இயந்திர குதிரை - அறிவியல் மற்றும் தகவல் சார்ந்த கட்டுரை - Part 4

📌 Topic Summary:

“ஜப்பான் பைக்குகள் இந்திய சந்தையை கைப்பற்றிய நேரத்தில்… ராயல் என்பீல்டு எப்படி மீண்டு எழுந்தது?”


“மைலேஜ், வேகம், லைட் வெயிட் — போட்டியாளர்களிடம் தோற்ற புல்லட்… திரும்பவும் வாடிக்கையாளர்களை இதயத்தை வென்றது எப்படி?”


“TVS, Hero, Yamaha சேர்ந்து தொடுத்த தாக்குதலை அசால்ட்டாக எதிர்கொண்ட பைக் எது தெரியுமா? ”


“RX100 வேகம்! CD100 மைலேஜ்! இருந்தாலும் மக்கள் ஏன் இன்னமும் புல்லட்டை விட்டுவிடவில்லை?”


“200க்கும் மேற்பட்ட பைக்குகள் வந்தாலும்… இந்தியாவின் அடையாளம் ஒரே பைக்குக்கு தான் இருக்கிறது. ஏன் தெரியுமா?”




4. போட்டிகளை வென்ற புல்லட்டின் கதை

இந்திய இருசக்கர வாகன சந்தை 1987-க்குப் பிறகு வெளிநாட்டு நிறுவனங்களில் கூட்டாண்மை ஒப்பந்தங்களால் புதிய பாதைக்கு மாறத் துவங்கியது. அன்றைய காலகட்டத்தில் பிரபலமாக இருந்த டி.வி. சுந்தரம் ஐயங்காரின் டி.வி.எஸ் நிறுவனம் மொபெட்டுகளை வடிவமைத்து களத்தில் இறங்கியிருந்தது. கிராமங்களில் சுவேகா என்று இருந்த மொபெட்டுகளை டிவிஎஸ் மொபெட்டுகள் எளிதாக வென்று பெரும் சாதனை படைத்தன. 


அதே போல இந்திய சந்தையில் இருந்த மற்றுமொரு நிறுவனம் ஹீரோ சைக்கிள்ஸ். சைக்கிள் உற்பத்தியில் தனக்கு போட்டியாக இருந்த பிரபலமான பல பிராண்டுகளை ஓரம் கட்டி விரைவாக முன்னேறி வந்த இந்த சைக்கிள் நிறுவனம் இதே கால கட்டத்தில் பைக் உற்பத்தியில் ஈடுபட தீர்மானித்தது. 


ராஜ் தூத் என்ற பைக் இந்தியாவில் மிகப் பிரபலமாக இருந்தது. எஸ்கார்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக வந்து கொண்டிருந்த இந்த நிறுவனமும் புதிய வகை பைக்குகளை உற்பத்தி செய்ய தீர்மானித்தது. இந்த மூன்று இந்திய நிறுவனங்களும் ராயல் என்பீல்டு என்னும் இயந்திர குதிரையை வெற்றி கொள்ள வெளிநாட்டு நிறுவனங்களுடன் கைகோர்த்தன.


    ராயல் என்பீல்டு கடுமையான நிதி நெருக்கடியில் தவித்திருந்த இந்த நேரத்தில், வெளிநாட்டு நிறுவனங்கள், அதிக மைலேஜ் என்ற தாரக மந்திரத்துடன் தயாரித்த வாகனங்களிலும், அதன் எளிமையான எடை மற்றும் வடிவமைப்பில் இருந்த கவர்ச்சியிலும் சந்தையை வசப்படுத்தத் தொடங்கின. 


டிவிஎஸ் நிறுவனம் சுசுகி மோட்டார்ஸ் உடனும், ஹீரோ சைக்கிள்ஸ் ஹோண்டா நிறுவனத்துடனும், எஸ்கார்ட்ஸ் நிறுவனம் யமஹா நிறுவனத்துடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு, தயாரிப்பில் ஈடுபட்டன. அப்படி வந்த வாகனங்கள் அவற்றில் இருந்த சிறப்புக்கள் அவற்றுக்கும் புல்லட்டுக்கும் இடையேயான வித்தியாசங்கள் ஆகியவற்றை குறித்து இனி கேட்கலாம் வாங்க….


1. டிவிஎஸ் சுசுகி:

டிவிஎஸ்-ன் வரலாறு: டிவிஎஸ் நிறுவனம் சென்னையைத் தலைமையிடமாக கொண்ட ஒரு பன்னாட்டு இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம். இந்த நிறுவனம் இரு சக்கர வாகனங்கள் மூன்று சக்கர வாகனங்கள் ஆகியவற்றை தயாரிப்பதுடன், நிதி, காப்பீடு, டயர்கள் மற்றும் அதன் கூறுகள் தயாரிப்பு, வீட்டுவசதி, விமான போக்குவரத்து, உள்ளிட்ட ஆட்டோமொபைல் துறையில் பல துறைகளில் காலடி பதித்துள்ளது. இந்த குழு 97 நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


    டிவிஎஸ் நிறுவனம் திருக்குருங்குடி சுந்தரம் ஐயங்கார் என்பவரால் 1911-ஆம் ஆண்டில் மதுரையில் முதல் பேருந்து சேவையுடன்  நிறுவப்பட்டது. அவர், சதர்ன் ரோட்வேஸ் லிமிடெட் என்ற பெயரில் பேருந்து போக்குவரத்து வணிகத்திலும், பார்சல் லாரிகள் இயக்கும் தொழிலும் முன்னோடியாக திகழ்ந்தார். டி.வி.சுந்தரம் ஐயங்கார் அண்ட் சன்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தை பின்னாளில் இவர் நிறுவினார். 


    அமெரிக்காவின் கிளேட்டன் தேவாண்ட்ரே ஹோல்டிங்ஸுடன் இணைந்து 1932-ம் ஆண்டில் இந்த நிறுவனம் இருசக்கர வாகனங்களுக்கு உதிரி பாகங்களை தயாரிக்கும் பணியை தொடங்கியது. இந்த உதிரிக்கு பாகங்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேவைகளை அடிப்படையாக கொண்டதாக இருந்தது.


    இந்த புதிய பிரிவின் ஒரு பகுதியாக மொபெட்களை தயாரிக்க 1978 ல் ஓசூரில் ஒரு ஆலையை இந்த நிறுவனம் அமைத்தது. 1980-ம் ஆண்டில், இந்தியாவின் முதல் இரண்டு இருக்கைகள் கொண்ட டி.வி.எஸ் 50 மொபெட்டுகள், தென்னிந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ஓசூரில் உள்ள தொழிற்சாலையில் இருந்து உருவாகி சந்தைக்கு வந்தது. 


    1982 ஆம் ஆண்டில் சுந்தரம் கிளேட்டன் லிமிடெட் மற்றும் சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன் ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டு முயற்சியில் மோட்டார் சைக்கிள்களை தயாரிப்பது தொடர்பான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. டி.வி.எஸ் மற்றும் சுசுகி ஆகியவை 19 ஆண்டு காலம் வர்த்த உறவைப் பகிர்ந்து கொண்டன,


    இந்த நிறுவனங்கள் இடையே கையெழுத்தான ஒப்பந்தம்  என்பது, இந்தியச் சந்தைக்கு ஏற்ப, குறிப்பாக இந்திய சாலைகள் மற்றும் எரிபொருள் தேவைக்கு ஏற்ப இரு சக்கர வாகனங்களின் வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்கான தொழில்நுட்ப பரிமாற்றத்தை மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டதாக அமைந்திருந்தது.


    டி.வி.எஸ்-சுசுகி என மறு பெயரிடப்பட்ட இந்நிறுவனம் சுசுகி சுப்ரா, சுசுகி சாமுராய், சுசுகி ஷோகன் மற்றும் சுசுகி ஷாலின் போன்ற பல மாடல்களை வெளியிட்டது. 2001 ஆம் ஆண்டில், சுசுகியுடன் மேற்கொண்டிருந்த ஒப்பந்தங்கள் முடிவுக்கு வந்தது. பின்னர் டிவிஎஸ்- சுசுகி நிறுவனம் டிவிஎஸ் மோட்டார் என மறுபெயரிடப்பட்டது, இனி இந்த நிறுவனங்கள் இணைந்து தயாரித்த மோட்டார் சைக்கிள் குறித்து ஒவ்வொன்றாக காணலாம். 


  • 1984-ம் ஆண்டில் டிவிஎஸ் சுசுகி நிறுவனம் வெளியிட்ட முதல் 2 ஸ்டோர்க் பைக் சுசுகி AX-100R ஆகும். இந்த பைக் அடிப்படையில் இந்தியாவின் நவீன மோட்டார் சைக்கிள் சகாப்தத்தின் புதிய வடிவமாக விற்பனைக்கு வந்த வாகனம். இந்த பைக்கில் ஜப்பானில் தயாரிக்கப்பட்ட 98.2சிசி 2-ஸ்ட்ரோக் சுஸுகி என்ஜின் பொருத்தப்பட்டிருந்தது.


  • 1988-ம் ஆண்டு டிவிஎஸ் சுசுகி நிறுவனம் வெளியிட்ட மற்றுமொரு பைக் டிவிஎஸ் சுசுகி சுப்ரா ஆகும். AX-100R-க்குப் பிறகு இந்த நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சக்தி வாய்ந்த பைக்காக இது கருதப்பட்டது. இது செயல்திறன் சார்ந்த பைக் ஆகும். AX-100R-ன் அதே 98.2cc இன்ஜின் இதிலும் இருந்தது. இதன் ஆற்றலை அதிகரிக்க செய்ய டியூன் செய்யப்பட்டிருந்தது. சிறந்த சவாரி மற்றும் கையாளுதலுக்காக முன் மற்றும் பின்பக்க  சஸ்பென்ஷன்கள் இரண்டும் மாற்றியமைக்கப்பட்டிருந்தன. 


  • 1991-ம் ஆண்டு டிவிஎஸ் சுசுகி நிறுவனம் சூப்பர் ட்யூன்ட் சூப்ராவை யமஹா ஆர்எக்ஸ்-100 க்கு போட்டியாக சந்தையில் அறிமுகப்படுத்தியது. இதில் அதே 98.2சிசி 2-ஸ்ட்ரோக் என்ஜின் 11 பிஎச்பி ஆற்றலை உருவாக்குவதற்காக மேலும் டியூன் செய்யப்பட்டிருந்தது, இது உண்மையில் இந்த பைக்கை RX100 ஐ விட வேகமாக்கியது என்று உறுதியாக கூறும் அளவுக்கு இதன் செயல்பாடு இருந்தது. 


  • 1993-ம் ஆண்டில் சுசுகி சோகன் என்ற புதிய மாடலை இந்த நிறுவனம் களமிறங்கியது. Suzuki Shogun என்பது Yamaha RX100 மற்றும் Kawasaki KB100க்கு நேரடி போட்டியாக இருக்கும் என்று விளம்பரப்படுத்தியே இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இந்த பைக்கில் 108.2சிசி 2-ஸ்ட்ரோக் உயர் ரெவ்விங் என்ஜின் இருந்தது, எஞ்சினின் மென்மைக்கு ஈடு இணையில்லை, ஆனால் RX100 ரசிகர்கள் இதைஏற்றுக் கொண்டதாக தெரியவில்லை. 


  • சுசுகி சோகன் சந்தையில் மக்களால் பெரிய அளவில் ஏற்றுக் கொல்லப்படவில்லை என்பதை உணர்ந்த டிவிஎஸ் நிறுவனம் உடனடியாக 1994-ம் ஆண்டில் சுஸுகி சாமுராய் என்னும் மாடலை அறிமுகம் செய்தது. Max 100R என்ஜினை மேம்படுத்தி இதனை வடிவமைத்திருந்தார்கள். சுசுகி சாமுராய் ஸ்டைலிங் மற்றும் நம்பகத்தன்மை காரணமாக இளைஞர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் பிரபலமாக இருந்தது. 


  • 1998-ம் ஆண்டில் டிவிஎஸ் சுசுகி நிறுவனம் சுசுகி ஷாலின் அது போன்ற பைக்குகளை எதிர்பார்த்த ஒரு சிலரின் தேவைக்காக உருவாக்கப்பட்டதாக இருந்தது.  இந்த பைக்கில் 5-ஸ்பீடு கியர்கள்,  டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்ட 138.2சிசி 2-ஸ்ட்ரோக் என்ஜின் கொண்டதாக இருந்தது.. மற்ற 2-ஸ்ட்ரோக் பைக்குகளைப் போலவே இதுவும் மாசுக் கட்டுப்பாட்டை மீறியதால், மாசுக்கட்டுப்பாட்டு சட்டத்திற்குப் பலியாகி, அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே நிறுத்தப்பட்டது.


  • சுசுகி ஷாலினின் தடையை தொடர்ந்து உடனடியாக இந்த நிறுவனம் களமிறங்கிய இரு சக்கர வாகனம் சுசுகி மேக்ஸ் 100 R ஆகும். கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியாவில் மிகவும் பிரபலமான பைக்காக இது எல்லா தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருந்தது. இந்த பைக்கில் 5500 ஆர்பிஎம்மில் 7.8 பிஎச்பி ஆற்றலையும், 5000 ஆர்பிஎம்மில் 9.8 என்எம் டார்க்கையும் வழங்கும் 98.2சிசி 2-ஸ்ட்ரோக் ஏர் கூல்டு இன்ஜின் இருந்தது.


  • 2000-மாவது ஆண்டில் சுசுகி நிறுவனம் கடைசியாக டிவிஎஸ் நிறுவனத்திற்காக வடிவமைத்த வாகனம் சுசுகி பியரோ ஆகும். இது ஒரு 4 ஸ்ட்ரோக் பைக்காக இருந்தது. 150 சிசி பிரிவில் வந்த மற்ற வாகனங்களை காட்டிலும் இந்த வாகனம் சிறந்த ஒன்றாக இருந்தது எனலாம். இந்த பைக்கை பயன்படுத்தியவன் என்னும் முறையில் இந்த வாகனம் ஒரு லெஜெண்ட் என்று கூறினால் அது மிகையாகவே இருக்காது.


  • 4-ஸ்பீடு கியர்களுடன் இணைக்கப்பட்ட 147.5cc 4-ஸ்ட்ரோக் என்ஜின் கொண்ட மிகவும் சக்திவாய்ந்த பைக் இது. பியரோ நல்ல மைலேஜ் தரக்கூடிய வாகனம் என்பதோடு, இதன் பிரேக்குகளை நம்பி எங்கும் செல்லலாம் என்பதற்கு உத்திரவாதமாகவும் இருந்தது. ஓசை அதிகம் எழுப்பாத இதன் என்ஜின் மற்றும் சைலன்சர், வாகனம் சாலையில் செல்வதை அறியக்கூட முடியாது என்னும் அளவில் இருந்தது. 


இந்த கால கட்டத்தோடு சுசுகி மற்றும் டிவிஎஸ் உடனாக ஒப்பந்தங்கள் முடிவுக்கு வந்ததால் பேட்டர்ன் உட்பட அனைத்தையும் சுசுகி நிறுவனம் டிவிஎஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டு வெளியேறியது. அதன் பின் தொடர்ந்து பைக்குகளை தயாரித்து வெளியிட்ட டிவிஎஸ் நிறுவனம் இன்றைய நவநாகரீக யுகத்திற்கு ஏற்றவாறு அப்பாச்சி ஆர்ஆர் 310, அப்பாச்சி, டி.வி.எஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4 வி ஆகிய நவீன மாடல் வாகனங்கள் சந்தையில் இப்போது பரபரப்பாக உற்பத்தியாயாகி சர்வதேச அளவில் பெயர் பெற்று வருகிறது. 


ஏறத்தாழ சுமார் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு மாடல்களை டிவிஎஸ் நிறுவனமும் சுசுகி நிறுவனமும் உருவாக்கி சந்தைப்படுத்தின என்ற போதிலும், ராயல் என்பீல்டுக்கு என்று இருந்த ரசிகர்கள் மாறிவிடவில்லை என்பதை இங்கே கவனிக்க வேண்டும். 


2. ஹீரோ ஹோண்டா நிறுவனம்:

1984-ம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் பைக் தயாரிப்பில் ஈடுபட முயற்சிகளை மேற்கொண்டது. இந்த நிறுவனத்துடன் கூட்டு சேர ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் முன்வந்த நிலையில் இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து இருசக்கர வாகனங்களை தயாரிக்கத் தொடங்கின. 2010 ஆண்டு வரை இந்த இரு நிறுவனங்களும் கூட்டாக சேர்ந்து பல்வேறு இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்தன. அந்த வாகனங்களை குறித்து இப்போது நாம் அறிந்து கொள்வோம். 


  • ஹீரோ-ஹோன்டா CD 100: 1985-ம் ஆண்டு வெளிவந்த இந்த பைக் 4ஸ்டார்க் இன்ஜின் கொண்டதாக இருந்தது. 13 லிட்டர் பெட்ரோல் டேங்க், 4 கியர்கள் லிட்டருக்கு சராசரியாக 60-70 கிலோ மீட்டர் வரை மைலேஜ், என்று மக்களை கவரும் பல்வேறு அம்சங்களுடன் வெளிவந்த இந்த பைக் இந்தியாவில் ஹீரோ-ஹோண்டா கூட்டு முயற்சிக்கு பெரிய அளவில் அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. 


  • ஹீரோ-ஹோண்டா ஸ்லீக்: 1989-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பைக் இதன் ஸ்டைலுக்காக விரும்பப்பட்டது என்று கூறலாம். இதன் பைபர் பாடி மற்றும் ஸ்மூத்தான இன்ஜின் ஆகியவை இந்த வாகனத்தை மற்ற வாகனங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டியது. அதே வேளையில் பைபர் உடலமைப்பைக் கொண்டிருந்த இந்த வாகனம் எடைக் குறைவாக இருந்தது என்பதும் குறிப்பிடத் தகுந்தது. 


  • ஹீரோ-ஹோண்டா CD 100 SS: 1991-ம் ஆண்டு வெளிவந்த இந்த பைக் ஏற்கனவே வந்த CD 100 மாடலின் மேம்பட்ட வடிவமே. பெரிய பின்புற டயர்கள், மற்றும் 4 ஸ்ட்ரோக் இன்ஜின் இதன் அமைப்பை முந்தைய மாடலில் இருந்து சற்று வித்தியாயப்படுத்திக் காட்டியது. 


  • ஹீரோ-ஹோண்டா CBZ : 1999-ம் ஆண்டு வெளிவந்த இந்த பைக் ஒரு போட்டி வாகனமாகும். இந்த பைக் 4- ஸ்ட்ரோக் வகுப்பில் இந்தியர்களுக்கு செயல்திறன் சுவை அளித்தது. 2-ஸ்ட்ரோக் பிரிவில் யமஹா ஆர்எக்ஸ்100 பெற்றுள்ள அதே இடத்தையும் மரியாதையையும் இந்திய பைக் ஆர்வலர்களின் பார்வையில் ஹீரோ ஹோண்டா சிபிசட் 4-ஸ்ட்ரோக் பிரிவில் பெற்று இருந்தது. 


  • ஹீரோ-ஹோண்டா CD டான்: 2002-ம் ஆண்டு வெளிவந்த ஹீரோ ஹோண்டாவின் கடைசி CD சீரியஸ் பைக் இதுவாகும். இது நகர்ப்புற வாடிக்கையாளர்களை கவரும் நோக்கத்தில் தயாரிக்கப்பட்டது. முந்தைய CD சீரியஸ் வாகனத்தில் பயன்படுத்தப்பட்ட அதே இன்ஜின் இதிலும் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இதன் ஸ்டைல் முந்தைய மாடல்களை காட்டிலும் வித்தியாசமானதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


  • இதன் பிறகு ஹீரோ ஹோண்டா, நிறுவனம் தயாரித்த பிற வாகனங்கள் என்னவென்றால் ஹீரோ ஹோண்டா ஆம்பிஷன், ஹீரோ ஹோண்டா CBZ ஸ்டார் போன்றவை ஆகும். 


  • 2010-க்குப் பிறகு ஹீரோ நிறுவனம் ஹோண்டாவின் வடிவமைப்பை கொண்டு தயாரித்த ஸ்பிளெண்டர் பைக்குகள் பெருமளவில் விற்பனையாகின என்பதும், இன்றளவும் இந்த வாகனம் புழக்கத்தில் இருப்பதும் நாம் அறிந்த ஒன்று தான். ஹீரோ நிறுவனம் அதன் பின் கரிஷ்மா, எஸ்ட்ரீம், எக்ஸ் பிளஸ் 200, கிளாமர் போன்ற எண்ணற்ற மாடல்களை சந்தையில் அறிமுகம் செய்தது. 


3. ராஜ்தூத் யமஹா:

ராஜ் தூத் என்பது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 ஸ்ட்ரோக் ஜப்பானிய யமாஹா பைக்குகள் ஆகும். இது யமாஹாவின் RD 350பியின் உரிமம் பெற்ற பதிப்பாகும். மாசுக்கட்டுப்பாடுகள் சட்டம் இயற்றப்பட்டதன் காரணமாக 1970-ம் ஆண்டில் ஜப்பானில் உற்பத்தியை நிறுத்திய இதன் பதிப்பை இந்தியாவில் எஸ்கார்ட் நிறுவனம் 1983-ம் ஆண்டு முதல் 1989-ம் ஆண்டு வரை தயாரித்து விற்பனை செய்து வந்தது. 


ராயல் என்பீல்டு பைக்குகளை மாற்றான வாகனம் என்ற அறைகூவலுடன் விற்பனைக்கு வந்த இந்த வாகனம் அந்த நேரத்தில் மிகப்பெரிய திறன் கொண்ட வாகனமாக இருந்தது. இருந்தபோதிலும், அதிக எரிபொரு நுகர்வு, விலையுயர்ந்த உதிரிபாகங்கள், அதிக கொள்முதல் விலை, சேவைப் பணியாளர்களின் பற்றாக குறை என்று அடுக்கடுக்கான காரணங்களால் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே இருந்து வந்தது. 1985-ல் அறிமுகப்படுத்தப்பட்ட யமஹா RX 100 மிகப்பெரிய வெற்றியை பெற்றது. என்ற போதிலும் 1990ம் ஆண்டு வரை RD 350 தயாரிப்பில் இருந்தது. 


யமஹா RX 100, யமஹா 135 போன்ற வாகனங்கள் இந்தியாவில் அதிகமாக விற்பனை ஆகின. RX 100க்கு இணையான வாகனத்தை அப்போது வேறு நிறுவனங்கள் கொண்டிருக்க வில்லை. அதிவேக என்ஜின் 0.45 நொடிகளில் 0.60 கிலோ மீட்டர் வேகத்தை சாதாரணமாக எட்டும் இதன் இன்ஜின் பிக்கப் அன்றைய காலகட்டத்தில் வந்த ராயல் என்பீல்டு அல்லாத எந்த வாகனத்திடமும் இருந்திருக்கவில்லை.

    பல்வேறு ஏற்ற தாழ்வுகளை சந்தித்த போதும், யமஹா இப்போதும் சந்தையில் அதற்கென்று இருக்கும் ரசிகர்களை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அது மிகவும் குறைவான சதவீதமாகவே இருக்கும் என்பது மோட்டார் வாகனங்கள் குறித்த நிபுணர்களின் கருத்து. 


இது தவிர ராயல் என்பீல்டை போட்டியாக கருதிய நிறுவனங்களில் முக்கியமானவை பஜாஜும், மஹிந்திராவும் தான். அதன் பிறகு பல வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் பைக்குகளை இந்தியாவில் விற்க தங்கள் ஷோரூம்களைத் திறந்தன. ஆனால் 2000-மாவது ஆண்டு ராயல் என்பீல்டு நிறுவனம் மீண்டும் எழுச்சிப் பெறத் துவங்கியதும், தரமான வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளத் துவங்கியதும் இந்த நிறுவனங்களின் பல மாடல்கள் இல்லாமல் போயின.


    ஆனால் எது வந்த போதும், எது சென்ற போதும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புல்லட்டும், அதன் பின் தயாரிக்கப்பட்ட பிற மாடல்களும் இன்றளவும் வாடிக்கையாளர்களின் நெஞ்சங்களை கவந்திருப்பது என்பது காலம் கடந்தும் அதற்கு இருக்கும் மதிப்பையே காட்டுகிறது. 


எனக்குத் தெரிந்த வரை 1980-முதல் இன்று வரை உள்நாட்டு வெளிநாட்டு போட்டியாளர்களின் வாகனங்கள் என்று சற்றேறக் குறைய 200 மாடல்களுக்கு மேல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.


    ஒவ்வொரு மாடலும் ஒவ்வொரு ரகமாக இருந்துள்ளது. ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்தன்மை இருந்திருக்கிறது. ஆனால் எதனை வாகனங்கள் வந்திருந்த போதும், இந்தியாவின் அடையாளமாக அதிலும் தமிழகத்தின் அடையாளமாக எந்தவிதமான கலப்பும் இல்லாமல், இந்தியாவிலேயே ஆராயப்பட்டு, வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு இன்றளவும் அதன் தனி அடையாளத்துடன் உயர்ந்து நிற்கும் இருசக்கர வாகனம் என்றால் அது ராயல் என்பீல்டு தான். 


 தொடரும்.....................


    இந்த பகுதி பிடித்து இருந்தால் மறக்காமல் மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். இந்த எபிசோட் பற்றிய உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே இருக்கும் கமெண்ட் பகுதியில் சொல்லுங்கள்.

        எங்கள் வாசகர்கள் குழுவில் இப்போது நீங்கள் இணையலாம். வாட்சப் மூலம் இணைய கீழே இருக்கும் லிக்ங்கை கிளிக் செய்யுங்கள்.



    முகநூல் வாசகர் குழுவில் இணைய கீழே இருக்கும் லிங்க்கை உபயோகியுங்கள்.


    இந்த தொடர் கட்டுரையின் மற்ற பாகங்களை வாசிக்க கீழே இருக்கும் இணைப்பை பயன்படுத்துங்கள்.






Comments

Anonymous said…
அருமையான தகவல்..நிறைய வண்டிகளை பார்த்தாலும் அதோட வரலாறு தெரியறது இல்லை..

Popular posts from this blog

காதலர் தின சிறப்புக் கட்டுரை