காற்று வெளியிடை கண்ணம்மா - அத்தியாயம் 5
“ஒரு குரலை இகழ்ந்தவள்… அந்த குரலால் கண்கலங்குகிறாளா?”
“Recording Room-ல் நடந்த அந்த ஒரு சம்பவம்… அவள் வாழ்க்கையை மாற்றிவிட்டதா?”
"இந்திராவின் தேடல் உண்மையானதா? இல்லை பழிவாங்கும் முயற்சியா?"
5. முகிலனும் இந்திராவும்
காரை செலுத்துவதில் அதீத வேகத்தை இந்திரா பிரியதர்ஷினி காட்டினாள். அவள் சென்னையிலிருந்து கிளப்பி மதுரவாயிலை கடந்து கொண்டிருந்த நேரத்தில் குணாவிடமிருந்து அழைப்பு வந்தது. காரின் ப்ளூடூத் எம்.எம் சேவையை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டு குணாவின் அழைப்பை வெளிப்படுத்தியது. சதீஷ் ப்ளூடூத்தை ஆன் செய்தான்.
"இந்திரா கிளம்பிட்டீங்களா? எங்க போயிட்டு இருக்கீங்க? முகிலன் son-கிட்டே நான் பேசினேன். அவரு பெருசா எந்த reaction-ம் காட்டல”, என்று தன வேதனையை பகிர்ந்தார் குணா.
“சார் நான் வசந்தன்கிட்ட போன்ல இன்பார்ம் பண்ணிட்டேன். ‘முகிலன் அப்பா’ வீட்ல என்ன நிலைமைன்னு தெரியல. எப்படியும் வசந்தன் எல்லாத்தையும் பார்த்துக்குவார். வரலட்சுமி அத்தை இருக்காங்க. அவங்க எல்லாரையும் சமாளிச்சுக்குவாங்கன்னு நம்பிக்கை இருக்கு. நான் முதல்ல போய் முகிலன் அப்பாவை பார்க்கறேன். நீங்க நம்ம லைவ் ரிலே vehicle- லை கோயம்புத்தூர்ல இருந்து வர சொல்லிடுங்க”, என்று கூறினாள் இந்திரா.
“நான் பாத்துக்கறேன் இந்திரா. நீங்க முன்னாடி போய்ட்டே இருங்க. நானும் இன்னும் ஒரு மணி நேரத்துல கிளம்பிடறேன். பத்திரமா போங்க. சதீஷ் கூட இருக்கான் இல்லே. அவன பேச சொல்லுங்க" என்றார் குணா. குணாவுக்கு இந்திரா பத்திரமாக செல்ல வேண்டும் என்ற தவிப்பு இருந்தது.
சதீஷ் பவ்வியமான குரலில் மிகவும் பணிவாக பேசினான்..
"சொல்லுங்க எம்டன் சார்”, என்று எப்போதும் போல பேச்சுவாக்கில் சொல்லிவிட்டு திருத்தியபடி… “சாரி எம் டி சார்”, என்றான் சதீஷ்.
"நீ இப்படியே பேசிட்டு இரு உன்னைய சீக்கிரமா வேலைய விட்டு தூக்கறேன்னா இல்லையா பாரு." என்று அதட்டினார் குணா.
“சாரி சார்... தெரியாம பேசிட்டேன். நீங்க கோவிச்சுகாதேள்!! நமக்குள்ள எதுக்கு பார்மாலிட்டீஸ் எல்லாம்”, என்று அவரை சமாதானப்படுத்த சதீஷ் முயன்றாலும், அது எதுவும் அவனுக்கு பலன் தரவில்லை.
“அபசுரமே ! அபசுரமே ... நீ நிஜமாலுமே ஞான சூனியம் தாண்டா. உன்ன நம்பி அந்த பொண்ண அனுப்பறத நெனச்சாதான் கவலையா இருக்கு. ஒழுங்கா பாத்து பத்திரமா கூட்டிட்டுப் போடா. ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவ எனக்கு கால் பண்ணு புரியறதா? என்றார் குணா.
“சரிங்க எம்.டி சார். அப்படியே கையோட…. என்னோட போஸ்ட் பெய்ட் பில்ல காலைல கட்டிட்டீங்கன்னா ரொம்ப சந்தோஷமா இருக்கும். ஏற்காடு வரை போறேன் குளிருக்கு இதமா சுக்கு காப்பி சாப்பிட கொஞ்சம் பணம் account-ல போட்டீன்கன்னா இன்னமும் வசதியா இருக்கும்" என்று சதீஷ் தன கோரிக்கைகளை கூறிக் கொண்டு செல்ல குணா போனை கேட் செய்திருந்தார். சதீஷ் தன் கையை டேஷ் போர்டில் குத்திக் கொண்டான். அவனை பார்த்து இந்திரா வாய்விட்டு சிரித்தாள்.
"பணம்ன்னு கேட்டா மட்டும் மனுஷன் call-ல cut பண்ணிடுவாரே! சே தொழிலாளியோட தேவையையும், உணர்வையும் மதிக்காத இந்த ஆள் கூடவெல்லாம் எப்படி இந்திராட நீ சமாளிச்சு வேலை செய்யுறே? நல்ல வேளை எனக்கு இந்த ஆள் கிட்ட Direct Reporting பண்ண வேண்டியதில்லை. அதனால தப்பிச்சேன்”, என்று கூறினான் சதீஷ்.
"ஹே... நீ அவர்கிட்ட எல்லாம் வேல செஞ்சு பார்க்கல. பார்த்தாதான் உனக்கு அவரோட அருமை புரியும்”, என்று அவனுக்கு பதில் கூறினாள் இந்திரா. சதீஷ் பேச்சை சுவாரசியமாக மாற்ற முற்பட்டு முகிலன் குறித்த பேச்சுக்குத் தாவினான்.
"போதும். நிப்பாட்டு... அவர் புராணம் வேணாம். ஆமாம் நீ எப்படி அந்த ஜிப்பா சாமிய எப்படி கண்டு பிடிச்சே!... ஏற்காட்டுல போய் உட்காந்துக்கிட்டு மூணு நாளா எல்லாரையும் அலைய விட்டுருகாரு அந்த மனுஷன். இவரையெல்லாம்???????”, என்று நீட்டினான் சதீஷ். இந்திராவின் முகமும், குரலும் மாறியது. அவள் சதீஷின் அந்த கேலியான பேச்சை ரசிக்க தயாராக இல்லை என்பதை அவள் குரலும், அதிலிருந்து வெளியேறிய வார்த்தைகளும் வெளிப்படுத்தின.
"சதீஷ் போதும் நிறுத்து. இதுக்கு மேல முகிலன் பத்தி எதுவும் பேசாதே! உனக்கு வேணா அவரு ஜிப்பா சாமியா இருக்கலாம். தமிழ்நாடே இன்னைக்கு அவரோட கதையையும் , குரலையும் விரும்புது. அந்த உணர்வு உனக்குப் புரியாது. ஆரம்பத்துல எனக்கும் தான் புரியல. பின்னாடிதான் புரிஞ்சுக்கிட்டேன்".
"சாரி இந்திரா- ஒரு விளையாட்டுக்குத்தான் அப்படி பேசினேன். மன்னிச்சுக்க. நீ இவ்வளோ கோபப்படுவன்னு எனக்குத் தெரியல”, என்றான் சதீஷ். அவன் இந்தியாவிடமிருந்து வந்த எதிர்வினையை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவனது முகம் குளிர்சாதன கருவி கொடுத்த குளுமையையும் மீறி வியர்வையை முகத்தில் அரும்ப செய்திருந்தது. அதற்குப் பிறகு சிறிது தூரம் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. கார் நெடுஞ்சாலையில் வேகமாக பயணித்துக் கொண்டிருந்தது. காரின் முன்பக்க விளக்குகளின் பிரகாசத்தில் சாலை இருட்டை விரட்டிக் கொண்டிருக்க, மைல் கற்களை கார் துரத்தி பிடித்துக் கொண்டிருந்தது. இந்திராவின் இதயம் சில கணம் முகிலன் குறித்த யோசனையில் மூழ்கியது.
முகிலன் என்னும் இந்த மனிதனிடம் தான், முதல் முதலாக இவள், ]பிறருக்கு மரியாதை காட்டுவது எப்படி?’, என்று தெரிந்து கொண்டாள். இந்த மனிதனிடம் இருந்து தான் ‘ஒரு படைப்பின் அழகை எப்படி பிறருக்கு கொண்டு சேர்ப்பது?’, என்ற பாடம் கற்றுக்கொண்டாள். ‘பணியில் தனக்கு தானே நூறு சதவீத மதிப்பெண் இட்டுக்கொள்ளும் ரகத்தை சேர்ந்தவளாக’ இருந்த "இந்திரா பிரியதர்ஷினி"யை, பயிற்றுவித்து, பண்பட செய்த பெருமைக்குரிய மனிதர் முகிலன்.
"சார் இந்த கதைக்கு இப்படி வாய்ஸ் மாடுலேஷன் வேணும். இப்படி ஒரு சென்டன்ஸ் இருக்கு, இதை நீங்க இப்படி பேசவேண்டும், என்று நீண்ட விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்த, இந்திராவை பார்த்து, தலையை மட்டும் ஆட்டிக் கொண்டிருந்த முகிலன், டேக் போகும் போது அவருக்கே உரிய பாணியில் பேசியபோது கட் கொடுத்தாள் இந்திரா….
"என்ன சார் செய்யறீங்க? உங்ககிட்ட நான் எவ்ளோ தெளிவா சொன்னேன். நான் சொல்லறத செய்யுங்க, உங்க இஷ்டத்துக்கு எல்லாம் செய்ய கூடாது" என்று பேசினாள் இந்திரா.
அன்று ஒலிப்பதிவு கூடமே ஸ்தம்பித்து நின்றது. அனைவரின் மனதிலும் முகிலனை குறித்து வேதனை ஏற்பட்டது. எத்தனையோ ஆடியோ புத்தகங்கள் அவர் குரலில் வந்துள்ளன. சில திரைப்படங்களில் நடிகர்களின் குரலாக அவர் இருந்து இருக்கின்றார். அவரிடம்…. அதுவும் அவரே எழுதிய கதைக்கு இந்த பெண் இத்தனை விளக்கமும், இத்தனை எதிர்பார்ப்பும் வைத்து எரிந்து விழுகின்றாளே??!! என்று சொல்லி திகைத்து நின்றனர்.
மீண்டும் ஒளிப்பதிவு செய்ய டேக் கொடுத்தாள் இந்திரா. மீண்டும் முகிலன் அதே தவறை செய்ததாக கூறி கட் செய்தாள்.
"சார் நீங்க நான் சொல்லறத செய்ய முடியாதுன்னா விட்டுடுங்க. நான் வேற ஸ்டோரி டெல்லர் வெச்சு பேசிக்கறேன்" என்றாள் இந்திரா முகத்தில் கோபம் கொப்பளிக்க.
முகிலன் எழுந்தார். கதையின் பேசவேண்டிய பகுதியை அவளிடம் கொடுத்துவிட்டு, “மன்னிச்சுக்கங்க மேடம். எனக்கு சரியா வரல” என்று கூறிவிட்டு வெளியே சென்றார். அவர் போவதை பார்த்துவிட்டு, "ஒழுங்கா செய்ய முடியலன்னாலும் திமிர் ஒன்னும் குறையா இல்லே”, என்று கூறிவிட்டு, இந்திரா தன உதவியாளரை அழைத்தாள்.
“அசோக், "ஸ்டோரி டெல்லர்” வேலைக்கு உடனே ஒருத்தர பாருங்க. நாளைக்கு லைவ்-ல ‘விரல் மீட்டும் வீணைக்கு’, எபிசோட் இருக்கு. உடனே ரெக்கார்டிங் பண்ணனும். சீக்கிரமா ஏற்பாடு செய்யுங்க" என்றாள் இந்திரா.
அப்போது ஒலிப்பதிவு கூட்டத்திற்குள் வந்த குணா, ரெகார்டிங் டெஸ்ட் நடக்காதது குறித்து அங்கிருந்தவர்களிடம் கேட்டார். குணசீலன் வானம்பாடி எப்.எம்மின் தலைமை அதிகாரி. அவரிடம் இந்திரா பிரியதர்ஷினி நடந்தவற்றை குறித்து விளக்கம் கொடுத்தாள். தனக்கு முகிலனை பிடிக்கவில்லை என்றும், நல்ல கதையை சரியாக புரிந்து கொண்டு அவரால் குரல் கொடுக்க முடியவில்லை என்றும் கூறினாள். அனைத்தையும் கேட்ட குணா அவளை தன்னுடைய அறைக்கு அழைத்து சென்றார்.
"இந்திரா நீங்கள் சொன்ன அந்த நல்ல கதையை எழுதியது இந்த முகிலன்தான். கடந்த ஓராண்டாக வானம்பாடி எப்.எம் நடத்தும் சில குறிப்பிட்ட நிகழ்வுகளில், நேயர்களின் விருப்பமாக ஒலிக்கும் கதைகள் அவரது குரலில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவரின் சொந்த கதைகளுக்கு, அவரைவிட யார் சிறப்பாக, உணர்வுப்பூர்வமாக குரல் கொடுத்துவிட முடியும்?. எங்களின் மிகப்பெரிய சொத்து முகிலன்", என்ற போது கொஞ்சம் ஆடிபோனாள் இந்திரா.
“சார் அது….. வந்து…” என அவள் தடுமாறிய போது, குணா ஒரு லிங்க் கொடுத்தார். ‘
ஆர்.ஜே அறை ஐந்தில் உள்ள கணினியில் நான் கொடுத்த லிங்க்-கை என்ட்ரி செய்தால் தகவல்கள் வரும். கொஞ்சம் கேளுங்களேன்’ என்றார்.
‘சரி’ என ஆமோதித்துவிட்டு வெளியே வந்தவள், அறை எண் ஐந்தில் நுழைந்து அமர்ந்தாள். குணா கொடுத்த லின்க்கை அவள் கணினியின் திரையில் தட்டிய போது, முகிலன் சிரித்தபடி பேசத் துவங்கும் ஒரு வீடியோ ஓடத் துவங்கியது. தலையில் ஹெட்போனை மாட்டிய இந்திராவின் முகமும் கண்களும் சட்டென்று மாறி அமைதி நிலைக்கு வந்தது.
"அரசியல் இங்கே சதுரங்கம் தான் இளவரசி. சில நேரங்களில்… ஆடுபவர்கள் மனோபாவத்திற்கு ஏற்ப, எதிரிகள் பலம் சட்டென்று குறையலாம். அதே வேளையில் நமக்கும் பலம் இல்லாது போகலாம். இந்த சதியின் சுழலில் சிக்கிக் கொள்பவர்கள் அநேகர். சதிகளில் தீர்மானிக்கப்படும் விதிகள் இங்கு ஏராளம். சற்று ஏமாந்தீர்கள் என்றால், சத்தமின்றி ஒரு வாள் உங்கள் இதயத்தையும் ஊடுருவும்"...
என்று முகிலன் தன் உணர்ச்சிகளோடு, தெள்ளிய தமிழில், கூறிய வரலாற்று கதை ஒன்றை கேட்ட வினாடியில் இந்திராவின் விழிகள் கண்ணீரை துளிர்த்த போதுதான் உணர்ந்தாள்….
"தோற்றமும் திறமையும் வெவ்வேறு" என்று. அதுவே முகிலனை அவள் மதிக்க காரணம் ஆனது. தான் அவ்வளவு திமிராக, அகந்தையாக பேசியும், "மன்னியுங்கள் எனக்கு தான் சரியா வரல" என்று கூறிய அவரின் பெருந்தன்மையை நினைத்து வெட்கி தலை தாழ்த்தினாள்.
இந்திரா தன சுய நினைவுக்குத் திரும்பினாள். சதீஷை பார்த்தாள். அவன் சன்னலோரமாக வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தான். இந்திரா சதீஷை அழைத்தாள். முதலில் கோபமாக என்னவென்று கேட்டவன் அவள் அவனிடம் கூற விரும்பியதை வெளிப்படுத்திய போது ஆர்வமும் அதிர்ச்சியாக அவளை பார்த்து இருக்கையில் திரும்பி அமர்ந்தான். இந்திரா பேசத் துவங்கினாள். அவளது இதயத்தை நிறைந்திருந்த உணர்வுகளை மெல்ல விடுவித்து சதீஷிடம் கொட்டத் தொடங்கினாள். அதே நேரம் கார் பரனூர் சுங்கச்சாவடியை நெருங்கி இருந்தது.


Comments