இயந்திர குதிரை - அறிவியல் மற்றும் தகவல் சார்ந்த கட்டுரை - அத்தியாயம் 2
“இங்கிலாந்தில் பிறந்த புல்லட்… திருவொற்றியூரில் இந்திய அடையாளம் பெற்ற கதை தெரியுமா?”
“‘ஆயில் என்பீல்டு’ என்று கிண்டல் செய்யப்பட்ட புல்லட்… மீண்டும் எப்படி உயிர் பெற்றது?”
“ஜப்பான் மைலேஜ் பைக்குகளின் போட்டியில் ராயல் என்பீல்டு எப்படி தப்பித்தது?
இயந்திர குதிரை
2. மெட்ராஸ் மோட்டார்ஸ் முதல் எய்ச்சர் மோட்டார்ஸ் வரை:
கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த கே.ஆர்.சுந்தரம் ஐயர் (கே.ஆர்.எஸ்) மற்றும் அவரது மருமகன் கே.ஈஸ்வரன் ஆகியோர் சைக்கிள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தனர். மெட்ராஸ் பிராட்வேயில் இவர்கள் மிகச் சிறந்த சைக்கிள் பிராண்டுகளான ராலே, ரட்ஜ், ஹம்பர், பிஎஸ்ஏ, ஹெர்குலிஸ், பிலிப்ஸ் ஆகியவற்றை விற்பனை செய்து வந்தனர். 3.5 எச்.பி திறன் கொண்ட புல்லட் வண்டிகள் அதன் டப..டப,, சத்திற்கும் அதன் இன்ஜின் சக்திக்கும் பெயர் போனவை. இத்தகைய வாகனத்தை இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் இறக்குமதி செய்தால் என்ன? என்ற கே.ஆர். சுந்தரம் ஐயரின் யோசனையை உடனடியாக ஏற்று செயல் படுத்த அவரது மருமகன் கே,ஈஸ்வரன் ஏற்பாடுகளை செய்தார்.
இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட இந்த ராயல் என்பீல்டு புல்லட்டுகளை இந்தியாவிற்கு இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகளை இருவரும் மேற்கொண்டனர். அதற்காக அவர்கள் மெட்ராஸ் அருகே திருவொற்றியூரில் மிகப்பெரிய இடத்தை தேர்வு செய்து விலைக்கும் வாங்கினார்கள். இவர்கள் இருவரும் இங்கிலாந்தை சேர்ந்த ராயல் என்பீல்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டு விநியோக உரிமையை பெற்றனர். ஒப்பந்தப்படி திருவொற்றியூரில் இருக்கும் இடத்தில் ஒரு பெரிய தொழிற்சாலை உருவாக்கப்பட்டது. அந்த தொழிற்சாலைக்கு என்பீல்டு இந்தியா லிமிடெட் என்று பெயர் வைக்கப்பட்டது. அந்த தொழிற்சாலைக்கு ஒப்பந்தப்படி ராயல் என்பீல்டு நிறுவனம் மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்களை தனித்தனியே தயாரித்து அனுப்பி வைக்கும். பெறப்பட்ட மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்கள் திருவொற்றியூரில் ஒன்றிணைக்கப்பட்டு கடைகளுக்கு விற்பனைக்கு செல்லும் வகையில் ஏற்பாடுகள் நடந்தேறின.
இந்திய அரசாங்கம் பாகிஸ்தானுடனான போரின் போது மெட்ராஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தை அணுகி பிரிட்டனில் அறிமுகம் செய்திருந்த 350 சிசி ராயல் என்பீல்டு புல்லட் மாடல் பைக்குகளை இந்திய ராணுவத்திற்கு சப்ளை செய்யும் உரிமையை கொடுத்தது. சுமார் 500 பைக்குகள் முதல் கட்டமாக இராணுவத்திற்கும் பின்னர் காவல் துறைக்கும் என்று வரிசையாக வாங்கப்பட்டது.
இந்திய இராணுவம் அதுவரை எல்லையில் கண்காணிப்புப் பணிகளுக்காக டிரான்ஸ் மற்றும் பி.எஸ்.ஏ- வின் பைக்குகளைப் பயன்படுத்தி வந்தது.அந்த ரக பைக்குகளில் அடிக்கடி தகறாறு ஏற்பட்டது.
எனவே புதிய பைக்குகள் வாங்கும் நிலையில் இந்திய ராணுவம் என்ஃபீல்டைத் தேர்ந்தெடுத்தது. அதுவரை இந்திய ராணுவம் பயன்படுத்தி வந்த பைக்குகளைவிட மிகவும் சிறந்தது புல்லட் என்று ராணுவத்திற்கு தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அதிகமான புல்லட் மோட்டார் சைக்கிள்களை வாங்க ஆர்வம் காட்டியது ராணுவம்.
இதனிடையே மெட்ராஸ் மோட்டார்ஸ் நிறுவனம் துணை நிறுவனமான ஈசன் இன்ஜினியரிங் நிறுவனத்தை நிறுவினர், அது மின் பரிமாற்ற சாதனங்களில் கவனம் செலுத்தியது. காலப் போக்கில் கே.ஆர்.சுந்தரம் ஐயர் மற்றும் அவரது மகன்கள் என்பீல்டு இந்தியா லிமிடெட் நிறுவனத்தை முழுமையாக கவனிக்கும் பொறுப்பை ஏற்றனர். கே.ஈஸ்வரனும் அவரது குடும்பத்தாரும் ஈசன் இன்ஜினியரிங் நிறுவனத்தை பொறுப்பேற்று நடத்தத் துவங்கினர்.
திருவொற்றியூரில் முதல் தனியார் தொழில்பேட்டையை அமைத்தார் கே.ஆர்,சுந்தரம் ஐயர். என்பீல்டு இந்தியா லிமிட்டெடுக்கு தேவையான உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் பொருட்டு இவை துவங்கப்பட்டது. முதலில் கே.ஆர்,சுந்தரம் ஐயரின் மூத்த மகன் S. சங்கரன் நிர்வாகப் பொறுப்பை கவனித்தார். பிறகு பின்னர், அவரது இளைய மகன் S. விஸ்வநாதன், நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். KRS இன் இரண்டாவது மகன் S. R. சுப்ரமணியன் மெட்ராஸ் மோட்டார்ஸ் நிறுவனத்திற்குத் தலைமை தாங்கினார். என்பீல்டு இந்தியா நிறுவனம் நம்பகத்தன்மையுள்ள இந்த எந்திர குதிரையால் வேகமாக வளர்ச்சி அடைந்தது. உள்நாட்டு விற்பனை தவிர பின்னாளில் வெளிநாடுகளுக்கும் புல்லட்டுகளை ஏற்றுமதி செய்ய ஆர்டர்களை பெற்றது என்பீல்டு இந்தியா நிறுவனம். 1970 களில் இங்கிலாந்தில் இந்த நிறுவனத்தின் தலைமை உற்பத்தி ஆலை மூடப்பட்டாலும், இந்தியாவில் தொடங்கப்பட்ட என்பீல்டு இந்தியா நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டு வந்ததுடன், 1977 என்ஃபீல்டு இந்தியா 350சிசி புல்லட்டுகளை ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியது.
1970 களில் என்பீல்டு இந்தியா நிறுவனத்தை தனது கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்ட விஸ்வநாதன், வணிகத்தை விரிவாக்கம் செய்வதில் இறங்கினார், தென் தமிழகத்தில் ஒரு பெரிய நிறுவனத்தில் முதலீடு செய்தார், ராணிப்பேட்டையில் உற்பத்தி வசதிகளை உருவாக்கினார், ஆனால் 1973-ம் ஆண்டுக்குப் பிறகு, பெட்ரோல் விலை உயர்ந்து, புல்லட்டின் குறைந்த எரிபொருள் திறன் காரணமாக, வெளிச்சந்தையில் என்பீல்டு புல்லட்டுக்கான மவுசு இலேசாக குறையத் தொடங்கியது. பாதுகாப்பு மற்றும் காவல்துறை ஆர்டர்களுக்கு சப்ளை செய்தது தவிர இந்திய சந்தையில் புதிய வரவுகளாக இருந்த ஜாவா மற்றும் எஸ்கார்ட்ஸின் எஸ்டி பைக்குகளின் கடுமையான போட்டியால், நிறுவனம் நஷ்டத்தை சந்திக்கத் தொடங்கியது.
ஆனால் 80களின் தொடக்கத்தோடு நிலைமை மாறியது. உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கும் நோக்கத்தில் வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதென்று அரசு தீர்மானித்தபோது, அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள ஜப்பானிய நிறுவனங்கள் குதித்தன. சாதாரண மக்களால் வாங்க முடிந்த விலையும், எரிபொருள் சிக்கனமும் கொண்டுள்ள மோட்டார் சைக்கிள்களை தயாரிக்கும் போட்டிக் காலம் தொடங்கியது. அதுமுதல் என்பீல்டு இந்தியாவின் எதிர்காலமும் கவலைக்குரியதாகவே மாறியது. கடுமையான நிதிச்சுமை, விற்பனை குறைவு என்ற காரணங்கள் வரிசைக் கட்டி நிற்க, ஏற்றுமதி என்ற ஒரே ஆதாயத்தின் மூலம் வந்த வருவாயில், அவற்றை ஈடுகட்டும் நிலைக்கு நிறுவனத்தின் நிலை தள்ளப்பட்டது.
இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் இவ்வளவு நடக்கும்போதும் என்ஃபீல்டு இவற்றையெல்லாம் கவனிக்காமல் தனது பயணத்தை அதேபோல தொடர்ந்தது. ராணுவத்தில் இருந்தும் வசதியானவர்களிடம் இருந்தும் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருந்த ஆர்டர்கள்தான் அதற்குக் காரணம். அதுமட்டுமல்ல அப்போது என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள்களில் தகராறுகள் ஏற்படுவதும் அதிகமிருந்தது. அடிக்கடி ஏற்படும் ஆயில் லீக்கேஜ் மற்றும் என்ஜின் வேலை காரணமாக ராயல் என்ஃபீல்ட் என்பதை ஆயில் என்ஃபீல்டு என்றுகூடக் கிண்டலடித்தார்கள்.சிறந்த வசதிகளையும், நல்ல மைலேஜையும் கொண்டிருந்த மற்ற பைக்குகள் கிடைத்தபோது மக்கள் மொத்தமாக அவற்றை நோக்கிச் சென்றார்கள்.
1987–88 காலக்கட்டத்தில் வரலாற்றில் முதல் முறையாக அந்த நிறுவனம் நஷ்டத்தைச் சந்தித்தது. தொடர்ந்த ஆண்டுகளில் கடன் சுமை கூடவே நிறுவனத்தை விற்றுவிட முயன்றபோதிலும் யாரும் வாங்கத் தயாராகவில்லை. காரணம் இனி அந்த நிறுவனத்தை உயர்த்திக் கொண்டுவர முடியாது என்பதாக இருந்தது. மிகுந்த பொருளாதார நெருக்கடி காரணமாக ஆர்டர் கிடைத்த பைக்குகளைக்கூட சரியாக தயாரித்து வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. அதன் காரணமாக மாதத்திற்கு வெறும் 5000 பைக்குகள் மட்டுமே விற்கும் நிலை உருவானது. அதில் பாதி விற்கப்பட்ட முதல் மாதத்திலேயே ஏதேனும் தகறாறு காரணமாக திரும்பி வந்துகொண்டிருந்தது.
இந்த நிலையில் வணிக வாகனங்களையும், டிராக்டர்களையும் தயாரித்து வந்த எய்ச்சர் நிறுவனம் திரு.விஸ்வநாதனின் பங்குகளை வாங்கி என்பீல்டு இந்தியாவில் முதலீடு செய்ய முன்வந்தது. அதன்படி 1990-ம் ஆண்டு தொடங்கிய நிர்வாக பரிமாற்ற முறைகள் 1993-ம் ஆண்டு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, எய்ச்சர் நிறுவனம் என்பீல்டு இந்தியா நிறுவனத்தை கையகப்படுத்தியது. அத்துடன் பேட்டர்ன் தொடர்பான பிரச்சனைகளால் ராயல் என்பீல்டு என்ற பெயரை பயன்படுத்த முடியாத நிலை முடிவுக்கு வந்து, எய்ச்சர் நிறுவனம் என்பீல்டு இந்தியா என்னும் பெயரை ராயல் என்பீல்டு என்று மாற்றி அமைத்தது. இதன் மூலம் இங்கிலாந்தில் பிறந்த இந்த எந்திர குதிரை இனி இந்திய குதிரையாக முழு அங்கீகாரத்துடன் பயணிக்க வழிவகை ஏற்பட்டது.
என்ஃபீல்டை நஷ்டத்தில் இருந்து கரையேற்றும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போது மிடில் வெய்ட் பிரிவில் மோட்டார் சைக்கிள்கள் மட்டுமே என்ஃபீல்ட் தயாரித்து வருகிறது என்பதை நாமறிவோம். ஆனால் அப்போது என்ஃபீல்டின் மற்ற மூன்று தயாரிப்புகளும் உண்டாகி இருந்தன. அவற்றில் மக்களிடம் வரவேற்புள்ள மாடல்களைத் தவிர்த்து மற்றவற்றின் உற்பத்தியை கட்டம் கட்டமாக நிறுத்துவதாக இருந்தது புதிய நிர்வாகத்தின் திட்டம்.
1990-ல் என்பீல்டு இந்தியாவின் 26% பங்குகளை வாங்கிய டெல்லியை சேர்ந்த எய்ச்சர் நிறுவனம் 1993ம் ஆண்டில் 60% பங்குகளை வாங்கியது. இதன் மூலம் எய்ச்சர் கம்பெனியின் கட்டுப்பாட்டில் என்பீல்டு நிறுவனம் சென்றது. முழுமையாக கையகப்படுத்தப்பட்ட என்பீல்டு நிறுவனத்தை ராயல் என்பீல்டு மோட்டார்ஸ் என்று மாற்றியமைத்த பின், இந்தியாவில், சென்னையில் அதன் புதிய உற்பத்தித் தளத்துடன், ராயல் என்ஃபீல்டு அதன் மோட்டார் சைக்கிள்களுக்கான தேவை அதிகரிப்புக்கு எதிராக, அதன் உற்பத்தியை வேகமாக வளர்க்க தொடங்கியது. இதனிடையே சந்தையில் வந்திருந்த பல போட்டி வாகனங்களுக்கு ஈடாக புதிய வடிவ இன்ஜின்கள், எரிபொருள் சிக்கனத்தை கொடுக்கக் கூடிய வகையிலான மாடல்களை உருவாக்குவது என்று பல்வேறு கட்ட பணிகளை மேற்கொள்ளும் பணி அத்தியாவசியமானது.
எய்ச்சர் நிறுவனத்தின் தலைவராக இருந்த விக்ரம் லால், தனது பொறுப்புகளை தன் மகன் சித்தார்த் லாலிடம் ஒப்படைத்துவிட்டு ஓய்வு பெற்ற பின், ராயல் என்பீல்டு மோட்டார்சின் வளர்ச்சி வேகமெடுக்கத் தொடங்கியது. இயல்பிலேயே ராயல் என்பீல்டு புல்லட் மீது தீராத காதல் கொண்டிருந்த சித்தார்த்த லால், அதன் மேம்படுத்துதல், திட்டமிடல், மற்றும் வடிவமைத்தல் ஆகிய பகுதிகளில் அதீத அக்கறை காட்டினார்.
எரிபொருள் சிக்கனம் இல்லை என்ற புல்லட் மீதான குற்றச்சாட்டைக் குறைப்பதற்காக புதிய ஒரு டீசல் எஞ்சினை உருவாக்குவது அடுத்த திட்டமாக இருந்தது. இந்திய மோட்டார் சைக்கிள்களின் வரலாற்றில் முதல்முறையாக டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட மோட்டார் பைக் அறிமுகம் செய்யப்பட்டது. அதோடு பெட்ரோல் என்ஜினிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தி லிட்டருக்கு 30 கிலோமீட்டராக இருந்த மைலேஜை, 40 கிலோ மீட்டராக உயர்த்தப்பட்டது. அதற்கும் மேலாக புதிய ஒரு 500 சிசி பைக், மற்றும்125 சிசி ஃப்யூரியின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பும் எல்லாம் என்ஃபீல்ட் அறிமுகம் செய்தது. வாகனத்திற்கு சர்வீஸ் தரத்தை உயர்த்தும் நோக்கத்தில் நாடு முழுவதுமுள்ள ஏராளமான மெக்கானிக்குகளுக்கு பயிற்சியளிக்கவும் செய்தது என்ஃபீல்டு நிறுவனம்.
இதற்கிடையில் வளிமண்டல மாசுக்கேட்டை கட்டுப்படுத்துவதற்கான புதிய நடைமுறைகளை அறிவித்தது இந்திய அரசு. அப்போது ஆயிலையும் கலந்து பயன்படுத்தும் இருசக்கர வாகனங்களில் முழுமையாக எரிபடாமல் வெளியேறும் ஆயிலின் புகை காற்றில் அதிக மாசுகேட்டை ஏற்படுத்தியது.
அந்த வரிசையில் ராயல் என்பீல்டும் பாதிக்கப்படும் என்று பலரும் நினைத்திருந்த நேரத்தில், ஏற்கனவே 4 ஸ்ட்ரோக் எஞ்சிங்களையே ராயல் என்பீல்ட் பயன்படுத்தி இருந்ததால் அதில் சிறிய அளவிலான மாற்றங்களை ஏற்படுத்தி புதிய கட்டுப்பாட்டை பின்பற்றும் விதத்தில் பயன்படுத்தலாம் என்று கணக்கிட்டது நிறுவனம். அப்படி புதிய எஞ்சினை உருவாக்குவதற்காக ஆஸ்திரேலியாவின் பிரபல ஏவிஎல் நிறுவனத்தை நாடியது ராயல் என்பீல்ட். எஞ்சினின் வடிவமைப்பில் மாற்றங்கள் இல்லாமல் புதிய என்ஜின் உருவாக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. ஏவிஎல் வடிவமைப்புப் பணிகளைத் தொடங்கிய நேரத்தில் ராயல் என்பீல்டில் இருந்த பொறியாளர்களுக்கு மத்தியில், புதிய என்ஜின் பொருத்தப்படுவதால் வாகனத்தின் அடையாளமான அல்லது உயிரோட்டமான அதன் சப்தம் இல்லாமல் போகுமோ என்ற ஒரு குழப்பம் ஏற்பட்டது.
போட்டியாளர்களின் பொறாமைக்கும், இருசக்கர வாகனப் பிரியர்களின் பெருமைக்கும் காரணமான அந்த சப்தம் இல்லாமல் போனால் ராயல் என்பீல்டுக்கு அதன் முக அடையாளமே இல்லாமல் போகும். இந்த விஷயத்தின் தீவிரத்தன்மையை உணர்ந்த ஏ.வி.எல் இதற்கு தீர்வு காணும் முயற்சியைத் தொடங்கியது. அதற்காக என்பீல்டின் அந்த சப்தம் தொடர்பான அளவீடுகள் ஏவிஎல்லிடம் கொடுக்கப்பட்டது.
புதிய எஞ்சினின் சப்தம் ஒரிஜினல் எஞ்சினின் சப்தத்துடன் ஒத்துப்போகும் விதத்தில் உருவாக்குவது என்பதாக் இருந்தது நோக்கம். அதன்படி புதிய எஞ்சினின் சப்தம் பழைய என்ஜினின் சப்தத்தோடு 99.8 சதவிகிதம் அளவு பொருந்தும் வரை முயற்சி தொடர்ந்தது. அதற்காக ஒப்பந்த காலத்தில் இருந்து மூன்று மாதங்கள் அதிகமாக எடுத்துக்கொண்டது ஏவிஎல் நிறுவனம். ஆனாலும் இந்த எஞ்சினில் பழைய எஞ்சினின் கம்பீரம் இல்லை என்று பெரும்பாலானவர்கள் இப்போதும் கருதுகிறார்கள்.
என்பீல்டை மனதில் வைத்துக் கொண்டாடும் அதனைப் பற்றி நன்கு அறிந்த ஒருவரால் மட்டுமே அன்று என்பீல்டை கரை சேர்க்க முடியும் என்ற நிலை இருந்தது. அப்படிப்பட்ட ஒருவராக இருந்தார் சித்தார்த் லால். அவர் விக்ரம் லாலின் மகனாக இருந்தார் என்றாலும், நடைமுறை கார்பரேட் எக்ஸிகியூட்டிவ்களில் இருந்து வேறுபட்டவராக இருந்தார்.
புல்லட்டின் தீவிர ரசிகராக அவரே இருந்த காரணத்தால் புல்லட் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளைப் பற்றி நன்கு அறிந்திருந்தார் அவர். அப்போது வாடிக்கையாளர்கள் அதிகமாக கோரிக்கை வைத்த ஒரு விசயமாக இருந்தது எலக்ட்ரானிக் இக்னிஷன். அவற்றைப் புரிந்துகொண்டு எலக்ட்ரிக் ஸ்டார்டர்கள் பொருத்தி என்பீல்டை விற்பனைக்கு இறக்கியது. அதோடு சித்தார்த்தின் தலைமையிலான ஒரு குழு பெரியளவிலான விளம்பர திட்டத்தை செயல்படுத்தியது.
ராயல் என்பீல்டை அனைவரின் மத்தியிலும் கொண்டு சேர்ப்பதாக இருந்தது அந்த விளம்பரங்களின் நோக்கம். ரயில் வண்டி உட்பட அனைத்து வாகனங்களும் ராயல் என்பீல்ட் வண்டிக்கு வழிவிடும் விதத்திலான அந்த விளம்பரத்தை இப்போதும் சிலராவது நினைவில் வைத்திருப்பார்கள். அன்று எரிபொருள் சிக்கனத்தில் மட்டும் கவனம் செலுத்தி சந்தையைக் கலக்கிக் கொண்டிருந்த ஜப்பானிய நிறுவனங்களுடனான கூட்டு தயாரிப்பு வாகனங்களில் இருந்து வேறுபட்டு, பெர்சனாலிட்டிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நபர்களிடம் பிராண்டைக் கொண்டு சேர்ப்பது என்பதாக இருந்தது அந்த விளம்பரங்களின் நோக்கம்.
இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் நிறுவனத்தை அடுத்த நிலைக்கு வளர்க்க வேண்டுமானால பல விசயங்களில் மாற்றம் ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று சித்தார்த் கருதினார்.அதில் முக்கியமானது புதிய எஞ்சினின் வடிவமாக இருந்தது.
அலுமினியம் உட்படுத்தியுள்ள ஒரு புதிய என்ஜின் மட்டுமே அடிக்கடி ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வாகமுடியும் என்று அவர் நம்பினார். பழைய எஞ்சினை மாற்றி விட்டு புதிய எஞ்சினை பொருத்தினால் ஒருவேளை என்பீல்டின் தனித்தன்மை இல்லாமல் போகலாம் என்று பலரும் தயக்கம் கொண்டிருந்தார்கள் என்றாலும்,அதனை செயல்படுத்துவது என்பதாகவே இருந்தது சித்தார்த்தின் முடிவு.
ஆனால் புல்லட்டின் மொத்தத்தில் உள்ள வடிவமைப்பு, ஹெட் லேம்புகள், ட்ரங்குகள் போன்றவற்றை மாற்றிவிடக் கூடாது என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார். இம்முறையும் புதிய எஞ்சினை வடிவமைக்கும் பொறுப்பு ஏவிஎல்லிடமே ஒப்படைக்கப் பட்டது.
2008ல் அறிமுகம் செய்யப்பட்ட என்பீல்ட் கிளாசிக் மாடலில் இந்த யுசிஇ அல்லது யுனிக் கான்ஸ்ட்ரக்க்ஷன் என்ஜின் பொருத்தி அரங்கேற்றப்பட்டது. 2010 முதல் ராயல் என்பீல்டின் அனைத்து பைக்குகளுக்கும் சக்தி அளிப்பது இந்த எஞ்சின்தான். இம்முறையும் எஞ்சினின் சப்தத்தை முடிந்தவரை தக்கவைக்க ஏவிஎல் முயற்சி செய்தது.
என்ன ஆனாலும் வாகனத்தில் பெருமளவிலான மாற்றங்களைக் கொண்டு வரவும், நிறுவனத்தை வளர்க்கவும் இந்த என்ஜின் உதவிகரமாக அமைந்தது என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. ஆயில் கசிவுகள் இல்லாது போனதாலும் சர்விஸில் இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதாலும், அதிகப்படியானவர்கள் என்பீல்டின் பக்கம் கவரப்பட்டார்கள்,
ஆனால் அப்போதும் போதுமான வாகனங்களை உற்பத்தி செய்ய என்பீல்டால் முடியவில்லை. அதற்கு காரணம் இருந்தது. எஞ்சினும் டிரான்ஸ்மிஷனும் மட்டுமே ராயல் என்பீல்ட் சொந்தமாக தயாரிக்கும் என்று 2001ல் தீர்மானித்திருந்தார் சித்தார்த். வாகனத்தின் உற்பத்திக்குத் தேவையான மற்ற பாகங்கள் போதுமான அளவில் கிடைக்கவில்லை. ஏனெனில் குறிப்பிட்ட நேரத்திற்குள் உதிரி பாகங்களை தயாரித்துக் கொடுக்கும் பொறுப்பை பெற்றிருந்த வெண்டார்கள் அதை முடித்துத் தர முடியாததால் தாமதங்கள் தவிர்க்க முடியாததாக மாறியது.
வித்தியாசமான வடிவமும், அளவில் பெரியதாக உள்ள எரிபொருள் டேங்கும், ஹெட்லைட்டும் எல்லாம் மிகுந்த கவனத்துடன் அதிக நேரம் எடுத்து கைகளால் செய்ய வேண்டி இருந்தது. அப்படி கைகளால் செய்யப்படும் டேங்குகள் பெரும்பாலும் அதன் அடிப்படை அளவீடுகளை நிறைவேற்ற முடிந்திருக்கவில்லை. எனவே பெரும்பாலான டேங்குகள் தரங்களை ஆய்வு செய்யும் போது நிராகரிக்கப்பட்டன. அது உற்பத்தியைக் குறைப்பதோடு செலவும் அதிகரிக்கக் காரணமாக அமைந்தது. இவற்றை எந்திரங்களின் உதவியுடன் தயாரிக்குமாறு வெண்டர்களிடம் கூறியதைத் தொடர்ந்து பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டது.
இந்தக் கட்டுரை குறித்த உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே கமெண்டில் வந்து சொல்லுங்கள். இந்த கட்டுரை பிடித்து இருந்தால் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் பகிருங்கள். இது போன்ற வரலாற்று தகவல்களை விளக்கமாக தெரிந்து கொள்ள எங்கள் பதிப்பக இணையதளத்தை இப்போதே பாலோ செய்யுங்கள்.
ராயல் என்பீல்டு தப்பிக்குமா? புதிய நிர்வாகம் என்ன செய்யப் போகிறது? சித்தார்த் லால் புல்லட்டோடு கரை சேர முடியுமா? விடை அடுத்த அத்தியாயத்தில்…..
எங்கள் புதிய கட்டுரைகள், கதைகளை படிக்க கீழே இருக்கும் லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
https://www.vithaigalpathipagam.com/2026/02/part-1.html
https://www.vithaigalpathipagam.com/2026/02/part-1_28.html

Comments