ஊரும் பேரும் - வரலாற்று தொடர்- (Part- 2)
சென்னை முதல் கன்னியாகுமரி வரை…
தமிழக நகரங்களின் பெயர்களுக்கு பின்னால் இருக்கும் மறைந்திருக்கும் வரலாறு என்ன?
சங்க காலம் முதல் இன்று வரை மருவிய நகரங்களின் உண்மையான பெயர்கள் என்ன?
சென்னை, மதுரை, தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருச்சி… இந்த பெயர்கள் எப்படி வந்தது தெரியுமா?
விவரம் கீழே….
ஊரும் பேரும் - வரலாற்று தொடர்- (Part- 2)
2. நகரங்களின் பெயர்கள் சொல்லும் காரணம் தெரியுமா?
சென்ற அத்தியாயத்தில் தமிழர்கள் ஊர்களின் பெயர்களை எப்படி அமைத்தார்கள் என்றும், அதற்காக அவர்கள் கண்டறிந்த காரணங்கள் குறித்தும் விரிவாக பார்த்தோம். தமிழர்கள் சென்ற இடமெல்லாம், தங்களுடைய பாரம்பரிய நினைவுகளை சுமந்து சென்றார்கள். தமிழகத்தில் இருக்கும் ஊர்களின் பெயர்களை போலவே உலகெங்கும் பல இடங்களிலும் பெயர்கள் இருப்பதை சமீபத்தில் தமிழாய்வாளர்கள் கண்டறிந்து இருக்கிறார்கள். வஞ்சி, கோடு, குறிச்சி, பாளையம், மூதூர் என்ற பெயர்கள் இந்தியாவிலும், இந்திய எல்லை கடந்தும் இருக்கிறது என்பதை அறியும் போது, தமிழர்களின் பெருமை மெய்சிலிர்க்கவே செய்கிறது. சரி இந்த அத்தியாயத்தில், நகரங்களின் பெயர்களை தமிழர்கள் எப்படி அமைத்திருக்கிறார்கள் என்பதை அறிவோம்.
தமிழகதில் பல ஊர்களின் பெயர்கள் காரணப் பெயராகவே இருந்துள்ளது. அது காலப்போக்கில் மாறி, இன்று இருக்கும் வடிவம் எடுத்து இருக்கிறது என்பதே உண்மை. எல்லா ஊர்களின் பெயர்களும் காரணப் பெயராகவே இருந்துள்ளது. சில புராண கதையின் படியும், சங்ககாலத்தில் பெற்ற பெயரின் படியும் சில ஊரின் பெயர்கள் இருக்கிறது. இந்த அத்தியாயத்தில் பிரபலமாக விளங்கும் இன்றைய சில ஊர்களின் பெயர்களை குறித்து விரிவாக விவரிக்கிறேன்.
சென்னை:
சங்க காலத்தில் பெண்ணாற்றிற்கும், பொன்னையாற்றுக்கும் நடுவே உள்ள தொண்டை மண்டலத்தில் தான் இப்போதுள்ள சென்னை இருக்கிறது. சோழர் காலத்தில் புலியூர் கோட்டம் என்று அழைக்கப்பட்டுள்ளது. பின்னாளில் புனித ஜார்ஜ் கோட்டையை கட்ட ஆங்கிலேயர்கள் 1639-ல் தர்மாலா சென்னப்ப நாயக்கரிடம் கடற்கரை ஒட்டிய 3 மைல் இடத்தை வாங்கி, இவ்விடத்திற்கு சென்னப்பட்டினம் என பெயர் சூட்டினார்கள்.
கடலோரத்தில் வாழ்ந்த 'மதராசன்' என்ற மீனவ தலைவனின் பெயரால் மதராஸ்/ மதராசபட்டினம் என்று அழைக்கபட்டது.
போர்த்துக்கீசிய வணிகன் மெட்ரா (Madra) என்பவரின் பெயராலேயே மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது.
செங்கல்பட்டு:
முன்பு இங்குள்ள நீர்நிலைகளில், செங்கழுநீர்ப் பூக்கள் நிறைந்திருந்தன என்பர். எனவே, செங்கழுநீர்ப்பட்டு என்றழைக்கப்பட்டது. அது மருவி செங்கல்பட்டு என அழைக்கப்படலாயிற்று.
பொள்ளாச்சி:
'பொருள் ஆட்சி' என்றும் 'பொழில்வாய்ச்சி' என்று அழைக்கப்பட்ட ஊர் காலப்போக்கில் மருவி பொள்ளாச்சி என்று தற்பொழுது அழைக்கப்படுகிறது. சோழர் காலத்தில் இவ்வூர் முடிகொண்ட சோழநல்லூர் என்று அழைக்கப்பட்ட வளமான ஊராகும்.
தூத்துக்குடி:
பாண்டியர்களின் துறைமுகப்பட்டினமாக இருந்த கொற்கை காலப் போக்கில் மெல்ல பொலிவிழந்த பிறகு, காயல் பட்டினம், குலசேகர பட்டினங்கள் துறைமுகங்களாக இருந்து வந்தன.
பின்னாளில் இந்த துறைமுகங்கள் அனைத்துக்கும் மாற்றாக உருவாக்கப்பட்டது தான் தூத்துக்குடி துறைமுகம்.
சோதிக்கரை என்றும் முத்துகுளித்துறை என்றும் அழைக்கப்பட்டுள்ளது. அக்காலத்திலிருந்தே இப்பகுதியில் முத்துக்குளிக்கும் தொழில்முறை இருந்து வந்துள்ளது.
17ஆம் நூற்றாண்டில் ஒரு ஆங்கிலேய அதிகாரி, அவரது அறிக்கையில் தவறுதலாக தோத்துக்குரை என்று பதிவு செய்துள்ளார். அதுதான் பின்னாளில் தூத்துக்குடி என மாறி தற்போது அழைக்கப்படுகிறது.
ஆற்காடு:
இந்த ஊர் காடும் காடு சார்ந்த முல்லை நிலப்பகுதியாகும்.
அத்தி மாலை அணிந்த சோழ மன்னர்களின் ஆண்ட நிலப்பகுதி ஆதலால் ஆற்காடு என்று அழைத்தனர் என்பது ஒரு காரணம்.
ஆல் -ஆலமரம் நிறைந்த பகுதியால் ஆற்காடு என்று அழைத்தனர் என்பது இரண்டாவது காரணம். இதில் இரண்டாவது காரணமே தொன்று தொட்டு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
சேலம்:
சேலம் மலையும் மலைகள் சூழ்ந்த பகுதியும் கொண்ட இடம்.
சேரலம் என்பது சேலம் ஆனது என்பதற்கு ஏத்தாப்பூர் செப்பேட்டில் உள்ள 'சாலிய சேரமண்டலம்' என்றத் தொடரை ஆதாரமாகக் கூறுவர்.
சைலம் என்ற சொல்லுக்கு மலைகள் சூழ்ந்த பகுதி என்று பொருள்.
சேரலம் என்னும் பெயரே காலப்போக்கில் திரிந்து சேலம் என வழங்கப்பட்டது எனக் கூறுவதற்குச் சிறு ஆதாரங்கள் உண்டு.
சேலை நெசவில் பெயர்பெற்று சேலையூர் என்ற பெயர் சேலம் என காலப்போக்கில் மருவியது எனவும் கூறுவர்.
இலக்கண விதிப்படி சேல்+அம் = சேலம் என புணரும். சேல் ஆறும் ஏரிகளும் நிறைந்த பகுதிகளில் மீன்கள் நிறைய கிடைத்ததால் இப்பெயர் பெற்றிருக்கலாம் எனவும் கூறலாம்.
கோயம்புத்தூர்:
பழங்காலத்தில் இப்பகுதி பழங்குடியின வசிப்பிடமாக இருந்துள்ளது.
அவர்களில் மிகுந்த வலிமையான, பெரும்பான்மையினத்தவராக இருந்த கோசர் இன மக்கள், கோசம்புத்துர் என்னும் இடத்தை தலைமையிடமாக கொண்டு வசித்து வந்தனர். இவர்கள் வாழ்ந்த இடமான கோசம்புத்துர் காலப்போக்கில் பெயர் மருவி கோயம்புத்தூர் என்று அழைக்கப்படுகிறது என்பது ஒரு காரணம்.
கொங்கு மண்டலத்தில் படுகர் இனத்தை சேர்ந்த மலைவாழ் தலைவனின் பெயர் கோவன். அவருடைய பெயராலேயே கோவன்புத்தூர் என்று அழைக்கப்பட்டு பிறகு கோயம்புத்தூர் ஆனது என்பது இரண்டாவது காரணம்.
இங்குள்ள கோணியம்மன் கோவிலில் பெயராலேயே இப்பகுதி கோணியம்மன் புத்தூர் என்று அழைக்கப்பட்டு பின்னர் கோயம்புத்தூர் என்று மாறியது என்பது மூன்றாவது காரணம்.
தமிழக அரசு ஆவணங்களில் உள்ள ஆதாரங்களின் படி முதல் காரணமே சரியென நாம் கருத வேண்டும்.
உதகமண்டலம்:
இது மலையும் மலையைச் சார்ந்த பகுதியும் ஆகும்.
இங்கு வாழ்ந்த பழங்குடியின மக்களான தோடர்கள் மொழியில் ஒத்தக்கல்மந்து என்று அழைக்கப்பட்ட இந்த இடம், காலப் போக்கில் நீலகிரி என்றும் அழைக்கப்பட்டது.
நீலமான நிறத்தில் இதன் மலை காணப்பட்டதால் இந்த பெயர் ஏற்பட்டதாகவும் கூறுவார்கள்.
ஆங்கிலேயர்கள் வாயில் ஒத்தக்கல்மந்த் நுழையாத காரணத்தால் அவர்கள் இதை உதகமண்ட் என்று தங்கள் ஆவணங்களில் எழுதி வைத்தனர்.
பின்னாளில் இது ஊட்டி என்று சுருக்கப்பட்டது.
ஏற்காடு:
ஏரியின் அருகில் அமைந்துள்ள காடுகள் நிறைந்த பகுதி என்பதே ஏற்காடு என மருவியது.
முதலில் இதனை ஏரி காடு என்றே அழைத்தனர்.
ஊட்டி ஆங்கிலேயர்களால் கண்டறியப்படுவதற்கு முன்னரே ஆங்கிலேயர்கள் கண்டறிந்த மலைப்பகுதி இது.
சேரர்கள் காலத்தில் அவர்களுடைய ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதி இதுவாகும்.
திருச்சிராப்பள்ளி:
இந்த ஊரில் இருக்கும் மலையில் சமண துறவிகள் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் அங்கிருந்த சிரா என்னும் மலைக் குகைகளில் வாழ்ந்து வந்ததால் சமணத் துறவிகளின் மடம் என்பதை சிரா பள்ளி என்று அழைத்ததாக ஒரு காரணம் கூறப்படுகிறது.
திரிசிரன் என்ற மூன்று தலை கொண்ட அரக்கன் இங்குள்ள மலையில் தவமிருந்து சிவபெருமானின் அருளைப் பெற்றதால் திரிசிரன் புரம் என்பது மருவி திருச்சிராப்பள்ளி ஆனதாக இரண்டாவது காரணம் கூறுகிறது.
சிறிய ஊராக இது இருந்ததால் சிறுத்த பள்ளி என்னும் பெயரில் இருந்து திருச்சிராப்பள்ளி உருவாகியதாக தெலுங்கு அறிஞர் சி.பி.பிரவுன் கூறுகின்றார்.
திருச்சியின் அருகில் இருக்கும் உறையூர் முற்காலச் சோழர்களின் தலைநகராக இருந்துள்ளது.
உறையூரை உறந்தை என்றும், கோழியூர் என்றும் சங்க பாடல்கள் குறிப்பிடுகின்றன.
தஞ்சாவூர்:
தன் +செய்+ஊர் என்பதே தஞ்சாவூர் என்று ஆனது என்பது முதல் காரணம்.
அதாவது காவிரியின் கொடையால் குளிச்சியும், வளமும் பெற்ற நிலம் என்பது இதன் பொருள்.
மஞ்சு ஆர் பொதியில் மலை, தஞ்சை வழுவூர் வீரட்டம் என்று அப்பர் பெருமான் இந்த இடத்தை தன் பாடல்களில் குறிப்பிடுகின்றார்.
தஞ்சை என்பதற்கு "குளிர்ந்த வயல்கள் நிறைந்த பகுதி" என்று பொருள் கூறுவோரும் உண்டு.
தனஞ்சய ஊர் என்பது மருவி தஞ்சாவூர் என்று நிலைபெற்றது என்றும் கூறப்படுகிறது.
எது எப்படி இருப்பினும் பிற்காலச் சோழர்களின் தலைநகராக இருந்து இராஜராஜ சோழனின் தஞ்சை பெருவுடையார் கோவிலை தாங்கி நிற்கும் இந்த மண் அதன் கட்டிட கலையால் மட்டுமே அனைவராலும் அறியப்படுகிறது.
சிதம்பரம்:
பெரும்பற்றப்புலியூர் என்பதே பழைய பெயர்.
அங்கு வியாக்கிரபாதர் என்ற முனிவர் பூசை செய்த இடம். சித் - ஞானம் ; ஆம்பரம் - ஆகாயம். இதனால் தான் இது சிதம்பரம் என்று அழைக்கப்பட்டுள்ளது.
சிற்றம்பலம் என்ற பெயர் தான் பின்னாளில் சிதம்பரம் என்று மருவி போனது என்பார் உண்டு.
தில்லை மரங்கள் நிறைந்த காடுகள் இருந்துள்ளதால் இதற்கு தில்லை அம்பலம் என்ற பெயரும் உண்டு.
சிதம்பரத்தை தில்லைவனம் என்றும் அழைக்கின்றனர்.
மதுரை:
வைகை நதிக்கரையில் மருத மரங்கள் அதிகம் இருந்ததால், மருத துறை என்ற பெயரே மதுரை என்று அழைக்கப்பட்டது என்பார்கள்.
பெரு மதில்களும், அதற்குள் குறு மதில்களும் இருக்கும் நகரம் மதில் நிரை என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் மதுரை என்றானது என்று கூறுவார்கள்.
மதுரை முக்கூடல் என்றும், நான்மாடக்கூடல் என்றும் அழைக்கப்பட்டுள்ளது.
குமரிக்கண்டத்தில் முதல் தமிழ்ச் சங்க காலத்தில் தென்மதுரை என்ற பெயரால் தலைநகராக இருந்த இந்த ஊர், கடைச்சங்க காலத்திலும் பெருமையோடு விளங்கியது.
ஈரோடு:
பெரும்பள்ளம் ஓடை மற்றும் பிச்சைக்காரன் பள்ள ஓடை ஆகிய இரண்டு ஓடைகளுக்கு நடுவே இந்த ஊர் அமைந்திருந்த காரணத்தால் இந்த ஊரை ஈரோடை அதாவது இரண்டு ஓடைகளுக்கு நடுவில் அமைந்த ஊர் என்று தமிழர்கள் அழைத்தார்கள்.
இங்குள்ள கடவுளுக்கு, கபாலீசுவரர் என்ற பெயர். அதைக் குறிப்பிடும் வகையில் ஈர ஓடு என்னும் பெயர் ஏற்பட்டு நாளடைவில் ஈரோடு என்று மாறியதாகவும் கூறுவர்.
கும்பகோணம்:
பக்தி இலக்கியங்களான தேவாரம், திவ்யப்பிரபந்தம் போன்றவற்றில் குடமூக்கு என்றும் குடந்தை என்றும் இந்த ஊர் குறிப்பிடப்படுகிறது.
ரூழிக் காலத்தில் பிரமனின் வேண்டுகோளுக்கிணங்கி, இறைவன் தந்த அமுத கலசம் தங்கிய இடமாதலின் இத்தலம் கும்பகோணம் என்று பெயர் பெற்றது. குரு சிம்மராசியில் நிற்க, சந்திரன் கும்பராசியிலிருக்கும் (மாசிமக) பௌர்ணமி நாளில் தான் மகாமகம் நடைபெறுகிறது. இத்தீர்த்தம் அமுதகும்பம் மீது வழிந்தோடித் தங்கியதால் "அமுதசரோருகம்" என்றும் அழைக்கப்படுகிறது.
இது சோழ நாட்டில் அமைந்த பகுதியாகும்.
தருமபுரி:
சங்க காலத்தில் தகடூர் என்ற பெயரில் அழைக்கப்பட்டது.
தகடூர் என்ற பெயர், இரண்டு தமிழ் சொற்களிலிருந்து உருவானது, "தகடு" அதாவது இரும்பு (இரும்பு தாது) என்று பொருள் மற்றும் "ஊர்" அதாவது "இடம்" என்று இணைந்த பொருள்படும்.
தகடூர் முதலில் சேர அரசின் கீழ் இருந்துள்ளது. பின்னர் பல்லவர்கள் சில காலமும், சோழர்கள் சிலகாலமும் தங்கள் அரசுக்கு உட்பட்ட பகுதியாக இதை வைத்திருந்தார்கள்.
சங்ககாலத்தில் அதியமான் என்னும் அரசன் தகடூரை ஆண்டு வந்தார்.
சேரமான் தகடூர் ஏறிய கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, அதியமானிடமிருந்து இதனைக் கைப்பற்றி ஆண்டிருக்கிறார்.
விருதுநகர்:
பல இராஜ்ஜியங்களை கைப்பற்றி, பல விருதுகளை பெற்ற ஒரு போர்வீரன், இந்த ஊருக்கு வந்து குடியிருப்பாளர்களுக்கு சவால் விடுத்தான். ஒரு குடியிருப்பாளர் அவன் சவாலை ஏற்றுக்கொண்டு, அவ்வீரனோடு போரிட்டு, அவனை கொன்று, அவன் வைத்திருந்த விருதுகளை கைப்பற்றினார்.
இவ்வாறு அவன் பெற்ற விருதுகள் யாவும், அந்த ஊரை சார்ந்த வீரரால் கிடைத்தவை என்பதால் இதனை “விருதுகள் வெட்டி” என்று கூறப்பட்டது. பின்னர் விருதுப்பட்டி என மாறியது.
விருதுவெற்றி, “விருதூர்” மற்றும் “விருதையூர்”, விருதுகெட்டி, விருதுவெட்டி, பரிசுபட்டி, விருதை, விருதையம்பதி, வெயிலுவந்தாள் பட்டிணம் என்றும் இந்த ஊர் அழைக்கப்பட்டிருக்கிறது.
ஒரு காலக்கட்டத்தில் கயிறு திரிக்கும் சலுப்பர்கள் இங்கு வாழ்ந்ததால் சலுப்பப்பட்டி என்றும் அழைக்கப்பட்டுள்ளது.
தெற்கில் இருந்து வணிகம் செய்ய சென்ற மக்களின் தங்கும் இடமாக, பொருட்களை கொள்ளையர்களிடம் இருந்து காக்கும் வியாபார பேட்டையாக அறியப்ப்பட்ட விருதுபட்டி சின்ன கிராமமாக இருந்து "விருதுநகர்' எனும் சிறிய நகரமாக பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் உருவெடுத்தது.
20. கடலூர்:
இவ்வூர் இருக்கும் இடத்தில் கடலாக இருந்ததாலும், பின்பு அந்த கடல்நீர் வற்றி நிலப்பரப்பாக உருவாகியதாலும் இவ்வூருக்கு கடல்+ஊர் கடலூர் என்று பெயர் வந்ததாக கருத்து நிலவுகின்றது.
இவ்வூரில் கடலைப் பயிரை அதிக அளவு விவசாயம் செய்து அதை பல நாடுகளுக்கும் பல ஊர்களுக்கும் கப்பல் வழியாகவும், தரை வழி போக்குவரத்தாகவும் கொண்டு செல்லபட்டதால் இவ்வூருக்கு கடலையூர் என்று அழைக்கபட்டது என்றும் கூறுவார்கள்.
முற்காலத்தில் கடலூர், கூடலூர் என்றும் அழைக்கப்பட்டது.
பெண்ணையாறு, கெடிலம், பரவனாறு ஆகிய மூன்று ஆறுகளும் கூடலாக கூடி கடலில் இணையும் இடம் என்பதால் கூடலூர் என பெயர் பெற்றது என்றும் கூறுவார்கள்.
ஆனால் தமிழ் நிலவமைப்பை வைத்து ஊர்களின் பெயர்களை தீர்மானித்த பண்டைய தமிழர்கள் மூன்று ஆறுகளின் சங்கமத்தை வைத்தும் அவை கடலோடு கலக்கும் நெய்தல் பகுதி என்பதை சுட்டிக்காட்டவும் வாய்த்த கூடலூர் என்ற பெயரே தொன்மையானது என்பதை கவனத்தில் கொள்வோமாக.
21. திருநெல்வேலி:
இப்பகுதி முன்னாளில் வேணு வனம் என்று அழைக்கப்பட்டுள்ளது. வேணு என்பதற்கு மூங்கில் என்று பொருள். மூங்கில் நிறைந்த வனம் என்பதால் இப்பெயரைகொண்டுள்ளது.
புராண கதைகளில் வேதபட்டர் என்ற சிவபக்தர், நெய்வேத்தியத்திற்கு உலர வைத்திருந்த நெல்மணிகளை மழையில் நினைய விடாமல் சிவபெருமான் வேலி போட்டு தடுத்ததால், இவ்விடத்திற்கு நெல்வேலி என்று பெயர் வந்தது. பின்னர் அதனுடன் திரு என்னும் அடைமொழி சேர்க்கப்பட்டு திருநெல்வேலி என்று மருவியது.
22. கன்னியாகுமரி:
தமிழின் ஐந்திணைகளில் நான்கு திணைகள் அதாவது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நான்கு நிலஅமைப்புகள் ஒருங்கமைந்த ஊர் இது.
சங்க காலத்தில் கன்னியாகுமரியின் நிலப்பகுதிகளை ஆய் அரசும் (நாஞ்சில் நாடு), வேணாட்டு அரசும் ஆண்டதற்கான ஆதாரங்கள் தொல்காப்பியத்தில் உள்ளது.
இப்பகுதி மிகுந்த வயல்களை கொண்டுள்ளது. நாஞ்சில் என்பதற்கு வயலை உழ பயன்படும் கலப்பை என்று பொருள் தரும். அதனால் இது நாஞ்சில் நாடு என பெயர் வந்துள்ளது.
புராண கதையின் படி, பார்வதி தேவி குமரி பகவதி என்ற பெயரில் கடலில் இருந்த பாறை மீது அமர்ந்து சிவனை வழிபட்டு வரம் பெற்றதாக சொல்லப்படுகிறது. குமரி பகவதி அம்மன் சிறு பெண்ணாகவும், கன்னிப் பெண்ணாகவும் அருள்பாலிப்பதால் இந்த அம்மனின் பெயராலேயே இவ்வூர் கன்னியாகுமரி என்று பெயர் பெற்றதாக சிலர் கூறுவர்.
இங்கே இதுவரை நாம் பார்த்த ஊர்களில் பலதும் தலைநகர் அந்தஸ்தில் இப்போது இருக்கிறது என்பது சிறப்பு. இது தவிர சிறிய ஊர்கள், நாகர்கள் குறித்த பெயர்க் காரணங்கள் ஆகியவற்றை அடுத்த அத்தியாயத்தில் விரிவாக எழுதுகிறேன்.
இந்தக் கட்டுரை குறித்த உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே கமெண்டில் வந்து சொல்லுங்கள். இந்த கட்டுரை பிடித்து இருந்தால் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் பகிருங்கள். இது போன்ற வரலாற்று தகவல்களை விளக்கமாக தெரிந்து கொள்ள எங்கள் பதிப்பக இணையதளத்தை இப்போதே பாலோ செய்யுங்கள்.
எங்கள் சமீபத்திய கட்டுரைகள், கதைகளை வாசிக்க கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்யுங்கள்….
https://www.vithaigalpathipagam.com/2026/03/part-1.html
https://www.vithaigalpathipagam.com/2026/03/historical-non-fiction-series-part-1.html
https://www.vithaigalpathipagam.com/2026/03/part-2.html

Comments