுதம் தயாரிக்கும் பணி மந்தமானது. இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி விஞ்ஞானிகளை கொல்வது, சைபர் தாக்குதல் நிகழ்த்துவது என்று ஈரானுக்கு பெரும் குடைச்சல்களை கொடுக்கத் தொடங்கியது.
2015-ம் ஆண்டில் ஈரான் அணுஆயுத ஒப்பந்தத்தில் அமெரிக்காவுடன் கையெழுத்திட்டது. ஆனால் இஸ்ரேல் இதை ஏற்க மறுத்தது. ஈரான் ரகசியமாக யுரேனியம் செறிவூட்டும் நிலையங்களை வைத்திருப்பதாக இஸ்ரேல் அமெரிக்காவிடம் குற்றம் சாட்டியது. மூன்று ஆண்டுகள் ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் இணைந்திருந்த அமெரிக்கா, 2018-ம் ஆண்டில் அதிலிருந்து வெளியேறியது. அப்போது அமெரிக்க அதிபராக இருந்தவர் டொனால்ட் டிரம்ப் தான்.
இஸ்ரேலை அவர் அங்கீகரித்து தூதரக உறவுகளை தொடங்கிய சில ஆண்டுகளில் இஸ்ரேல் ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக மீண்டும் குற்றம் சாட்டவே… நிலைமை மறைமுக போரில் இருந்து நேரடி போருக்கு வழிவகை செய்யத் தொடங்கியது. சிரியா மற்றும், லெபனானில் இருக்கும் தீவிரவாத அமைப்புகள் அடிக்கடி தாக்குதல் நடத்துவதை விரும்பாத இஸ்ரேல் அவற்றை முற்றிலுமாக அகற்ற தீவிரம் காட்டியது.
2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஹபிபுல்லா, ஹமாஸ், மற்றும் மிலீதியாஸ், ஹவுதி தீவிரவாத அமைப்புகளுக்கு ஈரானிய உயர் தலைவர் கொமேனி ஒரு உத்தரவை அனுப்புகிறார்.
“இஸ்ரேலை சகல திசைகளிலும் இருந்து தாக்கி கதிகலங்க வைக்க வேண்டும்” இதுதான் உத்தரவு. இஸ்ரேலியர்கள் பூரிம் பண்டிகை கொண்டாட்டத்தில் நோன்பிருந்த நேரத்தில்…. வேறு எந்த வேலைகளையும் செய்யமாட்டார்கள். பூரிம் பண்டிகை நோன்பில் அவர்கள் உறங்கி கொண்டிருந்த அதிகாலை நேரத்தில்…. இஸ்ரேலை நோக்கி சரமாரியாக ஏவுகணைகளை செலுத்தினார்கள்
இஸ்ரேல் எதிர்ப்பாளர்கள். குறிப்பாக ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் ஆகியவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்த, அவர்களுக்கு உதவும் பொருட்டு ஹபிபுல்லா, ஹவுதி தீவிரவாதிகள் மற்றொரு புறமிருந்து தாக்கத் தொடங்கினார்கள்.
ஜெருசலம், டெல்-அவிவ் உள்ளிட்ட நகரங்களில் ஓயாமல் சைரன் ஒலிக்கத் தொடங்கியது. அடுத்தடுத்து ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி பாய்ந்து வரலாயின. ஏவுகணை எதிர்ப்பு வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் இஸ்ரேல் அவற்றை நிர்மூலமாக்கினாலும், சேதம் அதிகமாகவே இருந்தது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் காசாவிலும், சிரியாவுக்குள்ளும், ஏமன், லெபனான் நாடுகளில் இருக்கும் தீவிரவாத அமைப்பினரின் இலக்குகளை குறிவைத்தும் தாக்குதலை தீவிரமாக்கிடவே பதட்டம் அதிகமானது.
டெமாக்கஸ் நகரில் இயங்கி வந்த ஈரானிய தூதரகத்தை கடுமையாக தாக்கிய இஸ்ரேல், அங்கே பதுங்கி இருந்த ஈரானிய புரட்சிகர படையின் தலைவர் மொஹமத் ரெசா சாகிதியை கொன்றது. இதனால் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நேரடி யுத்தம் தொடங்கியது. கொமேனி கொதித்தார். 2024-ம் ஆண்டு ஏப்ரல் 13-14ம் நாளில் டெஹ்ரானில் பேசிய ஈரான் தலைவர், “இஸ்ரேல் மன்னிக்க முடியாத குற்றம் செய்துள்ளதாகவும், அதற்கு இனி அழிவு நிச்சயம்” என்றும் நேரடியாக அறிவித்தார்.
அன்றிரவே இஸ்ரேலை நோக்கி ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் தொடுக்கப்பட்டது. இதுவே ஈரான் இஸ்ரேல் மீது நடத்திய முதல் மற்றும் நேரடி தாக்குதல். பாலிஸ்டிக் ஏவுகணைகள் இருநூறுக்கும் மேல் இஸ்ரேலை தாக்கின. இதன் மூலம் ஈரான் உலகத்திற்கு மிக முக்கிய செய்தியை அறிவித்தது.
ஈரானின் ஏவுகணைகள், மற்றும் ட்ரோன்கள் ஈரானில் இருந்து ஈராக், ஜோர்டான் நாடுகளைக் கடந்து சுமார் 2349 கிலோ மீட்டர்கள் பயணித்து வந்து இலக்குகளை துல்லியமாக தாக்கின. இதன் மூலம் வளைகுடா நாடுகளில் இருக்கும் எந்த நாட்டையும், நவீன உயர் தொழில்நுட்ப ஆயுதங்கள் மூலம் தாக்கி அழிக்கும் வல்லமை தன்னிடம் இருப்பதாக ஈரான் சொல்லாமல் சொல்லியது. முதலில் அசட்டையாக இருந்த இஸ்ரேல் ஈரானின் தாக்குதலால் நிலைகுலைந்து போனது.
சில மாதங்கள் மோதல் நிறுத்தப்பட்டது. என்றாலும் இஸ்ரேல் அமைதியாக இருக்கவில்லை. சிரியாவில் இயங்கும் தீவிரவாத அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியது. ஹபிபுல்லா தீவிரவாதிகளை குறிவைத்து ஏவுகணைகளை வீசியது. ஹமாஸ் தீவிரவாதிகளை ஒடுக்கும் விதமாக காசாவில் தொடந்து தாக்குதலை நடத்திய இஸ்ரேல் ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீனிய பொதுமக்களை கொன்று குவித்தது. உலகமே எதிர்த்தாலும் இஸ்ரேல் தன் தாக்குதலை நிறுத்தவில்லை.
இதற்கு பதில் தரும் விதமாக ஈரான் மீண்டும் 2024-ம் ஆண்டு செப்டம்பர் 1ம் நாள் மீண்டும் 200 நவீன பாலிஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது செலுத்தியது. முன்னர் வீசப்பட்ட ஏவுகணைகளை விட இவை வேகம் அதிகமாகவும், இலக்குகளில் சரியாக சென்று தாக்கும் உத்வேகமும் கொண்டிருந்ததை பார்த்து உலகமே வியப்பில் ஆழ்ந்தது.
பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று வற்புறுத்தியது. கொமேனி அதற்கு உடன்படவில்லை. அமெரிக்காவின் நிர்பந்தம் அதிகரித்தது. ஈரானில் சோதனையிட அனுமதிக்கவேண்டும் என்று ஐ.நா சபையில் அமெரிக்கா வாதிட்டது.
ஈரான் மவுனம் காத்ததால் இஸ்ரேல் கோபம் கொண்டு, ஈரானின் மீது போர் தொடுத்தது. இஸ்ரேல் போர் விமானங்கள் ஈரான் தலைநகரில் குண்டுமழை பொழிந்தன. ஈரானிய விஞ்ஞானிகள், ராணுவ உயர் அதிகாரிகள், கிடங்குகள், அணுசக்தி மையங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடந்தது. இதையடுத்து ஈரானும் தன் ஏவுகணைகளை ஏவி இஸ்ரேலை தாக்கியது. ஈரானுக்கு உதவும் பொருட்டு, ஹவுதி, ஹபிபுல்லா தீவிரவாதிகளும் தாக்குதல் நடத்தினார்கள்.
இஸ்ரேல் பற்றி எரியத் தொடங்கிய நேரத்தில்… ஈரானின் தலைநகர் டெஹ்ரானும் இஸ்ரேல் தாக்குதலால் தீவிரமாக சேதம் அடைந்தது.13 நாள் நிகழ்ந்த இந்த போர் அமெரிக்கா மற்றும் கத்தார் தலையீட்டால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆனால் 2025-ம் ஆண்டின் தொடக்கத்தில் பிப்ரவரி 28-ம் தேதி இந்த யுத்தம் பெரும் போருக்கு விதை மட்டும் விதைக்கவில்லை. மரத்தையே வளர்த்து இருக்கிறது.
நட்பு பகையாக மாறிய கதையில்… நீயா நானா என்ற போட்டியே நிலவுகிறது. ஈரானின் மதவாத அரசியலுக்கும், இஸ்ரேலின் சியோனிஸ்ட் அரசியலுக்கும் இடையே இருப்பது ஒன்றே ஒன்றுதான். யார் இந்த பிராந்தியத்தில் பலமானவன்? ஒன்று நீ இருக்க வேண்டும்! அல்லது நானிருக்க வேண்டும்! இதை நோக்கியே இந்த போர் தொடங்கியிருக்கிறது.
உண்மையில் இங்கே நிகழ்வது அதிகார போட்டியா? இல்லை ஆணவ போட்டியா? பாம்பின் தலையை வெட்டிவிட்டோம்! இனி பகை வளராது என்று சொல்லி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறாரே இவர்? என்றால் கொலையால் பகை முடியுமா? ஐரோப்பாவை மையமாக வைத்து நிகழ்ந்த இரண்டு உலகப்போர்கள் போல அல்லாமல் இம்முறை போரின் கண் மத்திய கிழக்கு நாடுகளில் அமையுமா? அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறேன்.
இந்தக் கட்டுரை குறித்த உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே கமெண்டில் வந்து சொல்லுங்கள். இந்த கட்டுரை பிடித்து இருந்தால் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் பகிருங்கள். இது போன்ற வரலாற்று தகவல்களை விளக்கமாக தெரிந்து கொள்ள எங்கள் பதிப்பக இணையதளத்தை இப்போதே பாலோ செய்யுங்கள்.
எங்கள் புதிய கட்டுரைகள், கதைகளை படிக்க கீழே இருக்கும் லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
https://www.vithaigalpathipagam.com/2026/02/part-1_28.html
https://www.vithaigalpathipagam.com/2026/02/part-1.html
Comments