இயந்திர குதிரை - அறிவியல் மற்றும் தகவல் சார்ந்த கட்டுரை ( PART-3)
📌 Topic Summary:
“30 வயது இளைஞன் எடுத்த ஒரு முடிவு… ராயல் என்பீல்டின் விதியை எப்படி மாற்றியது!”
“மூடப்பட வேண்டிய நிறுவனம்… உலகளாவிய பிராண்டாக மாறியது எப்படி?”
“புல்லட் வெறும் வாகனம் இல்லை அது கலாச்சார அடையாளம் ஆனது எப்போது?”
“ஒரு மனிதன் தனது காதலுக்காக ஒரு பிராண்டை உயிர்ப்பித்த கதை!”
3. சித்தார்த் லாலும் ராயல் என்ஃபீல்ட் மோட்டார்ஸ் லிமிடெட் வளர்ச்சியும் -
ஒரு காதல் கதை
இந்திய தயாரிப்பான ராயல் என்ஃபீல்ட் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் விற்பனையில் சாதனைகளை எளிதாக முறியடித்த மிகப்பெரிய இந்திய மோட்டார் சைக்கிள் நிறுவனங்களில் ஒன்றாகும். ஆனால் 17 ஆண்டுகளுக்கு முன்பு நிலைமை இப்படி இல்லை. இந்த இமாலய வெற்றிக்கு காரணமானவர் 30 வயதில் இந்நிறுவனத்தின் சேர்ந்த ஒரு இளைஞன்.
2001 ஆம் வருடத்தில் நீங்கள் ஒரு ராயல் என்ஃபீல்ட் மோட்டார் சைக்கிளை வாங்க ரூ. 55,000 ஐ செலவழித்திருந்தால், இப்போது உங்களிடம் ஒரு பழைய கரடுமுரடான பைக் தான் இருக்கும். ஆனால், அதே ரூ. 55,000 பணத்தை என்ஃபீல்ட் பைக்குகள் தயாரிக்கும் ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தில் நீங்கள் முதலீடு செய்தால் உங்கள் முதலீட்டின் மதிப்புத் தற்போது ரூ. 3.53 கோடியாக இருக்கும்.
ஒரு முரட்டுத்தனமான பைக்கை வடிவமைத்தது அத்துடன் ஏராளமான மதிப்பில் பங்குதாரர்களை உருவாக்கியது என்ற இரட்டை பெருமைகள் ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சித்தார்த்தா லாலையே சேரும். இந்த அனைத்து புகழும் என்ஃபீல்ட் மீது லால் கொண்டிருக்கும் காதலை அடிப்படையாகக் கொண்டு அவர் எடுத்த மிகப் பெரிய முடிவினாலேயே வந்தது.
2004 ஆம் ஆண்டில் லாலுக்கு அப்போது வெறும் 30 வயதே இருந்தபோது அவர் ஈச்சர் குழுமத்தின் சிஓஓ பொறுப்பை சித்தார்த்தா லால் எடுத்துக் கொண்டார். இந்தக் குழுமம் டிராக்டர்கள், டிரக்குகள், மோட்டார் சைக்கிள்கள், உதிரி பாகங்கள், காலணிகள் மற்றும் ஆடைகள் எனச் சுமார் 15 தொழில்களில் பரவலாக விரிவாக்கம் செய்திருந்தது.
ஆனால் இவற்றில் எதுவும் சந்தையில் முதன்மையானதாக இல்லை. லால் அந்த 13 வியாபாரங்களில் முதலீட்டைக் குறைத்துக் கொண்டு இந்தக் குழுமத்திற்கு உண்மையான லாபத்துடன் சந்தையில் முதன்மை இடத்தைப் பெற்றுத் தரும் என்று அவர் நம்பிய இரண்டு தொழில்களான ராயல் என்ஃபீல்ட் மற்றும் டிரக்குகள் மீது முழுக் கவனத்தைச் செலுத்தி அனைத்து பணத்தையும் அதில் முதலீடு செய்தார்.
லால் ராயல் என்ஃபீல்ட் மற்றும் டிரக் வியாபாரத்தில் முழுமையாக ஈடுபடுவதாக முடிவெடுத்தார். பத்தாண்டுகளுக்குப் பிறகு, ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனம் சுமார் ரூ. 8,738 கோடி வருவாயையும் மற்றும் நிகர லாபமாக ரூ. 702 கோடியையும் ஈட்டியது (நிதியாண்டு 2014). இதில் 80% லாபத்தை ராயல் என்ஃபீல்ட் கொடுத்தது.
2005 ஆம் ஆண்டில் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 25,000 பைக்குகளை மட்டுமே விற்று வந்தது. "இது ஒரு அற்புதமான லாபகரமான தொழில் என்பதில் நான் தெளிவாக இருந்தேன்" என்று நினைவுகளில் பின்னோக்கி செல்கிறார் லால். ஆனால் நிறுவனத்திற்கு உற்பத்தி அளவுகள் தேவையாக இருந்தது. நிலையான விலைகள் கிட்டத்தட்ட 100,000 பைக்குகளுக்கு நிர்ணயிக்க வேண்டியிருந்தது.
டிரக்குகளைப் பின்னர்க் கவனித்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டு அவர் முதலில் என்ஃபீல்ட் மீது கவனத்தைச் செலுத்தினார். லால் நூற்றுக்கணக்கான மைல் தூரங்கள் தானே பயணித்து என்ஃபீல்ட் பைக்குகளை வடிவமைத்து மேம்படுத்தினார். மேலும் அவர் தனது அணியில் மோடடார் சைக்கிளில் பயணிக்கும் விளையாட்டான மோட்டார் சைக்கிளிங்கை துவங்கினார். லாலின் தலைமையில் தரம் மேம்படுத்தப்பட்டதால் விற்பனையும் அதிகரித்தது. 2010 ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் மூன்று தளங்களில் 50,000 பைக்குகளை விற்றது.
பொருளாதார அளவுகளை உயர்த்துவதற்காக அனைத்து என்ஃபீல்ட் பைக்குகளையும் ஒரே தளத்தில் கட்டமைக்க லால் முடிவு செய்திருந்த நேரம் அது. இந்த ஒற்றைத் தளத்தில் தொடங்கப்பட்ட ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் வாடிக்கையாளர்களுக்கு ஆடம்பர பைக்குகள் மீதிருந்த ஆவலை கவர்ந்தது. பைக்குகளின் விற்பனை ஐந்து ஆண்டுகளில் நாட்காட்டி ஆண்டு 2010 இல் இருந்த 50,000 யூனிட்டிலிருந்து நாட்காட்டி ஆண்டு 2014 இல் 589,293 யூனிட்டுகளாகி ஆறு மடங்குகள் அதிகரித்தது.
லால் உலகளாவிய நிறுவனங்களிடமிருந்து ஊக்கத்தைப் பெற்றார். அதிகமாக ஆய்வு செய்யப்பட்ட இரண்டு உதாரணங்கள் மினி கூப்பர் மற்றும் போர்ஸ்சி ஆகும். இரண்டுமே டிஎன்ஏ வின் மைய பாகத்தின் அடர்த்தியைக் குறைப்பதில்லை என்பதில் மிகுந்த கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருந்த நிறுவனங்களாகும்.
1990 களில் லால் லண்டன் நகரில் மாணவராக இருந்த போது நடுத்தர மற்றும் பெரிய அளவு கார்களோடு ஒப்பிடும் போது சிறிய ரகக் கார்கள் மிக மோசமாக வடிவமைக்கப்பட்டிருந்தன. பிறகு மினி கார்கள் வந்தது, இது முன்னுதாரணக் கருத்துக்களை மாற்றிச் சிறிய கார்களை ஓட்டுவதற்கு மகிழ்ச்சிகரமானதான மாற்றியது. அதைத் தான் லால் ராயல் என்ஃபீல்டிடம் எதிர்பார்த்தார்.
நடுத்தர எடையுள்ள மோட்டார் சைக்கிள்களை ஓட்டுவதற்கு வசதியாக மாற்ற வேண்டும், அதே சமயம் அதன் டிஎன்ஏ-வையும் தக்க வைக்க வேண்டும், பல்வேறு கட்ட ஆராய்ச்சிகள், உலகளாவிய வல்லுநர்களை பணியமர்த்துதல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு என்று லால் காட்டிய அதிரடிகளால் ராயல் என்பீல்டு எதிர்பார்த்ததை விட எதிர்பாராத வளர்ச்சியை பெற்றது.
உலக மோட்டார்சைக்கிள் வரலாற்றில் தனது நீன்டகால பயணத்தில் எண்ணற்ற ரசிகர்களை கொண்டு விளங்குகின்ற ராயல் என்பீல்டு நிறுவனம் மிகவும் சக்திவாய்ந்த பிராண்டாக விளங்கி வருகின்ற நிலையில் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. இன்றளவும் இந்தியாவில் ராயல் எம்பீல்டு பைக்குகளுக்கு கிராமம் முதல் பெரு நகரம் வரை ரசிகர்கள் இருப்பது தலைமுறை கடந்த உண்மையாக இருக்கிறது.
இதற்கு அதன் பாரம்பரியமாக வடிவமும், சப்தமும் தனித்துவமான வசதிகளும் தான் காரணம் என்றால் அது மிகையாகாது. இதன் தவிர்க்க முடியாத வளர்ச்சிக்கு சித்தார்த்தா லால் ஒரு காரணமாக அமைந்திருக்கிறார் என்பது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய அம்சம்.
2011-ம் ஆண்டில் சென்னை ஓரகடத்தில் இந்த நிறுவனத்தின் இரண்டாவது உற்பத்தி ஆலை தொடங்கப்பட்டது முதல் வளர்ச்சியின் வேகமும் அதிகரித்தது. சுமார் 3 லட்சம் வரை உள்நாட்டில் விற்பனை செய்ய தயாரிக்கப்படும் பைக்குகள், வெளிநாடுகளுக்கென்று ஏற்றுமதி செய்ய தயாரிக்கப்படும் பைக்குகள் என்று, வளரும் இந்த நிறுவனம் தனது மூன்றாவது உற்பத்தி ஆலையும் சென்னையிலேயே தொடங்கியுள்ளது. இந்த அனைத்து நிகழ்வுகளிலும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், டெல்லியை சேர்ந்த எய்ச்சர் நிறுவனம் யாதொரு காரணத்திற்காகவும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை தமிழகத்தில் இருந்து மாற்றவில்லை.
புதிய அலைகளையும் அது சென்னையிலேயே தான் தொடங்கி நடத்தி வருகிறது. பாரம்பரியத்தின் மீது மாறா பற்றுள்ள ஒரு மனிதன் தனது கனவு வாகனத்தின் பூர்வீகத்தை மாற்றாமல் அதன் இருப்பிடத்திலேயே வைத்து அதை வளர்ப்பது என்பது எத்தனை கவுரவமான விஷயம். இந்த அற்புதமான காரியத்தை முன்னெடுத்து செயல்படுத்திவரும் சித்தார்த்த லாலை, தமிழக மக்களின் சார்பில் வாழ்த்துவது என்பது தலையாய கடமை என்று கருதுகின்றேன்.
ராயல் என்பீல்டு புல்லட்டுகள் இந்தியாவில் மிகவும் பிரபலமான வாகனம் என்பது இன்றைய தலைமுறையில் 40 வயதை கடந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். இடையில் புல்லட்டுகள் விற்பனை மிகவும் குறைவாக இருந்த காலகட்டத்தில் இதற்கென்று இருந்த ரசிகர்கள் ஏராளம். புல்லட் அல்லது உயர் ரக பைக்’குகள் வாங்குவது நம்மில் ஒரு சாராருக்கு அன்றாட தேவைக்கான விஷயமாக இருந்தாலும், மற்றொரு சாராருக்கு அது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது.
இவ்வகை மாடல்கள் வாங்கி அதை பெரிய பொருட்செலவில் தங்களுக்கு ஏற்றார் போல் என்ஜின் ஆல்டர் செய்து கொள்ளவும், சைலன்சர்கள், ஹெட் லாம்ப்கள், மக்கார்ட், போன்ற பாகங்களை மாற்றிக் கொள்ளவும் ஒரு தனிசந்தை, தனி பணிமனைகள் செயல்படுகிறது என்பது தனிக்கதை. அதிலும் புல்லட்டுகளை ஒரு குதிரையை பராமரிப்பதுபோல பராமரித்து பாதுகாத்து வரும் நபர்களை கண்கூடாக பார்த்த அனுபவம் எனக்கு நிறைய உண்டு.
அப்படி என்னுடைய வாழ்வில் நான் சந்தித்த மனிதர்களில் புல்லட்டை மிகவும் நேசித்தவர்கள் குறித்து இங்கே நினைவலைகளை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
எனது 8வது வயதில் தான் நான் புல்லட் என்னும் பெயரை கேள்விப்ட்டேன். மூன்றாவது படித்துக் கொண்டிருக்கும் எனக்கு சாலையில் டபடபடப என்ற ஓசையுடன் வரும் இந்த வாகனத்தை பார்க்கும் போது சொல்லொண்ணா கிளர்ச்சி உள்ளத்திற்குள் ஏற்படுவது உண்டு. எங்கள் குடும்பதிற்கு நெருங்கிய நண்பராக இருந்தவர் ரத்தினசாமி. உயரமான உருவமும் அதற்கு ஏற்ற கட்டுமஸ்தான உடலும் கொண்டவர்.
எப்போதும் கதர் சட்டையும், கதர் வேட்டியும் அணைந்து கொண்டு, கண்களில் கூலிங் கிளாஸ் அணிந்தபடி அவர் ராயல் என்பீல்டு புல்லட்டில் வரும் ஸ்டைலே தனி. அவர் உட்பட எங்கள் ஊரில் ஒரு சிலரிடம் மட்டுமே புல்லட் இருந்தது.
ரத்தினசாமி மாமா தனது குதிரையை போல கருதி அதை பராமரித்து வந்தார். அவரது புல்லட் கருப்பு நிறம் கொண்டது. ஹெட் லைட்டை சுற்றி இருக்கும் நிக்கல் பூசப்பட்ட அந்த வளையம், அதன் உச்சியில் இரண்டு புறமும் இருக்கும் குமிழ் விளக்குகள், பட்டாம்பூச்சியின் வடிவத்தில் இருக்கும் பம்பர், இடது புறத்தில் இருக்கும் பிரேக் லீவர், வலது புறத்தில் இருக்கும் கிக்கர் மற்றும் கியர் மாற்றும் லீவர்கள் இவையனைத்தும் இன்னமும் எனக்கு நினைவில் இருக்கிறது.
தனது புல்லட்டின் மீது சிறிய தூசியும் படிய அவர் விட்டது கிடையாது. எனது முதல் புல்லட் பயணம் இரத்தினசாமி மாமாவுடன் தான் இருந்தது. என்னை புல்லட் டேங்கின் மீது அமரவைத்துக் கொண்டு அவர் ஓட்டிய போது, எனது கேசங்கள் பறந்து முகத்தில் எதிர்காற்று ஊசி போல குத்தியது இன்னமும் நினைவில் இருக்கிறது.
புல்லட்டில் அவருடன் பயணிக்கும் போது சுமாராக ஐம்பது கிலோ மீட்டர் வேகத்தில் அவர் வாகனத்தை இயக்கிய நேரத்தில் இன்னமும் வேகமாக போங்க மாமா என்று அவரிடம் திரும்பி கூறியதும், எனக்காக அவர் 65 கிலோ மீட்டர் வேகத்தில் புல்லட்டை செலுத்தியதும், எதிரில் வந்த வாகனங்கள் ஒரு “சரேல்” என்னும் நிலையில் கடந்து போனதும் எனக்கு இன்னமும் நினைவில் இருக்கிறது. காலையில் எழுந்ததும் முதல் வேலையாக இரத்தினசாமி மாமா புல்லட்டை துடைத்து பளபளப்பாக மாற்றிவிட்டுதான் காபியே குடிப்பார்.
வாரத்தில் ஒருநாள் அவர் புல்லட்டை கழுவாமல் விட்டதே கிடையாது. வாகன பராமரிப்பு என்பது என்னவென்று அவரிடம் தான் நான் கற்றுக்கொண்டேன். சிறிய சப்தம் கேட்டாலும் அவரால் தனகிகி கொள்ள முடியாது. உடனே அதை கவனிப்பார். புல்லட்டை ஒரு ராஜ வாகனமாக பராமரித்து வந்தவர். இத்தனைக்கும் அவர் பெரிய படிப்பொன்றும் படித்தது கிடையாது.
பெரிய அளவில் வாகனத்தின் உதிரி பாகங்கள் பெயர்களை கூட அவர் அறிந்திருந்தார் என்று சொல்ல முடியாது. 1986-87 கால கட்டங்களில் ஒரு சாதாரணமான கிராமத்தில், புல்லட் என்னும் வாகனத்தை ஒரு கவுரவமான அடையாளமாக அவர் மாற்றி வைத்திருந்ததை நான் கண்கூடாக கண்டு வியந்திருக்கிறேன்.
நான் பார்த்த புல்லட் காதலர்களில் இரண்டாவதாக புல்லட்டை பராமரித்து பாதுகாத்த நபர் எங்கள் ஊரில் காவல் துறையில் துணை ஆய்வாளராக இருந்த திரு. பன்னீர் செல்வம். புல்லட் பன்னீர் செல்வம் என்றே அவரை எங்கள் ஊரில் அழைத்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன். சிவப்பு நிற புல்லட்டில் காவல்துறை சீருடையில் அவர் வரும் அழகே தனி. ராயல் என்பீல்டு புல்லட்டை மிகவும் ரசித்து உபயோகித்தவர் இவர் என்றால் மிகையில்லை. ஞாயிற்றுக்கிழமைகளில் கண்டிப்பாக அவரது வாகனம் எங்கள் ஊரில் பிரபலமாக இருந்த மெக்கானிக் ஷெட்டில் நிற்கும்.
வாட்டர் சர்வீஸ் செய்து அந்த வாகனம் நிற்கும் போது, சிவப்பு கம்பளம் போர்த்திய யானை ஒன்று நிற்பது போல நான் கற்பனை செய்து பார்த்திருக்கிறேன். அதுவரை புல்லட் என்பதை ஒரு பெரிய வகை வாகனமாக மட்டுமே நான் கருதியிருந்த போதும், திரு. பன்னீர் செல்வம் அவர்களின் என்பீல்டு புல்லட் மீதான மோகமும், அதை அவர் தன் பணிக்காக பயன்படுத்திய கம்பீர நடையும் எனக்கு ராயல் என்பீல்டு மீதான மரியாதையையும், மதிப்பையும் அதிகரிக்க வைத்தது.
திரு. பன்னீர் செல்வம் அவர்கள் எந்த அளவுக்கு எங்கள் ஊரில் பணிக்காலத்தில் மதிப்போடு இருந்தாரோ அதே அளவுக்கு ராயல் என்பீல்டு புல்லட்டுக்கும் மதிப்பும் மரியாதையும் இருந்தது என்பது நான் பார்த்து வியந்த சம்பவங்களில் ஒன்று.
தொடரும்.....................
இந்த பகுதி பிடித்து இருந்தால் மறக்காமல் மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். இந்த எபிசோட் பற்றிய உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே இருக்கும் கமெண்ட் பகுதியில் சொல்லுங்கள்.
எங்கள் வாசகர்கள் குழுவில் இப்போது நீங்கள் இணையலாம். வாட்சப் மூலம் இணைய கீழே இருக்கும் லிக்ங்கை கிளிக் செய்யுங்கள்.
முகநூல் வாசகர் குழுவில் இணைய கீழே இருக்கும் லிங்க்கை உபயோகியுங்கள்.
இந்த தொடர் கட்டுரையின் மற்ற பாகங்களை வாசிக்க கீழே இருக்கும் இணைப்பை பயன்படுத்துங்கள்.



Comments